வியாழன், 19 ஜூலை, 2012

ஈத் முபாரக் விரும்பி சொல்வதும் தவறா?


கேள்வி :
ஈத் முபாரக் என்பதை சுன்னத் என்று கருதாமல் சொல்வதை ஏன் தவறு என்று சொல்ல வேண்டும்? பெருநாள் வந்து விட்டால் நாகர்கோவில் பகுதிகளில் கிண்ணதப்பம் செய்கிறார்கள், வழக்கமாக அதை செய்வதால் அது மார்க்க அடிப்படையில் கட்டாயம் என்று யாரும் கருதுவது இல்லையே ..





பதில் :
அஸ்ஸலாமு அலைக்கும்.. 


அடிப்படையில் புரிய வேண்டிய விஷயமாக நான் கருதுவது, மார்க்கத்தில் ஒன்று கூடும், கூடாது என்று நேரடியாக சொல்லப்படவில்லை என்றால் அதை நாம் புரிந்து கொள்வது தன்னளவில் உள்ள சாதக பாதகங்களை வைத்து மட்டுமல்லாமல் சமுதாய கண்ணோட்டத்துடனும் சேர்த்து சிந்திக்க வேண்டும்.

உதாரணமாக, பெண் வீட்டு விருந்து வைப்பதை தவிர்க்க வேண்டும், அதை கண்டிக்கிறோம். விருந்து வைப்பது நல்ல விஷயம் தான் , பெண் வீட்டார் அவர்களாக உளப்பூர்வமாக விரும்பி செய்தால் அதையும் மார்க்க அடிப்படையில் விமர்சிக்க முடியாது தான். 
ஆனால், இங்கே நாம் பார்க்க வேண்டியது சமூக கண்ணோட்டத்துடன் மட்டுமே ! நாம் சார்ந்துள்ள சமூகம், பெண் வீட்டு விருந்தை கட்டாயமாக்கியுள்ளது . பெண்ணை பெற்றவர்களும், தங்கள் மகளுக்கு திருமணம் செய்கிற போது இதை விரும்பியோ விரும்பாமலோ உள்ளுக்குள் கட்டாயமாக்கி வைத்துக்கொண்டு தான் செய்கிறார்கள். 

மார்க்கத்தில் நேரடி தடையோ நேரடி அனுமதியோ இல்லாத விஷயங்கள் எப்போது சமூகத்தில், நலனை விட பாதிப்பை அதிகமாக விளைவிக்குமோ, அது மார்க்க அடிப்படையில் தவறான வழிமுறை என்கிற முடிவுக்கு நாம் வரலாம் !
இதற்கு, இந்த பெண் வீடு விருந்து என்று இல்லை, இன்னும் ஏராளமான உதாரணங்களை கூட சொல்லலாம்.

கிண்ணதப்பம் செய்வதும் ஈத் முபாரக் சொல்வதும் ஒரே அளவுகோல் கொண்டு பார்க்க பட வேண்டும் என்றால் மேலே நான் சொன்ன அளவுகோல் கொண்டு இரண்டையும் உரசிப்பார்த்து இரண்டும் சமூகத்தில் ஒரே மாதிரியான விளைவை தான் ஏற்படுத்தும் என்று நாம் கருதினால் இவ்வாறு சொல்லலாம். 
ஆனால் உண்மை நிலை அப்படி இல்லை. கிண்ணதப்பம் செய்வது என்னதான் காட்டாயம் போல நமது ஊர்களில் வருட வருடம் செய்யப்பட்டு வந்தாலும் சமூகம் அதை கட்டாயமான ஒரு காரியமாக இதுவரை கருதவில்லை. சமூகம் கருதவில்லை எனும் போது அதை நாம் வழிமுறையாக செய்து வந்தாலும் அதனால் எந்த பாதகமும் இல்லை.

அதே சமயம், ஈத் முபாரக் என்பது இவ்வாறு இல்லை. ஒருவர் ஸலாம் சொன்னால் எப்படி அதற்கு மறு ஸலாம் சொல்வது கட்டாயம் என்று நாம் விளங்கி வைத்துள்ளோமோ அதே போல ஈத் முபாரக் என்று ஒருவர் சொன்னால் அவருக்கு பதில் சொல்லாமல் நம்மால் இருக்க முடியவில்லை என்கிற அளவிற்கு அது நம்மையும் அறியாமல் கட்டாயமாகி உள்ளது.
என்னதான், அது சுன்னத் இல்லை, அது கட்டாயமில்லை, விரும்பி தான் சொல்கிறோம் என்று நாம் சொல்லிக்கொண்டாலும், ஒருவர் ஈத் முபாரக் என்று உங்களை நோக்கி சொல்லும் போது அவருக்கு பதில் ஈத் முபாரக் சொல்லாமல் வேறு பேச்சை நாம் பேசுவதில்லை !
விரும்பி செய்யும் வேறு வேறு செயல்களை எல்லாம் இது போல நாம் நமக்கே கட்டாயமாக்குவது கிடையாது..

மேலும், வாழ்த்து என்பதை துஆ என்கிற பொருளில் கருதலாம் என்கிற வாதம் சரி தான் என்றாலும் அதிலும் தர்க்க ரீதியிலான விளக்கம் முழுமையாகவில்லை. உனக்கு எல்லா வளமும் நலனும் கிடைக்கக் நான் பிரார்த்திக்கிறேன் என்று கூறுவது என்பது பொதுவான ஒரு வார்த்தை ! அதை எப்போதும் யாரும் யாருக்கும் சொல்லலாம். நபியிடம், எனக்காக துஆ செய்யுங்கள் என்று கேட்டு பல சஹாபாக்கள் கேட்டு வந்துளார்கள் என்றெல்லாம் ஹதீஸ்களில் ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இவற்றுக்கெல்லாம் நேரம், காலம் உண்டா? இல்லை.. ஒருவருக்கு பரகத் உண்டாகட்டும் என்கிற நமது பிரார்த்தனை குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட நாள், மாதத்திற்காக இருக்காமல் எந்த நேரத்திலும் எந்த காலத்திலும் கேட்பதாக தான் இருக்க வேண்டும். அப்போது தான் அது நாமாக விரும்பி சொல்வதாக சமூகம் கருத்தும். ஆனால் நாமோ, அதை இந்த குறிப்பிட்ட மாதத்தில் சொல்வேன் குறிப்பிட்ட நாளில் மட்டும் தான் சொல்வேன் என்றால், மற்ற நாட்களிலோ மாதங்களிலோ அல்லாஹ்வின் பரகத் கிடைக்காது என்கிற பொருள் நம்மை அறியாமல் ஒளிந்துள்ளது !

சுருக்கமாக, சலாத்தை பரப்புவதைபோல, ஸலாத்திற்கு பதில் சொல்வது எப்படி கட்டாயமோ அதே போல ஈத் முபாரக் என்பதையும் நம்மை அறியாமல் கட்டாயமாக்கி கொண்டுள்ளோம் என்றால் இங்கே சமூகம், பித்அத் என்கிற அறியாமை வலைக்குள் சிக்கி கொள்ளும்., 
இந்த அறியாமை நீங்கள் சொல்லும் கிண்ணதப்பம் விஷயத்தில் உருவாகவில்லை. அது உருவாகும் போது அதையும் தான் நாம் கண்டிக்க வேண்டும்.
இறந்து போய் விட்ட ஒரு பிணம், நாம் பேசுவதையும் மனதில் நினைப்பதையும் கேட்கும் என்கிற அறிவீனத்தின் உச்சத்தில் இருக்கும் நம் சமூகத்தில், சிறிதேனும் விழிப்புணர்வு ஏற்பட தான் நாம் முயற்சி செய்ய வேண்டும். இது போன்ற வாசல்களை திறப்பது, ஏற்கனவே அறிவீனத்தில் இருக்கும் நம் சமூகம் எளிதில் தடம் புரள வழி வகை செய்தது போல ஆகி விடும் .
இது எனது கருத்து.. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக