வியாழன், 17 ஜூலை, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (H)


வ‌ஃபாத் என்று ஈஸா நபி சொல்வது போல் முஹம்மது நபியும் சொல்கிறார்களே?

""ஈஸா நபி மரணிக்கவில்லை"" (பாகம் 8)
--------------------------------------------------------------------

ஈஸா நபி இறந்து விட்டதற்கு காதியானிகள் வைக்கும் ஆதாரங்களில் ஆறாவதும், கடைசியுமான ஆதாரம், அவரது வஃபாத் பற்றி குர் ஆனில் சொல்லப்படும் வசனம்.

நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட் களையும் கண்காணிப்பவன். (5:117)

ஈஸா நபியை வணங்கிய சமூகம் மறுமை நாளில் வரும் போது, ஈஸா நபியை அழைத்து, நீ தான் இவர்களை உன்னை வணங்கும்படி சொன்னாயா? என்று அல்லாஹ் கேட்பான்.
அதற்கு ஈஸா நபி மேற்கண்டவாறு பதில் சொல்வார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

என்னை நீ கைப்பற்றியதும்.. என்கிற இடத்தில் அல்லாஹ் பயன்படுத்தியிருக்கும் சொல் "வஃபாத்" என்கிற மூலச்சொல்லிலிருந்து பிறந்த தவஃப்ஃபைத்தனி என்பதாகும்.

வ‌ஃபாத் என்றால் மரணம். ஆகவே ஈசா நபி மரணித்து விட்டார் என்று இந்த வசனம் சொல்கிறது என்பது இவர்கள் வாதம்.

இதே மாதிரியான தருணத்தை நானும் சந்திப்பேன், அப்போது ஈஸா நபி சொல்லும் பதிலை தான் நானும் சொல்வேன் என்று முஹம்மது நபி சொல்வதாகவும் ஹதீஸில் இருக்கிறது.
அதிலும் வ‌ஃபாத் என்று தான் முஹம்மது நபியும் பயன்படுத்துகிறார்கள். எனவே முஹமம்து நபி போல் ஈஸா நபியும் இறந்து விட்டார் என்று வாதம் வைக்கிறார்கள்.

ஆழமான சிந்தனை இல்லாததால் ஏற்பட்ட விளைவு தான் இதுவும்.

மரணத்தை குறிக்க வபாத் என்கிற வார்த்தை இருப்பது போல மவுத் என்கிற வார்த்தையும் இருக்க தான் செய்கிறது.
மவுத் என்கிற வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்கிற ஒரு அர்த்தத்தை தான் எடுக்க முடியும். ஏனெனில், மவுத் என்பதன் அகராதி அர்த்தமே மரணம் தான் !

தவப்பைதனி என்பதற்கான அகராதி பொருள் மரணம் என்பதல்ல. அதன் நேரடி பொருள் கைப்பற்றுதல் அல்லது எடுத்துக்கொள்ளுதல் என்பதாகும். இதை நாம் முதலில் மனதில் கொள்ள வேண்டும்.
அதே சமயம், வஃபாத் என்று வரக்கூடிய பல்வேறு இடங்களில் மரணம் என்கிற அர்த்தமும் செய்யப்படுகிறது.
மரணத்தை பற்றி பேசுகிற வசனம் என்று தெரிய வரும் போது, அங்கே வஃபாத் என்கிற சொல்லுக்கு மரணம் என்று பொருள் செய்வோம்.

மற்றபடி, பொதுவாக, வஃபாத் என்றால் கைப்பற்றுதல் தான்.

ஒரு மனிதனை முழுமையாக எடுத்தல் என்று சொல்வது, அதுவும் அல்லாஹ் எடுத்தான் என்று சொல்லும் போது அது இயற்கை விதிப்படி, மரணத்தை தான் குறிக்கும் என்பதால் வபாத் என்று வருகிற பல இடங்களில் மரணம் என்று நாம் தப்சீர் செய்கிறோம்.
ஆனால் வார்த்தையின் பொருளே "மரணம்" அல்ல!

இந்த வசனமானது, மரணத்தைப் பற்றி பேசும் வசனமேயல்ல.
அவர்களுடன் நான் இருந்த போது அவர்களை கண்காணித்தேன், நீ கைபற்றிய போது நீயே அதை அறிந்தவன்..

என்றால் அல்லாஹ் அவரை எப்படி கைபற்றியிருந்தாலும் இந்த வாசகம் பொருந்தும்.

மரணத்தின் மூலம் கைபற்றியிருந்தாலும் பொருந்தும், மரணமல்லாமல் வேறு வழிகளில் கைபற்றியிருந்தாலும் பொருந்தும்.

இரண்டு அர்த்தங்களும் பொருந்தும் என்பதால் நாம் கைபற்றுதல் என்கிற நேரடி அர்தத்தை மட்டுமே கொடுக்கிறோம்.

அல்லாஹ் ஈஸா நபியை முழுமையாக கைப்பற்றினான். நேரடியாக புரியலாம், ஏதேனும் முறையில் கைப்பற்றியிருப்பான். உயிரை எடுத்து விட்டானா இல்லையா என்பதை இந்த வசனம் சொல்லவில்லை. முழுமையாக எடுத்தான், அவ்வளவு தான்.

உயிர் பற்றி சிந்திக்கும் போது, ஹதீஸ்களின் வாயிலாக "ஈஸா நபி மீண்டும் வருவார்கள்" என்கிற செய்தி கிடைக்கிறது.

வபாத் என்பதன் அகராதி பொருள் மரணம் அல்ல, கைப்பற்றுதல் தான் என்பதற்கு குர் ஆனிலேயே ஏராளமான சான்றுகள் உள்ளன.. உதாரணத்திற்கு 2 :281 , 3 :161 , 16 :111 போன்ற வசனங்களை சொல்லலாம்.

இந்த வசனங்களில் வபாத் என்கிற சொல்லுக்கு கைப்பற்றுதல் என்கிற பொருளை மட்டும் தான் கொடுக்க வேண்டும். மரணம் என்பது பொருந்தாது.

இன்னும், ஹதீஸ்களில் கூட நபி (சல்) அவர்கள் வஃபாத் என்பதை முழுமையாக எடுத்துக் கொள்ளுதல் என்கிற பொருளில் பயன்படுத்தியும் இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிர்! (ஒட்டகத்தின்) விலை முழுவதையும் பெற்றுக் கொண்டாயா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்' என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விலையும் உனக்கே உரியது; ஒட்டகமும் உனக்கே உரியது. விலையும் உனக்கே உரியது; ஒட்டகமும் உனக்கே உரியது''என்றார்கள்

நூல் : முஸ்லிம் 3266

இங்கே , ஒட்டகத்தின் விலையை முழுமையாக பெற்று விட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்கும் இடத்தில் தவப்பைதனி என்கிற வார்த்தையை தான் பயன்படுதியுள்ளார்கள் !

வேறு வேறு இடங்களுக்கு சரி, ஒரு உயிரோடு தொடர்புபடுத்தி வஃபாத் என்று வந்தால் அதற்கு மரணம் என்கிற ஒரு அர்த்தம் தான் உள்ளது என்று சிலர் வாதம் வைக்கலாம்.
ஆனால், அதுவும் தவறான வாதம்.

இதற்கு மறுப்பாக, 39 :42 வசனத்தை தருகிறேன்.

உயிர்களை மரணிக்கும் போதும், மரணிக்காதவைகளை தூக்கத்தின் போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான்.

இங்கு வரக்கூடிய வபாத் என்பதற்கு மரணம் என்கிற பொருளை தர முடியுமா? அப்படி பொருள் செய்தால் உயிர்களை மரணிக்கும் போதும், மரணிக்காதவைகளை தூக்கத்தின் போதும் அல்லாஹ் மரணிக்க செய்கிறான்

என்று சொல்ல வேண்டி வரும். இதில் எந்த அர்த்தமும் இல்லை, இது முதல் விஷயம்.

அப்படி இல்லை என்றாலும், இங்குள்ள கைப்பற்றுதல் என்பது மரணத்தை பற்றி தானே பேசுகிறது என்று நீங்கள் இதற்கு மறுப்பு சொல்வீர்கள்.
அந்த மறுப்பும் எடுபடாது..

ஏன் என்றால், இங்கு அல்லாஹ் சொல்லக்கூடிய வபாத் என்பதும், வேறு வேறு வசனங்களில் அல்லாஹ் சொல்லும் வபாத் என்பதும் ஒரே அர்த்தத்திலான மரணமா? இல்லை என்று நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

உதாரணமாக, 16 :32 வசனத்தை எடுத்துக்கொள்வோம்.

அதில், நல்லவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது ஸலாம் சொல்வார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
இந்த இடத்தில் "கைப்பற்றுதல்" என்பதன் பொருள் - மரணம் தான். மாற்றுக்கருத்தே இல்லை !!

இதில் உயிருடன் தொடர்புப்படுத்தி வருகிறது, ஆகவே இங்கு மரணம் என்று சொல்கிறோம் என்று நீங்கள் வாதம் வைக்கிறீர்கள்.

சரி, 39 :42 வசனமும் இதே போல உயிரை தொடர்புப்படுத்தி வருவதால் இங்குள்ள "கைப்பற்றுதல்" என்பதும் மரணத்தை தான் குறிக்கும் என்று வைத்துக்கொண்டால் கூட , இரண்டும் ஒரே அர்த்தத்தில் சொல்லப்பட்ட மரணமா? இல்லை !!! இது தான் இங்கு கவனிக்க வேண்டியது !!

16 :32 வசனத்தில் உண்மையாகவே நாம் மரணிப்பது பற்றி சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், 39 :42 வசனத்தில் உள்ள கைப்பற்றுதல் என்பது தூக்கத்தை குறிக்கிறது. தூக்கமும் ""ஒரு வகையான"" மரணம் தான் என்பதாலும், தூக்கத்தின் போது உடல் இருக்க, உயிர் மட்டும் அல்லாஹ்விடம் சென்று விட்டு திரும்புகிறது என்பதாலும் இந்த வசனத்தில் வரக்கூடிய கைப்பற்றுதல் என்பதற்கு மரணம் என்று தப்சீர் செய்கிறீர்கள்.

ஆனால், தூங்கிக்கொண்டிருப்பவர் உண்மையில் மற்ற மற்ற மரணித்தவர்களை போல மரணித்தவர்களா? தூங்கிக்கொண்டிருப்பவர்களை கொண்டு போய் அடக்கம் செய்து விடுவோமா? தூங்கி கொண்டிருப்பவர் முன்னால் நின்று அவருக்காக ஜனாஸா தொழுகை தொழுவோமா? இல்லை.
இல்லை என்று நீங்களும் தான் சொல்வீர்கள்.
அப்படியானால் இதற்கு என்ன வேறுபாடு?

16 :32 வசனம், நிஜமாக ஒரு மனிதன் இந்த உலகை விட்டு முழுமையாக பிரிந்து செல்வானே, அவரை கபுரில் கொண்டு போய் வைப்போமே, அந்த மரணத்தை பற்றி சொல்கிறது.
இந்த வசனத்தின் படி, அந்த மனிதரின் இருதயம் நின்று விடும். அதை மரணம் என்று இந்த வசனம் சொல்கிறது.

ஆனால், 39 :42 வசனம், அப்படிப்பட்ட மரணத்தை சொல்லவில்லை - இந்த வசனத்தில் சொல்லப்பட்ட மரணம் என்பது கபுர் அடக்கம் செய்யப்பட வேண்டிய மரணமல்ல.
இந்த வசனத்தின் படி அந்த மனிதரின் இருதயம் இயங்கிக்கொண்டு தான் இருக்கும். அதையும் மரணம் என்று சொல்கிறோம்.

ஆக,
இரண்டு வசனத்திலும் வபாத் என்று வருகிறது.
இரண்டு வசனங்களுமே உயிரை பற்றி தான் பேசுகிறது.

ஆகவே உங்கள் கருத்துப்படி இரண்டு வசனங்களுக்கும் மரணம் என்று பொருள் தான் செய்ய வேண்டும் என்கிற போதிலும் ஒரு வசனத்தின் பொருள் படி மண்ணோடு மண்ணாக சென்று விட்ட மரணம், இன்னொரு வசனப்படி இருதயம் இயங்கிக்கொண்டிருக்கிற மரணம்.
முதல் வசனத்தின் படி, அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும் என்கிற பொருளிலான மரணம், இன்னொரு வசனத்தின் படி ஜனாஸா தொழுகை தொழ முடியாதபடி வேறு விதத்திலான மரணம்.

ஆக, உயிர் பற்றி வந்து விட்டாலேயே அது மரணத்தை தான் குறிக்கும் என்று நீங்கள் சொல்வது ஒரு போலி வாதம்.

உயிர் பற்றி வந்து விட்டால் அது உண்மையான மரணத்தையும் குறிக்கும், மரணத்தை போன்ற ஒரு சம்பவத்தையும் குறிக்கும்!!!

அல்லாஹ் கைப்பற்றினான் என்றால் கைபற்றினான் என்று நேரடியாக புரிந்தாலே போதும்.
எப்படி கைபற்றினாலும் அது கைபற்றுதல் தான்.
அது மரணம் தான் என்று நாமாக புரியத்தான் வேண்டியுள்ளதே அல்லாமல், அந்த வாசகமே மரணத்தை சொல்லவில்லை.

நாமாக அப்படி புரிய வேண்டுமானால், ஈஸா நபி பற்றி வேறெந்த மாற்று விளக்கமும் வேறெங்கும் இல்லாதிருந்தால் அப்படி விளங்கலாம்.

ஆனால், ஈஸா நபியை அல்லாஹ் உடலோடு உயர்த்தினான் என்று குர் ஆன் சொல்கிறது. மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் என்று ஹதீஸ் சொல்கிறது.

மீண்டும் வரக்கூடியவர் ஏற்கனவே மரணிக்காமல் தான் வர முடியும் என்பது தான் இயற்கை விதி.
ஏற்கனவே மரணித்தாலும் அல்லாஹ் நாடினால் வர வைக்க முடியும் என்பது மறுப்பதற்கில்லை என்ற போதிலும், சாதாரண விதி என்பது மரணிக்காமல் உயிருடன் இருந்து திரும்பி வருவது தான்.

இதை அல்லாஹ் குர் ஆனில் வேறொரு இடத்தில் தெளிவாக விளக்குகிறான்.

எங்கள் இறைவா! எங்களை இரண்டு தடவை மரணிக்கச் செய்தாய். இரண்டு தடவை உயிர்ப்பித்தாய். எங்கள் குற்றங்களை நாங்கள் ஒப்புக் கொள் கிறோம். தப்பிக்க வழி ஏதும் உள்ளதா?' என்று அவர்கள் கேட்பார்கள். (40:11)

இந்த வசனத்தில், ஒரு அற்புத உண்மை ஒன்று புதைந்துள்ளது.

அதாவது, ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு வாழ்வும் இரண்டு மரணமும் இருக்கிறது என்பது தான் அந்த உண்மை.

இரண்டு முறை உயிர்ப்பித்தல் என்றால் நமக்கு புரிகிறது. இவ்வுலகில் ஒரு முறை பிறந்திருக்கிறோம், இனி மறுமையில் மீண்டும் ஒரு முறை உயிர் பெறுவோம். ஆகவே இரண்டு முறை உயிர்ப்பித்தல், சரி.

அதென்ன, இரண்டு முறை மரணம்?

இதை கீழ்காணும் இன்னொரு வசனம் விளக்குகிறது.

அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள்? உயிரற்று இருந்த உங்களுக்கு அவன் உயிரூட்டினான். பின்னர் உங்களை மரணமடையச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்! (2:28)

இந்த வசனத்தில், மனிதனுக்கு எப்படி இரண்டு மரணம் என்று புரிகிறது.
அதாவது, பிறப்பதற்கு முன் அனைவருமே உயிரற்ற நிலையில், மரணித்த நிலையில் தான் இருந்தோம் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.

பின்னர் நாம் பிறக்கிறோம், மீண்டும் இறக்கிறோம். எனவே இரண்டு மரணம் !

ஆக, எந்த மனிதனுக்கும் பிறப்பும் இரண்டு, மரணமும் இரண்டு.

இதில் ஈஸா நபியும் விதிவிலக்கில்லை.

அவரும் இரண்டு முறை பிறப்பார், இரண்டு முறை மரணிப்பார்.

ஒரு முறை, அவர் பிறப்பதற்கு முன் மரணித்த நிலையில் இருந்தது.

இன்னொரு முறை, இவ்வுலகில் மீண்டும் வந்த பின் உலகம் அழியும் காலத்தில் மரணிப்பாரே, அது.

ஆக, ஹதீஸில், ஈஸா நபி மீண்டும் வருவார் என்பது, ஏற்கனவே மரணித்து விட்டு, பின்னர் உயிர்பெற்று வருவார் என்று புரிய மேலே நான் சுட்டிக்காட்டியிருக்கும் வசனங்கள் தடையாக இருக்கின்றன.

ஏற்கனவே வாழ்ந்த காலத்தில் மரணித்து, பின் மீண்டும் இவ்வுலகில் வந்து, பின்னர் மீண்டும் மரணித்தால் அவருக்கு மூன்று மரணங்கள் என்றாகிறது.(பிறப்பதற்கு முன் மரணித்ததாக 2:28 சொல்வதையும் சேர்த்து)

ஆக, ஈஸா நபி மரணிக்காமல் மீண்டும் இவ்வுலகில் வருவார் என்பதே சரி.

ஈஸா என்றால் மிர்சா, பன்றியை கொலை செய்வார் என்றால் பன்றி போல இருப்பவரை அழிப்பார்.. தஜ்ஜாலை கொல்வார் என்றால் தஜ்ஜால் போன்றவர்களை கொல்வார் என்றெல்லாம் ஹதீஸ்களுக்கு விளக்கம் என்கிற பெயரில் மடமையின் உச்சத்தில் நின்று உளறிக்கொட்டுவது அறிவா?

அல்லது, ஈஸா வருவார் என்று ஹதீஸ் சொல்கிறதா? வருவார்.. என்று நேரடியாக புரிகிறோம் என்று சொல்வதும்,

அல்லாஹ் கைப்பற்றினான் என்று சொல்கிறானா, அதையும் நேரடியாக புரிவோம் என்று சொல்வதும் அறிவா?

எது அறிவு, எது அறியாமை?

ஈஸா நபி இறக்கவில்லை, அல்லாஹ்வால் உயர்த்தப்பட்டு பின் மீண்டும் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட்டு, பின்னர் தான் இறப்பார் என்பது வேறு வேறு இறை செய்திகள் மூலமாக நமக்கு புரிகிறது.

அப்படியானால், இந்த வஃபாத் என்பதற்கு இப்போது என்ன அர்த்தம் வைக்க வேண்டும்? இது தான் கேள்வி.

மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தான் என்கிற கதையாக, ஒரு வசனத்தை மட்டும் வைத்து, அந்த சொல் தானே வேறு இடங்களிலும் மரணம் என்பதற்கு பயன்படுத்தட்டிருக்கிறது, எனவே இங்கும் மரணம் தான் என்று புரிவது தான் பாமரத்தனம்.

வேறு வேறு செய்திகளை ஒப்பீடு செய்து, இந்த வார்த்தையின் அகராதி அர்தத்தையும் சரி பார்த்து, எதற்கும் முரணில்லாத வகையில் அர்த்தம் வைப்பது தான் அறிவு.

சரி, முஹம்மது நபியும் ஈஸா சொல்வதையே நானும் சொல்வேன் என்று சொல்லியிருக்கிறார்களே, அப்படியானால் அவரும் உடலுடன் உயர்த்தப்பட்டாரா? என்றொரு கேள்வியை கேட்கிறார்கள்.

நான் ஏற்கனவே சொன்னது போல், அல்லாஹ் கைப்பற்றினான் என்றால் கைப்பற்றினான் என்று மட்டும் புரிந்து, அது எப்படி, எங்கே என்கிற ஆராய்ச்சியிலெல்லாம் இறங்க தேவையில்லை.

உடலோடு கைபற்றினாலும் கைபற்றுதல் தான். உயிரை பிரித்து, மரணம் வாயிலாக கைபற்றுதலும் கைப்பற்றுதல் தான்.

இரண்டில் எது நடந்தாலும் கைபற்றுதல் (வஃபாத்) என்பது இரண்டுக்கும் பொருந்துகிற ஒரு பொது சொல்.
அதை மரணிக்காத ஈஸா நபியும் பயன்படுத்தலாம், மரணித்த முஹம்மது நபியும் பயன்படுத்தலாம்.
இருவரையும் அல்லாஹ் கைப்பற்றி விட்டான் என்பது தான் எங்கள் கொள்கை !
ஆக, இந்த கேள்வியும் உங்கள் பக்கம் சான்றாக நிற்கவில்லை.

அப்துர்ரஹ்மான், அப்துல்லாஹ் என இரண்டு நண்பர்கள் ஹோட்டலுக்கு செல்கிறார்கள்,
அப்துர்ரஹ்மான் சாப்பிடுகிறார், அப்துல்லாஹ் சாப்பிடாமல் இருக்கிறார்,

அப்போது அங்கே ஒரு கொலை நடக்கிறது.
காவல் துறையினர், இருவரையும் விசாரிக்கிறார்கள். முதலில் அப்துல்லாஹ்விடம், கொலைகாரனை எப்போது பார்த்தாய்? என்று கேட்கிறார்கள்.
ஆம் நான் ஹோட்டலில் இருக்கும் போது பார்த்தேன், அப்போது மணி சுமார் 10 இருக்கும், அவன் பார்க்க‌ சிகப்பாக உயரமாக இருந்தான்.. என்று பதில் சொல்கிறார் அப்துல்லாஹ்.

பின்னர் அப்துர்ரஹ்மானிடம் கேட்கிறார்கள்.
அதற்கு அவர் "என் நண்பர் அப்துல்லாஹ் சொன்னதை தான் நானும் சொல்கிறேன், நான் ஹோட்டலில் இருக்கும் போது பார்த்தேன், அப்போது மணி சுமார் 10 இருக்கும், அவன் பார்க்க‌ சிகப்பாக உயரமாக இருந்தான்"

என்று பதில் சொல்கிறார் அப்துர்ரஹ்மான்.

அதெப்படி ஹோட்டலில் இருக்கும் போது என்று இருவரும் சொல்கிறீர்கள்?? அப்துர்ரஹ்மானாகிய நீ சாப்பிட்டாய், உன் நண்பர் அப்துல்லாஹ் சாப்பிடவில்லையே?

பிறகெப்படி இருவரும் ஒரே மாதிரி " நான் ஹோட்டலில் இருக்கும் போது" என்று பதில் சொல்கிறீர்கள்??

என்று கேள்வி கேட்டால் அது அர்த்தமுள்ள கேள்வியா?

இது தான், முஹம்மது நபியும், ஈஸா நபியும் ஒரே மாதிரி வஃபாத் என்கிற சொல்லை பயன்படுத்தியதற்கும் கச்சிதமாக பொருந்தக்கூடிய உதாரணம்.

ஹோட்டலில் இருக்கும் போது.. என்பது பொதுவான சொல்.
ஹோட்டலில் சாப்பிடவும் செய்யலாம், சும்மாவும் இருக்கலாம்.

ஆனால், ஹோட்டலில் இருக்கும் போது என்று யார் சொன்னாலும், ஹோட்டலில் சாப்பிட தானே செல்வார்கள் என்று நாம் பொதுவாக அறிந்து வைத்திருக்கும் நியதிப்படி,

ஹோட்டலில் இருக்கும் போது என்றால் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது.. என்று நாமாக அர்த்தம் வைக்கிறோம்.
அல்லாமல், ஹோட்டலில் இருக்கும் போது.. என்று சொல்லி விட்டாலே அது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது.. என்கிற அர்த்தம் வராது.

சாப்பிட்ட அப்துர்ரஹ்மானும் "நான் ஹோட்டலில் இருக்கும் போது" என்று சொல்லலாம், தவறில்லை,

சாப்பிடாமல் இருந்த அப்துலாஹ்வும் "நான் ஹோட்டலில் இருக்கும் போது" என்று சொல்லலாம், தவறில்லை.

இறந்து போன முஹம்மது நபியும் "என்னை அல்லாஹ் கைபற்றிய போது" என்று சொல்லலாம்,தவறில்லை,
இறக்காத ஈஸா நபியும் "என்னை அல்லாஹ் கைபற்றிய போது" என்று சொல்லலாம்,தவறில்லை !

இது போன்ற உதாரணங்கள் சொல்கிற போது, அதையும் கேலி செய்து, இவருக்கு உலக விஷயங்கள் தான் உதாரணமாக கிடைத்ததா? என்று ஒரு பக்கம் இந்த காதியானிகள் கேஎலி செய்வதை பார்க்கிறேன்.

அறியாமையில் மூழ்கியிருக்கும் மூடர்களுக்கு உறைக்கும் விதமாக‌ உலக விஷயங்களை அல்லாஹ்வே பல்வேறு இடங்களில் உதாரணமாக சொல்லியிருக்கிறான்.

கால்நடை உதாரணம் - 2:171
பாறை, மழை உதாரணம் 2:264
தோட்டம் உதாரணம் 2:265
மேகம் 7:57
நாக்கை தொங்க விடும் நாய் 7:176
சிலந்திப் பூச்சி 29:41

இன்னும் ஏராளமான வசனங்களில் உலக விஷயங்களை தான் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான்.
அறிவீனர்களுக்கு உதாரணம் தான் தெளிவான மறுப்பு.

ஆக, வஃபாத் என்று சொல்லி விட்ட காரணத்தால் ஈஸா நபி மரணித்து விட்டார் என்பதும் சரியான சான்று இல்லை, அதையே முஹம்மது நபி எடுத்து சொன்னார்கள் என்பது கூட, இருவரும் அவரவர் நிலையை எடுத்து சொன்னதாக தான் அர்த்தமாகும் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இருவருமே மரணத்தைப் பற்றி பேசவில்லை, அவர்களுடன் இருந்த ஒரு நிலை, அவர்களுடன் இல்லாத, அல்லாஹ் கைபற்றி விட்ட ஒரு நிலை.. என இரண்டு நிலை இருந்ததை தான் விளக்குகிறார்கள். அந்த நிலை எப்படிப்பட்ட நிலை என்பதையெலலம் இந்த அறிவிப்புகளிலிருந்து புரிய தேவையுமில்லை.

ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்பதற்கு சான்று என்கிற பெயரில் இவர்கள் வைத்த ஆறு ஆதாரங்களும் எப்படி சோடை போயின, என்பதை இதுவரை பார்த்தோம்.

ஈஸா நபி மரணிக்கவில்லை, அவர் உடலுடன் அல்லாஹ்வின் புறத்தில் உயர்த்தப்பட்டு தான் இருக்கிறார், மீண்டும் இவ்வுலகிற்கு வருவார் என்பதற்கு நம் தரப்பில் வைக்கப்படும் சான்றுகளை இனி அடுத்தடுத்து பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.

தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக