வெள்ளி, 20 ஜூலை, 2012

பிறை - கேள்வி பதில்

அஸ்ஸலாமு அலைக்கும் 

பிறையை பார்க்க தேவையில்லை கணித்தால் போதும் என்கிற கொள்கையுடையவர்கள் சிலர் சமீபத்தில் என்னுடன்  செய்த தர்க்கத்தை அடிப்படையாக வைத்து வாதமும் மறுப்பும் என்கிற வகையில் இந்த ஆக்கம் தரப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


அவர்கள் வாதம் :

பிறை பார்ப்பது உலக விஷயம், மார்க்க விஷயமல்ல, ஆகவே உலக விஷயத்தை நாம் விரும்பியவாறு செய்யலாம்.நமது மறுப்பு:

எப்போதுமே மார்க்கத்தில் ஒன்றை உலக விஷயம் - மார்க்க விஷயம் என்று பிரிப்பதாக இருந்தால் அதில் இரண்டு அளவுகோலை கொண்டு பார்க்க வேண்டும்.

 • நபி (ஸல் அவர்கள் சொன்னது 
 • நபி (ஸல்) அவர்கள் செய்தது.

ஒரு காரியத்தை நபி அவர்கள் செய்யுமாறு சொல்லுகிறார்கள் இன்னொரு காரியத்தை வெறுமனே செய்ய மட்டும் செய்கிறார்கள் (சொல்லவில்லை) என்றால், எதை நபி அவர்கள் சொன்னார்களோ அதற்கு தான்  முக்கியத்துவம் தரப்பட வேண்டும். எதை அவர்கள் சொன்னார்களோ, அதை நாம் செய்வது கடமை, சுன்னத் என்கிற தரஜாவிற்கு எடுத்து செல்லும்.  எதை அவர்கள் சொல்லாமல் வெறுமனே செய்ய மட்டும் செய்தார்களோ அது மார்க்கம் சார்ந்த விஷயமாக இல்லாமல் உலகம் சார்ந்த விஷயமாக மட்டுமே இருக்கும்.
  
உதாரணமாக நபி அவர்கள் எப்போதும் பேரீத்தம் பழத்தை சாப்பிடக்கூடிய பழக்கமுள்ளவர்கள். எப்போதும் அவர்கள் அதை சாப்பிடுவதால் அது சுன்னத் ஆகி விடவில்லை அதே சமயம் நோன்பு திறக்கும் பொது  பேரீத்தம்பழத்தை கொண்டு திறங்கள் என்று அவர்கள் சொல்லியதன் காரணத்தால் அப்போது அதை சாப்பிடுவது மட்டும் மார்க்க விஷயமாகி விடுகிறது.  
சில மசாயில்களில், அவர்கள் செய்தது ஒன்றும் சொன்னது  வேறொன்றுமாக இருந்தால் அப்போது நாம் மார்க்கமாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவர்கள் சொன்னதை தான் !
நபி அவர்கள் நான்கு ரக்காத் தொழ வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள் அதற்கு மாற்றமாக மூன்றுடன் ஒரு சமயம் சலாம் விட்டு விடுகிறார்கள். அவர்கள் மூன்று ரக்காத் தொழுதது அவர்களது செயல் , நான்கு ரக்காத் தொழ வேண்டும் என்பது அவர்களது சொல்.
அவர்களது சொல்லும் செயலும் சில இடங்களில் வேறுபட்டால் சொல்லை தான் எடுக்க வேண்டும், அது தான் மார்க்கமாக கருதப்படும்.

பிறை பார்க்க வேண்டும் என்கிற கட்டளை நபியிடம் இருந்து கிடைத்த போது, அது மார்க்கமல்ல, உலக விஷயம் தான், அதை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொல்லும் நீங்கள், இதே அளவுகோலின் படி தான் அனைத்தையும் அலசுகிறீர்களா? என்றால் இல்லை. 

மாதத்தை தீர்மானிக்க எப்படி பிறை பார்க்க சொன்னார்களோ அதே போல தொழுகையை அறிவிக்க பாங்கு சொல்ல சொன்னார்கள்.
தொழுகை கடமையான ஆரம்ப காலத்தில் வரக்கூடிய ஒரு சம்பவத்தில், நபி அவர்கள் சஹாபாக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி தொழுகை நேரத்தை அறியவும் மக்களுக்கு அறிவிக்கவும் என்ன செய்யலாம் என்பதாக மஷூரா செய்கிறார்கள். ஒவ்வொரு சஹாபியும் ஒவ்வொரு விதமான முடிவை சொல்கிறார்கள். ஒரு சஹாபி, மலை உச்சியில் நின்று தீப்பந்தத்தை காட்டலாம், அதை பார்க்கும் ஊர் மக்கள் தொழுகைக்கான நேரம் ஆகி விடத்தை அறிந்து கொள்வார்கள் என்கிறார்கள். இன்னொரு சஹாபி, தெருக்களில் தம்பட்டம் அடிக்க சொல்லலாம், அதை கேட்டு மக்கள் தொழுகை நேரத்தை அறிந்து கொள்வார்கள் என்கிறார்கள். இப்படி ஆளுக்கொரு கருத்தை சொல்ல சொல்லி இறுதியாக ஒரு சஹாபி சொன்ன இந்த "அல்லாஹு அக்பர்" முழக்கத்தையே நபி அவர்கள் உறுதி செய்கிறார்கள் என்பது வரலாறு ! ஆக, பாங்கிற்கான நோக்கம் என்ன என்பது தெளிவு. தொழுகையின் நேரத்தை அறிய !
ஆனால், இன்றைக்கு பாங்கை கேட்டு தான் நாம் தொழுகை நேரத்தை அறிகிற நிலையில் இருக்கிறோமா? என்றால் இல்லை. பாங்கே சொல்லப்படவில்லை என்றாலும் நாம் கடிகாரத்தை பார்த்து தொழுது கொள்கிறோம்.
பிறை விஷயமாக, அது உலக விஷயம், அன்றைக்கு வேறு சாத்தியக்கூறுகள் இல்லை , இப்போது அது தேவையில்லை என்று வாதம் வைப்பவர்கள் , தங்கள் வாதத்தில் உண்மையாளர்கள் என்றால், அதே அளவுகோலின் படி பாங்கும் தேவையில்லை என்று தானே சொல் வேண்டும்? அதில் மட்டும், நபி என்ன சொன்னார்களோ அதை செய்ய வேண்டும் என்று கூறுவது முரண்பாடல்லவா?

ஆக, நபி (ஸல்) அவர்கள் ஒன்றை இப்படி செய்யுங்கள் என்று சொல்லி விட்டால் அதை அப்படி தான் செய்ய வேண்டும். நமது விருப்பத்திற்கு விட வேண்டிய காரியம் என்று இருக்குமானால் அது நபிக்கு தெரியும், அதை அதற்கு ஏற்ற வாசகங்களுடன் சொல்லியிருப்பார்கள் , இவ்வாறு செய்யுங்கள் என்று நேரடியாக கட்டளையிட்டிருக்க மாட்டார்கள். எதில் நமது விருப்பப்படி செய்ய இடம் இருக்கிறது என்று அவர்கள் கருதுவார்களோ, அதில் நேரடி கட்டளையாக இல்லாமல் மறைமுக வார்த்தைகளை கொண்டு அவர்கள் பேசியிருப்பார்கள், அந்த வார்த்தையில் இருந்தே, அந்த காரியத்தை நபி செய்த முறையில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை, நாமாக மாற்றியும் செய்யலாம் என்கிற விளக்கத்தை எடுக்க முடியும்.  இதற்கு உதாரணமாக, தொழுகை நேரத்தை கணக்கிடுவதை சொல்லலாம்.

இதை விளக்கமாக, இவர்களது அடுத்த வாதத்திற்கான பதிலில் காணலாம்.


அவர்களது வாதம் :

சூரியனும் சந்திரனும் ஒரே மாதிரியான அளவுகோல் கொண்டு தானே குர் ஆனில் அல்லாஹ் சொல்கிறான், இரண்டுமே காலம் காட்டும் என்று, அப்படியானால், பிறையை நீங்கள் கணிக்காமல் பார்த்து முடிவு செய்வதை போல சூரியனையும் அதே போல தானே செய்ய வேண்டும்? சூரியனை மட்டும் கணிப்பது முரண்பாடில்லையா?நமது பதில்:

தொழுகை நேரத்தை பொறுத்தவரை, அதை எப்படி அறிவது என்பது மார்க்கம் சார்ந்த விஷயமல்ல.  அது மார்க்கம் சார்ந்த விஷயமல்ல என்பதால் தான், அது குறித்து பேசும் போது நபி அவர்கள் நேரடி கட்டளையாக, இப்படி செய்யுங்கள் என்று சொல்லாமல், மறைமுகமாக எப்படியும் செய்யலாம் என்று விளங்கும் வகையில், சூரியன் மறைந்தால் மக்ரிப் தொழுங்கள், உங்கள் நிழல் இந்த அளவிற்கு வந்தால் இதை தொழுங்கள் என்று சொல்வார்கள்.

சூரியன் மறைந்தால் மக்ரிப் தொழுங்கள் என்று சொல்வதற்கும் சூரியன் மறைந்ததை பார்த்தால் மக்ரிப் தொழுங்கள் என்று சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது. சூரியன் மறைந்ததை பார்த்தால் மக்ரிப் தொழுங்கள் என்று அவர்கள் சொல்லியிருந்தால், சூரியன் மறைந்ததை கண்ணால் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும் என்று பொருளாகும். அப்படி இருந்தால் சூரியனை கூட கணிக்க கூடாது, ஒவ்வொரு வக்து தொழுகைக்கும் சூரியனை கண்ணால் கண்டு, அல்லது நிழலின் அளவை கண்ணால் கண்டு தான் தொழ வேண்டும் என்று தான் நாமும் சொல்லியிருப்போம். 
ஆனால், ஹதீஸின் வாசகமே, நாம் சூரியன் விஷயமாக எந்த வகையிலும் முடிவு செய்து கொள்ளலாம் என்று அனுமதிப்பதாகவே அமைந்துள்ளது. இந்த வாசக அமைப்பு பிறை விஷயமாக இருக்கிறதா என்றால் இல்லை.

பிறை விஷயமாக நபி அவர்கள் , சூரியன் பற்றி சொன்னது போல, பிறை தோன்றினால் நோன்பு வையுங்கள் என்றோ , பிறை வானத்தில் உதித்தால் நோன்பு விடுங்கள் என்றோ சொல்லவில்லலை, மாறாக, பிறையை நீ பார்த்தால் நோன்பு வை என்று சொல்கிறார்கள்.
ஆக, சூரியன் விஷயமாகவும் பிறை விஷயமாகவும் ஒரே மாதிரியான கட்டளையை நபி அவர்களே இடவில்லை, இது முதல் விஷயம் !

அடுத்து, தஜ்ஜால் குறித்து வரக்கூடிய இன்னொரு அறிவிப்பிலும் தஜ்ஜால் வரும் போது ஒரு நாள் இங்குள்ள ஒரு வருடம் போன்று இருக்கம் என்று நபி கூறும் போது, அப்போது நாம் எப்படி தொழ வேண்டும் என்று சஹாபாக்கள் கேட்கிறார்கள். நீங்கள் கணித்து கொள்ளுங்கள் என்று நபி தரும் அனுமதியில் இருந்து, சூரியன் விஷயமாக கணிப்பதற்கு நேரடி அனுமதியும் தந்து விடுகிறார்கள்.

செயல் முறையிலும் கூட, மதீனாவில் ஆறு நாட்கள் சூரியனே தெரியாத அளவிற்கு பெரும் மழை பெய்த காலத்தில் அவர்கள் கணித்து தொழுததாக ஆதாரமும் உள்ளன.

ஆக, சூரியன் விஷயமாக நபி (ஸல்) அவர்கள் பேசும் போது அதை பார்த்து முடிவு செய்யுமாறு அவர்கள் சொல்லவும் இல்லை, அவர்கள் அப்படி சில நேரங்களில் செய்யவும் இல்லை. 
சூரியன் தெரியாத காரணத்தால் மக்ரிப் தொழ வேண்டாம், அசர் நேரமே நீடிக்கிறது என்று அவர்கள் சொல்லவில்லை, பிறைக்கோ, 29 அன்று பிறை தெரியா விட்டால் முந்தைய மாதமே நீடிக்கிறது என்று, சூரியன் விஷயமாக அவர்கள் சொன்னதற்கும் செய்ததற்கும் மாற்றமாகவே அறிவிக்கிறார்கள் எனும் போது பிறையை கண்ணால் பார்க்க தான் வேண்டும், சூரியனை கண்ணால் பார்க்க தேவையில்லை என்கிற வேறுபாடு தெளிவாக விளங்குகிறது.அவர்கள் வாதம் :

பிறையை அல்லாஹ் காலம் காட்டி என்றல்லவா சொல்கிறான், முன்கூட்டியே கணித்தால் தானே காலம் காட்டும்?நமது பதில் :

இதுவும் ஒரு அறியாமை கேள்வி. பிறை காலம் காட்டும் என்கிற இறை வசனம், ஏதோ இந்த நூற்றாண்டில் இறங்கிய, இந்த நூற்றாண்டுக்கு மட்டும் தரப்பட்ட இறை வசனம் என்பது போல இருக்கிறது இந்த கேள்வி.
இறை வசனம் என்பது எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒன்று. இந்த வசனம் இறங்கிய காலத்தில் இந்த வசனத்திற்கு என்ன பொருளோ அந்த பொருள் தான் கியாமத் நாள் வரையிலும் ! இவர்கள் கூறுவது போல, பிறையை கணித்தால் தான் அது காலம் காட்டும், கண்ணால் பார்த்தால் அது காலம் காட்டாது என்றால், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யாருக்கும் அது காலம் காட்டவில்லையா? இன்றைக்கு உங்களுக்கு மட்டும் தான் அது காலம் காட்டுகிறது என்றால் அல்லாஹ்வின் தூதருக்கு பிறை காலம் காட்டவில்லையே? இதற்கு என்ன பதில்?

காலம் காட்டி, என்று அல்லாஹ் சொல்வது ஒரு பொதுவான சொல். கணித்து முடிவு செய்தால் அப்போதும் காலம் காட்டும், ஒவ்வொரு மாதமும் கண்ணால் பார்த்து முடிவு செய்தால் அப்போதும் காலம் காட்ட தான் செய்யும். கணித்து முடிவு செய்யும் நீங்கள் இன்றைக்கு எந்த மாதம், எந்த நாள் என்று சொல்வது போல, பார்த்து முடிவு செய்யும் நானும் இன்றைக்கு எந்த மாதம், எந்த தேதி என்பதை சொல்ல தான் செய்கிறேன் எனும் போது, கணிப்பது மட்டும் தான் காலம் காட்டும் என்கிற வாதம் தவறு.
அவர்கள் வாதம் :

ஒரு வசனம் இறங்கிய போது என்ன பொருளோ அதே பொருள் தான் கியாமத் நாள் வரையிலும், என்கிற வாதம் தவறு. பிர்அவனின் உடலை அல்லாஹ் பாதுகாப்பான் என்கிறான், பெண்ணின் கருவறை குறித்து அல்லாஹ் பேசுகிறான், விஞ்ஞானத்தை பற்றி பேசுகிறான், இதுவெல்லாம் அந்த கால மக்களுக்கு புரியுமா? இன்றைய காலகட்டத்தில் தான் புரியும்..நமது பதில்:

என்ன வாதத்தை நான் வைக்கிறேனோ அதை சரியாக புரிந்து மறுப்பு சொல்ல வேண்டும். ஒரு இறை வசனம் இறங்கிய காலத்தில் என்ன பொருளை தருகிறதோ அதே பொருள் தான் கியாமத் வரையிலும், என்று நான் கூறிய கருத்துக்கும் மேலே நீங்கள் சுட்டிக்காட்டும் பிர் அவன், கருவறை உதாரணங்களுக்கும் என்ன சம்மந்தம்? கருவறை குறித்து அந்த கால மக்களுக்கு புரியாது தான், இப்போது தான் அவர்களை விட அதிகம் விளங்க முடியும். சரி தான். அந்த கால மக்களுக்கு விளங்காது என்பதால் அந்த வசனத்தின் பொருள் மாறி போய் விட்டதா? அவர்களுக்கு விளங்காது என்றாலும் பிர்அவனின் உடல் பாதுகாக்கப்படும் என்றால் பாதுகாக்கப்படும் தான்.
அவர்களுக்கு விளங்காது என்றாலும் சூரியன் தன் சுற்றுப்பாதையில் நீந்தும் என்றால் நீந்தும் தான் !
அந்த வார்த்தைக்கு அது தான் அர்த்தம் என்றாலும் அந்த அர்த்தத்தை புரியாமல் வேணடுமானால் அந்த கால மக்கள் இருந்திருக்கலாம். ஒரு வசனத்திற்கான பொருளை ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் பல விதமாக தான் புரிவார்கள் என்றாலும், அது சொல்லும் அர்த்தம் ஏதேனும் ஒன்று தான், அது அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ஒன்று தான் !அவர்கள் வாதம் :

குறைப் அறிவிக்கும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்களுக்கு தொடர்பில்லை. இரண்டு சஹாபிகளின் சுய கருத்துக்கள் தான் அவை.
நமது மறுப்பு :

சஹாபிகளின் சுய கருத்து என்று நீங்கள் சொல்வது தான் உங்களது சுய கருத்து. முஆவியா பார்த்தது எங்களுக்கு பொருந்தாது, நாங்கள் சனிக்கிழமை (முஆவியா பார்த்ததற்கு ஒரு நாள் கழித்து)  பிறை பார்த்த காரணத்தால், நாங்கள் மறு பிறையை பார்ப்போம் அல்லது முப்பதாக பூர்த்தி செய்வோம், இப்படி தான் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று சொன்னால், இது எப்படி சஹாபியின் சுய கருத்தாகும்??

வெறுமனே சொல்வதற்கும் இப்படி தான் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று சேர்த்து சொல்வதற்கும் வேறுபாடு இல்லையா? அப்படியானால் இரண்டுக்கும் என்ன வேறுபாட்டை நீங்கள் சொல்கிறீர்கள்? நபியின் பெயரை பயன்படுத்தாமல் யாராவது சொல்லியிருந்தால் அது அவர்களது சுய கருத்து என்போம். இங்கே நபியின் பெயரை பயன்படுத்தியல்லவா சொல்கிறார்கள்? அப்போதும் சுய கருத்து தான் என்றால் இங்கே வறட்டு வாதம் புரிவது யார் என்பது தெளிவாகி விட்டதே..
இன்னார் சொன்னார், எனக்கு இன்னார் சொன்னார், அவருக்கு இவர் சொன்னார் என்று சங்கிலி தொடராக தானே எல்லா ஹதீசும் நமக்கு கிடைத்துள்ளது. யாரும் நேரடியாக நம்மிடம் தொலைபேசியில் அழைத்து ஹதீஸை சொல்லவில்லையே  ,.. அப்படி இருக்கும் போது, உங்கள் வாதத்தின் படி எந்த ஹதீசையும் ஏற்க முடியாதே !
மேலும், மார்க்க சட்டங்களாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அனேக ஹதீஸ்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள், இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் என பெரும்பான்மையான ஹதீஸ்கள் நபியின் மரணத்திற்கு பின்னர் தான் அறிவிக்கப்படுகின்றன. நபியின் பங்கு வேண்டும் என்றால் ஹதீஸ்களில் அதிகமான அளவை நிராகரிக்க தான் வேண்டும்.அவர்கள் வாதம் :

குறைப் அவர்கள் பிறை தகவலை சொல்வது ரமளானின் இறுதியில். அப்போது அந்த பிறை தகவலை ஏற்றுக்கொண்டால் மதினாவில் ஏற்கனவே முடிவு செய்த விஷயத்தில் குழப்பம் வந்து விடும். ஆகவே தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அதை மறுக்கிறார்கள்.நமது பதில்:

சுய கருத்தை நாம் சொல்வதாக சொல்லி விட்டு இப்போது சுய கருத்தை யார் சொல்கிறார்கள்? பிறை தகவலை ஒரு சஹாபி கொண்டு வருகிறார்கள், அதை இன்னொரு சஹாபி ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தோடு அந்த ஹதீஸ் முடிந்திருந்தால் நாமாக பல காரணங்களை சிந்திக்கலாம். ஆனால் அதை  ஏற்காததற்கு ஒரு காரணத்தையும் சேர்த்தே சொல்லி விட்டால் அதன் பிறகு நாமாக வேறு காரணங்களை அறிய வேண்டிய தேவை இருக்கிறதா? இல்லையே..

ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள், இனி மாற்றினால் குழப்பம் ஏற்ப்படும் என்பது தான் சரியான காரணம் என்றால் அதை இந்த இடத்தில் இப்னு அப்பாஸ் அவர்கள் சொல்லியிருக்க வேண்டுமே.. நாங்கள் வெள்ளிக்கிழமை பார்த்தோம் என்று குறைப் அவர்கள் கூறும் போது , அப்படியா, அப்போது நாங்கள் தான் தவறாக சனிக்கிழமை வைத்து விட்டோமா ?, தவறு செய்து விட்டோமே, இருப்பினும் இப்போது சரி செய்தால் குழப்பம் ஏற்படும் ஆகவே வேண்டாம், என்றல்லவா அவர்கள் கூறியிருக்க வேண்டும்?

இந்த இடத்தில் சொல்லவில்லை, சரி. தொடர்ந்து குறைப் அவர்கள் , ஏன்? முஆவியா பார்த்ததை நீங்கள் ஏற்க மாட்டீர்களா? என்று விடாமல் மீண்டும் கேட்கிறார்களே, அப்போதாவது, "ஏற்கலாம் தன், ஆனால் குழப்பம் ஏற்பட்டு விடுமே", என்று அவர்கள் பதில் சொல்லியிருக்கலாமே? சொன்னார்களா? இல்லையே ! குழப்பம் ஏற்படும் என்பது தான் காரணம் என்றிருந்தால், அதை தெளிவாக சொல்ல வேண்டிய இடமல்லவா இது?


சரி அதையும் சொல்லவில்லை என்பதால் வேறு எதையுமே பேசாமலா இருந்தார்கள் இப்னு அப்பாஸ் அவர்கள்? முஆவியா வெள்ளிக்கிழமை தான் பிறை பார்த்தார் என்பது உறுதியாக தெரிந்தும் கூட, மதினாவில் தாம் பார்த்தது சனிக்கிழமை தான் என்பதும் உறுதியான ஒன்றும் என்றாலும் கூட, நாங்கள் அந்த பிறை தகவல் ஏற்க மாட்டோம், மறுபிறையை நாங்கள் பார்ப்போம், நபி அவர்கள் இப்படி தான் செய்ய சொல்லியிருக்கிறார்கள் என்று பதில் சொல்லியுள்ளார்கள் எனும் போது காரணம் தெளிவாக விளங்குகிறதே.. நீங்கள் சொல்லும் காரணம் தான் உண்மை என்றால் அதை ஒரே வார்த்தையில் அவர்கள் சொல்லியிருப்பார்களே..

சரி அது போகட்டும்.. உங்கள் கொள்கை என்ன? பிறையை கணிக்க வேண்டும் என்பது. கணித்து முடிவு செய்வது தான் சரியான நாள்காட்டி.கணிக்காமல் பார்த்து முடிவு செய்தால் ஒரு பிறையோ இரண்டு பிறையோ நாம் தவற விடுவோம், அது தவறு என்றாலும் அந்த காலத்தில் கணிப்பதற்கு சாத்தியமில்லை என்பதால் அப்படி செய்தார்கள் - இது தானே உங்கள் கொள்கை..

அப்படியானால், இப்னு அப்பாஸ் அவர்கள் சனிக்கிழமை மாதத்தை துவக்கியது கணிப்பு கொள்கையின் படி தவறு, வெள்ளியன்று சிரியாவில் பார்க்கப்பட்ட பிறை தான் சரி என்றால், இங்கே உங்கள் கருத்துப்படியான சரியான கொள்கை எது என்பதை இப்னு அப்பாசுக்கு இன்னொரு சஹாபி அறிவித்தும் கொடுத்து விடுகிறாரே..

சரியாக கணிக்க முடியாது ஆகவே பார்த்து முடிவு செய்வது தவறில்லை என்றால், இங்கு சரியாக கணித தகவல் அவர்களுக்கு எட்டியும் விட்டதே ! சரியான கொள்கை எது என்பது அறியாமல் இருப்பது வரை தானே தவறாக செய்ய அனுமதி?? மார்க்கத்தின் பொது விதியும் இது தானே? இங்கே இப்னு அப்பாஸ் அவர்கள் செய்தது தவறு, முஆவியா செய்தது தான் சரி என்று சொல்லபப்ட்டு விட்ட பிறகு, ஊரில் குழப்பம் ஏற்ப்படும் என்கிற காரணம் பொருந்துமா?

ஊரில் குழப்பம் ஏற்ப்படுவது, மார்க்கத்தை சரியாக பின்பற்றுவதை விடவும் பெரிதா? எதை தவறாக செய்தார்களோ அதை சரி செய்ய அப்போது வாய்ப்பும் இருந்ததே, சரி, ரமலானை துவங்கியதை தான் தவறாக செய்து விட்டோம், இப்போது சரியாக என்றைக்கு பிறை தெரிந்தது என்கிற தகவலும் நமக்கு கிடைத்து விட்டது, ஷவ்வாலையாவது சரியாக வைப்போம், குழப்பம் ஏற்பட்டால் பரவாயில்லை, என்று அந்த பிறை தகவலின் படி அவர்களது நிலையை மாற்றுவது தானே உங்கள் கருத்துப்படியும் சரியாக இருக்கும்?

உங்கள் கருத்துப்படி இப்னு அப்பாஸ் அவர்கள் சனியன்று பிறை பார்த்தது தவறு . தவறை சரி செய்ய கால அவகாசமும் இருக்கிறது. இருப்பினும், மக்களிடையே குழப்பம் ஏற்படும் என்பதால் சரி செய்யாமல் இருந்தார்கள் என்று சொல்வது சஹாபாக்களை கண்ணியப்படுதுகிறதா இழிவுப்படுதுகிறதா?
மார்க்கதிற்க்காக தங்கள் உயிரையே விட துணிந்த அந்த சஹாபாக்கள், இந்த விஷயத்தில் ஊரில் ஏற்படும் குழப்பத்தை முன்னிறுதியிருப்பார்களா ? என்று சிந்தித்தாலும் நீங்கள் சொல்லும் காரணம் இங்கு பொருந்தாமல் இருப்பதை அறியலாம்.அவர்கள் வாதம் :

பிறை பார்த்து முடிவு செய்யுங்கள் என்று வரக்கூடிய ஹதீஸில் பார்த்தல் என்பதற்கு கணித்தல் என்கிற பொருளும் உண்டு. ஆகவே கணிப்பதற்கு இந்த ஹதீஸின் படியே அனுமதி உள்ளது.நமது வாதம் :

ஒரு வார்த்தைக்கு பல பொருள் இருக்க தான் செய்யும். துப்பாக்கி என்கிற வார்த்தை திருக்குறளில் கூட வரத்தான் செய்கிறது. அங்கே அதற்கு தோட்டாவை போட்டு ஆளை காலி செய்யும் ஒரு சாதனம் என்று பொருள் கொடுப்போமா? மாட்டோம். வார்த்தைக்கு அந்த பொருள் இருந்தாலும் அந்த இடத்தில் எது பொருந்துமோ அதை தான் கொடுக்க வேண்டும்.

அந்த ஹதீஸில் வரக்கூடிய ரயல் ஐன் என்கிற வார்த்தைக்கு மூன்று விதமான அர்த்தங்கள் உள்ளன. 

 • பார்த்தல் 
 • சிந்தித்தல்
 • கணித்தல்


இந்த மூன்றில் எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய பொருளான முதல் அர்த்தத்தை நான் வைக்கிறேன். இது, அந்த ஹதீஸ் இறங்கிய அந்த காலத்திற்கும் பொருந்தியது, எல்லா காலத்திற்கும் பொருந்தி போகும். நீங்கள் கொடுக்கும் அர்த்தமோ அந்த காலத்திற்கு பொருந்தாமல் இந்த காலத்தில் மட்டும் பொருந்தக்கூடியது. இப்படி மார்க்கத்தில் எந்த சட்டமும் இருக்காது, மார்க்க சட்டம் அனைவருக்கும் பொதுவாக தான் இருக்கும். இது முதல் விஷயம்.

அடுத்து, ஒரு வார்த்தைக்கு முதலில் நேரடியான அர்த்தம் எதுவோ அதை தான் முதலில் பொருத்த வேண்டும். நேரடி அர்த்தம் எங்கே பொருந்தாமல் போகிறதோ அப்போது தான் அடுத்த அர்த்தங்களுக்கு செல்ல வேண்டும்.

அன்னம் என்கிற வார்த்தைக்கு சோறு என்கிற பொருளும் உண்டு, அன்னப்பறவையையும் அன்னம் என்பார்கள். இப்போது ஒருவரை நோக்கி அவர் அன்ன நடை நடந்தார் என்று சொன்னால், இங்கே சோறு போல நடந்தார் என்று பொருள் கொள்ள மாட்டோம். சோறு என்கிற பொருளும் அந்த வார்த்தைக்கு இருக்கத்தான் செய்கிறது என்றாலும் சோறு போல ஒருவனால் நடக்க முடியாது என்பதால் சோறு என்கிற பொருள் இங்கே பொருந்தாது, வேறு பொருளை தேடு என்கிற முடிவுக்கு வருவோம்.

அதே போல, பிறையை பார்த்து முடிவு செய் என்று சொன்னால் பார்த்து முடிவு செய்யும் முறை இங்கு பொருந்துமா பொருந்தாதா என்று முதலில் சிந்தித்து ,அது பொருந்தாமல் போகும் பட்சத்தில் வேறு அர்த்தத்தை தேட வேண்டும்.  பார்த்து முடிவு செய்யும் முறை பொருந்தத்தான் செய்யும் எனும் போது அங்கே அந்த பொருளை தான் வைக்க வேண்டும்.
மூசா நபி இறைவனை பார்க்க வேண்டும் என்று கேட்டதாக வரக்கூடிய வசனத்திலும் இதே ஐன் என்கிற வார்த்தை தான் வருகிறது. இங்கே கணித்தல், சிந்தித்தல் என்று அவர்களும் கூட பொருள் கொள்ள மாட்டார்கள்.


சரி, இதுவும் போகட்டும், அந்த வார்த்தைக்கு பார்த்தல் என்பது போல கணித்தல் என்கிற பொருளும் இருக்க தான் செய்கிறது, ஆகவே கணிப்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரம் என்றால், அதே வார்த்தைக்கு சிந்தித்து முடிவு செய்தல் என்கிற பொருளும் கூட இருக்க தானே செய்கிறது?

கணித்தல் என்கிற பொருள் இருப்பதை வைத்து கணிக்க இது ஆதாரம் என்றால் சுயமாக சிந்திக்கலாம் என்கிற பொருளும் இதற்கு இருப்பதால் நான் சுயமாக சிந்திப்பேன் , அதற்கு இந்த ஹதீஸ் ஆதாரம் என்றும் கூட ஒருவன் வாதம் வைக்கலாமே..  
ஆகவே இவை அனைத்துமே வறட்டு வாதம் தானே தவிர இவற்றில் எந்த அறிவுமில்லை.அவர்கள் வாதம் :

நாம் உம்மி சமுதாயம், நமக்கு எழுதவும் தெரியாது, வானியலும் தெரியாது என்று நபி சொல்லியதில் இருந்து, வானியல் தெரிந்தால்  கணிக்கலாம் என்கிற அனுமதி இங்கு உள்ளது என்று தான் பொருள்.நமது பதில் :

இதுவும் மேலே உள்ள வாதத்தை போன்றது தான். ஒரு வார்த்தை , அது அருளப்பட்ட காலத்தில் என்ன பொருளில் கையாளப்பட்டதோ அதை தான் எப்போதும் பின்பற்ற வேண்டும். ஹிஸாப் என்கிற வார்த்தை ஏதோ இவர்கள் சுட்டிக்காட்டும் அந்த ஒரு ஹதீஸில் மட்டும் வரவில்லை.
குர் ஆனில் மட்டும் ஏறத்தாழ நாற்பது இடங்களில் இதே வார்த்தை வருகிறது.. எந்த ஒரு இடத்திலாவது வானியல் என்கிற பொருளில் அது பயன்படுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. சில இடங்களில் சிந்தித்தல் என்றும், சில இடங்களில் கணக்கிடுதல் என்றும் பொருள் கொள்ளப்படுகின்றன.

வானியல் என்பது இந்த இடத்தில் பொருந்தவும் செய்யாது. வானியலை தெரியாமல் இருப்பது ஒரு சமுதாயத்தை உம்மி சமுதாயம் ஆக்காது. படித்த பட்டதாரிகள் பலருக்கு கூட வானியல் தெரியாது. இங்கே அந்த வார்த்தைக்கான நேரடி அர்த்தமான கணக்கிடுதல் என்கிற அர்த்தத்தில் தான் இதை புரிய வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்களின் அடுத்த அறிவிப்பே உணர்த்தி விடுகிறது. தொடர்ந்து பேசும் போது மாதம் என்பது 29 நாட்கள் என்று வெறுமனே சொல்லாமல் இரண்டு கைகளை விரித்து காட்டி, ஒரு பத்து, பின்னர் மீண்டும் விரித்து காட்டி இன்னொரு பத்து, பின்னர் ஒரு விரலை மடக்கி மீண்டும் விரித்து காட்டி ஒன்பது என்று சைகை மூலம் கட்டுகிறார்கள் எனும் போது, இங்கு உம்மி சமுதாயம் என்று அவர்கள் சொன்னதற்க்கான விளக்கம் நமக்கு கிடைக்கிறது.

உம்மி சமுதாயம் என்றால் அவர்களுக்கு எழுத தெரியாது, எழுதியதை வாசிக்க தெரியாது, கணக்கும் தெரியாது. 

கணக்கும் தெரியாது என்றால் விரலை மட்டும் ஏன் காட்ட வேண்டும் என்று கேள்வி எழலாம். 

கணக்கு தெரியாது என்றால், 29 என்று சொன்னால் அது எவ்வளவு என்று தெரியாது, ஆகவே இது தன் 29 என்று விளக்குகிறார்கள். 
29 என்று மொட்டையாக சொன்னால், அது எத்தனை எண்ணிக்கை, அதற்கு முன் 28 அதற்கு பின் முப்பது என்றெல்லாம் அவர்களுக்கு தெரியாது, ஒன்று ஒன்று என்று கூறி 29 ஒன்றுக்களை எழுதி காட்டினால் அதை கூட்டி 29 என்று சொல்ல தெரியும் என்பது இதன் பொருள்.
இதனால் தான் அவர்கள் உம்மி சமுதாயம்.
இன்றைக்கு கூட சிலருக்கு ஒரு லட்சத்திற்கு எத்தனை சைபர் என்று கேட்டால் தெரியாது.. அவர்களிடம் ஒரு லட்சம் 'ஒன்றை' எழுதி காட்டி இதை கூட்டி எத்தனை என்று சொல் என்று கேட்டால் ஒரு லட்சம் என்று சொல்லி விடுவான். இதே போன்றது தான் மேலே உள்ள சம்பவத்தில் நபி அவர்கள் சொல்லும் உம்மி சமுதாயம் என்பதற்கான விளக்கமும். 


அவர்கள் வாதம் :

தமிழகம் முழுவதும் ஒரே பெருநாள் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்ததற்கு என்ன ஆதாரம்? தமிழகம் என்ற எல்லையை எந்த ஹதீஸின் அடிப்படையில் வகுத்தீர்கள்? 


நமது பதில் :


பிறையை கண்ணால் பார்க்க வேண்டுமா அல்லது கணித்தால் போதுமா என்கிற விஷயத்திலேயே தெளிவு கிடைக்காத போது, எல்லையை பற்றி பேசி பயனில்லை.  இறைவனை மறுக்க கூடிய கூட்டத்தார் நம்மை நோக்கி, அல்லாஹ் கடவுளா இயேசு கடவுளா, உங்கள் பதில் என்ன என்று கேட்டால், அதற்கு நாம் அவர்களிடம் சொல்லும் அறிவார்ந்த பதில், யாரோ கடவுளாக இருக்கட்டும், முதலில் கடவுள் உண்டா இல்லையா என்பதை பேசி முடிப்போம். கடவுள் உண்டு என்கிற நிலைக்கு நீங்களும் வரும் போது எந்த கடவுளை ஏற்றுக்கொள்வது என்பது பற்றி பேசலாம் என்பது தான்.

மேலும், எல்லையை பற்றி மார்க்கம் சொல்லவில்லை. நாமாக தீர்மானிக்கும் நிலையில் மார்க்கமே நம்மை விட்டு விட்டது, எதில் நம்மிடம் முழு சுதந்திரம் உள்ளதோ, அதில் கேள்வி கேட்பதில் எந்த அறிவும் இல்லை.

மேலும் எல்லையை மார்க்கம் சொல்லவில்லை என்பதால் கணிக்கலாம் என்கிற வாதமும் அர்த்தமில்லாதது. அத்தகைய அர்த்தமற்ற வாதத்தை வைக்கத்தான் இது போன்ற கேள்வுயை கேட்கிறீர்கள் என்றால், எல்லையை தீர்மானிக்க எப்படி ஆதாரமில்லையோ அதே போல கணிக்கவும் ஆதாரமில்லை என்று சொல்லி விடலாம்.

கணிக்க கூடாது, நபி வாழ்ந்த காலத்திலேயே ஒரு ஊரில் ஒரு நாளும் இன்னொரு ஊரில் இன்னொரு நாளும் பிறை தோன்றியது எனும் போது கணிப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை. எல்லையை வரையறை செய்ய இயலாது போனாலும் அதனால் கணிப்பாது நியாயமாகி விடாது !சுருக்கமாக..

 • பிறையை பார்த்து முடிவு செய்யும் படி நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். நபி அவர்கள் ஒன்றை, இப்படி செய் என்று சொல்லி விட்டால் அது மார்க்க கட்டளை ஆகி விடும்.
 • பார்த்தல் என்பதற்கு நேரடி அர்த்தம் கண்ணால் பார்த்தல் என்பது தான். அது எல்லா காலத்திற்கும் பொருந்தும் அர்த்தம் தான் என்பதால் அதை தான் நாம் பொருத்த வேண்டும்.
 • பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்று சொன்னது போக, எதிர்மறையாக, பிறை பார்க்காமல் நோன்பை விடாதே என்றும் சேர்த்தே சொல்லி விட்டார்கள். ஒன்றை நேரடியாக சொல்லி, பின்பு அதையே எதிர் மறையாகவும் சொன்னால் அந்த காரியம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரியலாம்.
 • சூரியனும் சந்திரனும் காலம் காட்டும் என்பன போன்ற இறை வசனங்களை, பிறையை கண்ணால் பார்த்து மாதங்களை தீர்மானித்துக்கொண்டே நம்பவும் செய்யலாம், முரணில்லை !
 • சூரியனை கணித்து, பிறையை கணிக்காமல் இருப்பதற்கு காரணம், சூரியன் விஷயமாக நபி பயன்படுத்திய வார்த்தை அமைப்பு வேறு, பிறைக்கு அவர்கள் பயன்படுத்திய வார்த்தை அமைப்பு வேறு !
 • கிராமவாசிகள் சொன்ன பிறை தகவலை ஏற்று நோன்பை விட்டிருக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள்.
 • வெளியூர்வாசிகள் நீண்ட பயணம் மேற்கொண்டு வந்து சொன்ன பிறை தகவலை ஏற்றுக்கொள்ளாமலும் இருந்துள்ளார்கள்.
 • ஏதேனும் காரணத்தால் தலைப்பிறை தெரியாமல் போய் விட்டால், அதற்காக அலட்டிகொள்ளாமல் , முந்தைய மாதத்தை அல்லாஹ்வே நமக்காக நீட்டி தந்து விட்டதாக கருதிக்கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதும், பிறையை கணிக்க கூடாது என்பதற்கு ஆதாரம்.
 • தலைப்பிறையை தவறுதலாக விட்டு விட்டு , பின்னர் பார்க்கும் போது அது இரண்டாவது பிறையாக இருக்குமோ மூன்றாக இருக்குமோ என்று குழப்பத்தில் இருந்த சஹாபாக்களிடம், நீங்கள் எப்போது பார்க்கிறீர்களோ, அன்றைக்கு தான் முதல் பிறை என்று நபி சொன்னதை இப்னு அப்பாஸ் அவர்கள் எடுத்து காட்டியதில் இருந்து , எந்த நிலையிலும் பிறையை பார்க்க தான் வேண்டும் என்பது உறுதியாகிறது.
 • அதை விட முக்கியமாக, வேறொரு ஊரில் ஒரு நாள் முன்னதாக பிறை தெரிந்துள்ளது என்பது ஆதாரப்பூர்வமாக சொல்லப்பட்டும் கூட, இப்னு அப்பாஸ் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது, பிறையை முன் கூட்டியே கணிக்க கூடாது, பார்க்க தான் வேண்டும் என்பதை உறுதி செய்கிறது.
 • 29 ஆம் நாள் என்பது ஷக்குடைய (சந்தேகத்திற்குரிய) நாள், அன்றைக்கு பெருநாள் கொண்டாட கூடாது என்றெல்லாம் நபி சொல்லியிருப்பதில் இருந்தும்  பிறையை கண்ணால் பார்த்து முடிவு செய்யும் வழமை ஒன்று தான் சரி என்பதை அறியலாம். ஏனெனில், கணித்து முடிவு செய்யும் கொள்கை என்று வந்து விட்டால் அவர்களுக்கு ஷக்குடைய நாள் என்கிற எதுவுமே இருக்காது. ஷக்குடைய நாள் என்கிற ஒரு நாள் உண்டு, அதில் இப்படி எல்லாம் செய்ய கூடாது என்று நபி அவர்கள் சொல்லியுள்ள பொது, நாங்கள் ஒரு கொள்கை சொல்கிறோம், அதில் சந்தேகத்திற்குரிய நாள் என்கிற ஒன்றே தேவையில்லை என்று சொல்லி நபிக்கு மிஞ்சிய அறிவை காட்டுவது நபியையே கேலி செய்வதாகும் !

மேலும், 

நபி அவர்களுக்கு அந்த காலத்தில் கணிக்க கூடிய வசதி இல்லை, நமக்கு வசதி இருக்கிறது ஆகவே நாம் செய்யலாம் என்று வாதம் வைப்பதற்கும் இடமில்லை. காரணம், நபி அவர்களுக்கு வசதி இல்லை என்றாலும், இருக்கின்ற வசதியை பயன்படுத்தியாவது இதற்கு ஒரு வழிகாட்டுதலை விட்டு சென்றிருக்க வேண்டும். எப்படி? மற்ற மற்ற ஊர்களின் பிறை தகவலை மதினாவில் உள்ள நபியால் அறிய முடியாது தான். ஆனால், துல் ஹஜ் மாதம் அரபா தினம் என்றைக்கு என்பதை மக்காவின் பிறையை கொண்டு அறியும் வசதியை நபி அவர்கள் பெற்றிருந்தார்கள் தானே? மதினாவில் இருந்து ஒரு தூதுவரை அனுப்பி மக்காவில் என்றைக்கு அரபா தினம் என்பதை அறிந்து விட்டு வந்து சொல் என்று நபி சொல்லியிருந்தால் அவரும் அறிந்து கொண்டு துல் ஹஜ் 3 அல்லது 4 ஆம் நாளில் மதினா திரும்பி வந்து தகவல் சொல்லி விடலாம்.  
இதன் மூலம், எனக்கு இருந்த வசதியை பயன்படுத்தி ஓரளவிற்கு ஒரே நாளில் பெருநாள் வரும் வகையில் இந்த சமுதாயத்தை ஒன்றிணைத்துள்ளேன்  , உங்களுக்கு அல்லாஹ் இன்னும் கூடுதல் வசதிகளை தரும் போது இதை விட சிறப்பாக செய்யுங்கள் என்கிற ஒரு வழிகாட்டுதலை நபி அவர்கள் காட்டியிருக்கலாம்.
அதை செய்யவில்லையே.. இருக்கின்ற வசதியையே அவர்கள் பயன்படுத்தவில்லை எனும் போது, அந்த காலத்தில் வசதி வாய்ப்புகள் இல்லை, இன்றைக்கு அது இருக்கிறது என்கிற வாதமும் பொருந்தாமல் போய் விட்டது.ஆக எந்த நிலையிலும் பிறையை கண்ணால் பார்த்து தான் மாதங்களை, நாட்களை முடிவு செய்ய வேண்டும், முன் கூட்டியே கணித்து மாதங்களை அறிவிப்பது நபி (ஸல்) அவர்களுக்கு எதிரான யுத்தம் என்பதை தெளிவாக அறியலாம்.


வஸ்ஸலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக