செவ்வாய், 8 அக்டோபர், 2013

அதென்ன தலித் முஸ்லிம் ?


இஸ்லாத்தில் ஜாதிகள் உண்டு என்று சொல்வதாக இருந்தால் அவ்வாறு சொல்லப்பட்டதாக இஸ்லாமிய வேத, சித்தாந்தங்களிலிருந்து காட்ட வேண்டும்
அல்லாமல், அரசாங்கம் தலித் முஸ்லிம்களுக்கு சலுகை வழங்கி திட்டங்கள் இட்டதை எடுத்துக் காட்டி, பார்த்தீர்களா, முஸ்லிம்களிலும் தலித் இருக்கிறார்கள் என்று காட்டக் கூடாது. இப்படி ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது.

உலக மக்கள் அனைவருமே ஒரு தாய் தந்தையிடமிருந்து வந்தவர்கள் என்கிற உயரிய தத்துவத்தை வெறும் தத்துவமாக மட்டும் சொல்லாமல் அதற்கு செயல் வடிவமும் கொடுத்து நடைமுறைப்படுத்தியுள்ள மார்க்கம் இஸ்லாம்.

இந்த மார்க்கத்தில் ஜாதிகள் இல்லை என்பதோடு, முஹம்மது நபி இறை தூதராக நியமிக்கப்பட்டதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றே மனிதகுலத்தில் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்க கூடாது என்பதை போதிப்பதற்காக தான் எனும் போது இஸ்லாமிய தலித் அல்லது தலித் முஸ்லிம் என்கிற சொல்லாக்கமே தவறு !

ஹிந்து மதத்தில் தான் அவர்களது மத நம்பிக்கையே இத்தகைய ஜாதி வேற்றுமையை ஊட்டி வருகிறது. கடவுளின் தலை வழியாய் பிறந்தவனும் கால் வழியாய் பிறந்தவனும் சமமாக மாட்டான் என்கிற போலி தத்துவம் பாமரர்களின் சிந்தனையை விட்டும் வெகு தொலைவில் நிற்பதாலோ என்னவோ கடவுளின் கால் வழியாக பிறந்தவனாய் தன்னைப் பற்றி எண்ணிக்கொள்பவன் அதிலிருந்து மீள முடியாமல் இருக்கிறான்.

கடவுளின் தலையாய் இருந்தால் என்ன, கடவுளின் காலாக இருந்தால் என்ன, அனைத்தும் கடவுள் என்கிற மகா சக்திக்குரியது தான் என்று, கடவுளை சர்வ வல்லமை பெற்றவனாக அந்த பாமரன் எண்ணியிருந்தாலாவது தலையும் காலும் சமம் தான் என்று நம்பி தாழ்த்தப்பட்டவன் என்கிற முத்திரையிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டிருப்பான்.

என்ன செய்ய? இது போன்ற மூட நம்பிக்கை மதங்கள் தான் கடவுளின் தன்மையை கூட சரியான முறையில் போதிக்கவில்லையே..
கல்லும் மண்ணும், நாயும் எருமையும் கூட கடவுள் என்றால் தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவனாகவே தானே இருப்பான்?

தாங்கள் பின்பற்றுகிற மதமே தங்களை தீண்டத்தகாதவர்கள் எனவும் தாழ்த்தப்பட்ட ஜாதி எனவும் முத்திரை குத்தி விட்ட பிறகு அதை தலை குனிவுடன் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் என்கிற பரிதாபகரமான நிலையில் "தலித்" கூட்டம் இருக்க, இவர்களது இத்தகைய பரிதாபகரமான நிலையை கூட தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்த முற்படுகின்றன மற்ற மற்ற வகுப்பினர்.

ஒரு சமூகத்தை நாமாக மட்டம் தட்டி விட்டு, நீ மட்டம் தட்டப்பட்டிருக்கிறாய், ஆகவே இந்த பணத்தை வைத்துக் கொள் என்று சொல்வது எவ்வளவு பெரிய அநீதி என்பதை கூட புரிய இயலா வண்ணம், சாதியத்தீ "தலித்துகளையும்" கூட ஆட்கொண்டு விட்டது !

ஆனால்,

கடவுளின் இலக்கணத்தையும் சரியான முறையில் போதிக்கக் கூடிய, அதோடு பிறப்பால் வேற்றுமை காட்டும் இது போன்ற மூட நம்பிக்கைகளின் பால் மக்கள் வீழ்ந்து விடாமல் காக்கின்றன பணியை செய்யக்கூடிய ஒரே சித்தாந்தமான இஸ்லாம், ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பிறப்பாலும் அந்தஸ்தினாலும் சமமாக்குகிறது.

இதை விரும்பி ஏற்றுக் கொள்பவன் கிறிஸ்தவ மதத்திலும் இருப்பான், ஹிந்துகளின் பிராமண சாதியிலும் இருப்பான், தாழ்த்தப்பட்ட தலித்திலும் இருப்பான்.

கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்தை நோக்கி வந்த ஒருவனை கிறிஸ்தவ முஸ்லிம் என்று சொல்வது எப்படி முரண்பாடானதோ அது போன்றே தலித்தாக இருந்து முஸ்லிமான ஒருவனை தலித் முஸ்லிம் என்று குறிப்பிடுவதும் முரண்பாடானதே !

முஸ்லிம் என்றால் அவன் தலித் இல்லை, தலித் என்றால் அவன் முஸ்லிமில்லை !

தலித் என தான் மட்டம் தட்டப்படுவதை பொறுத்துக்கொள்ள இயலாமல் மனம் வெறுத்து தான் ஒருவன் இஸ்லாத்தை நோக்கி வருகிறான் எனும் போது மீண்டும் அவனை தலித் என்று சொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கதும் கூட !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக