நடிகர் ஜெய் அவர்களே !
இஸ்லாத்தை பின்பற்றுகிறேன், ஆனால் மதம் மாறவில்லை என்பதாக உங்கள் நிலை பற்றி தற்போது விளக்கமொன்றை அளித்திருக்கிறீர்கள்.
மதம் மாறுவது என்கிற சடங்குகள் எதுவும் இஸ்லாத்தில் இல்லை என்பதை புரிந்தவராக இருந்திருந்தால் இப்படி அர்த்தமற்ற பதிலை சொல்லியிருக்க மாட்டீர்கள்.
இஸ்லாத்தை ஒருவர் பின்பற்றுகிறார் என்றால் அவர் மதம் மாறியவராக தான் கருதப்படுகிறார்.
இஸ்லாத்தை விடுவோம். எந்த சித்தாந்தத்தை யார் பின்பற்றினாலும், அந்த பின்பற்றுதலே அவரை அந்த கொள்கையில் இணைத்துக் கொண்டதாக தான் காட்டும்.
அந்த கொள்கையில் மாறிக் கொள்ளாமல் அதை பின்பற்ற முடியாது. அவ்வாறு கூறுவது தெளிவான முரண்பாடு.
எந்த கடவுளையும் வணங்காமல் இருந்தேன், இப்போது அந்த ஒரு கடவுளை வணங்குகிறேன் என்று ஒரு பக்கம் சொல்கிற நீங்கள் இதற்கு மேல் இஸ்லாத்தில் வேறெப்படி நுழைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்??
இன்று தங்களை முஸ்லிம்களாக சொல்லிக் கொள்பவர்கள் நீங்கள் சொல்வதை தான் சொல்லிக் கொள்கின்றனர். அந்த ஒரு கடவுளை வணங்குவதால் தான் அவர்கள் முஸ்லிம்கள் என அழைக்கவும் படுகின்றனர் எனும் போது,
நான் மதம் மாறவில்லை, ஆனால் பின்பற்றுகிறேன் என்று கூறுவது, உங்களிடம் ஒரு நிலையற்ற தன்மை இருப்பதையே காட்டுகிறது.
இஸ்லாமிய சித்தாந்தங்களை பின்பற்றுவதில் பெருமிதம் கொள்பவருக்கு..
அதை பின்பற்றுகிறேன் என்று சொல்லிக் கொள்வதில் தயக்கம் கொள்ளாதவருக்கு, இஸ்லாத்தில் நான் நுழைந்து விட்டேன் என்று சொல்வதில் மட்டும் என்ன தயக்கம் இருக்க வேண்டும்?
தொடர்ந்து வர வேண்டிய சினிமா வாய்ப்புகள் தடை படுமே என்பதாலா?
என்றால், நீங்கள் இன்னும் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றவில்லை என்று தான் பொருளாகிறது.
என்றைக்கு நடிகர் ஜெய் ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார் என்பதாக புகைப்படங்கள் வெளியானதோ அதற்கு இரண்டு தினங்களுக்கு பிறகு தான் இவரது புதிய திரைப்படத்தின் வெளியீடு குறித்த செய்தியும் வெளியானது.
ஒரு காலை ஆற்றிலும் ஒரு காலை சேற்றிலும் வைத்துக் கொண்டு, இஸ்லாத்தை பின்பற்றுகிறேன் என்று சொல்லாமல், இந்த மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து கொள்ளுங்கள்.
நான் இஸ்லாத்தில் நுழைந்து கொண்டேன் என்று வெளிப்படையாக சொல்லிக் கொள்ள எந்த உலகாதாயங்களும் உங்களுக்கு தடையாக இருக்க வேண்டாம் என்று அன்புடன் சொல்லிக் கொள்கிறோம்.
நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. (திருக் குர் ஆன் 2:203)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக