வியாழன், 17 ஜூலை, 2014

சூனியம் செய்ய சொல்லி சவால் விடலாமா?


எனக்கு சூனியம் செய்ய முடியுமா என்று சகோ. பிஜெ விடும் சவால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இவ்வேளையில், இந்த சவாலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் பேருண்மைகளை புரிந்து கொள்ளாமல் சிலர் அதையும் கேலி செய்து வருகின்றனர்.

எனக்கு சூனியம் செய் என்றெல்லாம் சவால் விடக்கூடாது என்கிற விமர்சனம் ஒரு பக்கம் செய்கின்றனர்.

சிலைகளை கடவுளாக வணங்கிய கூட்டத்தாரிடம் இத்தகைய சோதனையை செய்து பார்க்க தான் அல்லாஹ் சொல்கிறான்.

இது தான் எங்கள் கடவுள் என்று சொன்னவர்களிடம், இதை உன் கடவுள் என்கிறாயே, இவற்றுக்கு இருக்கும் கால்களை கொண்டு இவற்றால் நடக்க இயலுமா?
இவற்றுக்கு இருக்கும் கைகளை கொண்டு இவற்றால் பிடிக்க இயலுமா?
இவற்றுக்கு இருக்கும் கண்களைக் கொண்டு இவற்றால் எதையாவது பார்த்திட தான் முடியுமா?

என்று நபியிடம் கேள்வியெழுப்ப சொல்கிறான்.

அத்துடன் நிறுத்தாமல்,
இவற்றுக்கு ஆற்றலும் சக்தியும் இருப்பது உண்மையென்றால் இவற்றை எனக்கெதிராக சூழ்ச்சி செய்ய வையுங்கள் பார்க்கலாம் என்று நபியை சவால் விட சொல்கிறான் அல்லாஹ் ! (பார்க்க 7:195)

அது போல்,

இப்ராஹிம் நபியுடன், உன் இறைவன் உயிர் கொடுப்பதை போல எங்களாலும் கொடுக்க முடியும் என்றெல்லாம் விதண்டாவாதம் செய்து வந்த இணை வைப்பாளர்களை நோக்கி, அத்தகைய இணை வைப்பு செயல் ஒன்றை செய்து காட்டி தங்களுக்கும் இறை சக்தி இருக்கிறது என்று நிரூபிக்குமாறு இப்ராஹிம் நபி, அவர்களை நோக்கி சவால் விடுக்கிறார்கள்.

இதை அல்லாஹ் 2:258 வசனத்தில் சொல்கிறான்.

சூரியனை மேற்கில் உதிக்க செய்யும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு தான் உண்டு. அதை உளப்பூர்வமாக நம்பிய இப்ராஹிம் நபி, அல்லாஹ்வை போல் தனக்கும் ஆற்றல்கள் உள்ளதாக பிதற்றியவனை நோக்கி, அப்படியானால் அல்லாஹ்வின் இந்த ஆற்றலை நீ வெளிகாட்டு பார்க்கலாம் என்று கேட்கிறார்கள்.

இவ்வாறு கேட்பதை அல்லாஹ் அங்கீகரிக்கிறான் !

இதே போல, எந்த சாதனமுமின்றி இன்னொருவனது கை கால்களை முடமாக்க முடியும் என்று நம்புவதும் அல்லாஹ்வின் ஆற்றலில் சொந்தம் கொண்டாடுவது தான் என்கிற வகையில், இப்ராஹிம் நபி பாணியில், நீ உண்மையாளன் என்றால் அதை செய்து காட்டு பார்ப்போம் என்று கேட்கலாம் !

இது போன்ற கேள்விகள் கேட்பது தான் மார்க்கத்திற்கு உட்பட்டது, பொய்யர்களை அடையாளம் காட்டவல்லது ! குர்ஆன் காட்டும் வழிமுறையே இது தான் !

சகோ. பிஜே இப்படி சவால் விடுகிறார் என்றால் இதன் பின்னால் ஒளிந்திருக்கும் சத்தியத்தை தான் இதன் வாயிலாக நாம் புரிய வேண்டும்.
சூனியம் என்பது இல்லவே இல்லை, அதன் மூலம் புற சாதனமின்றி எந்த பாதிப்பையும் செய்யவே இயலாது என்பது 100 % உண்மை.

அதன் காரணமாக தான் எனக்கு செய் பார்போம் என்று ஒருவரால் துணிந்து சொல்ல முடிகிறது. அவர் போல், இந்த சத்தியக் கொள்கையை ஏற்றிருக்கும் ஒவ்வொரு தவ்ஹீத்வாதிகளாலும் சொல்ல முடிகிறது.

ஒரு வேளை சவாலில் தோற்றுப் போனால் என் சார்பாக தான் இந்த பணத்தை தருவேன், ஜமாஅத்திலிருந்து அல்ல, என்று வேறு சொல்லியிருக்கிறார் பிஜே.

இந்த சவாலை விடுத்தவர் ஏதோ பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியுமல்ல, ஒரு வேளை சவாலில் தோற்று விட்டால் கூட கொடுப்பதற்கு ஐம்பது லட்சம் இருக்கிறது என்று சிந்திக்க.

சகோ. பிஜேவின் எதிரிகள் கூட அவர் சில லட்சங்களைக் கூட சம்பாதித்தவரில்லை, எந்த பெரிய சொத்துக்கும் அதிபதியில்லை என்பதை புரிந்து தான் வைத்துள்ளனர்.

பிறகு என்ன நம்பிக்கையில் சொல்கிறார்? என்ன நம்பிக்கையில் தவ்ஹீத்வாதிகள் அனைவருமே இந்த சவாலை விடுக்கிறோம்?

அல்லாஹ்வின் மீது கொண்டிருக்கும் ஈமான் !!

இந்த ஒற்றை காரணம் நெஞ்சில் இருப்பதை தவிர வேறெந்த ஒன்றுமே இந்த சவாலுக்கு தூண்டுகோலாக இருக்கவில்லை !!

அல்லாஹ்வை நம்பினேன் என்று சொன்னால் போதாது, நம்ப வேண்டிய விதத்தில் நம்ப வேண்டும் என்பது மிக மிக முக்கியம் !

இந்த சவால் அதற்கு ஒரு சான்று !!

இந்த சவால் முறியடிக்கப்படாமல் இருக்கும் காலமெல்லாம் சத்தியக் கொள்கை மேலோங்குகிறது என்பதே நிரூபிக்கப்ப‌டும் உண்மையாக இருக்கும் !!

அல்லாஹு அக்பர் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக