ஈஸா தான் மிர்சா என்கிற கொள்கை அபத்தம்
ஈஸா நபி இறக்கவில்லை (பாகம் 16)
--------------------------------------------------------------------
ஈஸா நபி மீண்டும் இவ்வுலகில் வருவார்கள் எனவும், வந்த பின்னர் அவர்கள் என்னன்ன செய்வார்கள் என்பதும் பல்வேறு ஹதீஸ்கள் வாயிலாக நபிகள் நாயகம் (சல்) அவர்கள் நமக்கு விவரிக்கிறார்கள்.
ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்கிற நம்பிக்கையை கொண்டிருக்கும் கூட்டத்தார் கூட, ஈஸா நபி கியாமத் நாளுக்கு சமீபமாக மீண்டும் வருவார் என்பதை நம்பலாம்.
அந்த நம்பிக்கையானது எந்த வகையிலும், ஈஸா நபி இறந்து விட்டார் என்கிற அவர்களது நம்பிக்கையை தகர்க்காது.
காரணம், இறந்து போனவர் என்று நம்பப்படுகிறவர் கூட மீண்டும் வருவார் என்று நம்பலாம். இறந்தவரைக் கூட மீண்டும் அல்லாஹ் அனுப்புவான்.
இவர்கள் நம்பிக்கைப்படி குர் ஆனில் ஈஸா நபி இறந்து விட்டதாக அல்லாஹ் சொல்கிறான் என்றால், அதை நம்பிக் கொண்டே, ஹதீஸில் அவர் திரும்ப வருவார் என்பதையும் இணைத்தே நம்ப எந்த தடையுமில்லை.
இதை விளக்கமாக முந்தைய பதிவில் பார்த்தோம்.
ஆனால், மார்க்கத்தை இப்படி புரியாமல், தங்கள் சுய இலாபத்திற்காக திரித்தும் வளைத்தும் மார்க்கத்தை கேலி செய்யப் புகுந்துள்ள இந்த காதியானிக் கூட்டம்,
அவர்களது தலைவரான மிர்சா சாஹிபை எப்படியாவது நபியாக ஆக்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, எந்த வகையிலெல்லாம் அவருக்கு புகழ் சேர்க்க முடியுமோ அந்த வகைகளையெல்லாம் பயன்படுத்தி புகழ் சேர்க்க முனைகிறது.
தவிர, அந்த மிர்சா சாஹிபே கூட, ஒரு புகழ் விரும்பியாக இருக்கிற காரணத்தால் தான், ஈஸா நபி வருவார் என்று சொல்லப்படும் ஹதீஸை எடுத்துக் கொண்டு, இங்கே சொல்லப்படும் ஈஸா என்பது என்னை தான் குறிக்கும் என்று எந்த வெட்கமுமின்றி, இறைவனைப் பற்றி சிறு அச்சமுமின்றி புளுகினார்.
அதை அட்சரம் பிசகாமல் அப்படியே பின்பற்றி ஒழுகும் அவரது சீடர்களும், ஆஹா.. ஈஸா என்றால் மிர்சா.. ஈஸாவின் தாய் என்றாலும் மிர்சா என்று, தலைவன் எவ்வழியோ நாங்களும் அவ்வழி என்று கூறி பிதற்றி வருகின்றனர்!
ஈஸா நபி வருவார் என்பதாக சொல்லப்படும் ஹதீஸ்களை தற்போது ஒவ்வொன்றாக பார்ப்போம். இதற்கும் மிர்சாவுக்கும் என்ன தான் சம்மந்தம் என்று குட்டிக்கரணம் அடித்து சிந்தித்தாலாவது புரிகிறதா என்று பாருங்கள்.
மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை அல்லாஹ் அனுப்புவான் என்று ஹதீஸ் சொல்கிறது.
இன்னொரு பக்கம்,
நானே மர்யமாக இருந்தேன், நானே கருவுற்றேன் என்று தமது நூலில் மிர்சா தத்துவம் பொழிந்திருக்கிறார்.
அதெப்படி அவர் மர்யமாக இருக்க முடியும்? அவர் ஆணா பெண்ணா? சரி, அப்படியே மர்யமாக இருந்தாலும் அவரே ஈஸாவை பெற்றெடுத்து, பின் அவரே ஈஸாவாகவும் ஆகி விடுவது என்பது உலக மகா கிறுக்குத்தனமல்லவா?
என்று நம் தரப்பில் கேள்வியொன்று வைக்கப்பட்டது.
இதற்கு பதில் சொன்ன காதியானிக் கூட்டமானது, மர்யமாக இருந்தேன் என்றால் நேரடியாக புரியக் கூடாது, அது உவமை. மர்யமாக என்றால்.. மர்யமைப் போன்று.. என்று புரிய வேண்டும்..
என்று வியாக்கானம் கொடுத்தனர்.
இது அர்த்தமற்ற வியாக்கானம் என்று அப்போதே மறுப்பும் சொல்லப்பட்டது.
ஒருவரை பற்றி உவமையாக சொல்வதாக இருந்தால் அதற்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணத்தைக் கடந்த உவமை பேச்சு இருக்காது.
உதாரணத்திற்கு, ஒருவரை சிங்கத்தோடு உவமைப்படுத்தி சொல்வதாக இருந்தால் அவர் சிங்கம் போன்றவர் என்று சொல்லலாம்.
இடத்திற்கு தகுந்தாற்போல், அவர் ஒரு சிங்கம்.. என்று கூட சொல்லலாம்.
இத்தோடு உவமை நிறைவு பெற வேண்டும். அப்போது தான் அது உவமை என்று ஆகும்.
அல்லாமல், அவர் ஒரு காலத்தில் சிங்கமாக இருந்தார், பின்னால் வாலெல்லாம் இருந்தது, காட்டில் தான் வசித்திருந்தார், மான்களையெல்லாம் வேட்டையாடி உண்பார்..
என்றெல்லாம் சொல்லி விட்டு, சிங்கம் என்றால் சிங்கம் போன்றவர் என்று உவமையாக சொன்னேன் என்று சொல்லக் கூடாது.
அதற்கு பெயர் உவமையல்ல, கிறுக்குத்தனம்.
மிர்சாவை மர்யமோடு உவமையாக சொல்ல நினைத்தால், மர்யமைப் போல் இருந்தார் என்று சொல்லலாம்.
அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லாமல், அவர் மர்யமாக இருந்தார், அவர் கற்பமுற்றார், குழந்தையை பெற்றெடுத்தார்.. என்றெல்லாம் சொல்வது அறிவுக்கு பொருந்தாத உவமை !
பின், அவ்வாறு பெற்றெடுத்த குழந்தை தான் ஈஸா என்று சொல்லி விட்டு, அந்த ஈஸாவும் மிர்சா தான் என்று கூறி, இதையும் உவமையாக தான் சொன்னேன் என்று சொன்னால், கீழ்பாக்கத்தில் அனுமதி இலவசம் என்று பொருள் !!
இதைப் பற்றி, மிர்சா சாஹிப் பற்றிய எனது முந்தைய தொடர்களில் விலாவாரியாக விளக்கப்பட்டிருக்கிறது.
விஷயத்திற்கு வருவோம்.
இவ்வாறு மர்யமை, மிர்சாவுக்கு உவமையாக சொல்லிவிட்டு, அந்த மர்யம் பெற்ற மகன் ஈஸா வருவார் என்று அல்லாஹ் சொன்னால், மர்யமும் உவமை, ஈஸாவும் உவமை என்று எந்த அறிவுள்ளவனாவது புரிவானா?
அல்லாஹ்வை இவர்கள் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்?
உவமை என்கிற பெயரில் அல்லாஹ் இப்படி தான் மனிதர்களை பைத்தியக்காரர்களாக ஆக்குவானா? இதற்கு பேசாமல், மிர்சா வருவார் என்றே சொல்லியிருக்கலாமே?
சரி அது போகட்டும்.
அல்லாஹ் அனுப்புவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அனுப்புதல் என்றால் மிர்சாவின் பிறப்பை தான் இங்கே சொல்கிறது என்கிறார்களா?
மிர்சா சாஹிப் இந்த பூமியில் பிறந்ததை தான் அல்லாஹ் அனுப்புவான் என்று இந்த ஹதீஸ் சொல்கிறதா?
அவர்கள் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்து வருவார்கள் என்றூ நபி (சல்) அவர்கள் சொல்கிறார்கள்.
பிறக்கும் போது மிர்சா சாஹிப் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் தான் அணிந்திருந்தாரா?
சரி, இது மிர்சா சாஹிபின் பிறப்பைக் குறிக்கவில்லை என்றால், தொடர்ந்து, டமாஸ்கஸ் நகரில் இறங்குவார்கள் என்று நபி சொல்வது போல் மிர்சா சாஹிப் டமாஸ்கஸ் நகரில் வந்தாரா?
அப்போது தான் அவர் குங்கும சாயமிட்ட ஆடையை அணிந்திருந்தாரா?
சரி அதுவும் போகட்டும், மலக்குகள் புடை சூழ, அதுவும், மலக்குமார்களின் சிறகுகளின் மேல் கைகளை வைத்தவராக இறங்குவது மிர்சா சாஹிப் தானா?
அவர் பிறக்கும் போது அப்படி தான் பிறந்தாரா?
அல்லது, காதியான் நகரிலிருந்து டமாஸ்கஸ் நகருக்கு மலக்குகளின் சிறகில் கை வைத்து பயணம் சென்றார் என்கிறீர்களா?
என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?
அவர்களின் பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார் என்று நபி (சல்) அவர்கள் சொல்லியுள்ளார்களே,
மிர்சா சாஹிப் விட்ட பெருமூச்ச்சின் காரணமாக இறந்து போன காஃபிர்களின் பட்டியல் எங்கே?
தஜ்ஜாலை தேடுவார்கள் என்று நபி (சல்) அவர்கள் சொல்லியுல்ளார்கள்.
மிர்சா சாஹிப் எந்த வருடம், எங்கே வைத்து தஜ்ஜாலை தேடினார்? என்ன ஆதாரம்?
பைத்துல் முகத்தஸில் வைத்து அவனை அவர்கள் கொல்வார்கள் என்றும் ஹதீஸ் சொல்கிறது.
மிர்சா சாஹிப் எந்த வருடம் பைத்துல் முகத்தஸ் சென்றார் ? பாஸ்போர்ட், விசாவோடு சென்றாரா அல்லது மலக்குகளின் தோளில் சென்றாரா?
அங்கே தஜ்ஜாலை கொன்றார் என்பதற்கு என்ன ஆதாரம்?
நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர் தான் மிர்சா என்றால் அப்போதும் புகைப்படக் கருவிகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டனவே.. தஜ்ஜாலை கொலை செய்யும் காட்சி படமாக்கப்பட்டதா? என்றால் புகைப்படங்களை வெளியிடுங்களேன்.
பன்றியை கொல்வார், சிலுவையை முறிப்பார் என்றெல்லாம் சொல்லப்படும் ஹதிஸ்களுக்கு மட்டும் வியாக்கானம் கொடுத்து, பன்றி என்றால் கெட்ட காரியம், சிலுவையை முறித்தல் என்றால் கிறுத்தவ மதத்தை அழித்தல்..
என்று சால்ஜாப்பு சொல்ல தெரிந்த மிர்சாவின் சீடர்கள், மேலே நாம் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கும் அதே போன்ற சால்ஜாப்புகளை சொல்ல வேண்டியது தானே?
சரி, பன்றியை கொல்வார், சிலுவையை முறிப்பார் என்பதற்கு சால்ஜாப்பு சொன்னார்கள், வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதற்கு ஏதேனும் சால்ஜாப்பு சொன்னார்களா?
இல்லையே !!
மிர்சா சாஹிப் அகில உலகையும் ஆட்சி செய்யும் ஆட்சியாளராக எப்போது இருந்தார்?
சரி, அப்படியே ஆட்சி செய்தார் என்றால், அவர் ஆட்சி காலத்தில் செல்வம் கொழித்து, வாங்குவதற்கு எவருமே இல்லை என்கிற நிலை ஏற்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்?
இதை அறிவுள்ள எவனாவது நம்புவானா?
ஈஸா நபி இறங்கும் போது பொறாமையும், கள்ளமும், கபடமும் இல்லாது ஒழியும் என்று ஹதீஸ் சொல்கிறது. ஈஸா என்றால் மிர்சா என்று சொல்பவர்கள், மிர்சா சாஹிப் காலத்தில் எந்த பொறாமையும் கள்ளம், கபடமும் இருக்கவில்லை என்று சொல்கிறார்களா?
இதே மிர்சாவுக்கும், இவரது காலத்தில் வாழ்ந்த இன்னொருவருக்கும் இடையே நடந்த தகறாறு ஒன்று நீதி மன்றம் வரை சென்று, அது நாள் வரை, என்னை நம்பாதவார்கள் காஃபிர்கள் என்று பிரச்சாரம் செய்து வந்த மிர்சா சாஹிப், நீதிபதி முன்னால் என்னை நம்பாதவர்கள் காஃபிர்கள் என்று நான் சொல்லவில்லை..
என்று ஆகாயப்பல்டி அடித்த வரலாறுகள் எல்லாம் மிர்சா சாஹிபே தனது நூலில் எழுதி வைத்திருக்கிறார்.
கள்ளமும் கபடமும் இவர் காலத்தில் ஒழிந்து விடும் என்றால் இவருக்கும் இன்னொருவருக்கும் இடையே ஏன் சண்டை மூண்டது?
ஏன் இருவரும் நீதி மன்றம் சென்றார்கள்?
சரி, மிர்சா பக்கம் தான் நியாயம் என்றே வைப்போமே, அப்படியானால் அந்த மற்றொரு நபர் பொய்யர் என்று தானே பொருள்?
அப்படியானால் மிர்சா காலத்தில் பொய்களும் புரட்டுகளும் ஒழியவில்லை என்று தானே ஆகிறது?
அப்படியானால் மேற்படி ஹதீஸ் எப்படி மிர்சாவைக் குறித்து பேசுகிறது என்கிறீர்கள்?
உங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும்'' என்று ஈஸா நபி கூறி விடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்.
ஈஸா தான் மிர்சா என்றால், உங்கள் நம்பிக்கைப்படி மிர்சா காலத்தில் அவர் கலிஃபாவாக இருந்தாரா அல்லது வேறொருவரா?
அவர் கலிஃபாவாக இருந்தார் என்றால் உங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும் என்று மிர்சா சாஹிப் எப்படி சொல்லியிருப்பார்?
அவர் அப்படி சொன்னது உண்மையென்றால் மிர்சா சாஹிப் கலிஃபாவாக இருக்கவில்லை.
அவர் கலிஃபாவாக இருக்கவில்லை என்றால், ஈஸா நபி நீதமாக ஆட்சி புரிவார் என்கிற ஹதீஸ் ஈஸா நபியை தான் சொல்கிறதே தவிர, மிர்சாவை சொல்லவில்லை என்று நிரூபணமாகிறது.
எந்த வழியில் யோசித்தாலும் மிர்சா சாஹிப் பொய்யர் என்று நிரூபணமாகாமல் இருக்கவில்லை என்பதை சிந்திக்கவும்.
யாராலும் வெல்ல முடியாத ஒரு கூட்டத்தை தூர் மலைக்கு ஈஸா நபி அழைத்து சொல்வார்கள், அல்லாஹ் அப்படி அவர்களுக்கு கட்டளையிடுவான் என்று நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்களே, அது மிர்சா சாஹிப் காலத்தில் என்றைக்கு, எப்போது நிகழ்ந்தது?
தூர் மலைக்கு மிர்சா எப்போது அவர்களை அழைத்து சென்றார்?
யாராலும் வெல்ல முடியாத கூட்டம் என்றால் மிர்சா சாஹிப் அந்த கூட்டத்தைக் கொண்டு ஒட்டு மொத்த உலகையும் ஆட்டிப் படைத்திருக்க வேண்டுமே.. ஏன் செய்யவில்லை?
மிர்சா சாஹிபின் காலத்தின் போது தான் உலகப் போர்கள் மூண்டன.
யாராலும் வெல்ல முடியாத கூட்டத்தார் அந்த போர்களில் கலந்து கொண்டார்களா? அப்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
இன்றைக்கு அந்த கூட்டம் எங்கே? அழிந்து விட்டார்களா? அழிந்து விட்டார்கள் என்றால் அதற்கு என்ன ஆதாரம்?
ஆக, ஈஸா தான் மிர்சா, கியாமத் நாளுக்கு சமீபமாக வருவது ஈஸா என்று ஹதீஸ் சொன்னாலும், அந்த ஈஸா என்பது மிர்சாவை தான் குறிக்கிறது என்று சொல்வது அர்த்தமற்ற உளரல் என்பது மேற்கூறிய கேள்விகளுக்கு இவர்கள் செய்யும் சமாளிப்புகளே சான்றாக நிற்கும் !
ஈஸா நபி இறந்து விட்டதாக இவர்கள் நம்புவதற்கு இவர்கள் முன் வைத்த ஆறு காரணங்களும் அர்த்தமற்றவை என்பது நிரூபணமானது.
ஈஸா நபி இறக்கவில்லை என்று மிகவும் அழகிய முறையில் அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருப்பதை காரண காரியங்களுடனும், இலக்கன சான்றுகளுடனும் தெளிவாக விளக்கப்பட்டன.
ஏழு சான்றுகள் மூலம் ஈஸா நபி இறந்து போகவில்லை, மீண்டும் இவ்வுலகில் வந்த பின்னர் தான் இறப்பார்கள் என்று நிரூபிக்கப்பட்டன.
தொடர்ந்து, ஒரு வாதத்திற்கு ஈஸா நபி இறந்து விட்டார் என்று வைத்துக் கொண்டால் கூட, அப்போதும் இந்த மிர்சா சாஹிப் கொள்கை நிலைபெறாது என்பதும் ஹதீஸ்கள் வாயிலாக விளக்கப்பட்டன.
ஈஸா நபி தொடரில் இவர்கள் சில அபத்தமான வாதங்கள் சிலவற்றை எழுப்பியிருப்பது தற்போது தான் நம் கவனத்திற்கு வந்தது.
இவர்களது வாதம் ஒன்று கூட பதிலளிக்கப்படாமல் விடுபடாது என்று நாம் முன்னரே சொன்னது போல், அந்த அபத்தங்களை அடுத்த பாகத்தில் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.
தொடரும்.