குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்ப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை. ஆனால் அதே சமயம் எடுத்து வளர்ப்பதால் தந்தை, மகன் என்ற உறவோ, வாரிசுரிமையோ ஏற்பட்டு விடாது. நாம் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறோம் என்றால் அந்தக் குழந்தையின் தந்தை பெயருக்குப் பதிலாக நம்முடைய பெயரைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை.
இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒருவர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தால் அக்குழந்தைக்கு அவர் தான் தந்தை என்று கருதும் வழக்கம் இருந்தது. வளர்ப்பு மகன் தன்னை எடுத்து வளர்த்தவருக்கு வாரிசாகி வந்தார். பின்பு இஸ்லாம் இதைத் தடை செய்து விட்டது.
குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்கும் அதே வேளையில் அக்குழந்தையின் தந்தை எவரோ அவர் தான் அக்குழந்தைக்குத் தந்தையாக எப்போதும் இருப்பார். வளர்ப்பவர் ஒருக்காலும் தந்தையாக முடியாது. வளர்க்கப்பட்டவர் வளர்த்தவருக்கு வாரிசாகவும் முடியாது என்று புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதைப் பின்வரும் வசனமும் ஹதீஸ்களும் தெளிவுபடுத்துகின்றன.
அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியா விட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் (33 : 5)
4000حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ أَبَا حُذَيْفَةَ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبَنَّى سَالِمًا وَأَنْكَحَهُ بِنْتَ أَخِيهِ هِنْدَ بِنْتَ الْوَلِيدِ بْنِ عُتْبَةَ وَهُوَ مَوْلًى لِامْرَأَةٍ مِنْ الْأَنْصَارِ كَمَا تَبَنَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْدًا وَكَانَ مَنْ تَبَنَّى رَجُلًا فِي الْجَاهِلِيَّةِ دَعَاهُ النَّاسُ إِلَيْهِ وَوَرِثَ مِنْ مِيرَاثِهِ حَتَّى أَنْزَلَ اللَّهُ تَعَالَى ادْعُوهُمْ لِآبَائِهِمْ رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அபூ ஹுதைஃபா (ரலி) அவர்கள் சாலிமைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்கள். அவருக்குத் தம் சகோதரரின் மகளான ஹிந்த் பின்த் வலீத் பின் உத்பாவைத் திருமணமும் செய்து வைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைதை வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போல (சாலிமை, அபூ ஹுதைஃபா -ரலி- அவர்கள் வளர்ப்பு மகனாக்கிக் கொண்டார்கள்.) மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை(யின் பெயர்)உடன் இணைத்து மக்கள் அழைப்பதும் அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) ஆக்கும் பழக்கமும் இருந்து வந்தது. "வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள்'' என்னும் (33:5) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்தப் பழக்கம் நீடித்தது.)
புகாரி (4000)
4782 حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ قَالَ حَدَّثَنِي سَالِمٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ زَيْدَ بْنَ حَارِثَةَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا كُنَّا نَدْعُوهُ إِلَّا زَيْدَ بْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَ الْقُرْآنُ ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ رواه البخاري
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
"வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்'' எனும் (33:5ஆவது) குர்ஆன் வசனம் அருளப்படும் வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை "ஸைத் பின் முஹம்மத்' (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.
புகாரி (4782)
வளர்ப்புக் குழந்தைக்கு வாரிசுரிமை ஏற்படாது. எனினும் ஒருவர் விரும்பினால் தனது வளர்ப்பு மகனுக்கு மரண சாசனம் (உயில்) மூலம் சொத்தை எழுதி வைக்கலாம்.
(பாகப் பிரிவினை என்பது) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே.
அல்குர்ஆன் 4:11
செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.)
அல்குர்ஆன் 4:12
பொதுவாக மரண சாசனம் செய்ய அனுமதி உள்ளதை இந்த வசனத்திலிருந்து அறியலாம். ஆயினும் இவ்வாறு செய்யும் மரண சாசனம் மூன்றில் ஒரு பகுதியைத் தாண்டக் கூடாது. மூன்று லட்சம் ரூபாய் சொத்துக்களை விட்டுச் செல்பவர் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்குத் தான் மரண சாசனம் செய்யும் உரிமை படைத்துள்ளார்.
ஒருவர் முழுச் சொத்துக்கும் மரண சாசனம் எழுதி வைத்தாலும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்குத் தான் அது செல்லும். எஞ்சியவை இஸ்லாம் கூறும் முறைப்படி வாரிசுகளுக்குப் பங்கிடப்பட வேண்டும்.
விடை பெறும் ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த என்னை விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்று விட்டிருந்தேன். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு செல்வந்தன். எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனை என்னை வந்தடைந்து விட்டது. ஆகவே நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். "அப்படியென்றால் அதில் பாதியைத் தர்மம் செய்து விடட்டுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "மூன்றில் ஒரு பங்கு! ஸஅதே! மூன்றில் ஒரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டு விட்டுச் செல்வதை விட தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கும் எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான். உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவள உணவாயினும் சரியே!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅத் (ரலி)
நூல்: புகாரி 3936, 4409, 5668, 6373
மேலும் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் பெண்கள் அக்குழந்தைக்குத் தாயாக முடியாது. அக்குழந்தை திருமணம் முடிக்க தடைசெய்யப்பட்ட நெருங்கிய உறவினராக முடியாது.
எனவே அக்குழந்தை பருவ வயதை அடைந்து விட்டால் ஒரு அந்நியரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் ஒழுங்கு முறைகளைக் கற்றுக் கொடுத்துள்ளதோ அந்த ஒழுங்கு முறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக தன்னால் வளர்க்கப்பட்டவருடன் தனியாக இருப்பது, பர்தா அணியாமல் அவருக்கு முன்னால் காட்சி தருவது போன்றவை கூடாது. அந்நிய ஆணுடைய அந்தஸ்த்தையே அவருக்குக் கொடுக்க வேண்டும்.
மேலும் அதிக விபரத்துக்கு பார்க்க
14.01.2011. 07:10
(onlinepj.com)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக