வாதம்: இறை நேசர்களைப் பற்றி நபிகளார் அவர்கள் இறைவன் கூறுவதாக இவ்வாறு சொல்கிறார்கள்: அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன் என்று அல்லாஹ் கூறுகின்றான். இவ்வளவு சிறப்பு இருக்கும் அவ்வலியாக்களால் ஏன் பன்னிரண்டு வருடங்கள் தூங்காமல் இருக்க முடியாது?
நமது பதில்: நல்லடியார்களைப் பற்றி இவ்வாறு நபிகளார் கூறியிருப்பது உண்மை தான். இறைநேசர்கள் இறைவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பிடிக்கின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக ஆகிறார்கள் என்றால் என்ன பொருள்? அவர்கள் இறைவனாகவே ஆகி விடுகிறார்களா? அப்படியானால் ஏன் ஷாகுல் ஹமீத் இறந்தார். அவர் இறந்தார் என்றால் அல்லாஹ் இறந்து விட்டான் என்று அர்த்தமா? ஷாகுல் ஹமீத் அவர்களை அடக்கம் செய்தீர்களே? அவரை அடக்கம் செய்தீர்களா? அல்லது அல்லாஹ்வை அடக்கம் செய்தீர்களா? நாகூரில் இருக்கும் கப்ர், பக்தாதில் இருக்கும் கப்ர் எல்லாம் அல்லாஹ்வின் கப்ரா?
சாப்பிட மாட்டான் என்பது இறைவனிடம் உள்ள தன்மை, எனவே இறை நேசரும் சாப்பிட மாட்டார் என்றால் இறக்க மாட்டான் என்று தன்மையும், முதுமை அடைய மாட்டான் என்ற தன்மையும் ஏன் அவரிடம் இருக்கவில்லை?
அப்படியானால் இந்த ஹதீஸின் பொருள் என்ன? நீங்களும் சொல்ல வேண்டாம்! நாமும் சொல்ல வேண்டாம் அந்த ஹதீஸின் வாசகமே அதைத் தெளிவுபடுத்துகிறது.
எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்கல் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்து விடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6502)
அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன் என்ற இறுதி வாசகமே இதற்குப் பொருளாகும்.
கையாகி விடுவேன், காலாகி விடுவேன் என்றால் இறை நேசர்களின் கையாக அல்லாஹ் மாறி விடுவான் என்று பொருளல்ல.
அவ்லியாக்களிலேயே பெரிய அவ்லியா, நபி (ஸல்) அவர்கள் தாம். இறைநேசர்களின் கையாக, காலாக அல்லாஹ் மாறுவான் என்றால் நபி (ஸல்) அவர்களுக்குத் தான் முதலில் மாறியிருக்க வேண்டும். அப்படியானால் உஹுதுப் போரில் நபிகளாரின் பல் உடைக்கப்பட்டதே அது அல்லாஹ்வின் பல்லா? அவர்களுக்கு இரத்தக் காயம் ஏற்படுத்தினார்களே அதுவும் அல்லாஹ்வுக்கு ஏற்படுத்தப்பட்ட இரத்தக் காயமா?
இதன் உண்மையான பொருள் என்ன? பேச்சு வழக்கில் நாம் கூட சொல்வோம். இவர் எனது வலது கை என்போம். அப்படியானால் நம்முடைய வலது கையை வெட்டி விட்டு அவரைப் பொருத்திக் கொள்வோம் என்று பொருளா? இல்லை! நமது நெருக்கத்தைக் காட்டுவதற்குப் பயன்படும் சொற்களாகும்.
அவரின் வலது கையை வெட்டினாலும் அல்லது அவரைத் துண்டு துண்டாக வெட்டினாலும் எனக்கு ஒன்றும் செய்யாது. நான் வேறு, அவர் வேறு தான்.
இதைப் போன்று கணவன் மனைவியைச் சொல்லும் போது இரண்டறக் கலந்து விட்டார்கள் என்று சொல்வார்கள். இரண்டு நபர்களும் ஒரு நபராக மாறி விட்டார்கள் என்று பொருளா? அல்லது இவர் சாப்பிட்டால் மனைவிக்கு வயிறு நிரம்பி விடுமா? அல்லது இருவரும் நெருக்கமாக அன்பாக இருக்கிறார்கள் என்று பொருளா?
மற்ற மனிதர்களின் நெருக்கத்தை விட அவ்லியாக்களுக்கு இறைவனிடம் நெருக்கம் அதிகம். இது தான் அதற்குப் பொருள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)? என்று கேட்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனை உடல் நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை என்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.
மேலும் ஆதமின் மகனே! நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.
நூல்: முஸ்லிம் 5021
இந்த ஹதீஸில் பசியுடன் வருபவனுக்கு உணவளித்திருந்தால் அவனிடம் என்னை காண்பாய் என்று அல்லாஹ் கூறுகின்றானே! உங்கள் கருத்துப்படி பார்த்தால் பிச்சைக்காரன் அல்லாஹ்வாக மாறி விடுவான். அவனுக்கு ஏன் நீங்கள் தர்ஹா கட்டவில்லை.
இந்த ஹதீஸுக்கு இது தான் பொருளா? ஏழைக்கு உதவுதல் எனக்குப் பிடிக்கும் என்பதைத் தான் இவ்வாறு அல்லாஹ் கூறுகின்றான். ஏழைக்கு உணவளிப்பது அல்லாஹ்விற்கு உணவளிப்பதாக ஆகாது. என்றாலும் என் கட்டளையை மதித்து ஏழைக்கு நீ உணவளித்ததால் நீ எனக்கு உதவியதைப் போன்று நான் எடுத்துக் கொண்டு உனக்குக் கூலி வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுவதாக அர்த்தம்.
வஸ்ஸலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக