புதன், 5 ஜனவரி, 2011

பிறையை பார்த்து தான் மாதங்களை தீர்மானிக்க வேண்டும் - ஆதாரம் : 6



பிறையை ஒவ்வொரு மாதமும் பார்த்து தான் தீர்மானிக்க வேண்டும், கணக்கிட்டு முடிவு செய்யகூடாது

ஆதாரம் : 6


அஸ்ஸலாமு அலைக்கும்..

பிறையை கண்ணால் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும், முன்கூட்டியே கணக்கிட்டு முடிவு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தக்கூடிய
ஐந்து ஹதீஸ் ஆதாரங்களை இதுவரை பதிதிருந்தோம்.
முன்கூட்டியே கணக்கிட்டு, காலண்டர் அடித்து விநியோகம் செய்யும் கூட்டம், இவைகளுக்கு இன்று வரை எந்த மறுப்பையும் தரவில்லை என்பதையும், கணக்கிட்டு முடிவு செய்யலாம் என்பதற்கு தங்கள் தரப்பு ஆதாரம் எதையும் இன்று வரை சமர்ப்பிக்கவில்லை என்பதையும் நாம் அறிந்தோம். .

பிறையை பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரமாக நாம் மேலும் ஒரு ஹதீஸை இங்கு சமர்ப்பிக்கிறோம்..

சந்தேகத்திற்குரிய நாளில் (ஷாபான் 30 இல்) யார் நோன்பு வைக்கிறாரோ அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.
அறிவிப்பவர் : அம்மார் (ரலி)
நூல் : ஹாக்கிம்.


அதே போன்று, ரமளானுக்கு ஒன்று அல்லது இரண்டு தினங்களுக்கு முன்பு நோன்பு வைக்க தடை இருப்பதாக அபூஹுரைரா அறிவித்த ஹதீஸ் புஹாரியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதாவது "யவ்முஷ்ஷக்" என்று சொல்லப்படக்கூடிய சந்தேகத்திற்குரிய ஷாபான் மாத நாளில் நாம் நோன்பு வைக்ககூடாது.


இதன் மூலம் என்ன தெளிவாகிறது? ஒவ்வொரு மாதத்திற்கும் சந்தேகத்திற்குரிய நாள் என்று ஒன்று இருக்கிறது!
மாதத்திற்கு எப்போதுமே 29 நாட்கள் தான்! பிறை தெரியாவிட்டால் மட்டும் தான் 30 நாட்கள்!! அதாவது, 29 நாட்கள் முடிந்ததும் யவ்முஷ் ஷாக் ஆரம்பமாகி விடுகிறது! பிறை தெரிந்து விட்டால் முந்தைய மாதம் முடிந்து விட்டது. பிறை தெரியவில்லை என்றால் முடியவில்லை!
இந்த "இரு" நிலை எப்போது ஏற்படும்? ஒவ்வொரு மாதமும் 29 நாட்கள் முடிந்த பிறகு பிறை பார்க்க வேண்டும் என்ற கொள்கையை செயல்படுத்தி வந்தால் மட்டுமே ஏற்படும்!!

முன்கூட்டியே, 2012 இல் ஒவ்வொரு மாதத்திற்கும் எத்தனை நாட்கள் என்று காலண்டர் அடிக்கலாம் என்ற கொள்கையை கொண்டிருந்தால் அந்த கொள்கையின் படி, 2012 இல் சந்தேகத்திற்குரிய நாட்கள் என்று ஏதாவது இருக்குமா? முன் கூட்டியே கணிப்பவர்களுக்கு சந்தேகத்திற்குரிய நாளே இல்லையே! அவர்கள் தான் அனைத்தையுமே கணக்கிட்டு துல்லியமாக சொல்லி விட்டார்களே!!
அப்படியானால், ரசூல் (ஸல்) அவர்கள் கூறிய யவ்முஷ் ஷக் என்பது யாருக்கு பொருத்துகிறது? பிறையை ஒவ்வொரு மாதமும் 29 முடிந்ததும் பார்த்து முடிவு செய்பவர்களுக்கு தான் பொருத்துகிறது.
முன்கூட்டியே கணக்கிட்டு முடிவு செய்பவர்கள் இந்த ஹதீஸை புறக்கணித்தவர்கள் ஆவார்கள்.!

ஏற்கனவே நாம் அடுக்கிய ஐந்து ஆதாரங்களோடு சேர்த்து துணை ஆதாரமாக நாம் வைக்கும் ஆறாவது முக்கிய ஆதாரம் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக