வியாழன், 17 ஜூலை, 2014

ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு செய்தி


ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு செய்தியும் அதையொட்டி நடந்த நிகழ்வுகளும் புஹாரி 2661 இல் விளக்கமாக பதியப்பட்டுள்ளன.
நபிகள் நாயகம் (சல்) அவர்களுக்கு மறைவான விஷயம் தெரியாது என்பதற்கு இந்த நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.

அது பற்றிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

அந்த சம்பவம் பனூ முஸ்தலக் எனும் போரையொட்டி நடைபெற்ற சம்பவமாகும்.

நபி (சல்) அவர்கள் உட்பட பெரும் பயணக்கூட்டம் மதினாவை நோக்கி ஒட்டகங்களில் பயணமாகிறது. ஒட்டக சிவிகையில் ஆயிஷா (ரலி) அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

இடையில், இயற்கை தேவைக்காக இறங்கி தூரமாக செல்கிறார்கள். திரும்பி வரும் வழியில் அவர்களது கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையொன்று காணாமல் போக, அதை தேடுகிறார்கள்.

நேரமாக, ஆயிஷா அவர்கள் சிவிகைக்குள் ஏறி அமர்ந்து விட்டார்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டு அந்த வாகனக்கூட்டம் சென்று விடுகிறது.

ஆயிஷா அவர்கள் அங்கேயே மாட்டிக் கொள்கிறார்கள்.

சிறிது நேரம் கழித்து சஃபான் பின் முஅத்தல் (ரலி) அவர்கள் அதே வழியாக வருகிறார்கள். நபி (சல்) அவர்களின் மனைவி மட்டும் அங்கே தனியாக நிற்பதை கண்டு நிலைமையை புரிந்தவராக அவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு ஊருக்குள் நுழைக்கிறார்கள்.

அவர்கள் ஊர் வந்து சேர்வதற்குள் இருவரையும் தவறாக இணைத்து அவதூறுகள் ஊருக்குள் பரவத் துவங்கின.

இதற்கிடையே, ஆயிஷா அவர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள். அதன் காரணமாக வீட்டிலேயே முடங்கி விட்டவர்கள், துவக்கத்தில் வெளியே பரவியிருந்த அவதூறு செய்தியை அறிந்திருக்கவில்லை.

ஆனால், நபி (சல்) அவர்கள் தம்மிடம் நடந்து கொள்ளும் விதத்தில் வித்தியாசம் இருப்பதை உணர்கிறார்கள்.
வழக்கமாக அவர்கள் காட்டும் பரிவும் பாசமும் அன்றைக்கு இல்லை !

தமது தந்தையார் அபுபக்கர் அவர்களது சிறிய தாயார் மகள் மூலமாக வெளியே பேசப்பட்டு வரும் அவதூறு செய்தி ஆயிஷா அவர்கள் காதை எட்டுகிறது, மனம் உடைகிறார்கள்.

நோயும் அதிகமாக.. இரவெல்லாம் அழுது தீர்க்கிறார்கள், ஆயிஷா அவர்கள். ஈரல் பிளந்து விடும் அளவிற்கு அழுதார்கள் என்று ஹதீஸ்களில் பார்க்க முடிகிறது.

தனது கணவர் நபி (சல்) அவர்களிடம், தன் தாய் வீட்டுக்கு செல்ல அனுமதி கோருகிறார்கள், நபி (சல்) அவர்களும் அதற்கு அனுமதியளிக்கிறார்கள்.

ஆயிஷா அவர்களது தாயார் தனது மகளுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இத்தனை அழகும், நபியின் மனைவி என்கிற அந்தஸ்தும் இருக்கும் போது இப்படியெல்லாம் அவதூறுகள் வரத்தான் செய்யும், நீ கவலை கொள்ளாதே.. என்று தன் அன்பு மகளுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.

இதற்கிடையே, அவதூறு செய்தியால் நபியவர்களும் மிகவும் கவலை கொள்கிறார்கள். தனது மனைவி மீது சந்தேகம் கொள்கிறார்கள்.

பரப்பப்படும் அவதூறு செய்தி உண்மையாக இருக்குமோ? என்று கூட எண்ணுகிறார்கள்.

ஒரு கட்டத்தில், அலி அவர்களிடம் சென்று, ஆயிஷா (ரலி) அவர்களை விட்டும் பிரிந்து விடலாமா (தலாக்) என்று ஆலோசனை செய்கிற அளவிற்கு கூட செல்கிறார்கள்.

உஸாமா (ரலி) அவர்கள் உட்பட பல சஹாபாக்கள் நபி (சல்) அவர்களின் அந்த முடிவுக்கு ஒத்துக் கொள்ளவில்லை ஆயிஷா அவர்கள் மிகவும் நல்லவர்கள், அவரிடம் எந்த தவறும் இருக்காது என்று ஆறுதல் சொல்கிறார்கள்.
அதே சமயம், அலி (ரலி) அவர்கள், ஆயிஷா அவர்கள் இல்லை என்றால் என்ன, உங்களுக்கு வேறு பல பெண்கள் மனைவியராக கிடைப்பார்கள் என்கிற கோணத்தில் பேசுகிறார்கள்.

குழப்பத்தின் உச்சிக்கே சென்ற பெருமானார், ஆயிஷா அவர்களின் பணிப்பெண் பரீராவை அழைத்து, ஆயிஷா அவர்களைப் பற்றி விசாரிக்கிறார்கள்.

ஆயிஷாவின் பழக்க வழக்கம் பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று பரீராவிடம் கேட்க, பரீராவோ, ஆயிஷா அவர்கள் மிகவும் அப்பாவிப் பெண், குழைத்து வைத்த மாவை மறதியில் அப்படியே விட்டு விட்டு தூங்கி விடும் அளவிற்கு மிகவும் விளையாட்டுப் பெண், அவர் இப்படியெல்லாம் தவறு செய்யக்கூடியவர் இல்லை என்று நபியிடம் விளக்கமளிக்கிறார்கள்.

இதற்கிடையே, இந்த அவதூறு செய்தியானது, நபி (சல்) அவர்களும் இன்னபிற சஹாபாக்களும் இருக்கும் சபையில் பெரும் சர்ச்சையையே கிளப்புகிறது.
தங்கள் குலத்தால் ஒருவரையொருவர் பேசிக் கொள்கிற அளவிற்கு நிலைமை மோசமடைகிறது.

கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இப்படியே செல்கிறது.

ஒரு நாள் தன் மனைவியருகே நபி (சல்) அவர்கள் வந்து அமர்கிறார்கள். ஒரு மாதத்திற்கு பிறகு அப்போது தான் தன் அருகில் கூட தனது கணவர் வந்திருக்கிறார்கள் என்று ஆயிஷா அவர்கள் கவலை கொள்கிறார்கள்.

அவதூறு செய்தி ஒரு பக்கம் கவலை அளிக்கிறது என்றால், தனது கணவர் கூட தன்னை முழுமையாக நம்பவில்லையே என்கிற ஏக்கம் இன்னொரு பக்கம் அவர்களை வாட்டி எடுக்கிறது.

அருகில் வந்த நபி (சல்) அவர்கள், தன் மனைவியிடம், "ஆயிஷாவே, நீ நிரபராதி என்றால் அதை அல்லாஹ் எனக்கு அறிவித்து தருவான். ஒரு வேளை நீ தவறு செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்", என்று சொல்கிறார்கள்.

" நீங்கள் என் மீது சந்தேகம் கொண்டு விட்டீர்கள், இனி என்ன சொன்னாலும் நீங்கள் நம்பப் போவதில்லை, நான் அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்கிறேன்" என்பதாக தனது கணவரிடம் சண்டையிட்டுக் கொண்டு கோபத்தில் படுத்துக் கொள்கிறார்கள் ஆயிஷா (ரலி) அவர்கள்.

அன்று இரவு அல்லாஹ் வஹி செய்தி அனுப்புகிறான்.

24:11 முதல் 20 வரையுள்ள வசனங்கள் அப்போது இறங்குகின்றன. ஆயிஷா அவர்கள் அப்பழுக்கற்றவர் என்று அல்லாஹ் தனது தூதருக்கு அறிவித்துக் கொடுக்கிறான்.

ஆனந்தமடைகிறார்கள் நபி (சல்) அவர்கள் !

அன்புடன் தனது மனைவியை அழைக்கிறார்கள். கோபமும் அளவிலா வேதனையும் மனதில் ஆட்கொண்டிருக்க, நபியருகில் செல்ல ஆயிஷா அவர்கள் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.

என்ன தான் இருந்தாலும் என் கணவர் கூட என்னை நம்பவில்லையே என்கிற நியாயமான கவலையும் ஏக்கமும் அவர்கள் மனதை வாட்டியது.

அல்லாஹ் தன்னை சுத்தமானவர் என்று அறிவித்து விட்டதையறிந்து, நபியிடம் நான் செல்ல மாட்டேன், என் இறைவனுக்கு மட்டும் நான் நன்றி செலுத்திக் கொள்கிறேன்" என்பதாக மீண்டும் செல்ல சண்டையே இடுகிறார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் தன் மகளுக்கு அறிவுரை கூறி, கணவர் அருகில் செல்லுமாறு பணிக்கிறார்கள்.

இறுதியில் மனம் மாறி, கணவனும் மனைவியும் அன்புடன் இணைகிறார்கள் !

அல்ஹம்துலில்லாஹ், மாஷா அல்லாஹ் !!

படிக்கும் போதே உடலெல்லாம் சிலிர்க்கும் வகையிலான சம்பவங்கள்.

எல்லா பெண்களுக்கும் இருக்கும் அதே உணர்ச்சி, கோப தாபம், ரோஷ உணர்வு தான் ஆயிஷா அம்மாவுக்கும் இருந்திருக்கிறது.

மனிதன் என்கிற முறையில் அவதூறு செய்திகளை கூட நம்பி விடும் அளவிற்கு சாதாரண மனிதராக தான் நபி (சல்) அவர்களும் இருந்திருக்கிறார்கள் !

உண்மையை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான், அனைத்துமே நல்லதாய் முடிவுற்றது !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக