வியாழன், 17 ஜூலை, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (K)


கியாமத் நாளின் அடையாளம்

"ஈஸா நபி மரணிக்கவில்லை" (பாகம் 11)
------------------------------------------------------------

ஈஸா நபி உடலோடு உயர்த்தப்பட்டார் என்று அல்லாஹ் தெளிவான வாசகங்கள் துணையுடன் சொல்வதை ஏற்கனவே பார்த்தோம்.
உடலோடு உயர்த்தப்பட்ட ஈஸா நபி மரணிப்பதற்கு முன் இவ்வுலகில் மீண்டும் வருவார்கள் என்று ஏராளமான ஹதீஸ்கள் வாயிலாக நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இது குறித்து குர் ஆனில் ஏதும் தகவல்கள் இருக்கின்றனவா என்று பார்க்கையில், இரண்டு இடங்களில் அல்லாஹ், ஈஸா நபியின் மீள்வருகை பற்றி சொல்வதை பார்க்க முடிகிறது.

முதல் வசனம், ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார் என்று அல்லாஹ் சொல்கிற 43:61 வசனம்.

இந்த வசனத்தின்படி, கியாமத் நாளுக்கு சமீபமாக, அந்த நாளை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் ஈஸா நபி இவ்வுலகில் வருவார் என்று பொருளாகிறது.

இந்த வசனத்தில் ஈஸா நபி என்கிற வாசகம் இல்லை. இதை சாதகமாக பயன்படுத்தும் இந்த அஹமதியா மதத்தவர்கள், இங்கே சொல்லப்படுவது ஈஸா நபியை அல்ல, குர் ஆனை தான் அல்லாஹ் இங்கே சொல்கிறான், குர் ஆன் தான் அடையாளம் என்பதாக ஒரு வாதத்தை வைப்பர்.

அதற்கு என்ன காரணம்? என்று கேட்டால், அந்த அத்தியாயம் குர் ஆனைப்பற்றி பேசுவதாக தான் துவங்குகிறது, என்கின்றனர்.

ஒரு அத்தியாயம், ஒரு விஷயத்தை பற்றி சொல்லி துவங்குகிறது என்பதால் அந்த அத்தியாயத்தின் 61 ஆம் வசனம் அந்த விஷயத்தை தான் குறிக்கும் என்று புரிவது சரியான புரிதல் அல்ல.

அந்த அத்தியாயம் குர் ஆனை பற்றி சொல்ல துவங்குவது இடையில் உள்ள வசனம் என்ன சொல்கிறது என்பதை தீர்மானிக்காது, மாறாக, அந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்கள் என்ன விஷயத்தை சொல்லி வந்ததோ அதை தான் இந்த வசனமும் சொல்கிறது என்று முடிவு செய்வது தான் அறிவுபூர்வமானது.
அந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்களில் ஈசா நபியை பற்றி அல்லாஹ் சொல்லிக்கொண்டே வருகிற தொடர் அது.

மரியமின் மகனை அவர்கள் பரிகாசம் செய்தார்கள், அவர் அல்லாஹ்வின் தூதராவார். அதை அவர்கள் மறுக்கிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களுக்கு பதில் மலக்குகளை கொண்டு வந்திருப்பான். ------------ கியாமத் நாளின் அடியாளம். இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். என்னையே பின்பற்றுங்கள், இது தான் நேர்வழி.
ஷைத்தான் இது விஷயமாக உங்களை வழி கெடுக்க வேண்டாம்.

இப்படி சொன்னால் கோடிட்ட இடத்தில் குர் ஆன் என்று எப்படி வரும்???

குர் ஆன் என்று இங்கே பொருத்துவது எந்த வகையிலும் தொடர்பற்ற ஒன்றாகும் என்பது, அந்த வசனத்தின் முன்னிலிருந்தே வாசித்தால் புரியும்.

இன்னும் சொல்லப்போனால், இந்த வசனத்தில் கியாமத் நாள் பற்றி அல்லாஹ் பேசி விட்டு அத்துடன் நிறுத்தவில்லை..
தொடர்ந்து, அல்லாஹ்வையே வணங்குங்கள் என்று ஈசா சொன்னார், அது தான் நேர்வழி என்றார். ஈசா நபியை பற்றி முஹம்மது நபி என்ன சொன்னார்களோ அதே போல ஈசா நபியும் சொன்னார்கள்.

மேலும், ஈசா நபியை பற்றியே பேசிக்கொண்டு அடுத்ததாக, கியாமத் நாளின் அடையாளம் என்று சொல்லி, கியாமத் நாளை பற்றியும் சொல்லி விட்டு, தொடர்ந்து அவர்களுக்கு (ஈசா நபியை மறுத்தவர்களுக்கு ) கியாமத் நாளின் போது கடும் தண்டனை இருக்கிறது என்று 43 :65 வசனத்தில் சொல்கிறான்.
கியாமத் நாள் திடீரென வரும் என்று அடுத்த வசனத்தில் சொல்கிறான் !!

ஆக, சம்மந்தப்பட்ட வசனத்திற்கு முன்னும் பின்னும் ஈசா நபி பற்றியே பேசி வருகிறது என்பதும், அந்த வசனத்தில் கியாமத் நாளின் அடையாளம் என்றும் அதற்கு பிறகுள்ள வசனங்களிலும் ஈசா நபியை மறுத்த கூட்டத்தார் கியாமத் நாளில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டிருப்பதும், ஈசா நபி தான் கியாமத் நாளின் அடையாளம் என்பதை தெளிவாக்குகிறது !

ஈஸா நபி மறுமை நாளின் அத்தாட்சியாவார். இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். என்று சொல்லி விட்டு எனவே என்னை பினபற்றுங்கள் என்று யாரும் சொல்வார்களா ?

என்று சிலர் எதிர் கேள்வியெழுப்பலாம்.

அப்படியும் சொல்லலாம். ஈசா நபி அந்த நாளின் அடையாளம், இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள்.
இந்த விஷயத்தில் நான் சொல்வதையே பின்பற்றுங்கள் - இது தான் அதன் அர்த்தம்.
என்னை பின்பற்றுங்கள் என்று சொன்னால், அதை சொல்வதற்கு முன் எதை பற்றி அந்த மனிதர் சொன்னாரோ அதில் என்னை பின்பற்றுங்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இது சாதாரண மொழியறிவு.

அவன் தான் திருடன், இதில் சந்தேகமில்லை. என்னை பின்பற்று.

இப்படி சொன்னால் என்ன பொருள்? அவன் தான் திருடன் என்று நான் சொல்கிற இந்த விஷயத்தில் என்னை பின்பற்று என்று தான் பொருள்.
இப்படி சொல்வதில் எந்த பொருள் சேதமும் இல்லை.

சஹாபாக்களை நாம் பின்பற்ற மாட்டோம் என்றாலும், அவர்களை பின்பற்றுவோருக்காக கீழ்காணும் ஆதாரத்தையும் தருகிறோம்.

ஈஸா நபி இறக்கவில்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள் என்பதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அவர் இந்த வசனத்தை தான் மேற்கோள் காட்டினார்.

இந்த செய்தி அவரது தஃப்சீர் நூலான இப்னு சரி பாகம் 4 , பக்கம் 14 இல் இது பதிவாகியுள்ளது. இது கூடுதல் தகவலுக்காக..

சரி, இந்த வசனம் அல்லாஹ்வே நேரடியாக சொல்கிற வசனம் தான், நபியிடம் சொல்ல சொல்லும் வசனமல்ல என்றொரு வாதம் வைக்கப்படலாம்.

ஆனால், அதுவும் தவறு.

அந்த வசனத்தில், என்னை பின்பற்று என்று அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ்வை யாரும் பின்பற்ற முடியாது. அல்லாஹ்வை நம்ப தான் முடியும். அல்லாஹ்வின் வார்த்தைகளையும் அல்லாஹ்வின் தூதரையும் தான் பின்பற்ற முடியும்.

ஆகவே, இந்த வசனத்தில் அல்லாஹ் தன்னை பின்பற்றுவதாக சொல்லவில்லை, என்னை பின்பற்று - என்று நபியே நீ சொல் என்பது தான் அந்த வசனத்தின் அர்த்தம். நபியை தான் பின்பற்ற முடியும். !
குல் என்று சொல்லாமல் ஏராளமான வசனங்களில் அல்லாஹ் பேசுகிறான். ஆனால் அவைகளில் பல இடங்களில் அல்லாஹ் அதை சொல்லியிருக்க முடியாது, நபியிடம் சொல்ல சொல்லியிருப்பது தான் அங்கே பொருந்தும் என்று முடிவு செய்கிறோம்.
நான் அல்லாஹ்வை வணங்குகிறேன் என்று கூட வசனங்கள் உண்டு , அதில் குல் என்று அல்லாஹ் சொல்லவில்லை என்றாலும் அங்கே நபியிடம் சொல்ல சொல்வதாக தான் பொருளாகும்.

அந்த வசனத்தில் என்னை பின்பற்று என்று அல்லாஹ் சொல்லி விட்டதால் இங்கே அல்லாஹ்வே நேரடியாக சொல்வதாக புரியாமல் நபியை சொல்ல சொல்கிறான் என்று தான் புரிய வேண்டும். நபி, தன்னை பின்பற்றுங்கள் என்று சொல்கிறார்கள். அவர் கியாமத் நாளின் அடையாளம் என்று சொன்னது மட்டும் நபியின் வார்த்தை அல்ல. அவர் மனிதர் தான், அவர் தூதர் தான், அவர் இன்னும் மரணிக்கவில்லை போன்ற எல்லா விஷயங்களிலும் நபியையே பின்பற்ற வேண்டும் என்பது அந்த வசனத்தின் கருத்து.

ஒரு வாதத்திற்கு, இந்த வசனத்தில் அல்லாஹ்வே நேரடியாக சொல்கிறான் என்று வைத்துக்கொண்டால் கூட அதனால் உங்கள் கருத்து சரி என்றோ எனது கருத்து தவறு என்றோ ஆகி விடாது.

வாதம் என்ன என்றால், அந்த வசனத்திற்கு முன்பு பல வசனங்களாக ஈசா நபியை பற்றியும் அவரை அந்த மக்கள் புறக்கணித்தது பற்றியும் பேசி விட்டு, நான் நாடினால் இந்த கூட்டத்தாருக்கு மாற்றமாக மலக்குகளை கொண்டு வந்திருப்பேன் என்று சொல்லி விட்டு அடுத்து சொல்வதாக இருந்தால் அது கியாமத் நாளின் அடையாளம் என்பது பொருந்தாது, அவர் கியாமத் நாளின் அடையாளம் என்பது தான் பொருந்தும்.

இதை உறுதி செய்யும் விதமாக, இதற்கு பிறகு வரக்கூடிய வசனங்களிலும் கூட ஈசா நபியை புறக்கணித்த மக்கள் கியாமத் நாளுக்கு அஞ்ச வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிரான தீர்ப்பு மறுமையில் உண்டு எனவும் அல்லாஹ் சொல்கிறான்.

அடுத்து, அந்த வசனங்களின் இடையில் மலக்குமார்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான்.
இதன் மூலம் குர் ஆன் தான் மறுமை நாளின் அடையாளம் என்று தான் அந்த வசனம் சொல்கிறது என்று புரிவதாகவும் சிலர் வாதம் வைக்கக்கூடும்.

மலக்குமார்களை பற்றி பேசுவதே இது ஈசா நபியை தான் சொல்கிறது என்பதற்கான ஆதாரம் தான் என்கிறேன் நான் ! எது எனக்கு ஆதாரமோ, அதையே எனக்கு எதிராக எழுப்புவது தான் அறியாமை !

அந்த வசனம் எதை சொல்கிறது என்பதற்கு ஆழமான ஆராய்ச்சி ஒன்றும் அவசியமில்லை, மூன்று வசனங்கள் முன்பிலிருந்து தொடராக வாசித்தாலேயே புரிந்து விடும்.

மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் (ஏளனமாகக்) கூச்சலிட்டனர்.

'எங்கள் கடவுள்கள் சிறந்தவர் களா? அல்லது அவரா?' என்று கேட்டனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!

நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை. இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம்.

நாம் நினைத்திருந்தால் உங்களுக்குப் பகரமாக வானவர்களை இப்பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியிருப்போம்.

அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப் படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர் வழி'

ஷைத்தான் உங்களைத் தடுத்து விட வேண்டாம். அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

ஈஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது 'ஞானத்தை உங் களிடம் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் முரண்பட்டதில் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துவேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!' எனக் கூறினார்.

என்று போகிறது அந்த வசன தொடர்.

இதில் அல்லாஹ் மலக்குகளை பற்றி எதற்கு சொல்கிறான்? ஈசா நபியை நபி என்று நம்பாமல் கடவுளாக ஆக்கியவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்க்குரியவர்கள், அல்லாஹ் ஈஸாவை இஸ்ராயீல் மக்களுக்கு முன்னுதாரணமாக ஆக்கினான். அவர் நபியை தவிர வேறில்லை. அப்படி நம்பாமல் அவரை கடவுளாக ஆக்கிய கூட்டத்தாரை அல்லாஹ் நினைத்தால் அழித்து விட்டு மலக்குகளை கொண்டு வந்திருப்பான் ! அவர் கியாமத் நாளின் அடையாளம். இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். இதிலிருந்து ஷைத்தான் உங்களை தடுத்து விட வேண்டாம், ஈசா தெளிவான சான்றுகளை கொண்டு வந்தார் !!!

வசனங்களை நபி (ஸல்) அவர்கள் எப்படி வரிசைப்படுத்தி நமக்கு தந்தார்களோ அதே வரிசையிலேயே நான் மேலே விளக்கியுள்ளேன். இதை படிக்கும் போது இடையில் குர் ஆன் கியாமத் நாள் என்று சொல்வது தான் பொருத்தமற்றது.

அடுத்தடுத்த வசனங்களில், ஈசா நபியை கடவுளாக நம்பியவர்கள் மறுமை நாளில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சேர்த்தே அல்லாஹ் சொல்லும் போது, ஈசா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று சொல்வது பொருந்தி போகிறது.

இவர்களிடம் மிஞ்சியிருப்பது இரண்டு வாதங்கள் தான்.

அந்த வசனத்தில், என்னை பின்பற்றுங்கள் இது தான் நேர்வழி.. என்று சொல்லப்பட்ட்டுள்ளதே, குர் ஆன் என்று அங்கே பொருள் செய்தால் தானே நேர்வழி என்பதும் பொருந்தும்? அல்லாமல், ஈஸா நபியையா நேர்வழி என்று சொல்ல முடியும்?
என்பது ஒரு வாதம்.

அடுத்து, அந்த வசனத்தில், கியாமத் நாளின் அடையாளங்களை கொண்டுள்ளது என்று தான் அர்த்தம் வைக்க வேண்டும், அல்லாமல், கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார் என்று சொல்லக்கூடாது என்பது இவர்களது இன்னொரு வாதம்.

அதாவது, அத்தாட்சி என்று அந்த வசனத்தில் இல்லை, இல்ம், அதாவது அறிவு என்று தான் அந்த வசனம் சொல்கிறது. எனவே குர் ஆனில் கியாமத் நாளுக்கான அறிவு (இல்ம்) இருக்கிறது) என்று மொழியாக்கம் செய்வது தான் உகந்தது.. என்பது இவர்கள் எழுப்பும் மற்றோர் வாதம்.

தங்கள் கொள்கையை நிலைனாட்ட இவர்கள் கைவசம் எஞ்சியிருக்கும் இந்த இரு வாதங்களுக்குரிய பதில்களை அடுத்தடுத்து பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.

தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக