வியாழன், 17 ஜூலை, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (C)


முரண் என்றால் என்ன, விதிவிலக்கு என்றால் என்ன ??

ஈஸா நபி இறக்கவில்லை (பாகம் 3)
-------------------------------------------------------------------------------

விதிவிலக்கு என்றால் என்ன? முரண் என்றால் என்ன என்கிற அடிப்படை அறிவு இல்லாமல் போன காரணத்தால் தான் காதியானி மதமே உண்டாகியிருக்கிறது.

இந்த அடிப்படை புரியாத காரணத்தால் தான் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்கிற பாமரத்தனமான சித்தாந்தங்கள் சமூகத்தில் ஊடுருவத் துவங்கின.

மனிதனுக்கு இரண்டு கைகள் என்று பாலிய பாடத்தில் ஆசிரியர் நமக்கு சொல்லித் தந்திருப்பார்.

எப்படி? கடந்த 2003 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு கையோடு குழந்தையொன்று பிறந்ததாக எட்டாம் வகுப்பு ஆசிரியர் எங்களிடம் சொன்னாரே, அப்படியானால் இந்த ஆசிரியர் தவறாக சொல்கிறார் என்று எவனாவது கேள்வி கேட்டால் அது அறிவுள்ள கேள்வியாகுமா? என்றால் ஆகாது.

மனிதனுக்கு இரண்டு கைகள் என்பது பொது விதி. பொது விதியை தான் எல்லாரும் சொல்வார்கள். சொல்லும் போதே விதிவிலக்கையும் சேர்த்தே சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமை.

ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பாடம் எடுக்கையில், மனிதனுக்கு இரண்டு கைகள் என்று சொல்லிக் கொடுத்தாலே போதும். அந்த பொது விதியை தான் அவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாமல்,

""மனிதனுக்கு இரண்டு கைகள், நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு குழந்தை, ஐரோப்பா கண்டத்திலுள்ள இரண்டு குழந்தை, ஆஸ்திரேலியாவில் ஐந்து குழந்தைகள் ஆகியவற்றை தவிர..""

இப்படி எந்த பள்ளிக்கூடத்திலும், எந்த ஆசிரியரும் பாடம் நடத்த மாட்டார்.

விதிவிலக்கை சொல்லாமல், மனிதனுக்கு இரண்டு கைகள் என்று மட்டுமே சொன்னதால், நாமக்கலில் ஒற்றை கையுடன் குழந்தை பிறந்ததை பொய் என்று எவரும் சொல்ல மாட்டோம்.

ஆசிரியர் பொதுவான விதியை சொன்னார், அதிலிருந்து விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக உலகில் அற்புதங்கள் நடைபெறத்தான் செய்யும், அவை இந்த விதிவிலக்கை பொய்ப்பிக்காது, அல்லது அதை அர்த்தமற்றதாக ஆக்காது என்று அனைவருமே புரிந்து கொள்வோம்.

அப்படி தான் தொழுகை விஷயமாக நான் முந்தைய பதிவில் சொன்னதையும் புரிகிறோம்.

தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்வது பொது விதி.

அதிலிருந்து ஹதீஸில் சொல்லப்படும் பயணிகள் விதிவிலக்கு பெற்றவர்கள்.

விதிவிலக்கு பெற்றவர்களையெல்லாம் பொது விதிகளிலே இணைத்து தான் சொல்ல வேண்டும், இல்லையென்றால் அந்த விதிவிலக்கை முரண் என்று புரிந்து அதை மறுப்பேன் என்று எவராவது அடம்பிடித்தால்,சிந்தனை தடுமாற்றம் என்பது அவரிடம் தான் உள்ளது என்று பொருளாகுமே தவிர, சொல்லப்பட்டும் பொது விதியிலும், விதிவிலக்கிலும் எந்த தவறும் இருப்பதாக ஆகாது.

இது தான் விதிவிலக்கு என்பது.

இதே விதிவிலக்கு எப்போது முரண் என்கிற நிலையை அடையும்??

நாமக்கலில் ரமேஷுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இரண்டு கைகள் என்று ஒன்றாம் வகுப்பு மாணவருக்கு ஆசிரியர் பாடம் நடத்த..

மறுபுறம், அதே ரமேஷுக்கு பிறந்த குழந்தைக்கு ஒரு கை மட்டும் இருக்கிறது என்று எட்டாம் வகுப்பு ஆசிரியர் கூறினால், இரண்டும் முரண் என்று சொல்வோம்.

இது தான் முரண் என்பது.

முஃமீன்கள் அனைவருக்கும் தொழுகை நேரங்குறிக்கப்பட்ட கடமை என்று குர் ஆன் சொல்வதற்கு பதிலாக,

பயணிகளாக இருக்கும் முஃமீன்கள் அனைவருக்கும் தொழுகை நேரங்குறிக்கப்பட்ட கடமை என்று குர் ஆன் சொல்லியிருந்தால்,

ஹதீஸில் பயணிகள் மஹ்ரிபை பிற்படுத்தி தொழலாம் என்று வரக்கூடிய சட்டம் குர் ஆனுக்கு முரண் என்று ஆகும்..

அப்படியொரு நிலை இருந்தால் அந்த ஹதீஸை தூக்கிப் போட்டு விட்டு, குர் ஆனுக்கு முன்னுரிமை கொடுப்போம்.

இது தான் முரண் என்பது.

இவர்கள் ஈஸா நபி இறந்து விட்டார் என்பதற்கு சான்றாக

எவருக்கும் நிரந்தர வாழ்க்கையை கொடுக்கவில்லை, எவருக்கும் உணவு உண்ணாத உடல் இல்லை,
முஹம்மது நபிக்கு முன் வந்த தூதர்கள் இறந்து விட்டனர்..

போன்ற வசனங்களை எடுத்துக் காட்டி, இதன் காரணமாக ஈஸா நபி இறந்து விட்டார் என்றும் மீண்டும் இவ்வுலகில் வர மாட்டார் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால், ஹதீஸ்களில் ஈஸா நபி இவ்வுலகிற்கு மீண்டும் வருவார்கள் என்று தெளிவாக சொல்லபட்டிருக்கிறது.

இப்போது குர் ஆன் வசனங்களையும் இந்த ஹதீஸ்களையும் இணைத்து புரிய வேண்டுமா அல்லது முரண் என்று கூறி ஹதீஸை களைய வேண்டுமா?

குர் ஆனில் சொல்லப்பட்டவைகளிலிருந்து ஹதீஸில் சொல்லப்பட்டவை விதிவிலக்கு பெற்றவை என்று புரிய முடிகிறதா
அல்லது குர் ஆனுக்கு ஹதீஸ் முரண் என்று புரிய இடமிருக்கிறதா?

என்பதை ஆராய.. நான் ஏற்கனவே சொன்னது போல், முரண் என்றால் என்ன, விதிவிலக்கு என்றால் என்ன? என்கிற விளக்கத்தை இதனுடம் ஒப்பிடுங்கள்.

ஹதீஸில் முஃமினான பயணிகள் தொழுகையை குறித்த நேரத்தில் தொழ வேண்டியதில்லை என்று உள்ளது.

குர் ஆனில், முஃமினான பயணிகள் தொழுகையை குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்று இடம்பெற்றிருந்தால், ஹதீஸ் குர் ஆனுக்கு முரண் !

அப்படியொரு நிலை ஏற்பட்டால், பயணியாக இருந்தாலும் குறித்த நேரத்தில் தான் தொழ வேண்டும் என்று குர் ஆன் கூறும் சட்டத்தை தான் எடுத்திருப்போம்.

ஹதீஸில், பயணிகள் குறித்த நேரத்தில் தொழ வேண்டியதில்லை என்கிற சட்டத்தை உதாசீனப்படுத்தியிருப்போம்.

ஆனால், உண்மையில் குர் ஆனில் பயணிகள் குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்று இல்லை.
பொதுவாக எல்லா முஃமீன்களும் குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்று தான் உள்ளது.
பொதுவாக அதில் சொல்லப்பட்டதிலிருந்து ஹதீஸில் விதிவிலக்கை சொல்கிறது என்று புரிவதால் ஹதீஸை உதாசீனப்படுத்தாமல்,

குர் ஆனில் சொல்லப்பட்டது எல்லாருக்குமுரிய சட்டம், ஹதீஸில் சொல்லப்பட்டது பயணிக்கு மட்டும் உரிய சட்டம் என்று இணைத்து புரிகிறோம்.

அது போல, ....................................

ஹதீஸில் ஈஸா நபி இறக்கவில்லை, இவ்வுலகிற்கு மீண்டும் வருவார்கள் என்று உள்ளது.

குர் ஆனில் ஈஸா நபி இறந்து விட்டார்கள், இவ்வுலகிற்கு மீண்டும் வர மாட்டார்கள் என்று இடம்பெற்றிருந்தால் ஹதீஸ் குர் ஆனுக்கு முரண் !

அப்படியொரு நிலை ஏற்பட்டால், எல்லா நபியையும் போல் ஈஸா நபியும் இறந்து விட்டார், மீண்டும் வர மாட்டார் என்று குர் ஆன் கூறும் சட்டத்தை தான் எடுத்திருப்போம்.

ஹதீஸில், ஈஸா நபி மீண்டும் வருவார் என்கிற செய்தியை உதாசீனப்படுத்தியிருப்போம்.

ஆனால், உண்மையில் குர் ஆனில் ஈஸா நபி மீண்டும் வர மாட்டார் என்று இல்லை.

பொதுவாக முஹம்மது நபிக்கு முன்னுள்ள நபிமார்கள் இறந்து விட்டார்கள் என்று தான் உள்ளது.
பொதுவாக அதில் சொல்லப்பட்டதிலிருந்து ஹதீஸில் விதிவிலக்கை சொல்கிறது என்று புரிவதால் ஹதீஸை உதாசீனப்படுத்தாமல்,

குர் ஆனில் சொல்லப்பட்டது மற்ற எல்லா நபிமார்களைப் பற்றிய செய்தி , ஹதீஸில் சொல்லப்பட்டது ஈஸா நபியை பற்றி மட்டுமுள்ள செய்தி என்று இணைத்து புரிகிறோம்.

விதிவிலக்கை முரண் என்றும் முரணை விதிவிலக்கு என்றும் குழப்பி விடுவதால் ஏற்பட்ட அறியாமை தான் இதற்கு காரணம்.

ஈஸா நபி மரணித்து விட்டார், மீண்டும் வர மாட்டார் என்று குர் ஆனில் நேரடியாக சொல்லியிருந்தால், மீண்டும் வருவார் என்கிற ஹதீஸை நாம் தூக்கி போட்டிருப்போம்.

அப்படியான பல்வேறு ஹதீஸ்களை நாம் மறுக்கத் தான் செய்கிறோம்.

உதாரணத்திற்கு, முஹம்மது நபிக்கு சூனியம் செய்யப்படவில்லை என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்.
ஆனால், ஹதீஸில் முஹம்மது நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக வருகிறது.

இந்த இரண்டும் நேர் எதிராக மோதுகிறது என்பதால் ஹதீஸில் சொல்லப்பட்டது பொய்யான செய்தி என்று அதை தூக்கி போட்டு விடுகிறோம்.

இவ்வாறு இன்னும் பல ஹதீஸ்களை குர் ஆனுக்கு முரண் என்று நாம் மறுக்கத் தான் செய்கிறோம்.

அதற்கெல்லாம் காரணம், எதை ஹதீஸ் சொல்லுமோ அதற்கு நேர் எதிராக குர் ஆன் சொல்லியிருக்கும்.

அவ்வாறு நேர் எதிராக, எதிர் எதிரே முட்டி மோதக்கூடிய வகையில் தொழுகை சட்டமும் இல்லை, ஈஸா நபி மீண்டும் வருவார் என்பதும் இல்லை.

முஹம்மது நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்கிற வசனத்தை வைத்து ஈஸா நபி மீண்டும் வர மாட்டார் என்று வாதம் புரிகிறவர்கள்,

தொழுகை என்பது முஃமீன்கள் அனைவருக்கும் நேரம் குறிக்கப்பட்ட கடமை என்கிற வசனத்தை வைத்து, பயணிகள் தொழுகையை பிற்படுத்தி தொழக்கூடாது என்று தான் வாதம் வைக்க வேண்டும்.

தங்களுக்கு சாதகமான ஒன்றுக்கு ஒரு பார்வையும், பாதகமான இன்னொன்றுக்கு வேறொரு பார்வையும் கொண்டிருந்தால்,

ஒன்று அவர்கள் சிந்தனை தடுமாற்றமுடையவர்கள் என்று பொருளாகும்
அல்லது சந்தர்ப்பவாதிகள் என்று அர்த்தமாகும்.

இரண்டில் எது நிரூபணமானாலும் அவர்கள் வைப்பது தவறான வாதம் என்பதும் சேர்ந்தே நிரூபணமாகி விடும் !

தொடரும் இன்ஷா அல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக