வியாழன், 17 ஜூலை, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (O)


டமாஸ்கஸில் வருகை தரும் ஈஸா நபி

ஈஸா நபி இறக்கவில்லை (பாகம் 15)
----------------------------------------------------------

இதுவரையுள்ள தொடர்களில், ஈஸா நபி இறந்து விட்டார் என்று தான் புரிய முடிகிறது என்று சொல்லி அஹமதிய்யாக்கள் எடுத்து வைக்கும் இறை வசனங்கள் உண்மையில் அவர் இறந்து விட்டார் என்கிற கருத்தை தரவேயில்லை என்பதையும், ஈஸா நபியைப் பற்றி அவை பேசவேயில்லை என்பதையும் தெளிவாக அறிந்து கொண்டோம்.

அதை தொடர்ந்து, ஈஸா நபி இறக்கவில்லை, அவர் மீண்டும் அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்படுவார் என்பதை குர் ஆனின் பல்வேறு வசனங்கள் வாயிலாக அடுக்கடுக்கான சான்றுகளுடன் அறிந்து கொண்டோம்.

ஈஸா நபி கடவுளில்லை என்பதை சொல்வதற்கு அவர் மரணித்து விட்டதை சொல்லாமல், அவருக்கு முன் வந்தவர்கள் மரணித்து விட்டார்கள் என்று சொல்வதன் மூலம் ஈஸா நபி இன்னும் மரணிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறான்.

அத்துடன், ஒருவரது மரணம் தான் அவரிடம் கடவுள் தன்மை இல்லை என்பதற்கு மிகப்பெரிய சான்று எனும் போது, ஈஸா நபி விஷயத்தில் அதை சொல்லாத அல்லாஹ், அவர் உணவு உண்டு வந்ததால் கடவுள் இல்லை என்று முற்றிலும் மாறுபட்ட விளக்கமொன்றினை அளிப்பதையும் பார்த்தோம்.

தொடர்ந்து, அவர் அல்லாஹ்வால் உடலோடு உயர்த்தப்பட்டதையும், உடலோடு உயர்த்துதலுக்கு அந்தஸ்து உயர்வு, தகுதி உயர்வு என்று அஹமதியாக்கள் சொல்லும் வியாக்கானங்கள், அவைகளுக்குரிய தக்க மறுப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாய் பார்த்தோம்.

அவர் கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார் என்று அல்லாஹ் சொல்வதன் மூலமும் அவர் மரணிக்கவில்லை, மீண்டும் வர உள்ளார் என்பது தெளிவாகிறது. அதையும் விளக்கமாய் பார்த்தோம்.

அவர் இன்னும் மரணிக்கவில்லை என்பதை இன்னும் தெளிவாக உறுதி செய்யும் விதமாய் அல்லாஹ் தொடர்ந்து கூறூம் போது, அது நாள் வரை அவரை சரியான முறையில் நம்பிக்கை கொள்ளாதவர்கள் கூட, அவர் மரணிப்பதற்கு முன்னால் நம்பிக்கை கொண்டு விடுவார்கள் என்று சொல்லி, அவரது மரணம் இனி மேல் தான் நிகழப் போகிறது என்பதை தெளிவாக்குகிறான்.

இதற்கெல்லாம் இந்த அஹமதியா மதத்தவர்கள் சொல்லும் சமாளிப்புகள் என்னவாக இருக்கும் என்பதையும் நாமே முன் வைத்து, இன்னும் சொல்லப்போனால், அவர்கள் வைக்காத வாதங்களை கூட நாமே எடுத்து வைத்து, துளியளவும் சந்தேகமில்லாத வகையில் நமது கொள்கையினை அழகிய முறையில் நிறுவியிருக்கிறோம்.

இதற்கு எதிராக வாதம் புரிபவர்கள் எவருமே நுனிப்பில் மேய்பவராகவும், தங்கள் கொள்கையை திணிக்க எத்தகைய கீழ் நிலைக்கும் இறங்குபவர்களாகவும் தான் இருக்கின்றனர் என்பதும் நிரூபணமானது !

இந்த நிலையில், ஒரு வாதத்திற்கு, ஒரு பேச்சுக்கு, ஈஸா நபி இறந்து விட்டார் என்றே வைப்போமே..

அதன் காரணமாகவாவது அவர் மீண்டும் வருவார் என்பதை மறுக்க வேண்டுமா? என்று சிந்தித்தால் அவர் மரணித்து விட்டார் என்று நம்புகிறவர்கள் கூட அவர் மீண்டும் வருவார் என்பதை மறுக்க கூடாது என்பதே ஹதீஸ்கள் வாயிலாக நாம் புரிய முடிகிற ஒன்றாக இருக்கிறது !

இவ்வாறு இருக்கும் போது மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை அல்லாஹ் அனுப்புவான். அவர்கள் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்து தமது இரு கைகளையும் இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது வைத்தவர்களாக டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரின் கிழக்கே உள்ள வெள்ளை மினராவின் அருகே இறங்குவார்கள். அவர்கள் தலையைக் குனிந்தால் நீர் சொட்டும்! தலையை உயர்த்தினால் முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் உதிரும். அப்போது அவர்களின் பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார். அவர்களின் பார்வை எட்டும் தொலைவுக்கு அவர்களின் பெருமூச்சு செல்லும். அவர்கள் தஜ்ஜாலைத் தேடுவார்கள். (பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள) லுத் என்ற கிராமத்தின் வாசலில் அவனைக் கொல்வார்கள்.

நூல் : முஸ்லிம் 5228

மர்யமுடைய மகன் நீதியான தீர்ப்பளிப்பவராக இறங்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர் சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 2476

ஈஸா நபி இறங்கும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல் விடப்படும். பொறாமையும், கள்ளமும், கபடமும் இல்லாது ஒழியும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 221

உங்கள் இமாம் உங்களைச் சேர்ந்தவராக இருக்கும் போது ஈஸா நபியவர்கள் இறங்குவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி 3449

ஈஸா நபியவர்கள் இறங்கும் போது அப்போதைய முஸ்லிம்களின் தலைவர் 'வாருங்கள்! எங்களுக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று ஈஸா நபியிடம் கேட்பார். அதற்கு ஈஸா நபியவர்கள் 'உங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும்'' என்று ஈஸா நபி கூறி விடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 225

ஸா நபியவர்கள் அவனைத் (தஜ்ஜாலை) தமது கையால் கொல்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5157 (ஹதீஸின் பகுதி)

தஜ்ஜாலைக் கொன்ற பின் தஜ்ஜாலிடமிருந்து தப்பித்த கூட்டத்தினர் ஈஸா நபியிடம் வருவார்கள். அவர்களின் முகத்தைத் தடவிக் கொடுப்பார்கள். சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுவார்கள்.

நூல் : முஸ்லிம் 5228

தஜ்ஜாலை ஈஸா நபி கொன்ற பின்னர் ஏழு ஆண்டுகள் எந்த இருவருக்கிடையிலும் எந்தப் பகையும் இல்லாத நிலை ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5233

இந்த நிலையில் 'யாராலும் வெல்ல முடியாத அடியார்களை நான் வெளிப்படுத்தியுள்ளேன். அவர்களைத் தூர் மலையின் பால் அழைத்துச் செல்வீராக'' என்று ஈஸா நபிக்கு அல்லாஹ் செய்தி அனுப்புவான்.

நூல் : முஸ்லிம் 5228

மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் யாவுமே, கியாமத் நாளுக்கு சமீபமாக ஈஸா நபி இந்த பூமியில் வருவார்கள் என்பதை நேரடியாகவே சொல்கின்றன.

முஹம்மது நபி தான் இறுதித் தூதர் எனும் போது ஈஸா நபி எப்படி மீண்டும் வருவார் என்கிறீர்கள்? என்று எழுப்பப்படும் கேள்வியிலும் எந்த பொருளும் இல்லை என்பதற்கு மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் சான்று பகர்கின்றன.

ஈஸா நபியவர்கள் மர்யமின் மகனாக தான் வருவாரே தவிர, நபியாக வர மாட்டார் என்று அந்த ஹதீஸ்கள் சொல்கின்றன.

ஈஸா தான் மிர்சா, ஈஸா வருவார் என்றால் மிர்சா வருவார் போன்ற கிறுக்குத்தனங்களைப் பற்றியெல்லாம் நாம் பார்ப்பதற்கு முன், நாம் இங்கே அடிப்படை கேள்வியொன்றினை முன்வைக்கிறோம்.

சரி, ஈஸா நபி இறந்து விட்டார், அதனால் என்ன? அது எப்படி மிர்சா சாஹிப் மீண்டும் இவ்வுலகில் வருவதை உறுதிப்படுத்தும்?

மிர்சா சாஹிப் மீண்டும் வருவார் என்று அல்லாஹ்வோ ரசூலோ சொல்லியிருக்கிறார்களா?

ஈஸா மீண்டும் வருவார் என்று ஹதீஸ் இருந்தால், ஈஸா வருவார் என்று தானே நம்ப வேண்டும்? ஈஸா இறந்து விட்டார் என்று நம்புகிறவர்கள் கூட, அவர் மீண்டும் வருவார் என்பதை மறுக்க தேவையில்லையே?

இந்த அஹமதிய்யா மத்தவர்கள் நம்பிக்கைப் படி ஈஸா நபி இறந்து விட்டார். சரி. இறந்த ஈஸா நபியை அல்லாஹ் மீண்டும் பூமிக்கு அனுப்புகிறான். இப்படி நம்ப எது இவர்களுக்கு தடை?

ஈஸா என்றால் மிர்சா என்று போதையில் உளர வேண்டிய அவசியமென்ன?

ஆக, மிர்சா எனும் பெரும் பொய்யரை, ஃப்ராட் பேர்வழியை நபியாக அழகு பார்க்க இவர்களுக்கு ஆசை,
அவர் மீண்டும் இவ்வுலகில் வருவார் என்று பிரச்சாரம் செய்ய ஆசை.
ஆனால், இப்படி சொல்கிறீர்களே, இதற்கு என்ன ஆதாரம்? என்று எவராவது கேட்டால் என்ன செய்வது?
இருக்கவே இருக்கிறது, ஈஸா வருவார் என்கிற ஹதிஸ்கள்.

இதோ, இங்கே ஈஸா என்று சொல்லப்பட்டிருப்பது எங்கள் மிர்சா தான்..

என்று திரிபு வேலை செய்கின்றனர் !

இவர்கள் என்ன தான் குட்டிக்கரணங்கள் அடித்தாலும், நாம் இங்கே எழுப்பியிருக்கும் கேள்வி என்றைக்கும் மிச்சமாகவே இருக்கும் !

ஒரு பேச்சுக்கு மர்யமின் மகன் ஈஸா நபி இறந்து விட்டார் என்று வைத்துக் கொண்டால் கூட, இறந்த ஈஸா நபி மீண்டும் வருவார், ஆட்சி செய்வார், தஜ்ஜாலை கொல்வார் என்றெல்லாம் நம்ப எது தடையாக இருக்கிறது இந்த அஹமதியாக்களுக்கு?

மர்யம் என்றால் மிர்சா, மர்யம் பெற்ற ஈஸா என்றாலும் மிர்சா.. ஈஸா வருவார் என்றால் மிர்சா வருவார் என்கிற கிறுக்குத்தனங்களையும் அதையொட்டிய கேள்விகளையும் அடுத்தடுத்து பார்போம், இன்ஷா அல்லாஹ்.

தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக