வியாழன், 17 ஜூலை, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (J)


கைபற்றுதல், உயர்த்துதல்

"ஈஸா நபி மரணிக்கவில்லை" (பாகம் 10)
--------------------------------------------------------------

ஈஸா நபியை அல்லாஹ் உடலோடு உயர்த்தினான் என்று நாம் பொருள் செய்கிற போது, "உடல்" என்கிற வார்த்தை எங்கே இருக்கிறது என்று காதியானிகள் கேள்வியெழுப்புகின்றனர்.

இந்த கேள்வியே அறியாமையின் வெளிப்பாடாய் அமைந்த கேள்வி தான்.

தகுதி, அந்தஸ்து, புகழ் போன்ற குணங்களில் உயர்த்தினேன் என்று சொல்லாமல், வெறுமனே உயர்த்தினேன் என்று மட்டும் சொன்னால் உடலோடு உயர்த்தினேன் என்று தான் பொருள். உடல் என்கிற வார்த்தை அங்கே வரவில்லையென்றாலும் அது தான் பொருள்.

ரமேஷை நல்ல வேலையில் உயர்த்தினேன் என்று சொன்னால் ரமேஷுக்கு நல்ல வேலை வாங்கிக் கொடுத்து அவரது தகுதியை உயர்த்தினேன் என்று பொருள்.

அதுவே ரமேஷை உயர்த்தினேன் என்று மட்டும் சொன்னால் ரமேஷையே தூக்கினேன் என்று தான் பொருள்.
ரமேஷையே தூக்கும் போது ரமேஷின் உடல் தான் தூக்கப்படுகிறது, இதை தனியாக சொல்லத் தேவையில்லை.

அப்படியானால், 3;55 வசனத்தில், ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும்.. என்று அல்லாஹ் சொல்கிறானே, இதற்கு என்ன அர்த்தம்? என்று அடுத்த கேள்வியை கேட்கின்றனர்.

இதில் வரக்கூடிய முதவ்ஃபீக்க மற்றும் ராஃபாஇக ஆகிய இரு சொல்லுக்கும் இருவேறு அர்த்தம் தான். ஒரே அர்த்தம் என்று வராது.
நாம் ஏற்கனவே சொன்னது போல், தவஃப்ஃபீக என்பது ஒரு பரந்து விரிந்த சொல். தனது கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதை குறிக்கும் சொல் தான் தவஃபீக அல்லது வஃபாத்.
கொலை செய்ய கூட்டத்தாரிடமிருந்து அல்லாஹ் ஈஸா நபியை இந்த இரு வழிகளிலும் காப்பாற்றினான்.
ஈஸாவை அல்லாஹ் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டான், அவரை உடலுடனும் எடுத்துக் கொண்டான். இது தான் அந்த வாசகத்திற்கும், வார்த்தை பொருள்படியும் நெருக்கமான அர்த்தம்.
வ‌ஃபாத்திற்கு இங்கே மரணம் என்று பொருள் வைப்பது தான் அர்த்தமற்றதாக ஆகும்.
கைபற்றுதலும், உயர்த்துதலும் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மையப்படுத்தி அல்லாஹ் சொல்வது.
இங்கே மரணம் என்று பொருள் செய்தால், ஈசா நபியை அல்லாஹ் மரணிக்க செய்து, அவரை அந்தஸ்த்தில் உயர்த்துவான் என்று சொல்வதில் எந்த பொருளும் இல்லை.

கைப்பற்றினான் என்றால் அவரது ஆற்றல்களை அல்லாஹ் தமது கட்டுபாட்டில் எடுத்துக்கொண்டான், எப்படி தூங்குகிற ஒருவரது செயல்பாடுகளை அல்லாஹ் தமது கட்டுக்குள் எடுதுக்கொள்கிறானோ அதே போல. சாதாரணமான மரணத்திற்கும் கைப்பற்றுதல் என்கிற வாசகம் வந்தாலும், தூக்கத்தில் செயல்பாடுகள் முடக்கப்படுவதற்கும் அதே கைப்பற்றுதல் என்கிற வாசகம் தான் வருகிறது. அந்த அடிப்படையில் ஈசா நபியை அல்லாஹ் கைப்பற்றினான் என்றால் மரணம் என்கிற ஒரு பொருளை தான் கொடுக்க வேண்டும் என்றில்லை, அவரது செயல்பாடுகளை அல்லாஹ் முடுக்கினான், தமது கையில் எடுத்துக்கொண்டான் (taken control ) என்று புரியலாம்.
அதே சமயம், உயர்த்தினான் என்றால் அவரை உடலுடனேயே உயர்த்துவதை தான் குறிக்கும்.
ஆக இரண்டிற்கும் ஒரே பொருளை நான் செய்யவில்லை.

இத்ரீஸ் நபியை உயர்ந்த தகுதிக்கு உயர்த்தினான் என்பதில் உயர்ந்த தகுதிக்கு உடலோடு உயர்த்தினான் என்று ஏன் புரியக் கூடாது என்று ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.
அந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்தியிருக்கும் வார்த்தை وَرَفَعْنَاهُ مَكَانًا
மகானன் என்பதற்கு இடம், தகுதி, அந்தஸ்து என பல அர்த்தங்கள் அகராதிப்படியே இருக்கின்றன.
இடம் என்கிற ஒரு பொருளை மட்டும் கொள்வதாக இருந்தால் இடத்திற்கு உடலோடு உயர்த்தினான் என்று பொருள் கொள்ள முடியாதா என்று கேட்கலாம். ஆனால், அந்த வசனத்தின் இலக்கணப்படி அப்படி பொருள் கொள்ள முடியாது.

உயர்ந்த இடத்தைக் கொண்டு உயர்த்தினான் என்பது தான் அந்த வசனத்தின் பொருள்.

இடத்தைக் கொண்டு உடலோடு உயர்த்தினான் என்று வராது. அது அந்தஸ்த்தை அல்லது தகுதியை குறிப்பதாக இருந்தால் மட்டும் தான் அதனோடு சேர்த்து உயர்த்துவதாக ஆகும். ஆக இதை வைத்து ஈஸா நபி உடலோடு உயர்த்தியதை மறுக்க முடியாது.
ஈஸா நபியை இடத்திற்கு உயர்த்தியதாக அல்லாஹ் சொல்லவில்லை.

அவரை ஒரு இடத்திற்கு உயர்த்தினான் என்று ஒரு வசனத்திலும், அவரை உயர்த்தினான் என்று இன்னொரு வசனத்திலும் சொல்லப்பட்டால் இரண்டுக்கும் ஒரே பொருளை தான் செய்வேன் என்கிற வாதம் ஏற்கத்தக்க வாதமே அல்ல.
அப்படியானால் அந்த வசனத்திற்கு கூடுதலாக இடம் என்கிற வார்த்தையை அல்லாஹ் அவசியமில்லாமல் சொன்னானா?
இடம் என்கிற சொல் இல்லாமலேயே அதே கருத்தை சொல்ல முடியும் என்றால் இடம் என்று கூடுதலாக அல்லாஹ் சொல்லவேண்டியதில்லை.

அப்படியானால் இடம் என்பதற்கு இங்கே என்ன அர்த்தம்? உயரமான இடம் என்று பொருள் கொண்டால் நாம் சிந்தனையை செலுத்தவில்லை என்று ஆகும். அவரை சிறப்பித்து கூறும் வசனத்தில் ஒரு சிறந்த இடத்திற்கு உயர்த்தினான் என்றால் அந்தஸ்து, தகுதி என்கிற பொருள் தான் கொள்ள முடியும். இடத்தை இடம் என்றே வைத்துக்கொண்டாலும் அதுவும் இதே கருத்தை தான் தரும்.

இடத்திற்கு உயர்த்தினான் என்று சொல்லும் போது, முதலில் இடம் என்றால் நிஜமான ஒரு பகுதியை சொல்கிறதா அல்லது தகுதியை சொல்கிறதா என்பதை தான் சிந்திக்க வேண்டும்.
உயர்த்துதலோடு துணை சொற்கள் ஏதும் இல்லாதவரை, உயர்த்துதல் என்றால் உடலோடு உயர்த்துதல் தான்.
இடம் என்பது உண்மையில் ஒரு பகுதி என்று முடிவானால் பகுதிக்கு உடலோடு உயர்த்தினான் என்று பொருள் வையுங்கள்,
இடம் என்பது தகுதி என்று முடிவானால், உடலோடு இல்லை என்று பொருள் வையுங்கள்.

ஆனால், இடம் என்றோ அந்தஸ்து என்றோ எதையுமே சொல்லவில்லை என்றால் அப்போது அந்தஸ்து என்று ஏன் பொருள் செய்ய வேண்டும் ? என்பது தான் எனது கேள்வி.

இடம் என்பதற்கு தகுதி, அந்தஸ்து, நிலை என்கிற பல அர்த்தங்கள் இருக்கிறது என்பதாலும், இத்ரீஸ் நபி பற்றிய வசனத்தில் இந்த அர்த்தங்கள் தான் அதற்கு பொருந்தும் என்பதாலும் தகுதியில் உயர்த்தினான் என்று கூடுதல் விளக்கத்தை இத்ரீஸ் நபி வசனத்திற்கு தரலாம்.
அப்படி கூடுதல் விளக்கம் தர ஈசா நபி பற்றிய வசனத்தில் என்ன வாசகம் இருக்கிறது என்பது தான் பல வாய்ப்புகளில் நான் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி.
மீண்டும், இத்ரீஸ் நபி பற்றிய வசனத்தில் இடம் என்று வந்து விட்டதல்லவா? என்று வாதம் செய்வது எனது கேள்விக்கு எப்படி பதில் ஆகும்?

இத்ரீஸ் நபி வசனத்தில் இடம் என்கிற கூடுதல் வார்த்தை உள்ளது. அதை நேரடியாக பொருள் செய்யுங்கள், அல்லது அதற்கு அகராதியில் இருக்கும் பல அர்த்தங்களில் ஒன்றை எடுத்து அதற்கு பொருத்துங்கள், பிரச்சனையில்லை.

அந்த வசனத்தில் அப்படி செய்கிறோம் என்பதால் எந்த கூடுதல் வார்த்தையும் இல்லாமல் வருகிற வசனத்திற்கும் அதையே செய்வேன் என்று சொல்வது எந்த அறிவுக்கும் பொருந்தாது.

இந்த இடம், ஈசா நபியின் சிறப்பை பற்றி பேசுகிற வசனமல்ல. அவர் யூதர்களின் சதியில் இருந்து காப்பாற்றப்பட்டதை சொல்லும் வசனமாகும்.
அப்படி சொல்கிற தொடரில், அவரை அல்லாஹ் உயர்த்தினான் என்றால் அவர்கள் கொலை சதியில் சிக்க விடாமல் அல்லாஹ் ஈசா நபியை காப்பாற்றியதை தான் இப்படி சொல்ல முடியும்.
அந்த வசனத்தை தொடராக படித்தால் அது புரியும்.

அவர்கள் அவரை கொன்று விட்டதாக நினைக்கிறார்கள்.
ஆனால் அவரை அவர்கள் கொலை செய்யவில்லை.
அவர்கள் தவறான நம்பிக்கையிலேயே இருக்கிறார்கள்.
நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவில்லை.
மாறாக, அவரை அல்லாஹ் உயர்த்தினான்.

என்று சொன்னால், இங்கு அவர்களது கொலை சதியில் இருந்து எதை செய்தால் அவர் காப்பாற்றப்படுவாரோ அதை செய்ததாக அல்லாஹ் சொல்கிறான் என்று புரிவது தான் பொருத்தமாக உள்ளது.

உயர்த்தினான் என்று வருகிற வசனத்தில், அந்தஸ்து உயர்வு என்று வேறு வேறு இடங்களில் நாம் வைக்கும் மொழியாக்கத்தை போல இங்கு வைப்பதற்கு ஏதுவாக எந்த துணை சொல்லும் இல்லை.
இத்ரீஸ் நபி பற்றி சொல்வது போல, உயர்ந்த ஈடதிற்கு உயர்த்தினான் என்று கூட இல்லை.
வெறுமனே உயர்த்தினான் என்று தான் உள்ளது.

மேலும், 44:19 வசனத்திலும் இதே போன்று அன்றியும், “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.

என்று வருகிறதே, இதில் உயர்த்திக் கொள்ளாதீர்கள் என்றால் உடலோடு உயர்த்திக் கொள்ளாதீர்கள் என்று தான் பொருள் செய்வீர்களா?

என்று ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள்.

அரபு மூலத்தை வாசிக்காமல், மொழியாக்கத்தை மட்டும் படிப்பதால் ஏற்படும் விளைவு தான் இது.
அங்கே உயர்த்தினான் என்பதற்கான அரபு மூல சொல்லான "ரஃபாஅ" என்று இல்லை.

ஈஸா நபி பற்றியோ, இத்ரீஸ் நபி பற்றியோ அல்லாஹ் சொல்லும் போது பயன்படுத்தும் வார்த்தை ரஃபா.. இதற்கு உயர்த்துதல் என்கிற பொருள் தான் இருக்கிறது. எனவே தான் அது உடலுடன் கூடிய உயர்த்துதலா அல்லது அந்தஸ்து உயர்வா என்று விவாதிக்கிறோம்.
ஆனால் இவர்கள் சுட்டிக்காட்டும் 44:19 வசனத்தில் ரஃபா என்கிற சொல்லே கிடையாது. ஆகவே இங்கே உடலுடன் உயர்த்துதல் என்கிற பேச்சுகே இடமில்லை.
இது நேரடியாகவே குணாதிசியங்களைக் கொண்டு மேலோங்குதல், பெருமை, ஆணவம் என்கிற பொருள் தானாகவே அமைந்து விட்ட வசனமிது.

மேலும், வெறுமனே உயர்த்தினான் என்று சொல்லப்பட்டால் உயர்த்தினான் என்று நேரடியாக தான் புரிய வேண்டும் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் தொழுகையின் போது தக்பீர் சொல்லி கைகளை உயர்த்துவது பற்றி வரக்கூடிய ஹதீஸ்.

தொழுகையை துவக்கும் போது தக்பீர் சொல்லி கைகளை உயர்த்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்கிற இடத்தில் இதே "ரபா" என்கிற வார்த்தையை தான் பயன்படுதியுள்ளார்கள். இங்கே கைகளின் அந்தஸ்தை உயர்த்துதல் என்று புரிய வேண்டுமா அல்லது கைகளையே மேலே தூக்க வேண்டும் என்று புரிவோமா? கைகளை மேலே உயர்த்துதல் என்று தான் புரிவோம். இங்கே ரபா என்பதுடன் சேர்த்து அந்தஸ்தில் உயர்த்துதல் என்று இல்லை.
ஆக, வெறுமனே உயர்த்துதல் என்று சொல்லப்பட்டால் அதையே உயர்த்துதல் என்று தான் பொருள், அந்தஸ்து, பதவி போன்றவற்றில் உயர்த்துவதாக சொல்ல நினைத்தால் அப்படி கூடுதல் வாசகங்கள் இடம்பெற வேண்டும்.

ஈசா நபி பற்றிய இந்த வசனத்தில் அத்தகைய கூடுதல் வாசகங்கள் இல்லை. தன்னளவில் என்று சொல்வதில் கூட, ஒரு வாதத்திற்கு உங்கள் கருத்தை ஒப்புக்கொண்டாலும், தன்னை பொறுத்தவரை மேலே உயர்த்தினான் என்று தான் பொருளாகுமே தவிர அந்தஸ்தில் உயர்த்தியதாக பொருள் செய்ய இயலாது என்பதை கடுகளவும் சந்தேகமின்றி மீண்டும் தெளிவாகவே பதிவு செய்கிறேன்.

ஆக, மீண்டும் அழுத்தமாக நான் பதிய நினைக்கும் கருத்தானது,

உயர்த்தினான் என்று பொதுவாக சொன்னால் எதை குறித்து சொல்லப்படுகிறதோ அதையே உயர்த்துவது தான்.
அந்த பொருளின் அந்தஸ்தை உயர்த்துதல் என்று பொருள் கொள்வதாக இருந்தால் அதற்கு துணை சொற்கள் வர வேண்டும். அந்தஸ்தை உயர்த்தினான், தகுதியை உயர்த்தினான், இடத்தை உயர்ர்தினான் என்று ஏதேனும் துணை ஆதாரங்கள் வந்தால் தான் அதனோடு பொருத்த முடியும். வெறுமனே உயர்த்தினான் என்று வந்தால் அதற்கு அந்தஸ்து உயர்வு என்று சொல்வது தான் தவறு.
இன்னும் சொல்லப்போனால், இதை வெறுமனே நாம் யூகிக்கவும் தேவையில்லை.

குர் ஆனிலும் ஹதீஸிலும் கூட, பல இடங்களில் உயர்த்துதல் பற்றிய கருத்து வருகிறது.
ஒரு பொருளையோ ஒரு நபரையோ பற்றி பேசி, அவரது அல்லது அதன் அந்தஸ்தை உயர்த்துவதாக அல்லாஹ் சொல்ல நினைத்தால் அந்தஸ்து, போன்ற பொருள் பட துணை சொற்களை இணைத்தே தான் சொல்கிறான்.

இதற்கு இத்ரீஸ் நபியை பற்றி அல்லாஹ் சொன்னது உதாரணம்.

அதே போன்று, எதை பற்றி அல்லாஹ் சொல்கிறானோ, அதை அப்படியே உயர்த்தி விடுவதை சொல்ல நினைத்தால் எந்த துணை சொற்களும் இன்றி வெறுமனே உயர்த்தினான் என்று மட்டும் சொல்வான்.

இதற்கு, தொழுகையில் கைகளை உயர்த்துவதை பற்றி வரக்கூடிய ஹதீஸ் ஒரு உதாரணம்.

மேலும், வானங்களை அல்லாஹ் தூண்களின்றி உயர்த்தினான் என்று வரக்கூடிய இறை வசனமும் வானத்தை மேலே உயர்த்தியதை தான் சொல்கிறதே தவிர, அல்லாஹ் வானத்தின் தகுதியை உயர்த்தினான் என்று நாம் சொல்வதில்லை.ஏன் சொல்வதில்லை என்றால் அங்கே வெறுமனே உயர்த்தினான் என்று மட்டும் தான் உள்ளது, தகுதி, அந்தஸ்து போன்ற அடை மொழி எதுவும் அங்கே இல்லை.!!

அவரை அல்லாஹ் உயர்த்தினான் என்று சொல்லி விட்டு, அல்லாஹ் வல்லமைமிக்கவன் மற்றும் ஞானமுடையவன் என்று சொல்வதிலிருந்து, அல்லாஹ் ஈசா நபியின் தகுதியை உயர்த்தினான் என்று சொல்வது பொருந்தாத ஒன்று என்று விளக்கியிருந்தேன். ஏனெனில், தகுதியை உயர்த்துவதற்கு அல்லாஹ்வின் வல்லமை, ஞானம் தேவையில்லை. அது அல்லாஹ் செய்த கிருபை.
ஈசா நபிக்கு அல்லாஹ் கிருபை செய்துள்ளான்.
அடுத்த வீட்டு இப்ராஹிமை நான் நேசிக்கிறேன், ஆகவே நான் வல்லமைமிக்கவன், நான் அறிவாளி என்று சொல்வது பொருந்தாது. காரணம், ஒருவரை நேசிப்பதற்கு வல்லமையோ அறிவோ தேவையில்லை. அதே போன்று, ஈசா நபியின் அந்தஸ்தை அல்லாஹ் உயர்வாக கருதுவதற்கு அவனுக்கு வல்லமையோ ஞானமோ தேவையே இல்லை. ஆனால் இங்கு அதை அல்லாஹ் சொல்லியதிலிருந்து இங்கு ஈசா நபியின் அந்தஸ்தை பற்றி அல்லாஹ் சொல்லவில்லை, மாறாக அவரையே உயர்த்தி விட்டதை, அந்த கொலையில் இருந்து அதன் மூலம் அவரை காப்பாற்றியதை தான் சொல்கிறான் என்பது தெளிவாக புரிகிறது.

சில வசனங்களை எடுத்துக் காட்டி, இங்கே அல்லாஹ் தனது வல்லமை, ஞானத்தை குறித்து சொல்வது மட்டும் பொருந்துகிறதா? என்று சிலர் கேள்வியெழுப்புகின்றனர்.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பி னோம். 244 தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (14:4)

நற்செய்தியாகவும், உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் அமைதி பெற வேண்டும் என்பதற்காகவுமே இதை இறைவன் ஏற்படுத்தினான். உதவி அல்லாஹ்விடமிருந்தே உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.(8:10)
அது போல் பெண்களின் விவாகரத்து உரிமையை பேசும் 2:228 வசனம், திருட்டுக்கு கை வெட்டு என்று கூறும் 5:38 வசனம் ,

இவை அனைத்திலுமே அல்லாஹ்வின் வல்லமையைப் பேசுவது கச்சிதமாக பொருந்துகிறது.
பெண்க்களுக்கான, சட்டம்,தொழுகை சட்டம், குற்றவியல் சட்டம் போன்றவற்றை சொல்லி அல்லாஹ்வின் ஞானத்தையும் வல்லமையும் சொல்வது என்பது, இது போன்ற சட்டங்கள் இயற்றுவது தான் நன்மை என்பதை ஞானமிக்க அல்லாஹ் அறிவான் என்பது பொருள்.

இதை மீறினால் அல்லாஹ் உங்களை தண்டிக்க வல்லமைபெற்றவன் என்று பொருள்.

இதுவெல்லாம் பொருந்தக்கூடிய இடங்கள் தான். அதனால் தான் அல்லாஹ் வேறு சில வசனங்களில், இந்த வல்லமையும் ஞானமும் எதற்காக அல்லாஹ் குறிப்பிட்டுக் காட்டுகிறான் என்பதைக் கூட விளக்குகிறான்.

தெளிவான சான்றுகள் உங்களுக்கு வந்த பின் நீங்கள் தடம் புரண்டால் 'அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்!(2:209)

அதாவது, அல்லாஹ்விடமிருந்து வந்த நேர்வழியை விட்டும் நீங்கள் தடம்புரண்டால் அல்லாஹ் உங்களை தண்டிக்ககூடியவன், அவன் ஞானமுடையவன் என்று இப்போது தான் சொல்ல வேண்டும்.

அல்லாஹ்வின் ஆற்றல், வல்லமை எங்கே செயலாக்கமாகிறதோ அங்கே தான் அல்லாஹ் அதை சொல்வான்.

அவரது அந்தஸ்த்தை உயர்த்தினேன் என்பதில் வல்லமை செயலாக்கம் பெறவில்லை. இது தான் எமது வாதம்.

உயர்த்தினான் என்று பொதுவாக சொன்னாலும் உடலுடன் உயர்த்தினான் என்று தான் பொருள், அதை மறுப்பதற்கில்லை. ஆனால் எது வரை உடலுடன் உயர்த்தினான்? என்று ஒரு கேள்வி எழும்புகிறது.

அல்லாஹ் அவரை உடலுடன் உயர்த்தினான், எது வரை அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் வருவது வரை - இது அந்த கருத்தை முழுமையாக்குகிறது.
தன்னளவில் என்று அல்லாஹ் சொல்வது, தன்னிடம் என்கிற பொருளை தரும்.

வேறொரு வசனத்தில், அவரை அல்லாஹ் கைப்பற்றுபவனாகவும் , தன்னளவில் அவரை உயர்த்துபவனாகவும் இருக்கிறான் என்று அல்லாஹ் சொல்லும் இடத்திலும், தன்னை பொறுத்தவரை என்று பொருள் செய்தால் வார்த்தை அமைப்பே பொருளற்றதாகிறது. ஒவ்வொரு இடத்திலும், தன்னை பொறுத்தவரை அவர் சிறந்தவர் என்ற சொல்லிக்கொண்டே வர மாட்டான். அவரை கைப்பற்றக்கூடியவனாகவும் தன்னை பொறுத்தவரை அந்தஸ்தில் உயர்த்துபவராகவும்... என்கிற சொல்லமைப்பிற்கு பொருளில்லை.

இதை உறுதி செய்யும் விதமாக நான் வேறொரு வசனத்தை தருகிறேன் - 25 :46 வசனத்தில் சூரியனையும் அதன் ஓட்டங்களையும் தன்னளவில் அல்லாஹ் கைப்பற்றி விடுவதாக சொல்கிறான். ஈசா நபி பற்றி வரக்கூடிய வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்தும் அதே "இலைஹி " என்கிற வார்த்தையை தான் இங்கும் பயன்படுத்துகிறான் .

ஈசா நபி பற்றிய வசனத்தில் தன்னளவில் என்றால் தன்னை பொறுத்தவரை என்ற பொருள் செய்தது போல இங்கும் தன்னை பொறுத்தவரை என்று தான் பொருள் செய்வீர்களா? அல்லது தன் கட்டுப்பாட்டில் என்று பொருள் செய்வீர்களா?

ஆக, எந்த வகையில் ஆய்வு செய்யும் போதும், ஈஸா நபியை உடலுடன் தான் அல்லாஹ் உயர்த்தினான் என்பது தெளிவாகிறது.

ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதற்கான அடுத்த சான்றுகள் இன்ஷா அல்லாஹ் தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக