நிஜத்தில் ஊனமுற்ற இருவரை வைத்து தந்திர வித்தை காட்டுகிற போது, அவர்கள் ஊனமுற்றவர்கள் என்று பார்ப்பவர்களுக்கு தெரியாத காரணத்தால் ஒரு கணம் அது மிரட்சியை ஏற்படுத்துகிறது என்பது உண்மை தான்.
கூடி நின்ற கூட்டத்தில் அனைவருமே அதிர்ச்சியடைகிறார்கள்,அச்சத்தில் உறைகிறார்கள், ஓலமிடுகிறார்கள். (இந்த லின்கை காணவும் - http://vimeo.com/77215100)
இன்றைய நவீன யுகத்தில், விஞ்ஞான அறிவும், கணினியறிவும் தமக்கு நிரம்பி விட்டதாய் பெருமிதம் கொள்கிற இன்றைய மனிதனே இது போன்ற தந்திர வித்தைகளை உண்மை எனவும், மகத்தான அற்புதமொன்று நிகழ்த்தப்பட்டதை போலவும் மிரட்சியடைகின்றான் என்றால்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூஸா நபியின் சமுதாயம், ஃபிர்அவனின் கூட்டத்தார் செய்து காட்டிய வித்தையை கண்டு அதிர்ச்சியடைந்ததில் என்ன வியப்பிருக்க முடியும்?
அந்த கூட்டத்தார் செய்து காட்டியது மகத்தான சூனியம் என்று அல்லாஹ் சொல்வதில் என்ன சந்தேகம் கொள்ள முடியும்?
"மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?'' என்று கேட்டனர். "நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.
"உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. அங்கே அவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்; சிறுமையடைந்தனர். சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். "அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றும் கூறினர். (7:115)
அவர்கள் மூஸா நபிக்கு செய்து காட்டிய சூனியம் மகத்தானதாக இருந்த போதிலும் கூட,
மூஸா நபி செய்தது உண்மையான அற்புதம் என்பதாலும், அவர்கள் செய்தது அற்புதத்தை போன்று பொய்யாக காட்சி அளித்தது என்பதாலும் மூஸா நபியுடனான அந்த போட்டியில் ஃபிர்அவனின் கூட்டத்தார் தோல்வியை தழுவினார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
அவர்கள் செய்தது மகத்தான சிஹ்ராக இருந்தாலும் பார்ப்பவரின் கண்களுக்கு தான் அது அவ்வாறு காட்சியளித்தது என்பதையும் நிஜத்தில் அது வெறும் கண்கட்டி வித்தை தான் என்பதையும் கீழ்வரும் வசனத்தின் மூலம் அல்லாஹ் விளக்குகிறான்.
"இல்லை! நீங்களே போடுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. அல்குர்ஆன் (20 : 66)
மகத்தான சூனியம் என்று சொல்வதாலேயே அது வித்தையல்ல, அது ஒரு அற்புதம் தான் சிலர் கூறுவார்கள் என்றால் இணைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் செய்து காட்டப்படுவதும் கூட அங்கே கூடியிருப்பவர்கள் பார்வையிலும், ஒரு கணம் நமது பார்வையிலும் மகத்தான செயலாகவே தோன்றியது.
ஆனால், எத்தகைய காரியம் நமது கண்களுக்கு மகத்தானதாக தோன்றினாலும் நிச்சயம் அதில் ஏதேனும் வித்தை தான் ஒளிந்திருக்குமேயொழிய நிச்சயமாக அது அவனது அற்புத செயலாக இருக்கவே இருக்காது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டுள்ள இறை நம்பிக்கையாளர்கள், இந்த செயலில் ஒளிந்துள்ள மர்மம் என்ன என்பதை குறித்து தங்களது சிந்தனையை செலுத்துகிறார்கள், ஆகவே அவர்களுக்கு உண்மை புலப்படுகிறது !!
ஆனால், எப்படிப்பட்ட காரியத்தையும் ஒரு மனிதனால் செய்ய முடியும் என்று நம்புகிற இனைவைப்பாளர்களோ, இது போன்ற வீடியோவை கண்டால், ஏகத்துவவாதிகள் சிந்திப்பது போல் சிந்திக்க கூடாது.
மாறாக, ""இதிலென்ன ஆச்சர்யம், சூனியத்தில் கை தேர்ந்தால் இப்படி எதையும் செய்யலாம், இங்கு அந்த நபர்
செய்வதும் கூட அது போன்ற அற்புத செயல் தான்"" என்றே சொல்ல வேண்டும்.
இவ்வாறு சொன்னால் தான் இவர்கள் கொண்டிருக்கும் கொள்கையில் இவர்கள் உன்மையாளர்களாய் இருக்கிறார்கள் என்று கருத்தாகும்.
அல்லாமல், நாம் சிந்திப்பது போல் இதிலும் ஏதேனும் தந்திரம் இருக்கும் என்கிற ரீதியில் இவர்கள் சிந்திப்பார்களேயானால், இவர்கள் கொண்டிருக்கும் கொள்கைக்கு முரணாய் செயல்படுகிறார்கள் என்பதே பட்டவர்த்தனமாகும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக