சற்று முன்பு இந்த உரையாடல் எனது காதால் கேட்டது..
எனது அறையில் வசிப்பவர் தமது மகளுடன் ஃபோனில் உரையாடுகிறார்.
(மலையாளி தான், நான் தமிழில் மொழியாக்கம் செய்து தந்துள்ளேன்)
சோஷியலில் எவ்வளவு மார்க் ?
70 ஆ? போன டெஸ்டில் எவ்வளவு?
...
65 அப்போ எடுத்தது குறைவுனு தானே டியூஷன் வெச்சது? இப்போ டியூஷன் வெச்சு என்ன பிரயோஜனம்? வெறும் 5 மார்க் கூட எடுக்க தானா?
மறுமுனை : .......
மேத்ஸ் எவ்வளவு?
64
ஊர்ல யார் கேட்டாலும் ரோஷினிக்கு கணக்கு நல்லா வரும் நல்லா வரும்னு சொல்லிட்டிருக்கா உன் அம்மா.
கணக்கு படிக்கணும்னு சொல்லி தானே கம்பியூட்டரெல்லாம் வாங்கினெ? இப்போ என்ன? கம்பியூட்டர எல்லாம் ஆஃப் பண்ணி போடு , எதுக்கு அது?
மறுமுனை : ........
பயாலஜி எவ்வளவு?
78
ப்ளஸ் டூவிலே இப்படி மார்க் எடுத்தா மானேஜ்மென்ட் கோட்டாவில தான் சீட் கெடைக்கும். நான் ஒண்ணும் காசு தர மாட்டேன்.. பாத்துக்கோ..
உன் வாழ்க்கை லட்சியம் தான் என்ன?
ஏதும் ஐடியா இருக்கா இல்லையா?
(லைனில் ஏதோ தடங்கல் ஏற்பட, தொடர்பு துண்டிக்கப்படுகிறது..)
நான் அவரிடம் கேட்டேன், உங்க மகள் எந்த வகுப்பு படிக்கிறா??
எட்டாம் வகுப்பு !, என்றார் அவர் !!
சுப்ஹானல்லாஹ் !!!
இப்போ அவளுக்கு நாளை காலைல என்ன சாப்பாடு அம்மா வெச்சு தருவா, அவளுக்கு பிடிச்ச சிக்கன் கிடைக்குமா அல்லது, பிடிக்காத இட்லி தானா?
இன்னைக்கி க்ளாஸ்ல அவகூட சண்ட போட்ட அவ ஃஃப்ரெண்ட் நாளைக்கு பச்சம் பிடிப்பாளா மாட்டாளா?
இதெல்லாம் தான் சேட்டா அவளோட இப்பொதைய லட்சியம், நீங்க என்ன சார் எட்டாம் கிளாஸ் பிள்ளைய இப்பவே விண்வெளிக்கு அனுப்பறீங்க??
என்று கேட்க, முகம் சுளித்தார் நம்ம சேட்டன்.
பிள்ளையை விட்டு பிரிந்திருப்பதோ வெகு தொலைவில்.. குழந்தைக்கு, தான் பேசுவது தமது தந்தையுடன், என்கிற எண்ணம் தான் வர வேண்டுமே தவிர, பள்ளிக் கூட ஆசிரியருடன் அல்லது அவள் தினமும் பார்க்கும் கண்டிப்பான் டியூஷன் வாத்தியாருடன் பேசும் எண்ணம் வரக்கூடாது.
அதற்கு அவள் பேசாமல் ஸ்கூலிலேயே தங்கிக் கொள்ளலாமே? எதற்கு அம்மா, எதற்கு அப்பா??
படிப்பு, படிப்பு, மார்க், ரேன்க், பரீட்சை, ப்ளஸ் டூ, எதிர்காலம் லொட்டு லொசுக்கு என பிஞ்சுகளின் உள்ளங்களை ஏன் பாரமாக்குகிறீர்கள்??
நாளை விடிந்தால் பள்ளிக்கூடம் செல்ல அவள் மனம் விரும்ப வேண்டும்.
மாலை ஆனால் வீடு தேடி ஓடி வர அவள் ஆசை கொள்ள வேண்டும்.
வாழ்க்கை மிகவும் சுருக்கமானது.. பிள்ளைகளின் உலகம் ஆனந்தமானது, கவலைகளற்றது !
தங்கள் உலகத்தில் அவர்கள் முதலில் வாழட்டும், பிறகு படிக்கலாம் !
பெற்றோர்களே சிந்தியுங்கள் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக