வியாழன், 17 ஜூலை, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (E)


பூமியில் தான் வாழ முடியும்

"ஈஸா நபி இறக்கவில்லை" (பாகம் : 5)
--------------------------------------------------------

நிரந்தரமாக வாழும் வாழ்க்கையை எவருக்கும் கொடுக்கவில்லை என்கிற வசனம் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்கிற கருத்தை தராது என்பதை முந்தைய பகுதியில் பார்த்தோம்.

இதற்கு சான்றாக நல்லடியார் ஒருவரை 100 ஆண்டுகள் பூமிக்கு மேலே உறங்க செய்து, அதன் மூலம் அல்லாஹ் தனது அற்புதத்தை நிலை நாட்டியதை எடுத்துக் காட்டி, ஈஸா நபி 2000 வருடங்களாக உயிருடன் இருப்பதாக நம்புவது ஷிர்க் என்றால் இந்த மனிதர்ர் 100 வருடங்கள் தூங்கியே கழித்து, பின் விழித்ததாக நம்புவதும் ஷிர்கா என்று கேட்டிருந்தோம்.

2000 வருடங்களாக வாழ்வது நிரந்தரமாக எவருக்கும் வாழ்க்கையை கொடுக்கவில்லை என்கிற வசனத்திற்கு முரண் என்றால், இந்த நல்லடியார் பற்றிய சம்பவமும் முரணா? என்றும் கேட்டிருந்தோம்.

இதற்கெல்லாம் எந்த பதிலையும் உருப்படியாக சொல்லாத இந்த காதியானி மதத்தவர்கள், இந்த ஒட்டு மொத்த சம்பவமும் கனவு, அது கற்பனையாக அல்லாஹ் சொல்வது என்று

அல்லாஹ்வின் சிஃபத்தையே குழி தோண்டி புதைத்திருக்கிறீர்கள்.

சுப்ஹானல்லாஹ்.

எது கற்பனை? அந்த தொடரில் அல்லாஹ் எதையெல்லாம் சொல்லி வருகிறான்? முன் பின் வசனங்களையெல்லாம் வாசித்து விட்டு கற்பனையா என்று சொல்லுங்கள்.

எதிரிகள் அல்லாஹ்வை போல் நாங்களும் உயிர்கொடுப்போம், மரணிக்க செய்வோம் என்று இப்ராஹிம் நபியிடம் சொன்னதை முந்தைய வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
அவர்கள் கூறுவது பொய்.. அவ்வாறு அவர்களால் உயிர் கொடுக்க முடியாது என்பதை விளக்கும் பொருட்டு தான் இந்த சம்பவத்தை அல்லாஹ் சொல்கிறான்.
நல்லடியாரை 100 வருடங்கள் மரணிக்க செய்து, பின்னர் அல்லாஹ் அவருக்கு உயிர் கொடுக்கிறான்.
இது அல்லாஹ்வுக்கு மட்டும் தான் சாத்தியம் என்பதை நிரூபிக்க அல்லாஹ் செய்து காட்டிய அற்புதத்தை இங்கே அல்லாஹ் மேற்கோள் காட்டுகிறான்.

இது கனவா? காஃபிர்கள் சொல்லும் பதிலை அல்லவா சொல்கிறீர்கள்?

அல்லாஹ்வுக்கு மட்டும் தன் உயிர் கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதற்கு சான்றாக ஒரு சம்பவத்தை அல்லாஹ் எடுத்துக் காட்டும் போது, இது பொய், கற்பனை என்று தான் முஹம்மது நபி (சல்) அவர்களது சமுதாயத்தின் காஃபிர்கள் கூறினார்கள்.

இப்ப்போது மதம் மாறி சென்ற இந்த காதியானிக் கூட்டமும் அதையே சொல்கிறது.

சரி, அப்படியானால் தொடர்ந்து வரக்கூடிய 2:260 வசனத்தையும் கனவு, கற்பனை என்று இவர்கள் சொல்வார்களா?

நீ எப்படி உயிர்பிக்கிறாய் என்று எனக்கு காட்டு என்று மூசா நபி அல்லாஹ்விடம் கேட்க, அல்லாஹ் நான்கு கூறுகளாக வெட்டப்பட்ட பறவை ஒன்றினை உயிர்பிக்கிறான் என்று அந்த வசனம் சொல்கிறது.

இதுவும் கற்பனை தானா?

இது கற்பனை இல்லை என்றால் முந்தைய வசனம் மட்டும் எப்படி கற்பனை ஆனது?

இரண்டுமே, அல்லாஹ் தான் மரணிக்க செய்வான், அல்லாஹ் நாடினால் மரணித்தவர்களுக்கும் உயிர் கொடுப்பான் என்பதை சொல்வதற்கு அருளப்பட்ட வசனங்கள்.

/////உமது உணவும், பானமும் பாரும், அது கெட்டு போகவில்லை, மேலும் உமது கழுதையை பாரும் என்று மட்டுமே அல்லாஹு கூறுகின்றான்.
இதிலிருந்து, உணவும், பானமும், கேட்டுபோகவில்லை, கழுதையும் உயிரோடு இருக்கிறது என்று தான் பொருள்///////

இதுவும் தவறு. கழுதை கெட்டுப் போகாமல் உயிருடன் இருக்கவில்லை என்று அந்த வசனமே சொல்கிறது.

உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! உமது கழுதையையும் கவனிப்பீராக!

என்று அல்லாஹ் சொல்லி விட்டு, எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக! என்று கேட்கிறான்.

கழுதை செத்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் விட்டதால் தான் அதன் எலும்புகளை ஒன்று சேர்ப்போம் என்று சொல்கிறான்.

அவர் கொண்டு வந்த உணவும் பானமும் தான் கெட்டுப் போகவில்லை, மாறாக கழுதை இறந்து போனது. அது தான் இந்த வசனத்தின் கருத்து.

ஆனால் இது ஒரு பிரச்சனையல்ல. ஒரு வாதத்திற்கு, கழுதையும் உயிருடன் தான் இருந்தது என்று வைத்துக் கொண்டாலும் அதனால் இது கற்பனை என்று ஆகாது. அப்போதும் எனது கேள்வி நிற்கத்தான் செய்யும்.

அடுத்ததாக, பூமியில் தான் வசிக்க முடியும் என்று அல்லாஹ் சொல்கிற போது, நீங்கள் ஈஸா நபி வேறொரு உலகில் உயிருடன் இருப்பதாக நம்புவது இந்த வசனத்திற்கு முரண் என்கிற ஒரு வாதத்தை முன் வைக்கின்றனர்.

பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்! (7:10)

இந்த வசனம், மனிதனால் பூமி அல்லாத வேறு இடங்களில் வசிக்க முடியாது என்கிற கருத்தை சொல்கிறது என்பது உண்மை தான்.

ஆனால் இதை சொல்கிற அல்லாஹ் தான் ஈஸா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார் என்பதையும் சொல்கிறான்.
பூமியில் மட்டும் தான் வசிக்க முடியும் என்று ஒரு இடத்தில் சொல்லி விட்டு, இன்னொரு இடத்தில் ஈஸா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார் என்றும், மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் என்றும் சொன்னால், நான் ஏற்கனவே பல உதாரணங்களுடன் விளக்கியது போன்று, ஈஸா நபி மட்டும் இதில் விதிவிலக்கு பெற்றவர் என்று தான் விளங்க வேண்டும்.

ஈஸா நபி வர மாட்டார் என்கிற உங்கள் கூற்றினை நிரூபிக்க, அவர் உயர்த்தப்பட்டார் என்று கூறுவது தவறு என்றும், மீண்டும் வருவார் என்று சொல்வது தவறு என்றும் தான் நீங்கள் நிரூபிக்க வேண்டுமே அல்லாமல், இது போன்ற வசனங்களை மட்டும் எடுத்துக் காட்டி நிரூபிக்க முடியாது.

இன்னும் சொல்லப்போனால், பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதற்கு ஈஸா நபி அல்லாத இன்னொரு மனிதரிடமும் கூட விதிவிலக்கு இருக்கிறது.

ஒரு இரவு நபி (சல்) அவர்கள் இந்த பூமியில், இந்த உலகத்தில் இல்லை.
விண்வெளிப் பயணம் சென்ற அவர்கள், சொர்க்கம், நரகம், ஏழு வானம் என பூமியை விட்டு வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்திருந்தார்கள்.
அதை தான் மிஹ்ராஜ் பயணம் என்று குர் ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன.

மர்யம் என்றால் மிர்சா, ஈஸா என்றால் மிர்சா, ஈஸா வருவார் என்றால் ஈஸாவை போன்றவர் வருவார், பன்றியை கொல்வார் என்றால் தவறுகளை தடுப்பார், தஜ்ஜாலை கொல்வார் என்றால் கெட்டவைகளை அழிப்பார்..

இப்படி அல்லாஹ் சொல்வதையெல்லாம் சம்மந்தமேயில்லாமல் மாற்றிப் புரிந்து சாதனை புரிபவர்கள், மிஹ்ராஜ் விஷயமாக எப்படி சாதனை புரிந்திருக்கிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை.
தங்கள் நிலையை நியாயப்படுத்த மிஹ்ராஜ் என்றால் அது ஒரு கற்பனை என்று உளரிக்கொட்டினாலும் ஆச்சர்யமில்லை.

ஆக, நபி (சல்) அவர்கள் பூமியில் வசிக்காத காலமும் இருந்தது. இருப்பினும், பூமியில் தான் வாழ முடியும் என்று அல்லாஹ் சொல்கிற இடத்தில், இந்த முஹம்மது மிஹ்ராஜ் சென்றதை தவிர.. என்று அல்லாஹ் சொல்கிறானா? என்றால் இல்லை.

நான் ஏற்கனவே சொன்னது போல, பொதுவான செய்திகளை சொல்கிற போது கூடவே விதிவிலக்குகளையெல்லாம் சொல்ல தேவையில்லை. அப்படி அல்லாஹ் சொல்லவும் மாட்டான்.
விந்து துளியால் மனிதனை படைத்தான் என்பது பொதுவான செய்தி. ஈஸா நபி விந்தினால் படைக்கப்படவில்லை என்றாலும், அதை இந்த வசனத்தில் கூறவில்லை.
வேறு இடங்களில் தான் அந்த விதிவிலக்கை சொல்கிறான்.

அது போல, பூமியில் தான் வாழ முடியும் என்கிற ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு மட்டும் அனைத்தையும் புரிந்து விடக் கூடாது.

ஈஸா நபி உடலுடன் உயர்த்தப்ப‌ட்டார், மீண்டும் இவ்வுலகில் வருவார் என்று தனியே வேறு இடங்களில் சொல்லப்பட்டிருக்கும் போது, பூமியில் தான் வாழ முடியும் என்பதில் ஈஸா நபி அடங்க மாட்டார் என்று விளங்குவது எளிது தான்.
முஹம்மது நபி மிஹ்ராஜ் பயணம் மூலம் பூமியில் வாழாத ஒரு நாளும் இருந்தது என்று வேறு இடங்களில் அல்லாஹ் சொல்வதால் பூமியில் மட்டும் தான் மனிதனால் வாழ முடியும் என்பதில் முஹம்மது நபியின் இந்த மிஹ்ராஜ் சம்பவம் விதிவிலக்கு பெற்றது என்று எளிதில் புரிய முடிகிறது.

ஆக, இந்த ஆதாரமும் ஈஸா நபி மரணித்து விட்டதற்கு சான்றாய் இல்லை. ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்றால் மரணித்து விட்டார்கள் என்று நேரடியாக காட்ட வேண்டும். அப்படி எந்த செய்தியும் குர் ஆன் , ஹதீஸில் இல்லை.

இவர்கள் முன் வைக்கும் ஆறு ஆதாரங்களில் இரண்டு ஆதாரங்களின் நிலையை பார்த்து விட்டோம்.

அடுத்தடுத்த ஆதாரங்களை தொடர்ந்து பார்போம், இன்ஷா அல்லாஹ்

தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக