வியாழன், 17 ஜூலை, 2014

விமானப் பிறை


விமானத்தின் ஜன்னல் வழியே பிறை பார்க்கப்பட்டதை பற்றி மெளலானா (?) அவர்கள் அளித்த பேட்டியை தற்போது தான் முழுமையாக பார்க்க நேர்ந்தது.

நாங்கள் பிறை பார்த்து விட்டோம் எனவே எங்களுக்கு நோன்பு வைப்பது ஃபர்ல் (கடமை) ஆகி விடுகிறது.
இந்த செய்தியை யாரெல்லாம் நம்புகிறீர்களோ, அவர்களுக்கும் கடமை.
யாரெல்லாம் இதை நம்பவில்லையோ அவர்களுக்கு கடமையில்லை என்கிறார் மெளலானா.

மார்க்கத்தின் அடிப்படை கோளாறு நம்பர் 1.

யார் பிறையை பார்க்கிறார்களோ அவர்கள் அந்த தகவலை பிறருக்கு சொல்ல வேண்டும், அதை ஏற்றுக் கொண்டு அனைவரும் நோன்பை நோற்க வேண்டும்.

இவர் விமானத்தில் பார்த்த பிறை ரமலான் முதல் பிறையென்றால், நோன்பை அனைவருமே நோற்பது கட்டாயம் என்று தான் இவர் சொல்லியிருக்க வேண்டும்.

இவர் பார்த்ததை நம்பாதவர்கள் குற்றமிழைப்பவர்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.

நான் அறிவிக்கும் இந்த பிறை தகவலை ஏற்காமல் நோன்பு நோற்காதவர்கள் எல்லாம் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்க வேண்டும்.

இவர் பார்த்தது தான் சரி என்பதை இவர் நம்பியதால் தான் இவர் நோன்பு நோற்கிறார்.
இவர் நோன்பு நோற்றது தான் சரி என்றால், அந்த செய்தியை புறக்கணிப்பவர்கள் இவர் பார்வையில் குற்றமிழைப்பவர்களாக கருதப்பட வேண்டும்.

மார்க்கத்தின் அடிப்படையில் நின்று செயல்படுவது என்றால் இது தான்.

ஆனால் இவரோ, நான் சொல்வதை நம்புபவர்களுக்கு நாளை ரமலான் ஆரம்பிக்கிறது, நம்பாதவர்களுக்கு அடுத்த நாள் ஆரம்பிக்கிறது,
நம்பியவர்களுக்கு நோன்பு நோற்பது கடமை, நம்பாதவர்களுக்கு கடமையில்லை என்று மார்க்கத்தை கேலி செய்கிறார்.

சரி மெளலானா, இரவுத் தொழுகை எப்போது தொழுவது? என்று கேட்டதற்கு,
மெய்சிலிர்க்கும் அடுத்த அறிவிப்பொன்றை செய்கிறார்.

அதாவது, இரவுத் தொழுகை என்பது சுன்னத் தான். எனவே இன்று இரவு தொழவில்லையென்றாலும் பரவாயில்லை, நாளை முதல் தொழலாம்.. என்கிறார்.

அது தான் சுன்னத் தானே? பிறகு எதற்கு நாளை தொழ வேண்டும்?? இரவு தொழுகை என்பது ஏதோ ரமலானில் மட்டும் தொழப்பட வேண்டியது இல்லையே?

இதையல்லவா அவர் முதலில் சொல்ல வேண்டும்?

எல்லா காலமும் தொழ வேண்டியது தான் இரவுத் தொழுகை. எனவே அதை இன்றும் தொழுவோம் என்று அவர் சொல்லியிருக்க வேண்டும்.

அல்லது, ரமலான் என்பதற்காக தான் நாளை தொழுகிறோம் என்று இவர் சொல்வதாக இருந்தால் இவர் கணக்குப்படி இன்றே ரமலான் துவங்கி விட்டதே?

இன்று துவங்கிய ரமலானை பேணுகிறோம் என்று சொல்லி நாளை இரவுத் தொழுகை தொழலாம் என்றால் இவர் மார்க்கத்தை பொடுபோக்காக கருதுகிறார் என்றாகிறது.

கால் வலிக்கிறது என்பதற்காக இன்று தொழாமல் இருக்கவில்லை, மாறாக சமூக ஒற்றுமைக்காக தொழாமல் இருக்கிறோம் என்று வெட்கமில்லாமல் அறிவிப்பும் செய்கிறார் என்றால், மார்க்கத்தை விட இவருக்கு சல்லிகாசுக்கு பிரயோஜனமில்லாத‌ சமுதாய ஒற்றுமை தான் பெரிது என்று இவரே ஒப்புக் கொண்டதாக ஆகிறது !

மேக மூட்டம் மறைத்தால் ஒரு நிலை, மறைக்கவில்லை என்றால் இன்னொரு நிலை என்பதல்லவா நபிகள் நாயகம் (சல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை?

என்கிற கேள்விக்கு, உயர்ந்த கட்டிடத்திற்கு மேல், மொட்டை மாடிகளில் சென்று நாம் பிறை பார்ப்பதில்லையா? அது போல தான்.. என்று எந்த வித சங்கூஜமும் இல்லாமல் தனது விமான ஃபத்வாவிற்கு முட்டுக் கொடுக்கிறார்.

மொட்டை மாடியில் சென்று பிறை பார்ப்பது ஏதோ ஆகாயத்தைக் கடந்து விண்வெளிக்கு சென்று பார்ப்பது போல.. என்று கருதுகிறார் போலும்.

கீழே நின்று வானத்தை அண்ணாந்து பார்த்தால் வானமே தெரியாது.. அந்த அளவிற்கு கட்டடங்களும் மரங்களும் நம் கண்களை மறைக்கும் என்பதால் தான் மொட்டை மாடிக்கு சென்று பிறை பார்க்கிறார்கள்.

அல்லாமல், மேகத்தை கடந்து பிறை தென்படும் என்கிற எதிர்பார்ப்பில் அல்ல.

வானம் எந்த தடங்கலும் இன்றி முழுமையாக தென்பட்டால் தான் வானத்திலிருக்கும் பிறை தெரியும்.

அதற்காக மொட்டை மாடி செல்வதை, விமானத்தில் மேகத்தை கடந்து பிறை பார்ப்பதோடு முடிச்சு போடுகிறார் என்றால் இவர் மார்க்கத்தை கேலி செய்கிறாரா அல்லது அறியாமையில் மூழ்கித் திளைக்கிறாரா? என்று நமக்கு புரியவில்லை.

சரி, நான் கேட்கிறேன்,

இயல்பாக, மேகமூட்டம் காரணமாக‌ கண்களுக்கு தென்படாத பிறை மேகத்தை கடந்து சென்று பார்த்தால் தெரியும் தான்.

அது போல,
அஸ்தமித்து விட்ட சூரியனை, விமானத்தில் ஏறி சென்றால் கூட‌ மீண்டும் பார்க்கலாம் !

சகோதரர்களே, மதுரையில் மஹ்ரிபுக்கான பாங்கை கேட்டவாறு விமானமேறினேன்.
எனது விமானம் டேக் ஆஃப் ஆன போது அஸ்தமித்த சூரியனை நான் முழுமையாக பார்த்தேன், யாரெல்லாம் நான் சொல்வதை நம்புகிறார்களோ அவர்களுக்கெல்லாம் அசர் தொழுகை இன்னும் களா ஆகவில்லை, தொழுது கொள்ளலாம், யாரெல்லாம் இதை நம்பவில்லையோ அவர்கள் எல்லாம், மஹ்ரிப் தொழ செல்லலாம்..

என்று எவராவது சொன்னால் அது எப்படி கேலிக்குரியதாக ஆகுமோ அப்படி இருக்கிறது இவரது விமான பிறை ஃபத்வாவும் !

மேலும், 5 நிமிடம் இவரை எந்த தலைப்பைக் கொடுத்து பேச சொன்னாலும் அதில் 10 முரண்பாடுகளையாவது பேசி விடுவார் என்று இவர் குறித்து சொல்லப்படுவதை இந்த விமான ஃபத்வா உரையிலும் நிரூபித்திருப்பது தான் வேடிக்கை !

அதாவது, என்ன தான் இருந்தாலும் பிறையை கண்ணால் தான் பார்க்க வேண்டும், அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை, முன்கூட்டியே கணிப்பது, காலன்டர் அடிப்பது என்பதிலெல்லாம் எங்களுக்கு உடன்பாடு கிடையாது..

என்று ஒரு பக்கம் சொல்கிறார்.

ஆனால், விமானத்தில் மேகத்தை கடந்து பிறை பார்ப்பது கூடும் என்று இன்னொரு பக்கம் கூறுகிறார்.

சரி, அப்படியானால் நாம் கேட்கிறோம், விமானத்தில் சென்று பிறை பார்ப்பது கூடும் என்றால் ராக்கெட்டில் சென்று பார்ப்பதும் கூடும் தானே?

ஒவ்வொரு அமாவாசையின் போதும் நிலவின் மறுபக்கம் வரை ராக்கெட்டில் சென்று பார்த்தால் அமாவாசையில் கூட நிலவை பார்க்க முடியும். ஏனெனில், அமாவாசை என்றால் பூமி இருக்கும் திசைக்கு நிலா தென்படவில்லை என்று தான் பொருள். பூமிக்கு எதிர் திசையில் சூரிய வெளிச்சம் பட்டு நிலவு தெரியத் தான் செய்யும்.

எனும் போது, ஒவ்வொரு அமாவாசையின் போது, ராக்கெட்டில் புறப்பட்டு சென்றால் பிறையை தவறாமல் பார்த்து விடலாம்.

அப்படி பார்க்கிற போது, ஒவ்வொரு அமாவாசையும் மாதத்தின் முதல் நாள் என்று ஒவ்வொரு மாதத்திலுமே முடிவு செய்து கொள்ளலாம்.

இதை தானே காலண்டெர் அடிப்பவர்கள் வேறு வார்த்தையில் சொல்கிறார்கள்?

முன்கூட்டியே கணிப்பது கூடாது என்று ஒரு பக்கம் சொல்கிற இவர், செயல் ரீதியாக கணிப்பை தான் நியாயப்படுத்துகிறார் என்றால் இது தெளிவான முரண்பாடா இல்லையா?

உயர சென்றால், பிறை இன்னும் தெளிவாக தெரிய வாய்ப்பிருக்கும் எனும் போது அத்தகைய செயலை நபி (சல்) அவர்கள் செய்தார்களா?

தரைப்பரப்பில் நின்று மட்டும் பிறை பார்க்காதீர்கள், உகது மலை மீதும் ஏறி சென்று பிறை பாருங்கள் என்று சஹாபாக்களுக்கு கட்டளையிட்டார்களா?

இல்லை !

சாதாரண நிலையில் தென்படும் பிறையை வைத்து சட்டமெடுத்தால் போதும்,
அருகிலுள்ள ஊரிலிருந்து பிறை தகவல் வந்தால் கூட ஏற்கத் தேவையில்லை என்கிற அளவிற்கு மார்க்கத்தை மிகவும் இலகுவாக விட்டு சென்றார்கள் நபி (சல்) அவர்கள்.

அந்த மார்க்கத்தை பேணுகிறோம் என்று சொல்லும் இன்றைய மெளலானாக்கள், விமானப்பிறையென்றும் ஜெட் பிறையென்றும் சமூகத்தை குழப்புகிறார்கள் என்றால் இவர்கள் தான் நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக