வியாழன், 17 ஜூலை, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (I)


உடலோடு உயர்த்தப்பட்டார்

"ஈஸா நபி மரணிக்கவில்லை" (பாகம் 9)
----------------------------------------------------------

ஈஸா நபி இறந்து விட்டதாக காதியானிக் கூட்டத்தார் வைக்கும் ஆதாரங்களின் நிலையை இதுவரை பார்த்தோம். 
எந்த ஆதாரமும் ஈஸா நபி இறந்து விட்டார் என்று நேரடியாக சொல்லவில்லை, இதிலிருந்து இறந்து விட்டார் என்று புரியலாம், அதிலிருந்து புரியலாம்.. என்றெல்லாம் இவர்களது யூகங்களை மட்டுமே முன்மொழிந்து வந்தார்கள் என்பதையும், அவையாவுமே ஈஸா நபி மரணித்ததாக சொல்லவேயில்லை என்பதையும் சான்றுகளுடன் பார்த்தோம்.

அடுத்து, ஈஸா நபி இறக்கவில்லை, அவர் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டார், மீண்டும் இவ்வுலகிற்கு அல்லாஹ் அவரை திரும்ப அனுப்புவான் என்பதற்கு நாம் வைக்கும் சான்றுகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

நாம் ஏற்கனவே சொன்னது போல், இதே விவாதத்தை நாம் மேற்கொண்டு தொடராமல் நேரடி விவாத அழைப்பு விடுத்துள்ளதால், இவர்கள் இதற்கு என்ன பதில்களையெல்லாம் சொல்வார்கள் என்பதை முன்கூட்டியே யூகித்து, அந்த பதில்களுக்கும் பதில்களை இங்கே விளக்கமாகவே தந்திருக்கிறேன்.

ஈஸா நபியை உயர்த்தியதாக அல்லாஹ் 4:158 வசனத்தில் சொல்கிறான்.

ஈஸா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார் என்று நேரடியாகவே தெரிவிக்கும் வசனம் இது.

ஈஸா என்றால் மிர்சா என்று புரிய வேண்டும், மர்யம் என்றால் மர்யமை போன்ற குணமுடைய மிர்சா என்று புரிய வேண்டும், தஜ்ஜாலை கொல்வார் என்றால் கொடியவர்களை அழிப்பார் என்று புரிய வேண்டும், பன்றி என்றால் பன்றியின் குணமுடையவர் என்று புரிய வேண்டும் என்றெல்லாம்
மாற்றி மாற்றி புரியும் கூட்டத்தார், இந்த வசனத்திற்கும், ஈஸா நபியின் அந்தஸ்த்தை அல்லாஹ் உயர்த்தினான் என்று வியாக்கானம் கொடுத்து, இதை மறுக்க முனைகின்றனர்.

நாம் கேட்பது மிகவும் இலகுவான கேள்வி.

இந்த வசனத்தில் நாம் நேரடியான அர்த்தத்தை வைக்கிறோமா அல்லது இவர்கள் வைக்கிறார்களா?

அவரை உயர்த்தினான் என்றால் அவரையே உயர்த்தினான் என்று தான் பொருள்.
அவரது அந்தஸ்த்தை உயர்த்தினான் என்று பொருள் கொள்ள முடியாது என்பது சாதாரண மொழி வழக்கு தான்.

அந்தஸ்த்தில் உயர்த்தினான் என்றால் அந்தஸ்த்தில் உயர்த்தினான் என்கிற கூடுதல் சொல் அங்கே இடம்பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் சொல் இல்லை என்றால் அந்தஸ்த்தில் உயர்த்தவில்லை என்று புரிய என்ன சிரமம்?

அவரை நான் உயர்த்தினேன் என்று பொதுவாக சொன்னால், அதை அதன் நேரடி பொருளில் புரிவது தான் அறிவு.

இப்படி தான் புரிய வேண்டும் என்பதை அல்லாஹ் வேறு வேறு வசனங்களின் மூலமும் நமக்கு விளக்குகிறான்.

இத்ரீஸ் நபியின் அந்தஸ்த்தை உயர்த்தியதாக அல்லாஹ் சொல்கிறான்.

அவரை உயரமான தகுதிக்கு உயர்த்தினோம். (19:57)

இங்கே ரஃப அ மகான என்று அல்லாஹ் சொல்கிறான்.
ர‌ஃப அ என்றால் உயர்த்துதல்.. மகானன் என்றால் இடம், தகுதி, அந்தஸ்து..

ஆனால், ஈஸா நபியை பற்றி 4:158 இல் அல்லாஹ் சொல்லும் போது உயர்த்தினான் என்று மட்டும் தான் உள்ளது. அந்தஸ்து, தகுதி, போன்ற குணாதிசியங்கள் இல்லை.

இடம், தகுதி, அந்தஸ்து போன்ற அடைமொழியுடன் உயர்த்தினோம் என்று சொல்வதற்கும், வெறுமனே உயர்த்தினோம் என்று சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது.
வேறுபாடு கொடுக்க வேண்டும்.

அந்தஸ்த்தில் உயர்த்தினோம் என்றாலும் ஒரே அர்த்தம் தான், வெறுமனே உயர்த்தினோம் என்றாலும் ஒரே பொருள் தான் என்றால், அந்தஸ்த்தில்" என்று அல்லாஹ் அங்கே கூடுதலாக வார்த்தையொன்றை சேர்க்க தேவையில்லை.

வெறுமனே உயர்த்தினோம் என்றாலே அது தகுதியை உயர்த்துதலை தான் குறிக்கும் என்றால் இத்ரீஸ் நபியை உயர்த்தினோம் என்று அல்லாஹ் சொன்னாலே போதுமானது.

தகுதி என்று கூடுதலாக ஒரு வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தியிருக்க தேவையில்லை.

தேவையில்லாத எந்த சொல்லையும் அல்லாஹ் பயன்படுத்த மாட்டான் என்கிற அடிப்படையில், "தகுதிக்கு" உயர்த்தினான் என்று சொல்வதற்கு அந்த அர்த்தத்தை கொடுக்க வேண்டும், வெறுமனே உயர்த்தினான் என்று சொல்வதற்கு அந்த அர்த்தத்தை கொடுக்க வேண்டும்.

இன்னொரு வசனத்தை பாருங்கள்

உமது புகழை உயர்த்தினோம். (94:4) என்று அல்லாஹ் முஹம்மது நபி (சல்) அவர்களைப் பார்த்து சொல்கிறான்.

முஹம்மதே, உம்மை உயர்த்தினோம் என்று மட்டும் சொன்னாலே அந்தஸ்தை தான் உயர்த்தினான் என்று புரிய முடியும் என்றால் அப்படி அல்லாஹ் சொல்லியிருப்பான், தேவையில்லாமல் "புகழை" என்கிற வார்த்தையை சேர்த்திருக்க மாட்டான்.

இன்னொரு வசனத்தைப் பார்போம்.

அவர்களில் ஒருவர் மற்றவரைப் பணியாளராக ஆக்கு வதற்காகச் சிலரை விட சிலரின் தகுதிகளை உயர்த்தினோம் (43:32)

அதே சமயம், கீழ்காணும் வசனத்தைப் படித்துப் பாருங்கள்.

உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்! தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தினோம். (2:93)

என்று அல்லாஹ் சொல்வதாக வருகிறது. இதில் தூர் மலையை உயர்த்தினோம் என்று மட்டும் தான் அல்லாஹ் சொல்கிறான்.

இங்கே தூர் மலையை உயர்த்தினான் என்று மட்டும் தான் உள்ளதே தவிர, அந்தஸ்து, புகழ், இடம், தகுதி போன்ற அடைமொழிகள் அங்கே இல்லை !

எனவே, தூர் மலையின் அந்தஸ்த்தை அல்லாஹ் உயர்த்தினான் என்று நாம் பொருள் கொள்வதில்லை.

மாறாக, அந்த மலையையே தூக்கினான் என்று தான் அனைவருமே புரிகிறோம்.

இதே போன்ற இன்னொரு வசனத்தை பாருங்கள்

அவ‌ன் வானத்தை உயர்த்தினான். (55:7)

இங்கும் அதே நிலை தான். வானங்களின் அந்தஸ்த்தை அல்லாஹ் உயர்த்தவில்லை, வானத்தையே உயர்த்தினான் !

ஆக, அடைமொழிகள் இருந்தால் ஒரு வகையான புரிதலும், அடைமொழி இல்லாமல் சொல்லப்படுபவைகளுக்கு வேறு வகையான புரிதலும் தான் மார்க்க அடிப்படையில் சரியான புரிதலாக இருக்கும்.

ஈஸா நபியை அல்லாஹ் உயர்த்தினான் என்று மட்டும் சொல்லும் போது அந்தஸ்து என்று நாமாக வலிய சென்று எந்த அடைமொழியையும் திணிக்ககூடாது.

இதில் வேடிக்கையான ஒரு வாதமொன்றை வைப்பர்.

அதாவது, தன்னளவில் உயர்த்தினான் என்று அந்த வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான், "தன்னளவில்" என்பது அடைமொழிதானே? என்று ஒரு கேள்வியை நுனிப்புல் மேயும் காதியானிக் கூட்டம் எழுப்பக்கூடும்.

இதுவும் அபத்தமான கேள்வி. தன்னளவில் என்று சொல்வது அடைமொழியாகாது.
தன்னளவில் அவரது புகழை உயர்த்தினான் என்று சொல்லும் போது தான் அங்கே புகழ் என்பது அடைமொழி ஆகிறது.

தன்னளவில் என்றால் தன்னிடத்தில், தன்னருகே, தனது கட்டுப்பாட்டில், என்கிற பொருள் தான் இருக்கிறது. இது அடைமொழியாகாது.

அப்படிப் பார்த்தால், தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தினோம் என்று 2:93 வசனத்தில் சொல்லப்படுபவற்றுக்கும் "உங்களுக்கு மேல்" என்பதை அடைமொழியாக கொள்ளலாம் என்கிற தவறான கருத்து வரும்.
அதன் விளைவாக, உங்களை விடவும் மேலான அந்தஸ்த்திற்கு தூர் மலையை உயர்த்தினோம் என்கிற அபத்தமான பொருளை கொடுக்க வேண்டி வரும்.

உங்களுக்கு மேல் உயர்த்தினேன் என்றால் உங்களுக்கு மேல் அதையே உயர்த்தினேன் என்று தான் பொருள்.

என்னளவில் உயர்த்தினேன் என்று சொன்னால், என்னளவில் அவரையே உயர்த்தினேன் என்று தான் பொருள்.

சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த கான்டக்ஸ்ட் படி, உயர்த்தினேன் என்று மட்டும் சொன்னாலும், அந்தஸ்து உயர்வு என்று பொருள் கொடுக்க இடம் இருக்கிறது என்று இவர்கள் ஏதும் சப்பைக்கட்டு கட்டுவார்களானால் அதுவும் தவறு என்பதற்கு அந்த தொடர் வசனங்களும் அதில் அல்லாஹ் பயன்படுத்தும் வாசக அமைப்புகளுமே சான்றாக நிற்கிறது.

4 :158 வசனத்தில் அல்லாஹ் ஈஸா நபியை உயர்த்தியதாக சொல்கிறான். அந்த வசனத்தை துவக்கம் முதலே தெளிவாக வாசித்தால் இங்கு அந்தஸ்து உயர்வை அது குறிக்கிறதா அல்லது அவரையே உயர்த்துவதை குறிக்குமா என்பது எளிதில் விளங்கும்.

4 :157 வசனத்தை வாசிக்கிற போது அதில் ஈஸா நபியை கொலை செய்ய திட்டம் தீட்டியவர்கள் சபிக்கப்பட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லி விட்டு, தொடர்ச்சியாக அவர்கள் நம்புவது போல ஈஸாவை யாரும் கொலை செய்யவில்லை என்கிறான்.
சிலுவையில் அறையப்படவுமில்லை என்று சொல்கிறான்.
சொல்லி விட்டு, இந்த விஷயத்தில் சந்தேகம் கொள்பவர்கள் அல்லது கருத்து வேறுபாடு கொண்டுள்ளவர்கள் அனைவரும் தவறான வழியிலேயே இருக்கிறார்கள் என்று சொல்கிறான்.
அத்துடன் நிறுத்தாமல், மீண்டும், ஈஸாவை அவர்கள் கொல்லவில்லை என்று அதே வசனத்தில் சொல்கிறான்.
சொல்லி விட்டு "ஆனால் அல்லாஹ் அவரை உயர்த்தினான்" என்று சொல்கிறான்.
இந்த இடத்தில "ஆனால்" என்பதற்கான அரபிப்பதம் "பல்" - بَل

அவரை யாரும் கொல்லவில்லை ஆனால் அவரை அல்லாஹ் உயர்த்தினான் என்று சொல்கிற போது இங்கே அந்தஸ்து உயர்வு எப்படி பொருத்தமாகும்?

அவரை கொன்று விட்டதாக நினைக்கிறார்கள் ஆனால் அவரை யாரும் கொல்லவில்லை என்று சொல்லி விட்டு , கொல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ததாக தான் அல்லாஹ் அடுத்த வசனத்தில் சொல்கிறான்.

அதாவது அவர்கள் அவரை கொல்ல நினைத்தனர் ஆனால் அல்லாஹ் அவரை உயர்த்திக்கொண்டான், அவர்கள் நிச்சயமாக அவரை கொல்லவில்லை !!!

இது தான் அந்த வசனத்தின் கருத்துப்படியும் மிகவும் நெருக்கமான நேரடி பொருளாக உள்ளது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக மூன்று காரணங்களை நான் இங்கு தருகிறேன்.

முதல் காரணம்,

நான் ஏற்கனவே சொன்னது போன்று, அந்த வசனத்தின் வாசகமும் அவரையே உயர்த்துவதாக பொருள் கொள்ளும்படி தான் அமைந்துள்ளது. அந்தஸ்தை உயர்த்தியதாக சொல்ல வேண்டுமானால் அந்தஸ்து, பதவி, தகுதி போன்ற வாசகங்கள் அங்கே வர வேண்டும்.

இரண்டாவது காரணம்,

அந்த வசனத்தில் தன்னளவில் அல்லாஹ் உயர்த்தியதாக சொல்கிறான். தன்னளவில் உயர்த்துவது அந்தஸ்து உயர்வு என்று சொல்ல முடியாது. அப்படி பொருள் வைத்தால் அல்லாஹ்வின் அந்தஸ்து என்னவோ அந்த அளவிற்கு ஈஸா நபியையும் உயர்த்தினான் என்கிற இணை வைப்பு கருத்து தான் கிடைக்கும். ஆகவே அந்த வகையிலும் இது பொருந்தாது.

மூன்றாவதாக,

அந்த வசனத்திற்கு அடுத்தப்படியாக, அல்லாஹ் வல்லமைமிக்கவன் , மற்றும் ஞானமுடையவன், என்று சொல்கிறான்.

துவக்கம் முதல் முழுவதுமாக படிப்பதாக இருந்தால்..

அவர்கள் ஈஸா நபியை கொன்று விட்டதாக நினைக்கின்றனர்.
அது தவறு, உண்மையில் அவர்கள் அவரை கொல்லவில்லை.
சிலுவையில் அறையவுமில்லை.
அவ்வாறு அவர்கள் தவறாக நம்புகின்றனர். அவர்கள் செய்வது வெறும் யூகம் தான்.
நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவில்லை.
ஆனால் அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக்கொண்டான்.
அல்லாஹ் வல்லமைமிக்கவன் , மற்றும் ஞானமுடையவன்

இந்த இடத்தில ஈஸா நபியின் அந்தஸ்தை தான் அல்லாஹ் உயர்த்தினான் என்று இருந்தால் அல்லாஹ், தான் வல்லைமைமிக்கவன் என்று தொடர்ந்து சொல்ல தேவையே இல்லை.
ஞானமுடையவன் என்று இந்த இடத்தில சொல்ல வேண்டியதும் இல்லை.

காரணம், ஒருவரது அந்தஸ்தை உயர்த்துவதற்கு அல்லாஹ்வுக்கு ஞானமும் வல்லமையும் தேவையில்லை. அது அறிவுக்கு பொருந்தவும் செய்யாது.

எப்போது அல்லாஹ்வின் வல்லமை பற்றி பேச வேண்டும்?? நடக்க முடியாத ஒரு சம்பவம், நமது கற்பனைக்கே எட்டாத ஒரு சம்பவம் ஒன்று நிகழும் போது அதை நிகழ்த்தியது அனைத்தையும் நடத்தக்கூடிய வல்லமை மிக்க அல்லாஹ் தான் என்று சொல்வது தான் பொருந்தும்.

ஒரு மனிதரை கொலை செய்ய அழைத்து செல்கிறார்கள், இறுதி நிமிடம் வரை சென்று விடுகிறது, கடைசியாக யாருடைய கற்பனைக்கும் எட்டாத வகையில், யாருமே அறியாத வகையில் அந்த மனிதர் உயர்த்தப்பட்டார் என்பது வல்லமை மிக்க ஒருவனால் மட்டுமே சாத்தியம்.
அறிவில் சிறந்த ஒருவனால் மட்டுமே இது சாத்தியம் !

அப்படிப்பட்ட வல்லமையும் ஞானமும் மிக்கவன் தான் அல்லாஹ் என்று சொல்வது பொருந்துகிறது.

அல்லாமல், அவரை நாம் கண்ணியப்படுத்தினோம், அவரது அந்தஸ்தை நாம் உயர்த்தினோம், அல்லாஹ் வல்லமைமிக்கவன் என்று சொல்வதில் எந்த அறிவும் இல்லை !
ஆக, உயர்த்தப்பட்டார் என்பது உடலுடன் தான் என்பது எள்ளளவும் சந்தேகமின்றி இங்கு புரிகிறது.

தன்னளவில் அல்லாஹ் உயர்த்தினான் என்பதற்கு, என்னளவில் அவரை நல்லவனாக கருதுகிறேன் என்று சாதாரணமாக நாம் பேசுவது போல , அந்த அர்த்தத்தில் பொருள் செய்ய வேண்டும் என்று சிலர் மீண்டும் சப்பைகட்டு கட்டக்கூடும். இது எந்த வகையிலும் அர்த்தமில்லாத வாதம்.

என்னளவில் நான் அவரை நல்லவனாக கருதுகிறேன் என்று சொல்வது மனிதனின் பலகீனமான வார்த்தை.

மற்றவர்கள் எப்படி நினைத்தாலும் என்னை பொறுத்தவரை நீ நல்லவன் தான் என்று சொல்வதெல்லாம், எனது அறிவுக்கு உட்பட்டு நீ நல்லவன் என்கிற கருத்தை தரும்.

அப்படி அல்லாஹ் சொல்வானா? என்பது தான் கேள்வி.

ஒரு வாதத்திற்கு அப்படி அல்லாஹ் கருதினான் என்று வைத்தாலும் இந்த இடத்திற்கு இந்த வாதமும் பொருந்தாது.

ரபாஹுல்லாஹ் - என்றால் தன்னளவுக்கு உயர்த்தினான் என்று படர்க்கையான சொல்லாகும். மேலும் உயர்வாக கருதினான் என்கிற வாசகமும் அங்கு இல்லை. உயர்த்தினான் என்று தான் உள்ளது.
முன்னிலையாக சொல்லும் போது தான் என்னளவில் அவரை நல்லவனாக கருதினேன் என்று சொல்வது பொருந்தும். படர்க்கையாக பேசும் போது, தன்னளவில் அவரை நல்லவனாக கருதினான் என்று சொல்லலாமே தவிர தன்னளவில் அவரை நல்லவனாக்கினான் என்பது வார்த்தை அமைப்பின் படியும் பொருந்தாது.

தன்னளவில் என்பதை தன்னை பொறுத்தவரை என்று பொருள் செய்ய இடமிருந்தாலும் அதை விட நெருக்கமான அர்த்தம் தன் கட்டுப்பாட்டில், என்பது தான். இதை தான் எனது மற்ற இரண்டு காரணங்களும் விளக்குகின்றன.

ஒரு வாதத்திற்கு தன்னை பொறுத்தவரை உயர்த்தியதாக அல்லாஹ் சொல்கிறான் என்றே வைத்துக்கொண்டாலும் அந்தஸ்தில் உயர்வு என்று எங்கே உள்ளது?

தன்னை பொறுத்தவரை உடலுடன் மேலே உயர்த்தினான் என்று தான் இப்போதும் உங்கள் மொழியாக்கத்தின் படி கருத்தாகிறதே தவிர, அந்தஸ்தில் உயர்வு என்று இப்போதும் வராது!

அந்தஸ்து என்றால் அந்தஸ்து என்கிற வார்த்தை வர வேண்டும். வெறுமனே உயர்த்தினான் என்றால் உயர்த்தினான் என்று நேரடியாக தான் புரிய வேண்டும்.

தன்னளவில் என்கிற வார்த்தைக்கு அல்லாஹ்வை பொறுத்தவரை, என்று ஒரு வாதத்திற்கு பொருள் செய்தால் கூட, ..
அல்லாஹ்வை பொறுத்தவரை ஈசா நபி மேலே உயர்த்தப்பட்டார் என்கிற பொருள் தான் கிடைக்குமே தவிர அந்தஸ்து என்பதற்கு அப்போதும் இடமில்லை !!

மேலும், வெறுமனே உயர்த்தினான் என்று சொல்லப்பட்டால் உயர்த்தினான் என்று நேரடியாக தான் புரிய வேண்டும் என்பதற்கு ஹதீஸ்களிலும் ஆதாரம் உள்ளன.

அவற்றையும், இது தொடர்பாக இன்னும் சில செய்திகளையும் அடுத்து பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.

தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக