அவன் வட்டிக்கு பணம் வாங்குபவன் என்றால் அது அவனது பிரச்சினை.
அதற்காக அவனிடமிருந்து நோன்பு கஞ்சிக்கு பணம் வாங்கக்கூடாது என்று சொல்வதில் அர்த்தமில்லை.
ஒருவருக்கு இனாமாக வந்த இறைச்சி நபி (சல்) அவர்களிடம் கொடுக்கப்பட்ட போது அதை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். தான் தர்மமாக பெறுவது ஹராம் என்றாலும் இந்த பொருள் தமக்கு அன்பளிப்பு தான் என்றும், முதலில் வைத்திருந்தவருக்கு தான் அது தர்மம் என்றும் விளக்கமளிக்கிறார்கள். இது புஹாரியில் பதிவாகியிருக்கும் ஹதீஸ்.
வட்டியே தொழிலாக செய்து வந்து யூதரின் வீட்டில் நபியவர்கள் உணவு உண்டிருக்கிறார்கள்.
ஒருவரிடமிருந்து அன்பளிப்பு பெறுவதற்கு அவர் அதை எப்படி பெற்றார் என்று பார்க்க தேவையில்லை.
நாம் அதை ஹலாலான முறையில் பெறுகிறோமா என்பது மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள் 2:134
இதை மறுப்பதாக இருந்தால் வாழ்க்கையில் இவர்களால் செயல்படவே இயலாது என்று தான் சொல்ல முடியும்.
கடையில் சென்று பொருட்கள் வாங்குவதில் துவங்கி, ஹோட்டலில் சென்று உண்பதிலிருந்து, அரசின் சார்பில் அளிக்கப்படும் பல்வேறு உதவிகளை பெறுவது வரை அனைத்திலுமே வட்டி கலந்து தான் உள்ளது.
ஏன், சகாத், ஃபித்ரா போன்றவற்றை கூட நல்லவர், கெட்டவர் என்று தரம்பிருத்தே வசூல் செய்ய வேண்டும் என்கிற முடிவுக்கு வர வேண்டும்.
இவற்றில் எந்த அர்த்தமும் இல்லை, இஸ்லாம் அப்படி சொல்லவுமில்லை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக