ஞாயிறு, 15 ஜூலை, 2012

தவ்ஹீத்வாதி என்று சொல்ல கூடாதா?




இந்த ஆக்கம் குறித்து மேலதிகமான ஆதாரம் இக்கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



தவ்ஹீத்வாதி என்று யாரையும் சொல்ல கூடாது, முஸ்லிம் என்று மட்டும் தான் சொல்ல வேண்டும் என்று சொல்லி ஒரு சிலர் முகநூல் வாயிலாக குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் என்ன வாதம் வைக்கிறார்கள் அவை ஒவ்வொன்றும் எந்த வகைகளிலெல்லாம் தவறு என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
இவர்களது நீண்ட முக நூல் விவாதத்தில், துவக்கமாக தவ்ஹீத்வாதி என்கிற வார்த்தையையே யாரும் சொல்ல கூடாது, முஸ்லிம் என்று தான் அல்லாஹ் நம்மை சுட்டிக்காட்டினான். ஆகவே முஸ்லிம் என்று மட்டும் தான் அழைக்க வேண்டும் என்று சொல்லி, தவ்ஹீத்வாதி என்கிற பெயரையே ஏதோ இணை வைப்பு பெயர் போல சித்தரித்து தங்கள் அறிவாற்றலை (?) காட்டினர்.

நம் சகோதரர்களின் நீண்ட மறுப்பு மற்றும் விவாதங்களுக்கு பின்னர், முஸ்லிம் என்பது சிறந்ததாக இருக்கிறதல்லவா, தவ்ஹீத்வாதி என்பது சிறப்பு சற்று குறைந்ததாக தெரிகிறதே, ஆகவே முஸ்லிம் என்று வைக்கலாமே? என்று சற்று ஸ்ருதி இறக்கினார்கள்.

இன்னும் பல மறுப்புகள் கொடுக்கப்பட்ட பின்னர், சரிப்பா, தவ்ஹீத் தவ்ஹீத் என்று தர்காகளுக்கு முன் நின்று பேசும் போது சொல்லுங்கள், வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை, அதை ஏன் தெருக்களிலும் கடை வீதிகளிலும் சொல்கிறீர்கள்? என்று இன்னும் நான்கைந்து படிகள் இறங்கி, துவக்கத்தில் என்ன பேசினோம், எப்படி வீரியமாக வாதங்களை வைத்தோம் என்பதை எல்லாம் மறந்து, கொஞ்சம் பார்த்து செய்யுங்கள் என்று அறிவுரை தருகிற அளவிற்கு தங்கள் வாதங்களை மட்டரகமாக ஆக்கிகொண்டார்கள். 

இவர்களின் நிலை இப்படி இருக்க, இது போன்ற கேள்வி வேறு பலருக்கும் இருக்கலாம் என்பதால் அவர்கள் என்ன வாதங்களை வைக்கிறார்கள் என்பதை இங்கு சுருக்கமாக அறிவது அனைவருக்கும் பயன் தரும்.

முதலில், முஸ்லிம் என்று மட்டும் தான் குறிப்பிட வேண்டுமா? என்பதை பற்றி விளக்கமாக அறிய இந்த லிங்கை பார்வையிடவும்.

மேலும், தவ்ஹீத்வாதி என்கிற பெயருக்கான அர்த்தம் என்ன? அதை சொல்ல மார்க்கத்தில் அனுமதி உள்ளதா என்பதை பற்றி தெளிவாக அறிய இதை பார்வையிடவும்.  http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/thavheedvathi_enra_sol_hatheesil_ullatha/

மேலே உள்ள இரண்டு ஆய்வுக்கட்டுரைகளை படித்தாலே இது போன்ற குழப்பவாதிகளின் குழப்பங்களில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

இது போக, வேறு சில செய்திகளை இங்கு சுட்டிக்காட்டுவதும் பொருத்தமானது என்பதால் இவர்களது கூறு கெட்ட வாதங்களை இங்கு ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

தவ்ஹீத்வாதி என்று சொல்ல கூடாது என்பதற்கு ஆதாரமாக இவர்கள் முதலில் எடுத்து வைக்கும் வாதம், அல்லாஹ் நம்மை முஸ்லிம் என்று தான் பெயரிட்டான், தவ்ஹீத்வாதி என்று பெயரிடவில்லை என்பதாகும்.

இதற்கு பதில் சொல்லும் போது, முஸ்லிம் என்று அல்லாஹ் பெயரிட்டான் என்பது உண்மை தான். முஸ்லிம் என்பதை விட சிறப்பிற்குரிய வேறு பெயர் உண்டா என்று அல்லாஹ் தன் திருமறையில் கேட்பதையும் நாம் மறுக்கவில்லை. முஸ்லிம் என்று பெயரிட்டான், முஸ்லிம் என்பது தான் சிறப்பிற்குரியது, முஸ்லிம்களாகவே மரணியுங்கள் என்று அல்லாஹ் சொல்லும் வசனங்களை எல்லாம் எப்படி புரிய வேண்டும் என்பதில் ஏற்படும் தவறுகளே இந்த அபத்தமான கேள்விக்கு காரணம்.

இவ்வாறு அல்லாஹ் சொல்வது அனைத்துமே பொதுவாக ஒரு மனிதனிடம் இருக்க வேண்டிய பண்புகள். 
நீ காபிராக இருக்காதே, முனாபிக்காக இருக்காதே, அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவனாக மட்டுமே இரு, என்று இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுப்பது இந்த வசனங்களின் பொருளே தவிர, முஸ்லிம் என்பதற்கு முரணில்லாத வேறு பெயர்களை வைப்பதை இந்த வசனம் தடுக்காது .
நான் ஒரு யூதன், நான் ஒரு கிறிஸ்தவன், நான் ஒரு கடவுள் மறுப்பாளன் என்று சொல்வது முஸ்லிம் என்கிற பெயருக்கு முரணான பெயர்கள் ! இதை வைப்பதை விட இதற்கு முரணான முஸ்லிம் என்கிற பெயர் தான் உங்களுக்கு சிறப்பானது என்று சொல்வது, முஸ்லிம் என்பதற்கு எந்த வகையிலும் முரணில்லாத "தவ்ஹீத்வாதி" என்கிற பெயரை சூட்டுவதை விட்டும் நம்மை தடுக்காது!

முஸ்லிம் என்பதற்கு முரணான பொருள் கொண்டது தான் முனாபிக் என்பதோ காபிர் என்பதோ. ஆனால் தவ்ஹீத்வாதி என்பது முஸ்லிம் என்பதற்கு முரணான பெயர் அல்ல ! அது ஒரு கூடுதல் அடையாளத்தை தருகிற பெயர் !! இந்த வேறுபாட்டை தான் இவர்கள் புரியவில்லை. 
ஒன்றுக்கு முரணான இன்னொரு பெயரை வைப்பதற்கும், ஒன்றை அலங்கரிக்கிற மாதிரியான இன்னொரு பெயரை கூடுதலாக சேர்த்து சொல்வதற்கும் உள்ள வேறுபாட்டை புரிகிற எவரும் இது போன்று கேள்வி கேட்க மாட்டார்கள்.

எப்படி என்றால், முஸ்லிம் என்று சொல்லி கொண்டே கபுருகளை வணங்குபவனும் உள்ளான். முஸ்லிம் என்று சொல்லி கொண்டே சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்கிறான், முஸ்லிம் என்று சொல்லி கொண்டே இமாம்களின் சொல்லை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறான், ஆக இணை வைப்பின் அனைத்து பரிணாமங்களிலும் மூழ்கிக்கொண்டு தன்னை முஸ்லிம் என்று சொல்பவன் இருக்க தான் செய்கிறான் எனும் போது, அது போன்ற பெயரளவிலான முஸ்லிம்களிடம் இருந்து நான் வேறுபட்டவன், நான் முஸ்லிம் என்பதை வாயளவில் மட்டும் அல்லாமல் செயல் வடிவிலும் காட்டக்கூடியவன் என்பதை பிறருக்கு எடுத்து சொல்லும் பொருட்டு நான் முஸ்லிம் என்பதுடன், இவர்களை போன்ற அரை குறை முஸ்லிம் அல்ல, நான் ஒரு தவ்ஹீத்வாதி , அல்லாஹ்வை மட்டுமே இறைவனாக நம்புகிற ஒரு முஸ்லிம் , என்று நம்மை நாமே காட்டிக்கொள்வது பல இடங்களிலும் பல சந்தர்ப்பங்களிலும் அவசியமாகிறது.
இவ்வாறு செய்வது முஸ்லிம் என்கிற எனது பெயரை இழிவுப்படுத்துமா அலங்கரிக்குமா? இன்னும் அலங்கரிக்கத்தான் செய்யும்.
முஸ்லிம் என்பதை இன்னும் அழகுடன் நான் வெளிக்காட்டுகிறேன் என்று தான் பொருளாகும்.
தவ்ஹீத்வாதி என்கிற பெயர் தான் சரி, முஸ்லிம் என்று சொல்லவே கூடாது என்று யாரும் வாதிடவில்லை என்பதையும் இது போன்றவர்கள் புரிந்து கொண்டால் குழப்பமில்லை.

மார்க்கத்தில் ஹராம் - ஹலால் 

முஸ்லிம் என்கிற பண்புபெயருடன் தவ்ஹீத்வாதி என்று என்னை கூடுதலாக அடையாளப்படுத்திக்கொள்ள மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை என்பதால் இதை வைத்துக்கொள்ள பூரண அனுமதி எனக்கு உள்ளது. தவ்ஹீத்வாதி என்று சொல்லவே கூடாது என்றால் அதை 
தடுக்க கூடிய ஒரு ஆதாரத்தையாவது காட்டுங்கள் என்று பல சகோதரர்கள் கேட்டும் கூட எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டாமல், கூடாது என்றால் கூடாது தான் என்கிற தங்கள் யூகங்களை தான் மார்க்கமாக்கினர்கள் இந்த குழப்பவாதிகள்.
மார்க்கத்தில் ஒன்றை ஹலால் என்றோ ஹராம் என்று சொல்வதானால் அதை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

  • மறுமை சம்மந்தப்பட்ட விஷயங்கள்
  • உலகம் சம்மந்தப்பட்ட விஷயங்கள்.

மறுமை சம்மந்தப்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை நாம் செய்ய நினைத்தால் மார்க்கத்தில் ஆதாரம் இருக்கிறதா, மார்க்கத்தில் அனுமதி உள்ளதா என்று மட்டும் தான் பார்க்க வேண்டும், மார்க்கத்தில் தடை இருக்கிறதா என்று பார்க்க கூடாது. இது இஸ்லாமிய பாடத்தில் அடிப்படையாக கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
உதாரணமாக, ரமளானில் நோன்பு வைக்க வேண்டும் என்று ஒருவர் சொன்னால் அவரிடம், இதற்கு குர் ஆன் ஹதீஸில் எங்கே அனுமதி உள்ளது என்று கேட்க வேண்டும். அனுமதி இருந்தால் செய்ய வேண்டும், அனுமதி இல்லை என்றால் செய்ய கூடாது. அதே போன்று ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதன் ஏழாம் பிறை அன்று நான்கு ரக்கத்துகள் கூடுதலாக தொழ வேண்டும் என்று ஒருவன் சொன்னால் அவரிடம், இதை அனுமதிக்கும் சட்டம் ஏதேனும் இருந்தால் காட்டுங்கள் என்று கேட்க வேண்டும். இதற்கு தடை எதுவும் இருந்தால் காட்டுங்கள் என்று கேட்க கூடாது. காரணம், ரஜப் மாதம் ஏழாம் நாள் தொழ கூடாது என்று எந்த ஹதீசும் இருக்காது ! தொழ வேண்டும் என்றால் தொழுங்கள் என்று இருக்கும். தொழ கூடாது என்றால் எதுவுமே சொல்லப்பட்டிருக்காது. எதுவுமே சொல்லப்படவில்லை என்றால் அதை மார்க்கம் என்கிற பெயரில் செய்ய கூடாது என்பது பொருள்.

அதே போல, உலக விஷயங்களை பொறுத்தவரை அப்படியே மாற்றி சிந்திக்க வேண்டும்.
அதாவது, ஒன்று கூடுமா கூடாதா என்பதை தீர்மானிக்க குர் ஆன் ஹதீஸில் அனுமதி இருக்கிறதா என்று தேடாமல், இதற்கு தடை இருக்கிறதா என்று மட்டும் பார்க்க வேண்டும். உதாரணமாக விமானத்தில் பயணம் செய்யலாமா, மார்க்க அடிப்படையில் விளக்கவும், என்று ஒருவர் கேள்வி கேட்டால், விமானத்தில் பயணம் செய்யுங்கள் என்று அனுமதிக்கிற மாதிரியான வசனங்களோ ஹதீஸ்களோ இருக்கும் என்று தேடிக்கொண்டிருக்க கூடாது, மாறாக, விமானத்தில் பயணம் செய்வது ஹராம் என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என்று மட்டும் தேட வேண்டும். எங்குமே ஹராம் என்று சொல்லப்படவில்லை என்றால் விமானத்தில் பறக்கலாம், தவறில்லை என்று பதில் சொல்ல வேண்டும்.

இது தான் மார்க்கத்தின் ஹராம் ஹலால்களை அளக்கும் முறை !

இப்போது நான் என்னை தவ்ஹீத்வாதி என்று சொல்வது மார்க்க விஷயமா? இல்லை ! அது உலக விஷயம்.தவ்ஹீத்வாதியாக வாழ்வது தான் மறுமை சார்ந்த விஷயமே தவிர, எனது அடையாள பெயராக தவ்ஹீத் வாதி, எனது ஜமாஅத் ஒரு தவ்ஹீத் ஜமாஅத் என்றெல்லாம் பெயர் வைப்பது மறுமை விஷயமல்ல. 
தவ்ஹீத் என்று பெயர் வைத்தால் மறுமையில் நன்மை கிடைக்கும் என்று நம்பி யாரும் அவ்வாறு பெயர் வைப்பதும் கிடையாது. இது, நான் ஏற்கனவே சொன்னது போல, உலகத்தில் நம்மை அடையாளம் காட்டிக்கொள்வதற்கு தான். பல முஷ்ரிக்குகள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்த சூழலில் நான் இணை வைக்காத ஒரு முஸ்லிம், இணை வைப்பை எதிர்க்கிற ஒரு ஜமாஅத் நாங்கள் என்று காட்டுவது சமுதாய பயனை கருத்தில் கொண்டு தான்! இதற்கு மார்க்கத்தில் தடை இருக்கிறதா என்றால் இல்லை !!

ஆக, உலக நன்மையை கருத்தில் கொண்டு எனக்கு நானே ஒரு அடையாள பெயரை சூட்டுவதற்கு நான் மார்க்கத்தில் அனுமதியை பார்க்க வேண்டுமா தடையை பார்க்க வேண்டுமா? நிச்சயமாக தடையை தான் பார்க்க வேண்டும். தவ்ஹீத்வாதி என்று என்னை நான் சொல்லிக்கொள்ள மார்க்கம் எந்த இடத்திலும் தடை செய்யவில்லை என்றால் தாராளமாக அவ்வாறு சொல்லிக்கொள்ளலாம்.

இருப்பினும் இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், மார்க்கம் தடுக்காத காரணத்தால் இப்படி அழைக்கலாம் என்ற போதிலும், தவ்ஹீத்வாதி என்று நபி (ஸல்) அவர்கள் அழைத்ததாக கூடுதல் ஆதாரம் வேறு இருக்கத்தான் செய்கிறது  !!

திர்மிதியில் வரக்கூடிய ஹதீஸில் (திர்மிதி 2522 ) தவ்ஹீத்வாதிகளில் சிலர் தாங்கள் செய்த தவறுகளுக்காக நரகத்தில் போடப்படுவார்கள், தண்டனை முடிந்த பிறகு சொர்க்கம் செல்லப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியில் "தவ்ஹீத்வாதி" (அஹ்லுல் தவ்ஹீத்) என்கிற வார்த்தையையே நேரடியாக பயன்படுத்தியும் இருக்கிறார்கள்.
ஒரு வாதத்திற்கு, இந்த ஹதீஸ் இல்லாமல் இருந்தால் கூட தவ்ஹீத்வாதி என்று நான் என்னை அழைத்துக்கொள்வது மார்க்க அடிப்படையில் தவறில்லை என்ற போதிலும், இதை நேரடியாக அனுமதிக்கும் ஹதீசும் இருப்பது தவ்ஹீத்வாதி என்று பெயர் சூட்டிக்கொள்வதை கூடுதல் உரிமையுடன் அனுமதிக்கவே செய்கிறது.

இதை சொல்லும் போது இவர்கள் இன்னொரு குதர்க்கமான கேள்வியை முன் வைப்பார்கள்.

முஸ்லிம் என்றால் கட்டுப்பட்டவன் என்று பொருள். அவ்வாறு கட்டுப்பட்டவன் நேரடியாக சொர்க்கம் செல்வான். ஆனால், இங்கு தவ்ஹீத்வாதி என்று நபி சொன்னதாக வருகிற ஹதீஸில் தவ்ஹீத்வாதிகள் நேரடியாகசொர்கம் செல்லவில்லையே, அவர்கள் தவறுகள் செய்கிறார்கள் என்றல்லவா வருகிறது, அவர்கள் நரகத்தில் போடப்படுகிறார்கள் என்றல்லவா நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள், நேரடியாக சொர்க்கம் செல்வது நல்லதா நரகத்தில் சென்று அதன் பிறகு சொர்க்கம் செல்வது நல்லதா? 35 மார்க் எடுத்து பாஸ் ஆவது நல்லதா நூறு மார்க் எடுத்து பாஸ் ஆவது நல்லதா?


என்கிற ஒரு அற்புத (??!@@) கேள்வியை வைப்பார்கள்.

எந்த ஒரு சாதாரண அறிவும் அற்ற மடத்தனமான கேள்வி இது என்கிற போதும், இது போன்ற மடதனதிற்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை இருப்பதால் அதையும் சொல்ல வேண்டியுள்ளது.

தவ்ஹீத்வாதி என்று யாரையுமே அல்லாஹ் சொல்லவில்லை, முஸ்லிம் என்று மட்டும் தான் சொல்லியுள்ளான் என்று வாதிட்டவர்களின் வாதங்கள் தவிடு பொடியாகும் விதத்தில் மேற்கண்ட திர்மிதி ஹதீஸில் நேரடியாக தவ்ஹீத்வாதி என்றே நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதை எடுத்துக்காட்டி உள்ளோம். இவர்கள் நேர்மையாளர்கள் என்றால் என்ன செய்ய வேண்டும்? சரி தான், நாங்கள் தான் முதலில் தவறாக சொல்லி விட்டோம் என்று சொல்லி, தவ்ஹீத்வாதி என்று எங்குமே சொல்லப்படவில்லை என்று முதலில் கூமுட்டைதனமாக அறிவிப்பு செய்ததை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். அதை செய்தால் இவர்கள் நியாயவான்கள் எனலாம்.
ஆனால், தங்கள் குதர்க்க புத்தியை காட்டுவதாக நினைத்து மூடத்தனத்தை காட்டிக்கொண்டு, அந்த ஹதீஸில் தவ்ஹீத்வாதி நேரடியாக சொர்க்கம் போவான் என்று இல்லையே என்கிறார்கள்.
அட கூறு கெட்டவர்களே, அங்கு நேரடியாக சொர்க்கம் செல்வார்கள் என்றோ செல்ல மாட்டர்கள் என்று இருப்பதனால் எனது வாதம் தவறாகி விடுமா? சொர்க்கம் செல்வார்களோ, இல்லையோ, அவர்கள் தவ்ஹீத்வாதிகள் என்று அழைக்கப்பட்டார்களா இல்லையா?
தவ்ஹீத்வாதி என்று எங்குமே அல்லாஹ் சொல்லவில்லை என்கிற இந்த வாதம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டதா இல்லையா? இதற்கு பதிலை காணோம், ஒன்று.

அடுத்து, முஸ்லிம் என்றால் கட்டுப்பட்டவன், கட்டுப்பட்டவன் என்றால் நேரடியாக சொர்க்கம் செல்வார்கள், ஆனால், தவ்ஹீத்வாதி என்றால் இந்த ஹதீஸின் படி நரகத்தில் தண்டிக்கப்பட்டு அதன் பிறகு தான் சொர்க்கம் செல்கிறான், ஆகவே தவ்ஹீத்வாதி என்பதை விட முஸ்லிம் என்பது தான் சிறந்தது, என்று அடுத்து வாதம் வைத்து, சிந்தனைக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமுமே இல்லை, உளறல் தான் எங்கள் ஒரே ஆயுதம், என்பதை மீண்டும் நிரூபிக்கிறார்கள்.

தவ்ஹீத்வாதியின் பொருள் அல்லாஹ்வை மட்டும் நம்பக்கூடியவன் என்பது தான். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்தே இல்லை. அல்லாஹ்வை மட்டும் நம்பக்கூடியவன் முஸ்லிம் ! அதிலும் யாருக்கும் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
அப்படி நம்பக்கூடிய ஒரு தவ்ஹீத்வாதி வேறு வேறு காரியங்களில் தவறு செய்திருப்பாரேயானால், அந்த தவறுகளுக்காக அவர் தண்டிக்கப்படுவார். என்பது தான் இந்த ஹதீஸின் பொருள். அதாவது, அல்லாஹ்வை மட்டும் நம்பி விட்டேன் என்று சொல்லி விட்டமையால் அல்லாஹ் வேறு எதையும் கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவான் என்று நினைத்து விடாதே, அனைத்து காரியங்களிலும் நீ சரியாக தான் இருக்க வேண்டும், இருப்பினும் நீ தவ்ஹீத்வாதி என்பதால் மற்ற காரியங்களில் தவறு செய்தாலும் உன்னை நிரந்தரமாக நரகத்தில் அல்லாஹ் தள்ள மாட்டான்.
இது தானே பொருள்???

இதில் இருந்து தவ்ஹீத்வாதி என்றாலே அவன் தவறு செய்ய கூடியவன், தவ்ஹீத்வாதி என்றாலே அவன் நரகத்திற்கு செல்ல கூடியவன் என்று பொருள் கொள்ள சாதாரண அறிவுள்ளவனுக்கு இடமிருக்குமா? 
தவ்ஹீத்வாதி என்றாலே அவன் நரகத்திற்கு செள்ளக்கூடியவன் என்பது அர்த்தம், என்பது இந்த ஹதீஸில் இருந்து கிடைக்கும் அர்த்தமா அல்லது தவ்ஹீத்வாதியும் தவறு செய்தால் தண்டிக்கப்படுவான் என்பது இதன் பொருளா?

பெண்களை தான் அதிகமாக நரகத்தில் நான் பார்த்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள், இந்த ஹதீஸை இந்த அறிவாளிகளிடம் கொடுத்தால் எப்படி விளக்கமளிப்பார்கள்? பெண்கள் என்றாலே அவர்கள் நரகத்திற்கு போக கூடியவர்கள், அகவே யாரும் பெண்களாக இருக்க வேண்டாம், அனைவரும் ஆண்களாக மாறி விடுங்கள், என்று சொன்னாலும் சொல்வார்கள் போல.. இந்த உதாரணமும் மேலே அவர்கள் சொன்னதற்கும் எந்த வேறுபாடும் இல்லை !!

நீ தொழவும் மாட்டாய், நோன்பும் வைக்க மாட்டாய், ஊரை ஏமாற்றி காசும் சம்பாதிப்பாய், அல்லாஹ்வுக்கும் இணையும் வைப்பாய் , இப்படி நீ இருந்தால் உனக்கு நிரந்தர நரகம். அதே சமயம், இதை எல்லாம் செய்கிற நீ, இறுதியில் தவ்ஹீத்வாதியாக மாறி விட்டால் குறைந்த பட்சம் நிரந்தர நரகத்தில் இருந்தாவது தப்பித்துக்கொள்ளலாம்!!
ஆகவே தவ்ஹீத்வாதியாக இருப்பது அந்த அளவிற்கு மகத்தானது !!!

இப்படி தானே இந்த ஹதீஸை புரிய வேண்டும்? ஆக அறிவுக்கும் இவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது உறுதியாகி விட்டது!

இன்னும், தவ்ஹீத்வாதி என்றால் நரகத்திற்கும் போகலாம், சொர்கத்திற்கும் போகலாம், முஸ்லிம் என்றால் சொர்கத்திற்கு மட்டுமே உரியவர்கள் என்கிற பொருள் பட இவர்கள் வைத்த வாதமும் இன்னொரு இறை வசனத்தின் மூலம் சுக்கு நூறானது. 

திருக் குரான் 49 :14 வசனத்தில் அல்லாஹ் சில கிராமவாசிகளை பற்றி சொல்கிறான். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக கூறி நபி(ஸல்) அவர்களை நோக்கி வருகிறார்கள். தாங்கள் மற்ற சஹாபாக்களை போன்ற முமின்கள் தான் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அதை கண்டித்த அல்லாஹ், உங்கள் உள்ளங்களில் நம்பிக்கை இல்லை, நீங்கள் சரியாக அல்லாஹ்வை ஈமான் கொள்ளவில்லை, எனினும் கலிமா சொல்லி நபியையும் பின்பற்றுகிறேன் என்று சொல்லி விட்டமையால் உங்களை முஸ்லிம்கள் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள் என்கிறான். !!!!

இந்த வசனத்தின் படி இவர்களும் முஸ்லிம்கள் தானே? இவர்கள் சொர்க்கம் செல்வார்களா? மாட்டார்கள் ! ஏனெனில், இவர்கள் முஸ்லிம்கள் என்று சொன்னாலும் இவர்கள் அல்லாஹ்வை சரியாக நம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்வை சரியான முறையில் நம்பிக்கை கொள்ளாத, முமின் அல்லாத மக்களையும் அல்லாஹ் முஸ்லிம் என்று தான் அழைக்கிறான் எனும் போது, இங்கு பெயரா  முக்கியம்? முஸ்லிம் என்றால் சொர்கத்திற்கு நேரடியாக செல்வான், தவ்ஹீத்வாதி என்றால் நேரடியாக செல்ல மாட்டான் என்று இந்த அறிவிலிகள் செய்யும் வாதம் எந்த அர்த்தமும் அற்ற உளறல் தான் என்பது நிரூபணம் ஆகி விட்டதா இல்லையா?

தொடர்ந்து, நேரடியாக சொர்க்கம் செல்ல கூடியவர்களை நோக்கி தவ்ஹீத்வாதிகள் என்று அழைத்ததாக ஏதேனும் ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் என்று அடுத்து கேட்கலானார்கள்.

மேலே இவர்களுக்கு நாம் சொன்ன எந்த மறுப்பையும் கண்டு கொள்ளாமல் எதையாவது பேச வேண்டுமே என்பதற்காக உப்புக்கு சப்பாக இந்த கேள்வியையும் கேட்கிறார்கள்.

இதற்கும் ஆதாரம் உள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு சஹாபியை எமன் நாட்டுக்கு அனுப்புகிறார்கள். அவர் செல்லும் போது நபியவர்கள் அந்த சஹாபியிடம் "நீங்கள் வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயத்தினரிடம் செல்கிறீர்கள், முதலில் அவர்களிடம் தவ்ஹீதை சொல்லுங்கள்  , என்று சொல்லி அனுப்புகிறார்கள்.
இந்த சம்பவம் புஹாரி 7372 இல் பதிவாகியுள்ளது.


இந்த அறிவாளிகள் சொல்வது போல, முஸ்லிம் என்று தான் சொல்ல வேண்டும் முஸ்லிம் தான் சிறப்பு வாய்ந்தது, தவ்ஹீத்வாதி என்று சொல்லவே கூடாது என்பது உண்மையானால், நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் "நீங்கள் அவர்களிடம் இஸ்லாத்தை சொல்லுங்கள்" என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்???

இஸ்லாத்தை சொல்லுங்கள் என்று சொல்லாமல் தவ்ஹீதை சொல்லுங்கள் என்று நபி அவர்களே சொல்லியிருக்கும் போது, முஸ்லிம் என்று மட்டும் தான் சொல்ல வேண்டும், தவ்ஹீத்வாதி என்று சொல்லவே கூடாது என்கிற வாதம் எடுபடுமா?
இப்படி வாதம் வைப்பவர்கள் இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஏன் இஸ்லாத்தை சொல்ல சொல்லவில்லை? அது தானே நேரடியாக சொர்கத்திற்கு அழைத்து செல்லும்? என்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.

தவிர, நேரடியாக சொர்கத்திற்கு செல்லக்கூடியவர்களை தவ்ஹீத்வாதி என்று குறிப்பிட்டதாக ஆதாரம் உள்ளதா என்கிற இவர்களது கேள்விக்கும் இந்த ஹதீஸே பதிலாகி விடுகிறது. 
ஏனெனில், இங்கு யாரை நோக்கி தவ்ஹீதை சொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்களோ, அவர்கள் இதை கேட்டுக்கொண்டால் நேரடியாக சொர்கத்திற்கு தான் செல்வார்கள். நேரடியாக சொர்கத்திற்கு செல்ல கூடிய ஒரு காரியத்தை தான் நபி அவர்கள் எந்த ஒருவரிடமும் சொல்வார்கள். தவ்ஹீதை அவர்களுக்கு சொல்லி, அத்தனை அவர்கள் புரிந்து நடந்தும் கொண்டார்கள் என்றால் அவர்கள் சொர்கதிற்குரியவர்கள் தான் !
இப்படி ஹதீஸில் வாசகம் இல்லை என்றாலும் சாதாரணமாக சிந்தித்தால் கிடைக்கும் முடிவு இது தான்.

அப்படியானால் அந்த திர்மிதி ஹதீஸில் தவ்ஹீத்வாதியும் நரகத்திற்கு முதலில் செல்கிறானே, என்று கேட்டால், அது இதற்கு முரணில்லை.  
தவ்ஹீதை ஏற்றுக்கொண்டு சரியாகவும் வாழ வேண்டும். தவ்ஹீதை சரியாக ஏற்றுக்கொண்டால் அவன் குர் ஆன் ஹதீஸின் படி தான் வாழ்வான். கண்டவர்கள் பேச்சை மார்க்கம் என்று கேட்க மாட்டான், அப்படி வாழ்ந்தால் அவன் நேரடியாக சொர்கத்திற்கு தகுதியானவன் தான். ஆகவே தான் புஹாரி ஹதீஸில் அவர்களை தவ்ஹீதை நோக்கி அழைக்க சொன்னார்கள். இருப்பினும், எல்லா இணை வைப்பு காரியங்களையும் விட்டு விட்டு தவ்ஹீதின் பக்கம் வரக்கூடிய ஒருவன், இன்ன பிற அமல்களில் அல்லாஹ்வுக்கு ஏதேனும் குறை வைத்தால் அவன் தண்டிக்கப்படவும் செய்வான், என்கிற கூடுதல் எச்சரிக்கை தான் இந்த திர்மிதி ஹதீஸ்.

இதை தொடர்ந்து மறுப்பதாக இருந்தால் மேற்படி புஹாரி ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஏன் இஸ்லாத்தை நோக்கி அழைப்பு விடுக்காமல் தவ்ஹீதை நோக்கி மட்டும் அழைப்பு விடுத்தார்கள்? இவ்வாறு அழைப்பு விடுத்தான் நோக்கம் அவர்களை நேரடியாக சொர்கத்திற்கு அனுப்பவா அல்லது நரகத்திற்கு அனுப்பவா ? என்பதற்கு இவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
அதை விட முக்கியமாக, முஸ்லிம் என்று மட்டும் தான் ஒருவரை சொல்ல வேண்டும், அது தான் நூறு மார்க், தவ்ஹீத் வாதி என்பது 35 மார்க், 35 மார்க்க எடுக்க ஆசையா 100 மார்க்க எடுக்க ஆசையா? என்றெல்லாம் ஞான சூனியத்தின் உச்சத்தில் நின்று கேள்வி கேட்டவர்கள், இந்த இடத்தில் இவர்கள் வாதப்படி நபியவர்கள் 100 மார்க்குக்கு தகுதியான இஸ்லாத்தின் பால் அவர்களை அழைக்காமல் 35 மார்க் தகுதி பெற்ற தவ்ஹீதின் பால் அழைத்தார்களே, ஏன்?? 
நபி (ஸல்) அவர்களுக்கு இந்த கணக்கு தெரியவில்லை போலும்!! இவர்கள் நபியை விட கணக்கில் புலி தான் என்று காட்ட நினைக்கிறார்கள் என்பது தெளிவாகி உள்ளது!

இவை எதையும் விட, மார்க்கம் தடுக்காத ஒரு பெயரை நான் எனது அடையாள பெயராக சூட்டிக்கொள்வதை யாறும் தடுக்க முடியாது. உலகின் பல்வேறு விஷயங்களில் இவர்களும் இவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள், தவ்ஹீத் என்று வரும் போது மட்டும் இவர்களது சிந்தனை கழன்று தனியாக ஓட துவங்குகிறது..

முஸ்லிம் என்று தான் அல்லாஹ்வே நமக்கு பெயரிட்டுள்ளான், ஆகவே தவ்ஹீத்வாதி என்று சொல்லவே கூடாது என்று சொல்பவர்கள் தங்கள் பெயர்களை முஸ்லிம் என்று வைக்காமல் முஹம்மது, இப்ராஹீம், என்று தான் வைக்கிறார்கள். ஏனப்பா? நீங்கள் தானே முஸ்லிம் என்கிற பெயரை தவிர வேறு பெயரே சூட்ட கூடாது என்று சொன்னீர்கள்? என்று கேட்டால், வெட்கமே இல்லாமல் நம்மிடம் இவர்கள் திருப்பி கேட்ட கேள்வி, ஏன்? இப்படி பெயர் வைக்க தடையா உள்ளது?

அட ஞான சூனியமே, இதை தானே நானும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்? எப்படி முஹம்மது என்று வைப்பதற்கு மார்க்கம் தடுக்கவில்லை என்பதால் உங்கள் பெயரை முஹம்மது என்று வைக்கிறீர்களோ, அதே போல தவ்ஹீத்வாதி என்று சொல்லவும் மார்க்கம் தடுக்கவில்லை என்பதால் நான் தவ்ஹீத்வாதி என்று அடையாளப்படுத்தி கொள்ளக்கூடாதா? முரண்பாட்டிற்கும் ஒரு அளவில்லையா? நீங்கள் எப்படி முஸ்லிம் என்று உங்களை சொல்லிக்கொண்டே முஹம்மது என்று அடையாளப்படுத்திக்கொள்கிறீர்களோ , அதே போல நான் என்னை முஸ்லிம் என்று சொல்லி கொண்டு என்னை தவ்ஹீத்வாதி என்று அடையாளபடுத்த கூடாதா?? 

ஆக, எந்த நிலையில் சிந்தித்தாலும், இவர்களது வாதம் அனைத்துமே காற்றிழந்த பலூனாகி போனதையும், தங்களுக்கு தாங்களே முரண்பட்டுக்கொள்ளும் குழப்பவாதிகள் தான் இவர்கள் என்பதும் தெளிவாகியுள்ளது.

நேரான வழியை தெளிவான முறையில் அறிந்து செயல்பட அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி செய்வானாக..

வஸ்ஸலாம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


மேலதிக செய்தி :



இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிற ஹதீஸாக புஹாரி 4339 இல் பதிவாகியுள்ள செய்தி ஒன்றில், காலித் பின் வலீத் அவர்கள் தலைமையில் ஒரு போருக்காக படை ஒன்றை நபி (ஸல்) அவர்கள் அனுப்புகிறார்கள்.
போரில் முஸ்லிம்களின் கை ஓங்கும் நேரத்தில் எதிர் படையில் உள்ள காபிர்களில் ஒருவர் "சபனா , சபனா.". என்று அறிவிக்கிறார்.
அவர் அவ்வாறு அறிவிப்பு செய்தும் கூட காலித் பின் வலீத் அவர்கள் அந்த நபரை கொலை செய்து விடுகிறார்கள்.
இது பற்றி கருத்து வேறுபாடு கொண்ட வேறு சில சஹாபாக்கள், நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி முறையிட்ட போது காலித் பின் வலீத் செய்தது தவறு என்று நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இங்கே வரக்கூடிய "சாபி" என்பதன் பொருள் - சிலை வணக்கம் செய்யாத ஒரு கூட்டத்தாரை பற்றி சொல்லப்படும் வார்த்தையாகும்.
சாபி என்கிற கூட்டத்தார் பற்றி வரலாற்றில் பல செய்திகள் உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் நபியாக ஆவதற்கு முன்னரே இந்த சாபி என்கிற கூட்டம் அந்த சமுதாயத்தில் இருந்து வந்துள்ளனர்.
அதாவது, சிலை வணக்கத்திலும், நெருப்பு, சூரியன் சந்திரனை வணங்குவதிலும் தங்களை ஈடுப்படுத்திக்கொண்டு வந்த மக்களிடையே, இவை அனைத்தும் தவறு, கடவுள் என்பது ஒன்றே ஒன்று தான் என்று ஒரு கூட்டம் நம்பி வந்தது. அது தான் இந்த சாபி கூட்டம். 
நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பிரசாரம் செய்து வரும் காலத்திலும் கூட, இந்த சாபி என்கிற கூட்டம் இருந்து வந்தது. அவர்கள் நபி சொன்ன இந்த மார்க்கத்தை பின்பற்றி தொழுகை நோன்பு போன்ற காரியங்களை செய்யா விட்டாலும், கடவுள் என்பது ஒன்று தான் என்கிற நம்பிக்கையை மட்டும் தெளிவாக கொண்டிருந்தனர்.
அந்த வகையில், இந்த சிலை வணக்கத்தை நபி (ஸல்) அவர்களும் எதிர்க்கிறார்கள் என்கிற வகையில், அன்றைய எதிரிகள் நபியை கூட "இவர் சாபி கூட்டத்தை சேர்ந்தவர்" என்றே சொன்னார்கள்.

ஆக, மேலே நாம் சுட்டிக்காட்டிய ஹதீஸில், அந்த காபிரானவர், போரின் போது தோல்விக்கு பயந்தோ என்னவோ, நான் சாபி ஆகி விட்டேன் என்று அறிவிப்பு செய்கிறார், இதன் மூலம் அவர் சொல்ல வந்த கருத்து, நான் மதம் மாறி விட்டேன், சிலை வணக்கத்தை விட்டும் வெளியே வந்து ஒரு கடவுள் கொள்கையை ஏற்றுக்கொண்டு விட்டேன் என்பது தான்.

இவ்வாறு தன்னை குறித்து அறிவிப்பு செய்த அந்த நபரை காலித் பின் வலீத் அவர்கள் கொலை செய்த போதிலும், நபி (ஸல்) அவர்கள் காலித் பின் வலீதை தான் கண்டித்தார்களே தவிர, அந்த நபர் தன்னை சாபி என்று அறிவிப்பு செய்ததை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தார்கள்  என்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்,

அதாவது, முஸ்லிம் என்பதை சொல்லாமல் தன்னை சாபி (ஒரு கடவுளை நம்பியவன்) என்று சொல்லிக்கொண்டால் அதுவும் தவறில்லை என்று இதன் மூலம் புரிகிறது.

இதற்கே நபி அவர்கள் அனுமதித்தார்கள் என்றால், நபியே பயன்படுத்திய வார்த்தையான தவ்ஹீத்வாதி என்கிற வார்த்தையை பயன்படுத்துவது எந்த வகையிலும் தவறானது இல்லை!

வஸ்ஸலாம்

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக