வியாழன், 17 ஜூலை, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (B)


பயணிகள் தொழுகையை ஜம்மு செய்யலாம் என்பது முரண்பாடா?

"ஈஸா நபி இறக்கவில்லை" (பாகம் 2)
-------------------------------------------------------------------------------

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று கூறுவோர் ஆறு வசனங்களை தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக காட்டுகிறார்கள் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.

அந்த ஆறு ஆதாரங்கள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக பார்ப்பதற்கு முன்னால், குர்ஆன் ஹதீஸின் அணுகுமுறை குறித்த இவர்களது அறியாமையை முதலில் விளக்குவது இதை வாசிக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

குர் ஆனில் ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கும், அதற்கான கூடுதல் விளக்கம், அதில் உள்ள விதிவிலக்கு போன்றவை ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கும்.

இது தான் பல்வேறு சட்டங்களில் அல்லாஹ்வின் அணுகுமுறையாக இருக்கின்றது.

திறந்த மனத்துடனும், பொறுமையுடனும் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு எளிமையாக புரியும்.

முதலில் தொழுகை சட்டத்தை எடுத்துக் கொள்வோம்.

தொழுகை என்பது முஃமீன்கள் ஒவ்வொருவருக்கும் நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது என்று அல்லாஹ் சொல்கிறான்.

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (4:103)

இந்த வசனத்தின் படி, ஒவ்வொரு ஐவேளை தொழுகையையும் அந்தந்த நேரத்தில் கட்டாயம் தொழுதாக வேண்டும் என்றும், இதில் எவருக்கும் விதிவிலக்கு இல்லை என்றும் முஃமீன்கள் அத்தனை பேரையும் இந்த வசனம் குறிப்பதாகவும் புரிய முடிகிறது.

இப்போது, குர் ஆனுக்கு விளக்கமாக அமைந்த ஹதீஸ் என்ன சொல்கிறது என்று பார்போம்.

நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 1091

இந்த ஒரு அளவுகோலை மட்டும் இங்கே நான் விளக்க ஆசைப்படுகிறேன்.

குர் ஆனில் (4:103) வசனத்தில் ஒவ்வொரு தொழுகையையும் அதனதன் நேரத்தில் தான் தொழ வேண்டும் எனவும் அப்படி தொழுதால் தான் முஃமீன் என்று ஒருவன் அல்லாஹ்வால் கருதப்படுவான் எனவும் சொல்லப்ப‌டுகின்றது.

ஆனால் புஹாரியில் பதிவாகியுள்ள ஹதீஸில் பயணியாக இருக்கும் நபி (சல்) அவர்கள் மஹ்ரிபை அதன் நேரத்தில் தொழ மாட்டார்கள் என்று உள்ளது.

இப்போது இந்த இரண்டையும் நாம் எப்படி புரிவோம்? எப்படி புரிய வேண்டும்?

குர் ஆனில் அல்லாஹ் சொல்வது பொதுவான கட்டளை.

ஹதீஸில் நபி (சல்) அவர்கள் காட்டித் தந்தது விதிவிலக்கு பெற்றவர்களுக்கான சலுகை.

இப்படி ஏன் புரிகிறோம்? என்றால்..

குர் ஆனில் அல்லாஹ் பொதுவான செய்திகளை தான் சொல்வான். அது தான் குர் ஆனின் நடைமுறை.

ஒவ்வொன்றையும் விலாவாரியாக குர் ஆன் விளக்காது.

ஒவ்வொன்றையும் தனிதனியே பிரித்து விளக்கும் வேலையை குர் ஆன் செய்யாது.

அதை செய்ய தான் நபி (சல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். அதை விளக்கும் வேலையை தான் அவர்கள் செய்தார்கள்.
அது தான் ஹதீஸ் நூல்களாக நம் கைகளில் உள்ளது.

தொழுகையை நிலைனாட்டுங்கள் என்று சொல்வான். ஆனால் எப்படி தொழ வேண்டும் என்று சொல்ல மாட்டான்.

சகாத் கொடுங்கள் என்று சொல்வான், எப்படி கொடுக்க வேண்டும் என்று சொல்ல மாட்டான்.

ஹஜ் செய்யுங்கள் என்று சொல்வான், எப்படி செய்ய வேண்டும் என்று சொல்ல மாட்டான்.

எப்படி சட்டத்தை மட்டும் சொல்லி விட்டு அதன் செயல் முறையை நபி (சல்) அவர்கள் விளக்கும்படி விட்டு விட்டானோ அது போல தான், பொதுவாக அனைவரும் பேண வேண்டிய விஷயங்கள் என்று சிலவற்றை சொல்வான். அதில் விதிவிலக்குகளை சொல்ல மாட்டான்.

அந்த பொது விதியிலிருந்து விலக்கு பெற்றவர்கள் யார் யார் ? என்பதை நபி (சல்) அவர்கள் விளக்குவார்கள்.

முஃமீன்கள் அனைவருக்கும் தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று பொதுவாக அல்லாஹ் சொல்வான்.

அந்த முஃமீன்களில் பயணியாக இருப்பவர் பிற்படுத்தி தொழுது கொள்ளலாம் என்று நபியவர்கள் மூலம் (ஹதீஸின் மூலம்) விலக்கு அளிப்பான்.

குர் ஆனின் அணுகுமுறையை புரிந்து, குர் ஆனுடன் ஹதீஸும் தேவை என்பதை அறிந்த முஃமீன்கள் என்றால் இதை முரண்பாடின்றி அழகாக புரிவார்கள்.

அல்லாமல், குர் ஆனில் தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று எல்லா முஃமீன்களுக்கும் பொதுவாக தான் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்,

எனவே பயணியாக இருப்பவர் மஹ்ரிபை பிற்படுத்தி தொழலாம் என்று ஹதீஸில் வந்திருப்பது இந்த குர் ஆன் வசனத்திற்கு முரண் என்று எவராவது சொன்னால்

அவர் குர் ஆனை பேணியவராகவும் ஆக மாட்டார்,

குர் ஆனை விளக்க வந்தவர்கள் தான் நபி (சல்) அவர்கள் என்பதை நம்பியவராகவும் ஆக மாட்டார்.

நபி (சல்) அவர்கள் கொண்டு வந்த ஹதீஸை ஏற்றவராகவும் ஆக மாட்டார்.

மொத்தத்தில், இஸ்லாமிய வட்டத்தை விட்டே வெளியேறியவராக ஆவார்.

குர் ஆனில் முஃமீன்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்று பொதுவாக அல்லாஹ் சொல்கிறான்.

ஹதீஸில் அந்த முஃமீன்களில் பயணியாக இருப்பவர் தாமதமாகவும் தொழலாம் என்று சொல்கிறான்.

இரண்டும் வஹி தான், இரண்டும் அல்லாஹ் சொன்னது தான்.

இங்கே முரண்பாடு கற்பிப்பது மடமை.

முரண்பாடு எப்போது வரும்?

பயணியாக இருக்கும் முஃமீன்களுக்கும் தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்லியிருந்து,

ஹதீஸில் நபி (சல்) அவர்கள் பயணிகள் தாமதமாக தொழுது கொள்ளலாம் என்று சொல்லியிருந்தால் அப்போது தான் இரண்டும் முரண் என்று ஆகும்.

இதை ஏன் சொல்கிறேன்? இது எப்படி ஈஸா நபி விஷயமாக காதியானி மதத்தவர்களுக்கு பொருந்துகிறது என்பதை அடுத்தடுத்த பாகங்களில் காணலாம்..

தொடரும், இன்ஷா அல்லாஹ்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக