ஞாயிறு, 22 ஜூலை, 2012

கர்பிணிகள் நோன்பை களா செய்ய தேவையில்லையா?அஸ்ஸலாமு அலைக்கும்..

கர்பிணிகளும் பால் ஊட்டும் தாய்மார்களும் கடமையான நோன்பை வைக்க தேவையில்லை எனவும், அவர்கள் வேறொரு நாளில் அதை களா செய்ய வேண்டும் எனவும் நாம் கூறி வருகிறோம். 

இதற்கு மாற்றமாக, கர்பிணிகள் விட்டநோன்பை மீண்டும் வைக்க தேவையில்லை, அதற்கு பகரம் ஒரு ஏழைக்கு உணவளித்தால் போதும் என்று ஒரு இணையதளத்தில் (www.tamililquran.com) எழுதியிருந்தனர். அதற்கு ஆதாரமாக கீழ்காணும் ஹதீசையும் தந்திருந்தார்கள்.

<<<<< நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு வைப்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என்று பயந்தால், கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டியதில்லை என்று கூறியதுடன் ஒரு ஏழைக்கு உணவளிக்க கூறினார்கள். நோன்பு வைக்க முடியாத முதியவர்களையும் நோன்பு வைக்காமல் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க கட்டளையிட்டார்கள். 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : முஸ்லிம்  >>>>>


இது குறித்து ஆய்வு செய்யும் பொருட்டு, இந்த ஹதீஸை அவர்கள் சுட்டிக்காட்டிய முஸ்லிம் நூலில் தேடினோம். ஆனால், இத்தகைய எந்த ஹதீசும் முஸ்லிம் நூலில் காணப்படவில்லை. மார்க்கத்தில் இவ்வளவு பொடுபோக்காக இருக்கிறார்களே என்கிற ஆதங்கத்துடன் இந்த இணையதளத்தை நாம் தொடர்பு கொண்டு இந்த ஹதீஸின் சனதையும், ஹதீஸ் எந்த நூல், எந்த பாகத்தில் உள்ளது என்கிற விபரத்தையும் தருமாறு கேட்டிருந்தோம்.

இதற்கு பதில் சொன்ன அந்த இணையதள நிர்வாகிகள், தாங்கள் அந்த கட்டுரையில், சம்மந்தப்பட்ட ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகி உள்ளதாக தவறாக எழுதியிருக்கிறோம், அது முஸ்லிமில் இல்லை, ஆனால் அபு தாவூதில் உள்ளது. அபூதாவூத் 956 தான் அந்த ஹதீஸ் எண், என்று பதில் அளித்தார்கள்.

அபு தாவூத் நூலில் நாம் சென்று தேடிய போது, குறிப்பிட்ட அந்த ஹதீஸ் இப்னு அப்பாஸ் அவர்கள் சொன்னதாக மட்டுமே இருக்கிறதே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக இல்லை ! ஆகவே முதலில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று அவர்கள் சொன்னதும் தவறு என்று தெளிவாகி உள்ளது. 

நபி சொல்லாத காரணத்தால் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக, மார்க்கத்தின் கட்டாயக்கடமைகளில் ஒரு விஷயத்தை ஒரு சாரார் செய்யவே தேவையில்லை என்று முடிவு செய்வதாக இருந்தால் அதை ஒரு சஹாபி சொன்னால் போதாது, வஹீயின் மூலமாக மட்டுமே சொல்லப்பட வேண்டும். 

சுட்டிக்காட்டிய பின்னர் சம்மந்தப்பட்ட ஹதீஸை நீக்கிய இணையதளத்தாருக்கு நன்றி. இருப்பினும், தொடர்ந்து சஹாபியின் கூற்றை ஆதாரமாக வைத்து கர்பிணிகள் நோன்பை களா செய்யவே தேவையில்லை என்று பத்வா கொடுத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

வஸ்ஸலாம். கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக