செவ்வாய், 17 ஜூலை, 2012

நபிக்கு மறைவானவை தெரியுமா? வாதமும் மறுப்பும்நமது வாதம் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிந்திருக்கவில்லை என்பதற்கு சான்றாக கீழ்காணும் இறை வசனங்கள் உள்ளன.

நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
7 :188

'அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறி வேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை' என்று (முஹம்மதே!) கூறுவீராக! 'குருடனும், பார்வையுடைய வனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக! (6 :50 )


----------------------------------------------------------------------------------------------------------

எதிர் கேள்வி :
நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? அல் குர் ஆன்(2:85), சகோதரரே இந்த வசனம் ததஜ அவர்களுக்கு இறக்கப்படவில்லையா?


நபி(ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம்:


"(அவன்தான்) மறைவனாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான். (72:26)
"தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான். (72:27)


(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது. இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது. மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்;. நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது. (4:113)
(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை. இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை. ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. நீங்கள் நம்பிக்கை கெண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு. (3:179)


(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்;. மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (3:44) 


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------நமது மறுப்பு :

அஸ்ஸலாமு அலைக்கும்.

எப்போதுமே ஒரு வாதத்திற்கு மறுப்பு சொல்லும் போது, மறுப்பை முழுமையாக சொல்லி பழக வேண்டும். அனைத்திற்கும் மறுப்பு சொல்ல வேண்டும்.

நபி (ஸல்) அவர்களுக்கு மறைவானவை அனைத்தும் தெரியாது என்பதற்கு ஆதாரமாக நான் சில இறை வசனங்களை தந்தால், அதற்கு பதிலாக, சில தூதர்களுக்கு அல்லாஹ் நாடினால் மறைவானவற்றை அறிவித்து கொடுப்பான் என்று வரும் வேறு வசனங்களை காட்டுகிறீர்கள்.

அதை நான் மறுத்தால் தான் வேறு வசனங்களை காட்ட வேண்டும். அல்லாஹ் நாடியவர்களை தவிர வேறு எவருக்கும் மறைவானவற்றை அறிவிக்க மாட்டான் என்பது பொதுவான ஒன்று, அதை அனைவரும் புரிந்தே தான் இருக்கிறார்கள்.

எந்த வசனத்தில் மறைவானவற்றை நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்து கொடுப்பதாக சொல்கிறானோ, அந்த வசனத்தில் மறைவான அனைத்து விஷயங்களையும் அறிவித்துக்கொடுப்பதாக சொல்லவேயில்லை.
காபிர்களில் நயவஞ்சகர்களும் முஸ்லிம்களுடன் இரண்டற கலந்து விட்ட நிலையில் அல்லாஹ் அதை தடுப்பான் என்று சொல்லி விட்டு, நபிக்கு இதை அறிவித்துக்கொடுப்பான் என்று, இந்த ஒரு விஷயத்தை குறித்து மட்டும் தான் அல்லாஹ் சொல்கிறான்.
முஸ்லிம்களின் கூட்டத்தில் நயவஞ்சகர்கள் யார் என்பது நபிக்கு முன்கூட்டியே அல்லாஹ்வின் புறத்தில் இருந்து அறிவித்துக்கொடுக்கப்படும் என்பது இதன் பொருள்.

இந்த ஒரு விஷயத்தில் மறைவான ஞானம் நபிக்கு உண்டு என்று சொன்னால், இன்ன பிற ஆயிரக்கணக்கான விஷயங்களில் நபிக்கு எந்த மறைவான ஞானமும் கிடையாது ! இது தானே முக்கியமான வாதம்?

நபி என்றால் அனைத்துமே அறிந்தவர்கள், அவர்கள் அறிந்திருக்காத எந்த காரியமும் கிடையாது, வருங்காலத்தில் நடக்கிற மறைவான அனைத்துமே அவர்களுக்கு தெரியும் என்று இந்த சமுதாயம் தவறாக நம்பிக்கொண்டிருக்கும் போது, அவர்களிடம் நீங்கள் ஏற்கனவே நான் சுட்டிக்காட்டிய 
7 :188 , 6 :50 போன்ற இறை வசனங்களை காட்டி புரிய வைத்ததுண்டா?

புரிய வைக்க நான் முயற்சி செய்தால், அதை விமர்சனம் செய்து, இதோ நபிக்கு எல்லாமே தெரியும் என்பது போல வேறு இறை வசனங்களை காட்டினால் என்ன அர்த்தம்?

நபிக்கு எல்லாமே தெரியும், எல்லா மறைவானவையும் தெரியும் என்று நம்புகிறீர்களா?
அல்லது, நான் நம்புவது போல, அல்லாஹ் அறிவித்துக்கொடுக்கிற அல்லது 2 , 3 காரியங்களை தவிர   இன்ன பிற லட்சக்கணக்கான காரியங்கள் அவர்களுக்கு தெரியாது என்று நம்புகிறீர்களா?

எனது நம்பிக்கைக்கு நான் இரண்டு இறை வசனங்களை ஆதாரமாக காட்டினேனே, அதற்கு பதில் சொல்லி விட்டு தான் உங்கள் நம்பிக்கை பற்றி பேசினீர்களா ? அல்லது, அதை கண்டு கொள்ளாமல் விட்டீர்களா?

இந்த இரண்டு இறை வசனங்கள் அல்லாமல் வேறு ஏராளமான ஹதீஸ்களும் நபிக்கு மறைவான ஞானம் கிடையாது என்று சொல்கிறதே, அதையெல்லாம் பட்டியலாக தந்தால் ஒவ்வொன்றையும் மறுத்து , நபிக்கு எல்லா மறைவானவையும் தெரியும் என்று நிலைநாட்டுவீர்களா? உங்கள் வாதப்படி அது தானே நியாயம்?

தொழுகையில் பின்னால் நின்று கொண்டு ஓதிய நபர் யார் என்று திரும்பி பார்த்து கேட்டார்களே, அது அவர்கள் மறைவானதை அறியாத காரணத்தால் தானே?

பேரீத்த மர மகசூல் விஷயமாக நபி (ஸல்) அவர்கள் ஒன்றை கூறி அது தோல்வியில் முடிந்த போது, நான் சொல்வதை ஏன் கேட்டீர்கள், நீங்களே சிந்தித்து செய்திருக்க வேண்டியதானே என்று கேட்டார்களே, இது அவர்கள் மறைவானவற்றை அறியாததால் தானே?

எனது வீட்டுக்குள் நீ எட்டிப்பார்த்ததை நான் முன்னரே அறிந்திருந்தால் உனது கண்ணை குத்தியிருப்பேன் என்று ஒரு சஹாபியை நோக்கி சொல்வார்களே, இதுவும் அவர்கள் மறைவானதை அறியாத காரணத்தால் தானே?

ஆக, வாதத்திற்கு பதில் என்றால், அனைத்தையும் உள்ளடிக்கியதாக தானே இருக்க வேண்டும்.

ததஜ வை விமர்சனம் செய்ய வேண்டும் என்கிற உந்துதல் மட்டும் இருந்தால் போதாது, உண்மை நம் பக்கம் இருக்க வேண்டும், அப்போது தான் வெற்றி பெற முடியும்.

வஸ்ஸலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக