வியாழன், 17 ஜூலை, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (D)

எவருக்கும் நிரந்தரமான வாழ்க்கை இல்லை

"ஈஸா நபி இறக்கவில்லை (பாகம் : 4)
------------------------------------------------------------------

குறித்த நேரத்தில் அனைத்து முஃமீன்களும் தொழ வேண்டும் என்று ஒரு இடத்திலும், பயணிகள் குறித்த நேரத்தில் தொழ வேண்டியதில்லை என்று இன்னொரு இடத்திலும் சொல்லப்படுவதை எவரும் முரண் என்று சொல்ல மாட்டோம்.

அது போல, நிரந்தரமாக வாழும் வாழ்க்கையை எவருக்கும் கொடுத்ததில்லை, முஹம்மது நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்பது போன்று ஒரு இடத்திலும், ஈஸா நபி மீண்டும் இவ்வுலகிற்கு வருவார் என்று இன்னொரு இடத்திலும் சொல்லப்படுவதையும் முரண் என்று சொல்லக்கூடாது என்று முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.

தொழுகை விஷயமாக பயணிகளுக்குரிய சலுகை என்பது ஹதீஸில் இல்லை, குர் ஆனிலேயே அல்லாஹ் சொல்லி விட்டான், ஆகவே இது விதிவிலக்கு என்று தானே புரிய வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பக்கூடும்.

ஆனால் அடிப்படையில் இது தவறான கேள்வி. முதலில், குர் ஆனில் பயணிக்குரிய சலுகை என்று எங்கும் இல்லை. அச்ச நேரங்களில் செயல்படுபவை பற்றி தான் உள்ளது.
பயணிக்குரிய சலுகை ஹதீஸில் தான் இருக்கிறது. ஆகவே இந்த வாதம் தவறு.

ஒரு பேச்சுக்கு, குர் ஆனிலேயே பயணிகள் குறித்த நேரத்தில் தொழ வேண்டியதில்லை என்று இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட, அப்போதும் எனது வாதம் ஒன்றும் அர்த்தமில்லாமல் போகாது.

மூமீன்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்று தனியே ஒரு வசனம் இருக்கிறதா இல்லையா? அது தான் கேள்வி.
அதற்கு மாற்றாக குர் ஆனிலேயே வேறு இடங்களில் விதிவிலக்கு சொல்லப்பட்டால் அது ஏன் முரண் என்று புரியாமல் விதிவிலக்கு என்று புரிகிறீர்கள்? என்று அப்போதும் கேள்வி கேள்வியாக நிற்கத்தான் செய்யும்.

குர் ஆன் எப்படி அல்லாஹ்வின் வார்த்தையோ அது போல் ஹதீஸும் அல்லாஹ்வின் வார்த்தை தான்.

குர் ஆனில் ஒரு இடத்தில் பொதுவாகவும் இன்னொரு இடத்தில் அதிலிருந்து விதிவிலக்காகவும் ஒன்றை சொன்னால் எப்படி அதை விதிவிலக்கு என்று சரியாக புரிவோமோ அது போல தான் குர் ஆனில் ஒன்றை பொதுவாக சொல்லி ஹதீஸில் குறிப்பாக ஒன்றை சொல்லும் போதும், ஹதீஸ் விதிவிலக்கு என்று தான் புரிய வேண்டும்.

இந்த தொழுகை விஷயத்தை நான் உதாரணமாக காட்டியது போலவே, மனிதனை விந்துத் துளியால் படைத்தான் என்கிற பொதுவான இறை செய்தியையும் சான்றாக காட்டினேன்.

மனிதனை விந்துத் துளியால் படைத்தேன் என்று ஒரு இடத்தில் சொல்லி விட்டு, ஆதமை தன் கையால் படைத்தேன் என்று இன்னொரு இடத்தில் சொல்கிறான்.
ஈஸாவை தந்தையின்றி படைத்தேன் என்று வேறொரு இடத்தில் சொல்கிறான்.

(((ஆதமை கையால் படைத்தான் என்று குர் ஆனில் எங்கே இருக்கிறது ? ஆதாரம் காட்ட முடியுமா? என்று நிசார் அவர்கள் கேட்டிருந்தார்.. அவருக்காக இந்த ஆதாரம் :
ஆதமை கையால் படைத்ததாக அல்லாஹ் 38:75 வசனத்தில் சொல்கிறான்)))

மனிதனை விந்துத் துளியால் படைத்தேன் என்று சொன்ன வசனத்தில், ஆதமையும் ஈசாவையும் தவிர என்று அலலாஹ் சொல்லவில்லை.
பொதுவாக மனிதன் என்று பொதுப்படையாக தான் சொல்கிறான்.
மனிதன் என்று பொதுப்படையாக சொன்னால் ஆதமும் அதில் அடங்குவார், ஈஸாவும் அதில் அடங்குவார்.

ஆனால், வேறு வசனங்களில் ஆதம் விந்தால் படைக்கப்படவில்லை என்று தனியே சொல்லப்பட்டதால்,
ஈஸா விந்தால் படைக்கப்படவில்லை என்று தனியே சொல்லப்பட்டதால்,
மனிதனை விந்துத் துளியால் படைத்தோம் என்று அல்லாஹ் பொதுவாக சொல்வது ஈஸாவையும் ஆதமையும் தவிர.. என்று நாமாக புரிகிறோம்.

அது போல தான், முஹம்மது நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்று அல்லாஹ் பொதுப்படையாக சொன்னால் அதில் ஈஸாவும் அடங்குவார் என்று தான் முதலில் அர்த்தம் வைக்க வேண்டும்.
அவ்வாறு அர்த்தம் வைத்து தான் இந்த காதியானிகள், ஈஸா மீண்டும் வர மாட்டார் என்று சொல்கின்றனர்.
ஆனால், குர் ஆனில், முஹம்மது நபிக்கு முன் வந்தவர்கள் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் ஹதீஸில் ஈஸா நபி மீண்டும் வருவார்கள் என்று சொல்லப்பட்டு விட்டதால் ஈஸா நபியை தவிர வேறு அனைவரும் சென்று விட்டார்கள் என்று புரிகிறோம்.

கடந்த இரண்டு பாகங்களில், விதிவிலக்கு என்றால் என்ன, முரண் என்றால் என்ன? என்பதையே விளக்கி வந்ததன் விளைவு என்னவென்றால்,
ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்று நம்புகிறவர்கள் கூட, மீண்டும் வருவார்கள் என்பதை மறுக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

ஈஸா நபி வஃபாத் ஆகி விட்டார்கள் என்று குர் ஆனில் நேரடியாக சொல்லப்பட்டு விட்டது, எனவே அவர் இறந்து விட்டார் .. எனினும், மீண்டும் வர மாட்டார் என்று குர் ஆன் எங்குமே சொல்லாததால், ஹதீஸில் மீண்டும் வருவார் என்று சொல்லப்பட்டுவதை நம்பலாம் என்று இந்த காதியானிகளும் ஒரு படி இறங்கி தான் வந்தாக வேண்டும்.

ஏனெனில், ஒரு வாதத்திற்கு ஈஸா நபி இறந்து விட்டார் என்று வைத்துக் கொண்டால் கூட‌, மீண்டும் வருவார் என்று ஹதீஸ் சொல்வதை மறுக்கத் தேவையில்லை.
இறந்தவர் கூட அல்லாஹ் நாடினால் உயிர்பெற்று மீண்டும் வரலாம்.

இந்த காதியானிகள் மிர்சா மிர்சா எனும் போதையில் உழன்று வருவதால், இதற்கு பதில் சொல்ல முடியாது என்ற போதிலும்,

ஈஸா நபி இறந்து விட்டார் என்பது உண்மை.. ஆனால் மீண்டும் வருவார் என்பது ஹதீஸின் அடிப்படையில் சரி தான் என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும் நடு நிலையுடன் சிந்திக்கும் அவர்கள் மனசாட்சி அதை சரி காணவே செய்யும்.

ஆக, ஈஸா நபி இறந்து விட்டார்
மீண்டும் வர மாட்டார்..

ஆகிய இரண்டும் கொள்கைகளில் ஒரு கொள்கை தவிடு பொடியாகி விட்டது.

இனி ஈஸா இறந்து விட்டார் என்று இவர்கள் சொல்வது சரியா என்பதை மட்டும் கவனமாக பார்த்தாலே போதும்.

ஈஸா வஃபாத் ஆகி விட்டார் என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான் என்பது உண்மையா?
அந்த வசனத்தை வைத்து ஈஸா நபி இறந்து விட்டார் என்கிற முடிவுக்கு வரலாம் என்பது சரி தானா?

என்பதையெல்லாம் பார்ப்பதற்கு முன், இவர்கள் வைக்கும் ஆதாரங்களை அதே வரிசையில் தொடராக பார்க்க துவங்குவோம்.

நிரந்தரமாக வாழும் வாழ்க்கையை எவருக்கும் கொடுக்கவில்லை என்கிற இறை வசனம், பூமியில் தான் வசிக்க முடியும் என்கிற இறை வசனம் போன்றவைகளின் அடிப்படையில் ஈஸா நபி இறந்து விட்டார் என்று புரிய முடிகிறது என்பது இவர்கள் வாதம்.

(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்த வில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருக்கக் கூடியவர்களா? (21:34)

இந்த வசனத்தில் நிரந்தரமாக வாழும் வாழ்க்கையை எவருக்கும் நாம் கொடுக்கவில்லை என்று சொல்வதனுடைய அர்த்தம் எவருமே நித்திய ஜீவன் இல்லை என்பது.

அதனால் தான், நீ மரணித்து விடுவாய், அவர்கள் மட்டும் நிலையாக இருப்பார்களோ? என்று அல்லாஹ் கேட்கிறான்.

நித்திய ஜீவனாக எந்த மனிதனாலும் இருக்க முடியாது என்பதை விளக்கும் வசனம் தான் இது.
தொடர்ந்து வரக்கூடிய அடுத்த வசனத்திலும் (21:35), ஒவ்வொருவரும் மரணத்தை சுவைப்பவரே என்று அல்லாஹ் சொல்வதன் மூலம்..

மரணமே இல்லாத வாழ்க்கை எவருக்கும் தரப்படவில்லை என்பது தான் இந்த வசனத்தின் பொருள் என்பதை தெளிவாக புரியலாம்.

இதை எடுத்துக் கொண்டு, பாருங்கள், எவருக்கும் நிரந்தரமான வாழ்வை அல்லாஹ் கொடுக்கவில்லை.. ஆகவே ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்றூ வாதம் புரிவது மிகவும் பாமரத்தனமான, நுனிப்புல் மேயும் வாதம் தான் என்பது தெளிவு.

ஈஸா நபி அன்றைக்கும் இறக்கவில்லை, என்றைக்கும் இறக்கவே மாட்டார் என்று நாம் சொல்லியிருந்தால்.. அப்போது தான் இந்த இறை வசனத்தை இவர்கள் அதற்கு மறுப்பாய் காட்ட முடியும்.

ஈஸா நபி மரணிக்கவில்லை, ஆனால் ஒரு நாள் அவரும் மரணிப்பார்.

எந்த மனிதருக்கும் அல்லாஹ் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை !

ஒவ்வொருவரும் மரணத்தை சுவைப்பவரே (21:35)

அடிப்படை புரியாமல், ஆஹ்.. 2000 வருடமாக ஒருவர் உயிருடன் இருப்பதா? அய்யகோ இதென்ன கொடுமை.. என்ன ஒரு பெரிய ஷிர்கான கொள்கை இது..

என்றெல்லாம் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பவர்களுக்கு ஷிர்க் என்றால் என்ன என்பதும் தெரியவில்லை.

அல்லாஹ்வுக்கு இணையாக ஒருவர் செய்ததாக நம்பி, அந்த நம்பிக்கைக்கு அல்லாஹ்விடம் அங்கீகாரம் இல்லையென்றால் தான் அது ஷிர்க்.

அல்லாஹ்வுக்கு இணையான ஒரு காரியத்தை ஒருவர் செய்து காட்டி, அதை அல்லாஹ்வும் அங்கீகரித்து கொண்டான் என்றால் அதை நம்புவது ஷிர்க் இல்லை.

இதே ஈஸா நபி வெண் குஷ்டத்தை கையால் தடவியே குணப்படுத்துவார்கள், குருடர்களுக்கு பார்வை வழங்குவார்கள், இறந்தவரை உயிர்ப்பிப்பார்கள்,
மூஸா நபி கைத்தடியை கீழே போட்டு அதை பாம்பாக மாற்றிக் காட்டுவார்கள், சுலைமான் நபி விலங்குகளிடம் கூட பேசுவார்கள், ஜின்களை வசப்படுத்தி வைத்திருந்தார்கள்

இதுவெல்லாம் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய முடிகின்ற, வேறெந்த மனிதருக்கும் செய்ய இயலாத காரியங்கள் தான்.

ஆனால் மூஸா நபி அப்படி செய்தார் என்று நம்புவது ஷிர்க் ஆகி விடுமா? என்றால் ஆகாது.
ஏன் ஆகாது என்றால், அப்படி செய்ததாய் அல்லாஹ்வே சொல்லி விட்டான். அதனால் அது ஷிர்க் இல்லை, அல்லாஹ்வின் குத்ரத்தில் நிகழ்ந்த அற்புதம் என்று புரிகிறோம்.

ஆக, ஷிர்க், ஷிர்க்.. என்று குதிப்பதற்கு முன், அப்படி நடந்ததாக அல்லாஹ் சொல்கிறானா இல்லையா? என்பதை தான் பேச வேண்டும்.
ஈஸா நபி உயிருடன் இருப்பதாக அல்லாஹ் சொன்னால், அதை நம்புவது ஷிர்க் இல்லை.

சரி நான் கேட்கிறேன், 2000 வருடங்கள் உயிருடன் வாழ்வதாக நம்புவது நிரந்தரமாக எவருக்கும் வாழ்க்கையை நான் கொடுக்கவில்லை என்கிற 21:34 வசனத்திற்கு முரண் என்றால்,

நூஹ் நபி 900 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தார்களே, அது இவர்கள் பார்வையில் நிரந்தரமில்லையா? நிரந்தரமாக எவருக்கும் வாழ்க்கை கொடுக்கவில்லை என்கிற 21:34 வசனத்தின் அடிப்படையில் 900 வருடங்கள் வாழ்ந்ததாக சொல்லப்படும் நூஹ் நபியின் வரலாறு பொய் என்று இவர்கள் சொல்வார்களா?

ஆக, என்ன வாதம் புரிந்தாலும், அடிப்படையில் கோளாறு என்றால் எதுவுமே நிற்காது என்பதை காதியானி மதத்தவர்கள் புரிய வேண்டும்.

மேலும், 100 வருடங்கள் பூமிக்கு மேலே உயிரோடு வைக்கப்பட்ட ஒரு நல்லடியார் பற்றி அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறானே.. இதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்பதாக முந்தைய தொடர்களில் நான் எழுப்பியிருந்த கேள்விக்கு.

இது நிஜமல்ல, இது ஒரு கனவு நிகழ்ச்சி என்று நா கூசாமல் பொய் ஒன்றை சொல்லி, எதை அல்லாஹ் தனது ஆற்றலுக்கும் சிஃபத்திற்கும் சான்றாய் காட்டுகிறானோ அதை வெறும் கற்பனை கதையாக திரித்து தங்கள் கொள்கையை நிலைபெற முயற்சிக்கின்றனர் இந்த காதியானி மதத்தவர்கள்.

அது பற்றியும், தொடர்ந்து, ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்பதற்கு சான்றாக இவர்கள் எடுத்து வைக்கும் இன்னபிற ஆதாரங்கள் பற்றியும் அடுத்தடுத்து பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்

தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக