முன் சென்ற நபிமார்கள் இறந்து விட்டார்கள்
"ஈஸா நபி இறக்கவில்லை" (பாகம் 6)
------------------------------
ஈஸா நபி இறந்து விட்டார் என்பதை நிரூபிக்கப் போகிறோம் என்று புறப்பட்டு, யாரும் இந்த உலகில் நிரந்தரமாக வாழ முடியாது என்று அல்லாஹ் சொல்கிற வசனத்தையும் அது போல், பூமியில் தான் வாழ முடியும் என்கிற வசனத்தையும் எடுத்துக் காட்டினார்கள் காதியானி மதத்தவர்கள்.
ஆனால், இந்த இரு வசனங்களுக்கும் ஈஸா நபியின் மரணத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்பது முந்தைய பாகங்களில் தெளிவாக்கப்பட்டன.
தங்கள் கொள்கைக்கு சான்றாய் இவர்கள் மேலும் இரண்டு சான்றுகளை எடுத்துக் காட்டுகின்றனர்.
முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். (3:144)
மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை.! அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக! (5:75)
இவை இரண்டு தான் அந்த ஆதாரங்கள்.
இந்த வசனங்கள் ஈஸா நபி மரணித்து விட்டதை சொல்கிறதா? என்பதை பார்ப்போம்.
முதலில், முஹம்மது நபிக்கு முன் தூதர்கள் சென்று விட்டார்கள் என்கிற இறை வசனத்தின் மூலம், முஹம்மது நபிக்கு முன் வந்த ஈஸா நபியும் இறந்து விட்டார் என்பது இவர்கள் முன் வைக்கும் வாதம்.
பல காரணங்களால் இது தவறான புரிதலாகும்.
அவருக்கு முன் தூதர்கள் சென்றிருக்கிறார்கள் என்று தான் அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்கிறானே அல்லாமல், அவருக்கு முன் வந்த அத்தனை பேரும் சென்று விட்டார்கள் என்று சொல்லவில்லை.
இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டதை போல் இவரும் செல்லக்கூடியவர், இவர் தூதர் என்பதற்காக இவரை கடவுள் என்று கருதக் கூடாது. எப்படி முன்பு வந்த தூதர்கள் இறந்தார்களோ அது போல இவரும் இறக்கக்கூடியவர். அவ்வளவு தான்.
முன் வந்த எல்லா தூதர்களில் ஒருவர் இறக்காமல் உயிருடன் இருக்கும் போதும் கூட இதே வாசகத்தை பயன்படுத்தலாம்.
வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவனைப் பார்த்து நீ வகுப்பில் ஃபர்ஸ்ட் ரேன்க் வர வேண்டும், உனக்கு முன் வந்தவர்கள் ஃபர்ஸ்ட் ரேன்க் வாங்கியிருக்கிறார்கள் என்று சொன்னால் இதன் மூலம் அந்த வகுப்பில் படிக்கும் அனைவருமே ஃபர்ஸ்ட் ரேன்க் வாங்கியவர்கள் என்கிற கருத்து வராது.
ஃபர்ஸ்ட் ரேன்க் வாங்கியவர்களும் இருப்பார்கள், வாங்காதவர்களும் இருப்பார்கள். ஆனால், அதை கூட இவ்வாறு பொதுப்படையாக சொல்லலாம்.
அடுத்து, ஒரு வாதத்திற்கு, உனக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்பதற்கு, உனக்கு முன் வந்த அனைவரும்... என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும் என்று வைத்துக் கொண்டாலும், அப்போதும், அந்த "அனைவரும்" என்பதில் ஈஸா நபி அடங்க மாட்டார் !
காரணம், எப்படி முஹம்மது நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்று அல்லாஹ் 3:144 வசனத்தில் சொல்கிறானோ, அது போல், அதே கருத்தை சொல்கிற வேறொரு வசனத்தில் ஈஸா நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்றும் சொல்கிறான்.
இரண்டு வசனத்தையும் இணைத்து தான் முடிவு செய்ய வேண்டும் என்கிற அடிப்படையில், முஹம்மது நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள், ஈஸா நபியை தவிர.. என்கிற முடிவை நோக்கி எளிதில் வரலாம்.
முஹம்மது நபியைப் பற்றி அல்லாஹ் கூறும் போது எப்படி முஹம்மது நபி மரணித்திருக்கவில்லையோ, ஈஸா நபியைப் பற்றி அல்லாஹ் கூறும் போது ஈஸா நபியும் மரணித்திருக்கவில்லை.
இதன் அடிப்படையிலும், முஹம்மது நபிக்கு முன் வந்தவர்களில் ஈஸா நபிக்கு விதிவிலக்கு இருப்பதை அறிய முடிகிறது.
இன்னும் சொல்லப்போனால், ஈஸா நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்கிற வசனம் ஈஸா நபி இறக்கவில்லை என்பதற்கு நாம் வைக்கின்ற முதல் ஆதாரமாகும்.
என் தரப்பு ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் தர துவங்கும் போது இதையும் விளக்கலாம் என்று கருதினேன்.
ஆனால், எது எங்கள் தரப்பு ஆதாரமோ, அதையே உங்களுக்கு ஆதாரமாக காட்டும் அளவிற்கு அறியாமையில் சுழலும் உங்களது நிலையினை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், இந்த இறை வசனத்தை விலாவாரியாகவே பார்த்து விடுவோம்.
இந்த வசனம் எப்படி ஈஸா நபி இறக்கவில்லை என்பதை சொல்கிறது? என்றால்..
ஈஸா நபி கடவுள் இல்லை என்பதை சொல்வதற்கு அல்லாஹ் அருளிய வசனம் இது.
கடவுள் இல்லை என்பதை எதைக் கொண்டு அல்லாஹ் நிறுவுகிறான்? என்றால், ஈஸா மரணித்து விட்டார் என்று சொல்லி நிறுவவில்லை.
மாறாக அவருக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்று சொல்லி நிறுவுகிறான்.
இறப்பது கடவுள் தன்மைக்கு எதிரானது என்பதை அல்லாஹ் பல்வேறு வசனங்களில் சொல்லியிருக்கையில், அதை மேற்கோள் காட்டி ஈஸா நபியும் இறக்கவில்லை என்று இந்த வசனத்தில் விளக்குகிறான்.
உண்மையில் ஈஸா நபி இறந்திருந்தார்கள் என்றால், மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை.! அவர் சென்று விட்டார்..
இப்படி தான் அல்லாஹ் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அதை அல்லாஹ் சொல்லாமல், அவருக்கு முன் வந்த தூதர்கள் சென்று விட்டார்கள் என்கிறான்.
இவரும் மற்றவர்களைப் போல தூதர் தான், எப்படி அவர்கள் இறந்தார்களோ அவ்வாறு இவரும் இறந்து போகக்கூடியவர் என்பது இதன் பொருள்.
இதற்கு மறுப்பு சொல்லப் புகுந்த காதியானி கூட்டம்,
அவருக்கு முன் வந்த தூதர்கள் சென்று விட்டார்கள் என்றால்,
இவரும் மற்றவர்களைப் போல தூதர் தான், எப்படி அவர்கள் இறந்தார்களோ அவ்வாறு இவரும் இறந்து போகக்கூடியவர்
என்று புரியக் கூடாது..மாறாக, எப்படி அவர்கள் இறந்தார்களோ அவ்வாறு இவரும் இறந்து போனவர் என்று புரிய வேண்டும் என்று சொல்கின்றனர்.
இது அடிப்படையிலேயே தவறான வாதம்.
அவர் இறந்து போனவர் என்பது உண்மை என்றால், அவர் இறந்து போனவர் என்று மட்டுமே சொல்லியிருக்கலாம். மற்றவர்கள் எல்லாம் இறந்தவர்கள் என்று சொல்லத் தேவையில்லை.
இந்த வசனம் ஈஸா நபி மரணித்து விட்டதை சொல்லவில்லை, மாறாக அவரும் மரணிக்கும் தன்மை கொண்டவர் என்று சொல்கிற வசனம்.
அதனால் தான் அவர் தூதர் தான் என்று சொல்லி மற்ற தூதர்கள் எப்படி இறப்பார்களோ அது போல இவரிடமும் இறக்கும் தன்மை இருக்கிறது, ஆகவே இவர் கடவுள் இல்லை என்று நிறுவுகிறான் அல்லாஹ்.
இவரே இறந்து போயிருந்தால் மற்ற தூதர்கள் இறந்து விட்டதால் இவர் தூதர் இல்லை என்று சொல்ல தேவையில்லை, இவர் இறந்து விட்டதால் இவர் தூதர் இல்லை என்று நேரடியாகவே சொல்லலாம்.
மேலும், இவர் இறக்கவில்லை என்பதால் இவரது மரணத்தை அதற்கு ஆதாரமாக காட்ட முடியாது என்கிற எனது கருத்தை மேலும் உறுதியாக்குகிறது, இந்த வசனத்தின் அடுத்த தொடர்ச்சி.
அதில் இவர் உணவு உண்பவராக இருந்தனர் என்று சொல்லி, உணவு உண்பதால் இவர் கடவுளாக இருக்க முடியாது என்கிறான்.
இன்னும் சொல்வதானால், ஈஸா தூதரை தவிர வேறில்லை என்கிற வசனத்தின் மூலம் அவரும் மற்ற தூதர்களை போல் சென்று விட்டார் என்று தான் புரிய வேண்டும் என்றால்,
இதே வாசகம் தான் முஹம்மது நபி பற்றிய 3:44 வசனத்திலும் அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்
இங்கே, முஹம்மது தூதர் தவிர வேறில்லை என்று, ஈஸா நபிக்கு சொன்னது போல தான் சொல்கிறான்.
அப்படியானால், முஹமம்து நபியும் மற்ற தூதர்களைப் போல இறந்து விட்டவர் என்றூ தான் அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்கிறானா?
இந்த வசனம் இறங்கும் போது முஹமம்து நபி இறந்து விட்டிருந்தார்களா?
அல்லது, மற்ற தூதர்களைப் போல் இந்த முஹம்மதும் ஒரு நாள் இறந்து போவார் என்று வருங்காலத்தை அல்லாஹ் பேசுகிறானா?
ஒரே வாசக அமைப்பைக் கொண்ட ஒரு வசனத்திற்கு வருங்காலம் என்பீர்களாம், இன்னொரு வசனத்திற்கு கடந்த காலம் என்பீர்களாம்.
இதுவா நடு நிலை சிந்தனை? இதுவா நேரான ஆய்வு?
இன்னொரு வினோதமான வாதமொன்றும் இவர்களால் எழுப்பப்படுகிறது.
அதாவது,
ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்றாலும், அவர் இறந்தது, அந்த மக்களை அவரை கடவுளாக வணங்குவதை விட்டும் தடுக்காது, அவர்கள் பார்வையில் அவர் இறந்து, பின் உயிர்த்தெழுந்தவர், இறப்பு என்பதெல்லாம் ஒருவருக்கு கடவுள் தன்மையை நீக்கி விடாது என்று நம்பக்கூடியவர்கள், எனவே தான் ஈஸா நபியின் மரணத்தை அல்லாஹ் இங்கு சொல்லவில்லை
என்று வாதம் வைக்கின்றனர்.
இதுவும் மனமுரண்டாக, தண்ணீரில் மூழ்க கிடக்கும் ஒருவன் மேலே சாதாரண குச்சியையாவது பிடித்து தப்பிக்க முடியுமா என்று எண்ணுவது போன்று உள்ளது, இது போன்ற உப்புக்கு சப்பில்லாத வாதங்கள்.
ஈசா நபியின் இறப்பு அவர்களைப் பொறுத்தவரை பெரிய விஷயமில்லை என்பதால் தான் அவரது மரணத்தை அல்லாஹ் சொல்லவில்லை என்றால், ஈஸா நபி உணவு உண்பவராக இருந்தார் என்பதைக் கூட தான் அல்லாஹ் சொல்லியிருக்கக் கூடாது,
காரணம், ஈஸா நபி இவ்வுலகில் அவர்களோடு இருந்த காலத்தில் உணவு உண்பவராக தான் இருந்தார்.
அதை கண்ணால் கண்டு கொண்டு தான் அவரை கடவுள் என்றும் கடவுளின் குமாரர் என்றும் நம்பினர் அந்த மக்கள். எனவே உணவு உண்பதால் கடவுள் ஆக முடியாது என்கிற வாதத்தை அப்போதும் அவர்கள் ஏற்க மாட்டார்கள் தானே?
ஆக, இந்த வாதமும் அர்த்தமற்றது.
இன்னும் சொல்வதானால்,
இந்த வசனம் இறங்கும் போது ஈசா நபி இறந்திருந்தால், இறந்தவர் மீண்டும் எழுந்தாரா? என்று கேள்வி எழுப்பி அதன் மூலம் தான் அல்லாஹ் அவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில், ஈசா நபி இறந்து விட்டார் என்று அவர்கள் நம்பியது போல, அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதும் தான் அவர்களது நம்பிக்கை ! பல்லாயிரம் வருடங்களுக்கு முன் ஈசா நபி இறந்து விட்டது உண்மையெனில், அதை காரணம் காட்டி அவரது கடவுள் தன்மையை மறுக்க முடியாது என்றாலும், அவர் மீண்டும் எழுந்து வரவில்லை என்பதை காரணம் காட்டி அவரது கடவுள் தன்மையை மறுக்கலாம்!
அதற்கு இந்த வசனம் பொருத்தமான இடம் தான்!
அவர் மரணித்து விட்டார், மீண்டும் எழவுமில்லை என்று சொல்வதன் மூலம், மரணித்தவர் மீண்டும் வருவதால் அவர் கடவுள் தான் என்று ஈசா நபியை அந்த காரணத்தை வைத்து கடவுளாக நம்பியவர்களுக்கு அது மறுப்பாக தான் அமையும். அப்படி அல்லாஹ் இங்கு சொல்லவில்லை.
மாறாக, ஈசா நபிக்கு முன்பு எல்லா நபிமார்களும் இறந்து விட்டதை தான் சொல்கிறான் என்பதும் இங்கே சிந்திக்கத்தக்கது.
ஈசா நபிக்கு முன் எப்படி எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்களோ அதே போல இவரும் இறந்து போவார் ! என்பது தான் இதன் பொருளே தவிர, முன் சென்ற நம்பிமார்கள் மீண்டும் உயிர்தெழாதது போல இவரும் மீண்டும் உயிர்த்தெழவில்லை என்று சொல்கிற வசனமல்ல.
அப்படி சொல்வதற்கு பதில் நேரடியாக, ஈசா நபி இறந்து விட்டார் ஆனால் இன்று வரை உயிர்த்தெழவில்லை என்று அல்லாஹ் சொல்லியிருக்கலாம் , நேரடியாக ஒன்றை சொல்வதற்கு இடமிருக்கும் போது இங்கு அவசியமில்லாமல் முன் சென்ற நபிமார்களை அல்லாஹ் இங்கு சொல்லியிருக்க தேவையில்லை.
ஒரு வசனம் என்ன நோக்கத்திற்காக இறக்கப்படுகிறதோ, அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் அதன் கருத்து இருக்க வேண்டும். நானோ நீங்களோ பேசும் போதே இப்படி தான் சிந்திப்போம் எனும் போது அல்லாஹ் நம்மையே படைத்தவன்.!
ஈசா நபி கடவுள் கிடையாது என்று சொல்லும் நோக்கில் இந்த வசனத்தை அல்லாஹ் இறக்குகிறான்!
அந்த மக்கள் ஈசா நபியை கடவுள் என்று நம்பிக்கொண்டிருகிறார்கள், உங்கள் கருத்துப்படி ஈசா இறந்து விட்டார், இருப்பினும், அவர் மீண்டும் உயிர் பெற்று வந்தார் என்று அவர்களே மீண்டும் நம்பி மீண்டும் அவர்களது கடவுள் நம்பிக்கையை தொடர்கிறார்கள்.
இப்போது அவர்களுக்கு மறுப்பு சொல்வதானால், ஈசா வெறும் தூதர் தான், அவர் மரணித்தார், மீண்டும் எழவில்லை என்று சொல்வதே போதுமானது!
ஆனால், உங்கள் கருத்துப்படி எங்கே, எதை பயன்படுத்த வேண்டுமோ அங்கே அதை அல்லாஹ் பயன்படுத்தவில்லை.
இந்த வசனம் இறங்கிய காலத்தில் ஈஸா நபி மரணிக்காமல் இருந்திருந்தால் தான் இந்த வசனம் எளிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆகிறது.
ஆனால், இந்த வசனம் இறங்கிய காலத்தில் நீங்கள் சொல்வது போல் ஈஸா நபி மரணமடைந்திருந்தால், இந்த வசனத்தில் ஏக குழப்பம், அல்லாஹ் அர்த்தமில்லாத வாதங்களை வைத்திருக்கிறான் என்று தான் பொருள் வரும், நவூதுபில்லாஹ்.
ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்பதை நிறுவ நீங்கள் வைக்கும் ஆறு ஆதாரங்களில் நாங்கு ஆதாரங்களின் நிலையை பார்த்திருக்கிறோம்.
இன்னும், பொய் கடவுள் இறந்து விட்டதாக அல்லாஹ் சொல்வதிலிருந்து ஈஸா நபி இறந்து விட்டதாக புரிகிறதா?
ஈஸா நபி வஃபாத் ஆகி விட்டதாக வரக்கூடிய வசனத்தின் கருத்து ஆகிய இரண்டை அடுத்தடுத்து பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.
தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக