வியாழன், 17 ஜூலை, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (G)


பொய் கடவுள்கள் இறந்து விட்டார்கள்

"ஈஸா நபி இறக்கவில்லை" (பாகம் : 7)
----------------------------------------------------------

பூமியில் தான் வாழ முடியும் என்கிற இறை வசனம் பொதுவாக சொல்லப்பட்டாலும் அதில் மிஹ்ராஜ் பயணம் மேற்கொண்ட முஹம்மது நபி விதிவிலக்கு பெற்றது போல் அல்லாஹ்வால் தன்னளவில் உயர்த்தப்பட்ட ஈஸா நபியும் விதிவிலக்கு பெற்றவர்கள் என்பது ஏற்கனவே விளக்கப்பட்டது.

ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்று இந்த வசனம் சொல்லவில்லை.

நிரந்தரமாக வாழும் வாழ்க்கையினை எவருக்கும் கொடுக்கவில்லை என்கிற இறை வசனமும் ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதை சொல்லவில்லை. ஈஸா நபியும் மரணிக்கத் தான் போகிறார். மரணமேயில்லை என்று அவரைப் பற்றி எவராவது சொன்னால் தான் இந்த வசனத்தை தூக்கிக் கொண்டு வர வேண்டும் என்பதும் விளக்கப்பட்டது.

முஹம்மது நபிக்கு முன் தூதர்கள் சென்று விட்டார்கள் என்கிற இறை வசனத்திற்கு, அதே போன்றே அல்லாஹ் ஈஸா நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறி, ஈஸா நபி விதிவிலக்கு பெற்றவர் என்று விளக்கி விட்டான்.

ஆகவே அந்த வசனத்தின் படியும் ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்று சொல்ல முடியாது.

ஈஸா நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்கிற வசனம் அவர் இறக்கவில்லை என்று தான் சொல்கிறதேயொழிய, அவர் இறந்ததை சொல்லவில்லை.

ஆக, நான்கு ஆதாரங்கள் இவர்களது கொள்கையை நிலை நாட்டவில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அடுத்ததாக, இன்னொரு வசனத்தை முன் வைக்கிறார்கள்.

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர்.
அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். "எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்(16:20,21)

இந்த வசனத்தில் பொய் கடவுளாக எவரெல்லாம் வணங்கப்பட்டனரோ அவர்கள் அனைவரும் இறந்து விட்டதாய் அல்லாஹ் சொல்கிறான்.
ஈஸா நபி கடவுளாக வணங்கப்பட்டவர். ஆகவே ஈஸா நபியும் இறந்து விட்டார்.

என்பது இவர்கள் வாதம்.

ஈஸா நபி கடவுளாக தான் வணங்கப்பட்டார் என்று 9:31 வசனமும் சொல்கிறது, ஆகவே கடவுளாக வணங்கப்பட்ட ஈஸா நபி, 16:21 வசனத்தின் படி இறந்து விட்டார் என்று கணக்கு இடுகின்றனர்.

இவர்களது இந்த புரிதல் இவர்களை எந்த அளவிற்கு அறியாமையின் சிகரங்களாக எடுத்துக் காட்டுகின்றன என்பதைக் கூட புரியாமல், இதை ஒரு மிகப்பெரிய ஆதாரமாக தூக்கி வருவது வியப்பை தருகிறது.

முதலில், இந்த 9:31 வசனத்திற்கும், 16:21 வசனத்திற்கும் சம்மந்தமிருக்கிறது என்று அல்லாஹ்வா சொன்னான்?

ஏதோ, 9:31 வசனத்தில் சொல்கிறவர்களை தான் 16:21 வசனத்திலும் நான் சொல்கிறேன் என்று அல்லாஹ்வே சொல்லி விட்டதை போன்று இருக்கிறது இவர்கள் கூற்று.

9:31 வசனத்தில் யூத கிறித்தவர்களைப் பற்றி மட்டும் அல்லாஹ் சொல்கிறான்.

16:21 வசனத்தில் பொதுவாக இணை வைக்கும் அனைவரையும் சொல்கிறான்.

இது, அந்த வசனங்களின் முன்பின் வசனங்களை வாசித்தாலே புரியும்.

அவர்கள் யாரை வணங்குகிறார்களோ அவர்கள் இறந்தவர்கள் என்றால், ஏற்கனவே இறந்து போனவர்களை மட்டும் அவர்கள் வனங்கினார்கள் என்று இந்த வசனம் சொல்வதாக புரியக் கூடாது.
அப்படி புரிந்தால், இறந்தவர்களை வணங்குவது மட்டும் தான் தவறு, இறக்காமல் உயிருடன் இருப்பவர்களை வணங்குவது தவறில்லை என்கிற பாரதூரமான கருத்து வந்து விடும்.

மாறாக, அவர்கள் யாரை வணங்குகிறார்களோ அவர்கள் இறந்தவர்கள் என்றால், இறந்தவர்களும் அதில் அடங்குவார்கள், இனி இறப்பவர்களும் அடங்குவார்கள்.

நீங்கள் வணங்குகிறவர்கள் எல்லாம் இறந்து போகக்கூடியவர்கள் என்கிற பொதுவான செய்தியை தான் அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்கிறான்.

இதற்கு தான் சாய் பாபாவை நான் உதாரணத்திற்கு கேட்டிருந்தேன். இந்த வசனத்தின் படி சாய் பாபா உயிருடன் இருந்த காலத்தில் அவரை வணங்கியது தவறில்லையா? என்று.

இதற்கு உங்கள் முந்தைய தொடரின் போது சமாளித்த நீங்கள், சாய் பாபாவிற்கு அல்லாஹ்வின் சிஃபத் அனைத்தும் இருப்பதாக கருதி எவரும் வணங்கவில்லை என்று ஒரு பதிலை சொன்னீர்கள்.

அதையே இந்த தொடரின் போதும் சொல்கிறீர்கள்.

////இப்போது எனது கேள்வி என்ன வென்றால், சாய்பாபாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனபோது பிரார்த்தனை கூட்டம் நடத்தி இறைவனை அழைத்தார்களே, அது ஏன்?/////

என்கிற அற்புதக் கேள்வியொன்றை கேட்கிறீர்கள்.

அதாவது, சாய் பாபாவுக்கு உடல் நிலை சரியில்லாத சமயத்தில் அவரது பக்தர்கள் இறைவனை தான் வணங்கினார்களாம்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்??
அந்த பக்தர்கள் ஒன்றும் இணை வைக்கவில்லை, அவர்கள் ஒன்றும் சாய் பாபாவை வணங்கவில்லை என்று அவர்களுக்கு முட்டுக் கொடுக்கிறீர்களா?

கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட பிணங்களை வணங்குபவன் சொல்வதற்கும் இப்போது நீங்கள் சொல்வதற்கும் எந்த வேறுபாடாவது இருக்கிறதா? கவனித்தீர்களா?

அவனும் இப்படி தான் சொல்கிறான். நான் என்ன அவ்லியாவிடமா துஆ செய்கிறேன்? அவர் பெயரை சொல்லி அல்லாஹ்விடம் தானே செய்கிறேன் என்று தான் அவனும் சொல்கிறான்.

அல்லாஹ் கூட இதை குர் ஆனில் சொல்லிக் காட்டுகிறானே?

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை. (அல்குர்ஆன் 31:32)

அதாவது, அந்த மக்கத்து காஃபிர்களின் நிலையானது, சாதாரண நிலையில் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்து, மற்றவர்களை வணங்குவர்.
அதுவே மலையளவிற்கு கடல் அலைகள் அவர்களை சூழும் போது அல்லாஹ்வை நோக்கி திரும்பி விடுவர்.

எதை இன்றைக்கு இந்த சாய்பாபா பக்தர்கள் செய்தார்களோ, எதை சொல்லி அந்த பக்தர்களுக்கு முட்டுக் கொடுத்து, அவர்கள் ஒன்றும் சாய்பாபாவை அல்லாஹ்வுக்கு இணையாக வணங்கவில்லை என்று நீங்கள் இணை வைப்புக்கு வக்காலத்து வாங்குகிறீர்களோ,
அதற்கு அல்லாஹ் குர் ஆனில் பதில் சொல்லி விட்டான் !!

சாய் பாபாவை வணங்கியவன் அவரை அல்லாஹ்வுக்கு இணையாக தான் கருதினான்.
அதை விடவும் பெரிய கவலை வந்த போது, அல்லாஹ் பக்கம் திரும்பிக் கொண்டான். இது தான் அல்லாஹ் சொல்வது.

நீங்கள் சொல்வது குர் ஆனுக்கு எதிரான, ஷிர்க்குக்கு முட்டுக் கொடுத்தாவது உங்கள் கொள்கையை காப்பாற்ற வேண்டும் என்று கருதுகிற பச்சை இணை வைப்புக்கூற்று என்பதை மறவாதீர் !! !

மேலும்,
சாய் பாபாவிற்கு அல்லாஹ்விற்கு இருக்கும் சிஃபத் இருப்பதாக நினைத்து யாரும் அவரை வணங்கவில்லை என்று ஒரு சமாளிப்பை செய்திருந்தீர்கள்.

அப்படியானால், ஈஸா நபியை வணங்கியவர்களும் தான் அல்லாஹ்வுக்கு இருக்கும் சிஃபத் இருப்பதாக நினைத்து வணங்கவில்லை !

எப்படி சாய் பாபா தூங்கினாரோ அது போல் ஈஸா நபியும் தான் தூங்கினார்.
எப்படி சாய் பாபா உணவு உண்டாரோ, மலஜலம் கழித்தாரோ, ஈஸா நபியும் தான் அந்த பலகீனங்களை கொண்டவராக இருந்தார்.

சாய் பாபா இந்த பலகீனங்களையெல்லாம் கொண்டு தான் இருக்கிறார் என்று நம்பி தான் அந்த பக்தர்கள் அவரை வணங்கினர், எனவே அது அல்லாஹ்வுக்கு இணையான வணங்குதல் ஆகாது என்று நீங்கள் வாதம் வைத்தால்,

ஈஸா நபி கூட இந்த பலகீனங்களையெல்லாம் கொண்டு தான் இருக்கிறார் என்று தான் கிறித்தவர்கள் நம்பியிருக்கிறார்கள்.

உங்கள் வாதத்தின் படி, ஈஸா நபியும் தான் அல்லாஹ்வை போல் வணங்கப்படவில்லை.

உங்கள் வாதப்படி 16:21 வசனம் சாய் பாபாவை குறிக்காது என்றால், ஈஸா நபியையும் தான் குறிக்காது. !

என்ன வாதம் வைக்கிறீர்கள் என்று சிந்தித்து வைக்கவும்.

அடுத்து, சாய் பாபா 2000 வருடங்கள் வாழ்வதாக யாரும் நம்பவில்லையாம், எனவே இந்த வசனம் சாய் பாபாவை குறிக்காதாம்.

என்ன அர்த்மேயில்லாத வாதமிது?

ஒவ்வொரு பொய் கடவுளும் வணங்கப்பட ஒவ்வொரு தகுதியை தான் மக்கள் கருதுவர்.
ஈஸா நபி தந்தையின்றி பிறந்த காரணத்தால் கடவுளாக நம்பப்பட்டார் என்றால் சாய் பாபா போன்ற ஃபிராடுகள், வாயில் லிங்கம் எடுத்தல், காற்றில் மோதிரம் எடுத்தல் என கண் கட்டி வித்தை காட்டி, அதை அற்புதம் என மக்களை நம்ப வைத்து அதன் மூலம் வணங்கப்பட்டார்.

2000 வருடங்கள் வாழ்வதாக நம்புவது தான் ஷிர்கா? வாயிலிருந்து லிங்கம் எடுப்பதாக நம்புவது ஷிர்க் இல்லையா?

////சாய்பாபாவை உதாரணம் கட்டுகிறாய், அவரோ உண்டு உறங்கி இறந்துவிட்டார். ஆனால் ஈசாவோ உங்கள் நம்பிக்கை படி, 2000 வருடங்களாக உண்ணாமல், குடிக்காமல் உயிரோடு இருக்கிறார்.////

என்று வாதம் புரிகிறீர்களே, இது அர்த்தமுள்ளதா?

இதே கேள்வியை அப்படியே திருப்பிப் போட்டு நானும் கேட்பேனே..

ஈஸா நபியை உதாரணம் காட்டுகிறீர்கள், அவர் ஒன்றும் வாயிலிருந்து லிங்கம் எடுத்ததாக யாரும் நம்பவில்லை. ஆனால் சாய் பாபாவோ உங்கள் நம்பிக்கைபடி வாயிலிருந்து லிங்கம் எடுத்தவர்//

எனவே அந்த வசனம் சாய் பாபாவை தான் சொல்கிறது..

இப்படி நானும் வாதம் வைப்பேனே?

ஏதோ, 2000 வருடம் உயிருடன் இருப்பதாக நம்புவது ஒன்று தான் ஒட்டு மொத்த உலகிலும் ஷிர்காக கருதப்படுவது போலவும், வேறு எந்த காரியத்தை யார் செய்ததாக நம்பினாலும் அவையெல்லாம் பொருட்டேயில்லை என்பது போலவும் இருக்கிறது உங்கள் உலக மகா வாதம்.

சரி இதுவும் போகட்டும்.

இன்னொரு உச்சகட்ட வேடிக்கையை பார்ப்போம். இவர்கள் எந்த அளவிற்கு முரண்பாட்டின் எல்லையை தொட்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு புரியும்.

ஒரு வாதத்திற்கு, இந்த 16:21 ஈஸா நபியை குறிக்கிறது என்று வைப்போமே..

அந்த வசனத்தை இங்கே மீண்டும் வைக்கிறேன்.

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர்.
அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். "எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்(16:20,21)

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் இறந்தவர்கள் என்று அல்லாஹ்வே சொல்லி விட்டான், ஈஸா நபி கடவுளாக அழைக்கப்பட்டவர், எனவே இந்த வசனம் ஈஸா நபி இறந்து விட்டதாக சொல்கிறது

என்றால்..

இந்த வசனத்தில், பொய் கடவுள்கள் இறந்து விட்டனர் என்று மட்டும் அல்லாஹ் சொல்லவில்லை.

மாறாக, அந்த பொய் கடவுள்கள் எதையுமே படைக்கவில்லை என்றும் அல்லாஹ் சொல்கிறான்.

ஆனால், ஈஸா நபி பற்றி இன்னொரு இடத்தில் அல்லாஹ் சொல்கிற போது ஈஸா நபி இறந்தவரை உயிர்ப்பிப்பார் என்கிறான்.

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) "உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காககளிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்கு தக்க சான்று உள்ளது'' (என்றார்) (3:49)

அதாவது, ஈஸா நபியின் சிறப்புகளில் ஒன்று, அவர் இறந்தவரை மீண்டும் உயிர்பிப்பார் !!, அவர் பறவையை போன்று ஒன்றை படைப்பார், உயிரை ஊதுவார், அது பறக்கும் !!

இது தானே படைத்தல் என்பது?

அல்லாஹ் தான் படைப்பவன், அல்லாஹ் தான் உயிர் கொடுப்பவன். எனினும், அந்த சிஃபத்தை தன் அடியானாகிய தூதர் ஒருவருக்கு, கொடுத்து, அதன் மூலம் அல்லாஹ் தனது ஆளுமை நிரூபிக்கிறான்.

ஆக, ஈஸா நபியும் படைப்பார்.
ஆனால், அப்படி நம்புவது இணை வைப்பல்ல.
காரணம், ஈஸா நபி நபி படைப்பார் என்று அல்லாஹ்வே சொல்லி விட்டான்.
அல்லாஹ்வின் நாட்டத்தின் படி தான் அது நடக்கிறது, அல்லாஹ் அந்த ஆற்றலை கொடுத்தான், அதனால் ஈசா நபி படைக்கிறார்.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.

பொய் கடவுள்கள் இறந்து விட்டார்கள் என்பதில் ஈஸா அடங்குவார் என்றால்,
பொய் கடவுள்கள் எதையும் படைக்க மாட்டார்கள் என்பதால் ஈஸா இதில் அடங்க மாட்டாரே?

ஏனெனில், ஈஸா நபி பறவையை படைத்திருக்கிறார்.

அவர்கள் எதையும் படைப்பவர்களில்லை, என்பதில் ஈஸா நபியின் அற்புத செயலானது விதிவிலக்கு பெற்றது என்று இவர்கள் சொல்வார்கள் என்றால்,

அவர்கள் இறந்தவர்கள் என்று சொல்வதில் ஈஸா நபி விதிவிலக்கு பெற்றவர்கள் என்று நான் சொல்வது மட்டும் தவறாகி விடுமோ?

இவர்கள் சொன்னால் விதிவிலக்கு, நான் சொன்னால் அது ஷிர்கா?

எந்த ஊர் நியாயமய்யா இது??

பொய் கடவுள் எதையும் படைக்கவில்லை என்று தான் அல்லாஹ் அந்த வசனத்தில் முதலில் சொல்கிறான்.
ஆனால், ஈஸா நபி இறந்தவருக்கு உயிர் கொடுத்து படைத்திருக்கிறார்கள், பறவையை படைத்திருக்கிறார்கள்.

அவர்கள் இறந்தவர்கள் என்பதால் ஈஸா நபி இறந்து விட்டார், ஈஸா நபியும் இந்த வசனத்தில் அடங்குவார்....

என்று வாதம் வைப்பதாக இருந்தால்

ஈஸா நபி பறவையை படைத்திருக்கும் போது, அவர்கள் எதையும் படைக்கவில்லை என்று சொல்லி அல்லாஹ் தனக்கு தானே முரண்படுகிறான் என்று இவர்கள் சொல்ல வேண்டும்.

அல்லது,

பொய் கடவுள்கள் எதையும் படைக்கவில்லை என்பதில் ஈஸா நபியின் அற்புத செயல் அடங்காது என்று சொல்ல வேண்டும்.

படைக்கும் விஷயத்தில் ஈஸா நபி அடங்க மாட்டார் என்றால், அவர்கள் இறந்து விட்டவர்கள் என்பதிலும் ஈஸா நபி அடங்க மாட்டார் என்று ஆகி விடும் !!

ஆக, பொய் கடவுள் பற்றிய வசனம் ஈஸா நபி இறந்து விட்டதற்கு ஆதாரம் என்று சொல்ல புறப்பட்டு, கடைசியில் அதற்கும் ஈஸா நபிக்கும் சம்மந்தமில்லை, அந்த வசனத்திலிருந்து ஈஸா நபி விதிவிலக்கு பெற்றவர் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வேண்டிய நிலைமை வந்திருக்கிறது !

அடுத்து, ஈஸா நபி வஃபாத் ஆகி விட்டதாக குர் ஆன் சொல்வதன் மூலம் ஈஸா நபியின் மரணம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறும் கூற்று சரியா? என்பதை பார்ப்போம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக