வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி - பாகம் 3

By TNTJ

மூளை வெந்த ஹிஜ்ரா கமிட்டிக்கு பதிலடி!
( பாகம் 3 )

---------------------------------------------------------------------------

ருஃயத் மற்றும் கும்ம என்பதன் பொருள் என்ன? 

----------------------------------------------------------------------------
மடமைவாதம் மூன்று

ருஃயத் என்றால் என்ன ?

தங்களது வலுவான வாதமாக இவர்கள் முதலில் எடுத்து வைத்திருப்பது ருஃயத் என்கிற வார்த்தை குறித்த சில தகிடுதத்தங்கள்.

பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்பதாக வரக்கூடிய ஹதீஸில் ருஃயத் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வார்த்தைக்கு நாம் கொடுப்பது போன்று "பார்த்தல்" என்கிற அர்த்தம் கொடுக்க கூடாது என்றும் அதற்கு சிந்தித்தல் என்கிற அர்த்தம் தான் கொடுக்க வேண்டும் எனவும், குர்ஆனிலும் பல இடங்களில் அந்த அர்த்தத்தில்தான் ருஃயத் என்கிற வார்த்தை பொருள் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறி, தவ்ஹீத் ஜமாஅத் தமிழாக்கத்திலும், மொழியறிவிலும் மிகப்பெரிய தவறை செய்துள்ளது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

நமது பதில் மூன்று
உண்மையில் யார் மிகப்பெரிய தவறைச் செய்கிறார்? யாருக்கு மொழியறிவும் இலக்கண அறிவும், குர்ஆன் பற்றிய ஞானமும் இல்லை? என்பதற்கான சான்றுகளை
தொடர்ந்து படியுங்கள்.

குர்ஆனிலோ ஹதீஸிலோ ஒரு வார்த்தை என்ன அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அந்த அர்த்தத்தை வைத்து நமது நிலைபாட்டினை அமைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

ஆனால், இந்த பிறை வியாபாரிகளின் கொள்கையானது, நிலைபாட்டினை முதலில் எடுத்து விட்டு, அதன் பிறகு அந்த நிலைபாட்டிற்கு ஏற்றார் போல குர்ஆன் ஹதீஸ் வசனங்களுக்கு பொருள் கொடுக்க முடியுமா? எனச் சிந்திப்பார்கள்.

இதை நாம் காரண காரியங்களுடனேயே சொல்கிறோம் என்பதை இவ்வாக்கத்தைப் படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்கிற ஹதீஸில் வரக்கூடிய ருஃயத் என்கிற வார்த்தைக்கு கண்ணால் பார்த்தல் என்கிற அர்த்தத்தை நாம் கொடுக்கிறோம்.

இதை விமர்சித்துள்ள இந்தக் கூட்டம், தங்களை அறிவாளிகள் என்று காட்டிக் கொள்ள முயற்சித்து, ருஃயத் என்பதற்கு பார்த்தல் என்கிற அர்த்தம் மட்டும் கிடையாது; அறிவால் அறிதல், புரிந்து கொள்ளுதல் எனப் பல அர்த்தங்கள் உள்ளன; அகராதிப்படியும் உள்ளன; குர்ஆனிலேயே கூட ஏராளமான வசனங்களில் அறிதல் என்கிற பொருளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி, பிறை பார்த்து முடிவு செய்யுங்கள் என்றால் கண்ணால்தான் பார்க்க வேண்டும் என்ற அர்த்தமில்லை, அறிவால் சிந்தித்து புரிந்து கொள்வதைத் தான் குறிக்கும் என்று வியாக்கியானம் கொடுக்கின்றனர்.

இந்த வியாக்கியானம் புதிதல்ல. பல வருடங்களுக்கு முன்பும் இதே வறட்டு வாதத்தை இவர்கள் வைத்து, அதிலுள்ள அபத்தங்களுக்கு தெளிவான முறையில் நம்மால் விளக்கமும் கொடுக்கப்பட்டன.

ஆனால் வேடிக்கை, அன்று ருஃயத் என்கிற வார்த்தைக்கு சிந்தித்து அறிதல் என்று பொருள் செய்ய வேண்டும் என்பதை நிலைநாட்ட அவர்கள் வேறொரு வாதத்தை வைத்திருந்தார்கள்!

அதாவது பார்த்தல் என்கிற வார்த்தையுடன் (ருஃயத்) "கண்ணால்" என்கிற சொல் (ஐன்) என்பது சேர வேண்டும், அப்படிச் சேர்ந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று பொருள் வரும். வெறுமனே ருஃயத் என்றால் சிந்தித்தல் என்று தான் அர்த்தம் வைக்க வேண்டும் என்பது தான் அன்றைக்கு இவர்களது வாதமாக இருந்தது.

இந்த மடமைத் தனத்திற்கு அன்றைக்கே கீழ்கண்டவாறு மறுப்பு கொடுக்கப்பட்டது.

இவர்களின் மதியீனத்தைக் காட்டும் வகையில் ரஃயல் ஐன் என்ற வார்த்தை வந்தால் தான் புறக்கண்ணால் பார்த்ததாக அர்த்தம் வருமாம். அதாவது ரஃய் என்றால் பார்த்தல் என்பது பொருள். ஐன் என்றால் கண் என்பது பொருள். பார்த்தல் என்பதுடன் கண்னைச் சேர்த்து கண்ணால் பார்த்தல் என்று ஆதாரம் உண்டா எனக் கேட்கின்றனர்.

சாப்பிட வேண்டும் என்றாலும் வாயால் சாப்பிட வேண்டும் என்றாலும் ஒரே அர்த்தம் தான். அது போல் பார்த்தல் என்றாலும் கண்ணால் பார்த்தல் என்றாலும் ஒரே அர்த்தம் தான்.

ஆனால் எந்த மொழியாக இருந்தாலும் பார்த்தல் என்பதற்கு கண்ணால் பார்த்தல் என்றுதான் பொருள் செய்ய வேண்டும். அந்த அர்த்தம் பொருந்தாத இடத்தில் மட்டும் தான் வேறு பொருத்தமான அர்த்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ரஃயல் ஐன் என்ற வார்த்தை இருந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று அர்த்தம் செய்வார்களாம்.

அல்லாஹவைக் காட்டு என்று மூஸா நபி சமுதாயம் கேட்ட போது வெறும் ரஃய் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்ணுக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? கருத்துக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா?
இது போல் நூற்றுக் கணக்கான வசனங்களில் ஐன் என்ற வார்த்தை சேராமல் தான் ரஃய் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அதற்கு கண்களால் பார்த்தல் என்று பொருள் இல்லை என்று சொல்வார்களா?
இந்த கேள்விக்கு விடை சொல்ல இயலாத இந்தக் கூட்டம், மீண்டும் அதே ருஃயத் என்பதை எடுத்துக் கொண்டு, வேறு என்ன வகையில் வியாக்கியானம் கொடுப்பது என்று இத்தனை வருடங்கள் தலையைப் பிய்த்து மேலே நாம் சுட்டிக்காட்டிய இந்த வாதத்தைக் கண்டுபிடித்துள்ளது.

இது குறித்து விளக்கமாகவே பார்ப்போம்.

لسان العرب - (ج 14 / ص 291)
( رأي ) الرُّؤيَة بالعَيْن تَتَعدَّى إلى مفعول واحد وبمعنى العِلْم تتعدَّى إلى مفعولين يقال رأَى زيداً عالماً ورَأَى رَأْياً ورُؤْيَةً ورَاءَةً مثل راعَة وقال ابن سيده الرُّؤيَةُ النَّظَرُ بالعَيْن والقَلْب
ருஃயத் என்பது கண்ணால் காண்பது என்ற பொருளில் வந்தால் அதற்கு ஒரு மஃப்வூல் (object) தான் வரும். ”அறிதல்” என்ற பொருளில் வரும்போது அதற்கு இரண்டு மஃப்வூல் (object) வரும்.
நூல் லிஸானுல் அரப் பாகம் 14 பக்கம் 291
உதாரணம்
رأيت محمدا
முகம்மதைப் பார்த்தேன்
رأيت محمدا عالما
முகம்மதை ஆலிமாகப் பார்த்தேன்
முதலாவது உதாரணத்தில் பார்த்தல் என்பதற்கு முகம்மத் என்ற ஒரு ஆப்ஜெக்ட்டு தான் வந்துள்ளது.
ஒரு ஆப்ஜக்ட் வந்தால் கண்ணால் காண்பது என்பதைத் தவிர வேறு பொருள் கொடுக்க முடியாது.

இரண்டாவது உதாரணத்தில் ”பார்த்தல்” என்ற செயலுக்கு 1. முகம்மத் 2. ஆலிம் என்ற இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.
இவ்வாறு இரண்டு ஆப்ஜெக்ட் வந்தால் தான் அறிதல் என்ற பொருள் வரும். சில நேரங்களில் அரிதாக இரண்டு ஆப்ஜெக்ட் வரும் போது கண்ணால் பார்த்தல் என்ற பொருளும் வரலாம்.
ஆனால் ”பார்த்தல்” என்ற சொல்லுக்கு ஒரு ஆப்ஜெக்ட் வந்தால் கண்டிப்பாக அது கண்ணால் பார்த்தல் என்ற பொருளை மட்டும்தான் கொடுக்கும்.
பிறை பார்த்தல் என்பதில் ”பார்த்தல்” என்ற செயலுக்கு ஒரு ஆப்ஜெக்ட்தான் வந்துள்ளது. எனவே இதற்கு கண்ணால் காண்பதைத் தவிர வேறு பொருள் கொடுக்க முடியாது.
பிறையை பார்த்து நோன்பு வையுங்கள். பிறையை பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் முப்பாதாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
என்கிற ஹதீஸில் ”பார்த்தல்” என்பதற்கு ”பிறை” என்ற ஒரு ஆப்ஜக்ட்டு தான் வந்துள்ளது.
”பிறை என்பது, “சந்திரனில் தோன்றும் முதல் ஒளி வடிவம் ஆகும்”. எனவே இங்கே கண்ணால் காணுதல் என்ற பொருளை மட்டும்தான் கொடுக்க முடியும். அறிதல் என்ற பொருளைக் கொடுப்பது மார்க்கத்தின் அடிப்படையிலும், அரபி மொழி அகராதி அடிப்படையிலும் தவறானதாகும்.
திருமறைக்குர்ஆனில் ”பார்த்தல்” என்ற வினைச்சொல் அதிகமாக இரண்டு ஆப்ஜெக்டுகளைக் கொண்டுதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆப்ஜக்டுகள் வரும் போது அறிதல் என்ற பொருள்தான் பெரும்பாலும் வரும்.
யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 105 : 1)
மேற்கண்ட வசனத்தில் யானையைப் பார்க்கவில்லையா? என்று மட்டும் அல்லாஹ் கூறியிருந்தால் அது கண்ணால் பார்ப்பதை மட்டும்தான் குறிக்கும்.
ஆனால் மேற்கண்ட வசனத்தில் ”பார்த்தல்” என்ற வினைச்சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.
1. யானைப்படையை (பார்த்தல்)
2. எப்படி அழித்தான் என்ற செயலைப் (பார்த்தல்).
எனவே இங்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளதால் இங்கு ருஃயத் என்பதின் பொருள் அறிதல் என்பதாகும்.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்ற (அற்பமான)வர்களைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா?
அல்குர்ஆன் 17 : 99

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வைப் பார்க்கவில்லையா? என்று மட்டும் வந்தால் அது கண்ணால் பார்த்தல் என்ற பொருளை மட்டும்தான் தரும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

1. அல்லாஹ்வை (பார்த்தல்)
2. அவனுடைய படைப்பாற்றலைப் (பார்த்தல்)

இங்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளதால் இதற்கு அறிதல் என்ற பொருள் தான் கொடுக்க வேண்டும்.

மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் அறியவில்லையா?
(அல்குர்ஆன் 2 : 243)

மேற்கண்ட வசனத்தில் ஊர்களை விட்டு வெளியேறியோரை பார்க்கவில்லையா? என்று மட்டும் வந்தால் கண்ணால் பார்த்தல் என்று பொருள் மட்டும்தான் வரும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் ”பார்த்தல்” என்ற வினைச்சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.
1. ஊரை விட்டு வெளியோரை (பார்த்தல்)
2. மரணத்திற்கு அஞ்சுவதை (பார்த்தல்)

இங்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளதால் இங்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.

ஆது, தூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?
அல்குர்ஆன் 89 : 6, 7
மேற்கண்ட வசனத்தில் ”பார்த்தல்” என்ற வினைச் சொல்லுக்கு இரண்டு ஆப்ஜக்டுகள் வந்துள்ளது.
1. ஆது, இரம் சமுதாயத்தைப் (பார்த்தல்)
2. அவர்களை எப்படி ஆக்கினான் என்பதை (பார்த்தல்)
எனவே இங்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.
அதே சமயம், கீழ்க்காணும் வசனங்களைப் பாருங்கள்..
அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள்.
அல்குர்ஆன் 102 : 5,6
மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லுக்கு ஒரு ஆப்ஜெக்ட்டு தான் வந்துள்ளது எனவே இது கண்ணால் காண்பதை மட்டும் தான் குறிக்கும்.
மொத்தத்தில் ”பார்த்தல்” என்ற வினைச் சொல்லிற்கு ஒரு ஆப்ஜெக்ட் வந்தால் அதற்கு கண்ணால் பார்த்தல் என்ற பொருள் மட்டும்தான் வரும். வேறு பொருள் வராது.
இரண்டு ஆப்ஜெக்ட் வரும் போது தான் அங்கே அறிதல் என்ற பொருள் வரும். திருமறைக்குர்ஆனில் அறிதல் என்ற பொருள் கொள்வதற்கு சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டும் வசனங்கள் அனைத்தும் இரண்டு ஆப்ஜெக்ட்டாக வரக்கூடியவை தான்.
பிறைபார்த்தல் பற்றிய ஹதீஸ்களில் ”பார்த்தல்” என்ற வினைச் சொல்லிற்கு ”பிறை” என்ற ஒரு ஆப்ஜக்ட்டு தான் வந்துள்ளது. எனவே இது கண்ணால் காண்பதை மட்டும்தான் குறிக்கும்.
குர்ஆனில் கண்ணால் காணுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட சில இடங்கள்.
நட்சத்திரத்தைப் பார்த்தார் (6 : 76)
சந்திரனைப் பார்த்தார் (6 : 77)
சூரியனைப் பார்த்தார் (6 : 78)
ஆதாரத்தைப் பார்த்தார் (11 : 70)
சட்டையைப் பார்த்தார் 12 : 28
இணைக் கடவுள்களைப் பார்த்தல்
(16 : 86)
நரகத்தைப் பார்த்தல் 16 : 83, 20 : 10
கூட்டுப் படையைப் பார்த்தல் 33 : 22
இறை அத்தாட்சியில் மிகப் பெரியதைப் பார்த்தல் 53 : 18
தெளிவான அடிவானத்தில் கண்டார்
81 : 23
இப்படி பார்த்தல் என்ற ரீதியில் ஆய்வு செய்தால் கண்ணால் பார்த்தல் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை குர்ஆனில் காணமுடியும்

ஆக, இவர்களது இந்த வாதமும் தவிடு பொடியாகிப்போனது !

பிறையை பார்த்தல் - என்பது கண்ணால் பார்த்தலைத் தான் குறிக்கும் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகி விட்ட நிலையில் பிறையைக் கணக்கிடலாம், விஞ்ஞான ரீதியாகச் சிந்திக்கலாம் என்பன போன்ற வாதங்கள் அனைத்தும் விழுந்து நொறுங்கி விட்டன.

தங்களது இந்த வாதத்தில் தாங்களே நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை, தொடர்ந்து இவர்கள் வைக்கும் அடுத்தடுத்த கேள்விகள் நிரூபிக்கின்றன.

மடமைவாதம் நான்கு

கிராமவாசிகள் சம்மந்தமான ஹதீஸில் இது போல பிறை பார்த்தல் பற்றி கூறப்பட்டுள்ளதே, இங்கு ருஃயத் என்கிற சொல் எங்கே உள்ளது என்பது இவர்களது முதல் கேள்வி.

இந்த ஹதீஸ் முர்ஸல் வகையைச் சார்ந்தது, இதை எப்படி ஆதாரமாகக் கொள்ளலாம் என்பது இவர்களது அடுத்த கேள்வி.

பதில் நான்கு
உச்சகட்டமாக, மேலும் சில வினோதமான கேள்விகளை முன் வைத்து, சிந்தனைக்கும் தங்களுக்கும் வெகுதூரம் என்பதை வெட்கமின்றி வெளிக் காட்டியுள்ளனர்.

அதில் ஒன்று, பிறையை தான் கண்ணால் காண வேண்டும் என்றும் காணவில்லை என்றால் 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் உங்கள் கருத்துப்படி சொல்லப்பட்டு விட்டதே, பிறகு ஏன் சஹாபாக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது? ஏன் கருத்து வேறுபாடு கொண்டனர்? என்கிற கேள்வி.
ஒரு ஊரார் பார்த்த நாளுக்கு மறுநாள் இன்னொரு ஊரார் பிறை பார்த்தால் முப்பது எது என்பதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வரும் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இப்படி கேட்கின்றனர்.

இவர்களின் இந்தக் கேள்விக்கு நம்மிடம் உள்ள பதிலைக் கூறிவிட்டோம்.

இவர்களின் வாதத்தின் படி இந்தக் கேள்விக்கு இவர்களால் பதில் சொல்ல முடியுமா?

பிறையைப் பார்க்கவே அவசியமில்லை, நாமே கணித்து, சிந்தித்து, ஆய்வு செய்து, கணக்கிட்டு முடிவு செய்து கொள்ளலாம் என்றால், பிறையை பார்த்தவுடன் இன்று நோன்பை விட வேண்டுமா தேவையில்லையா? என்பதை அறியாமலும், வானத்தில் தலையுயர்த்தி இது இரண்டாவது பிறையாக இருக்குமோ? மூன்றாவதாக இருக்குமோ? என்று குழம்பிக் கொள்ளும் நிலையும் சஹாபாக்களுக்கு ஏன் ஏற்பட்டது? என்கிற கேள்வியை நாம் இவர்களை நோக்கி கேட்கிறோம்.

தலை பிறை குறித்து சஹாபாக்கள் தங்களுக்கிடையே விவாதித்துக் கொண்டனர், அதில் கருத்து வேறுபாடு கொண்டனர் என்பதே, அவர்கள் இந்த ஹிஜ்ரா கூட்டம் கொண்டிருப்பதைப் போன்ற கொள்கையை கொண்டிருக்கவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

எது இவர்களுக்கு எதிரான கேள்வியோ அந்தக் கேள்வியை நம்மிடம் கேட்பது உச்சகட்ட வினோதம்.

மேலும் மற்றுமொரு வினோதமான கேள்வியை முன் வைக்கிறார்கள்.

அதாவது, மாதத்தின் இறுதி பற்றி மக்களுக்கு கருத்து வேறுபாடு வந்தது என்று வாகனக்கூட்டம் ஹதீஸில் சொல்லப்பட்டிருப்பதில் இருந்து, அவர்களுக்கு முன் கூட்டியே மாதத்தின் இறுதி தெரிந்திருக்கிறது என்று தானே அர்த்தம்? அதனால் தானே கருத்து வேறுபாடு கொள்ள நேர்ந்தது? என்று கேட்கிறார்கள்.

இவர்கள் எந்த அளவுக்கு குறுமதி கொண்டவர்களாக உள்ளனர் என்பதற்கு இதுவும் ஆதாரமாக உள்ளது.
மாதத்தின் இறுதி பற்றி கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றால் அதைப் பற்றி சர்வதேசப் பிறை என்ற கிறுக்குத்தனம் அந்த மக்களிடம் இல்லை என்பதற்குத் தான் ஆதாரமாக உள்ளது. ஒருவர் பார்த்து மற்றவர் பார்க்காததால் எது கடைசி என்று கருத்து வேறுபாடு வரத்தானே செய்யும்.

ஒரு மாத இறுதியில் மக்கள் முதல் பிறை குறித்து கருத்து வேறுபாடு கொள்வது விஞ்ஞான ரீதியாக பிறையை கணிக்கலாம் என்பதற்கு ஆதாரமா?

முன்கூட்டியே மாதம் முடியும் கணக்கை அறிந்திருந்தால் தானே ஒரு சாராருக்கும் மற்றொரு சாராருக்கும் கருத்து வேறுபாடு வரும்? என்று கேட்கிறார்கள்.
தங்களது சிந்தனை அடகு வைக்கப்பட்டு விட்டது என்பதற்கு இவர்களது இந்த ஒரு கேள்வியே சான்று பகர்கிறது.

தலைப்பிறை பார்த்து ஒரு மாதத்தை துவங்கி விட்டார்கள் என்றால் ஒவ்வொரு நாளையும் எண்ணுவதற்கு சஹாபாக்களுக்குத் தெரியும். இது முதல் பிறை, இது இரண்டாவது பிறை என்று எண்ணி ,இறுதியில் 29 பிறைகள் முடிந்தால் மறு பிறை தென்பட்டதா இல்லையா? என்கிற கருத்து வேறுபாடுகள் வரும். இது ஒவ்வொரு மாதமும் பிறையைக் கண்ணால் பார்த்து மாதங்களை தீர்மானிப்பவர்களிடையே ஏற்படும். இதற்கும் பிறையை முன்கூட்டியே கணிக்க வேண்டும் என்பதற்கும் என்ன சம்மந்தம் உள்ளது?
அல்லது இதிலிருந்து முன் கூட்டியே பிறையை / மாதங்களை முடிவு செய்ய என்ன சான்று இருக்கிறது?

இந்த வாதங்கள் எல்லாம் அர்த்தமற்றது என்று இவர்களுக்கே தெரியும் என்பதால், இடையிடையே சம்மந்தப்பட்ட இந்த ஹதீஸ் (வாகனக்கூடம்) பலகீனமானது என்று வேறு கூறிக் கொள்கிறார்கள். அதற்கு, இந்த செய்தி முர்ஸல் வகையைச் சேர்ந்தது என்று காரணம் கூறுகிறார்கள்.

இவர்களுக்கு மொழியறிவும் இல்லை, அரபு இலக்கணமும் தெரியாது, குர்ஆன் ஹதீஸை அணுகும் முறையும் தெரியாது, இப்போது ஹதீஸ் கலையும் தெரியாது என்று நிரூபிப்பதற்காகவே இது போன்ற வாதத்தை வைத்திருக்கிறார்கள்.

முர்ஸல் என்பது இரண்டாம் தலைமுறையினர் (தாபியி) நபியவர்கள் கூறியதாக அறிவிப்பதாகும். நபிக்கும், தாபியிக்கும் மத்தியில் நபித்தோழரோ அல்லது தாபியீயும் நபித்தோழருமோ விடுபட்டிருப்பர்.
விடுபட்டவர் தாபியீயாக இருந்தால் அவர் யார் என்று தெரிய வேண்டும். எனவே அது பலவீனமானதாகும்.

அபூதாவூதில் பதிவாகியுள்ள கிராமவாசிகள் பற்றிய செய்தியில் நபித்தோழர் விடுபடவில்லை. மாறாக அந்த நபித்தோழரின் பெயரைக் குறிப்பிட்டவில்லை என்பதே உண்மையாகும்.
1992 حَدَّثَنَا مُسَدَّدٌ وَخَلَفُ بْنُ هِشَامٍ الْمُقْرِئُ قَالَا حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اخْتَلَفَ النَّاسُ فِي آخِرِ يَوْمٍ مِنْ رَمَضَانَ فَقَدِمَ أَعْرَابِيَّانِ فَشَهِدَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّهِ لَأَهَلَّا الْهِلَالَ أَمْسِ عَشِيَّةً فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ أَنْ يُفْطِرُوا زَادَ خَلَفٌ فِي حَدِيثِهِ وَأَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ * رواه ابوداود
அதாவது ”ரிப்யீ பின் ஹிராஷ்” (தாபியீ) என்பவர் நபித்தோழர்களில் ஒருவரிடமிருந்து அறிவிக்கிறார் என்றே இடம் பெற்றுள்ளது.
எனவே இது முர்ஸல் என்று கூறுவது அறியாமையாகும்.
ஸஹாபாக்கள் அனைவரும் நீதமானவர்கள் என்பதால் அவர்களின் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் நபித்தோழரிடமிருந்து கேட்டேன் என்று நம்பகமான தாபியீ சொன்னாலே அது ஆதாரப்பூர்வமானதாகும். இதுதான் ஹதீஸ் கலை விதியாகும்.
முர்ஸல் என்பதில் ஸஹாபி விடுபட்டாரா சஹாபியும் தாபியீயும் விடுபட்டாரா என்ற சந்தேகம் இருக்கும்.
இங்கு ஸஹாபி தான் அற்விக்கிறார் என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளதால் இது முர்சல் கிடையாது. இது போன்ற அறிவீனர்கள் எல்லாம் ஆய்வு செய்யப் புகுந்தால் அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

அடுத்ததாக, ருஃயத் என்றால் பார்த்தல் என்று பொருள் இருப்பதாகச் சொல்பவர்கள் இந்த வாகனக்கூட்டம் ஹதீஸில் ருஃயத் என்கிற வார்த்தை எங்குள்ளது? என்று காட்டுவார்களா எனக் கேட்கிறார்கள்.

""அப்துல்லாஹ்வை நான் கண்டேன்"" என்று ஒருவர் தனது நூலில் எழுதுகிறார் என்று வைப்போம். சில காலங்களுக்குப் பிறகு மற்றொரு சபையில் அது பற்றி பேசும் போது அப்துல்லாஹ்வை நான் பார்த்தேன், இதை நான் பல வருடங்களுக்கு முன்பே இந்த நூலில் எழுதியுள்ளேனே? என்று சொல்லும் போது, எங்கே அவ்வாறு எழுதியுள்ளீர்கள்?? உங்கள் எழுத்தில் "பார்த்தேன்" என்கிற வார்த்தை எங்கே உள்ளது?? எடுத்துக் காட்ட முடியுமா?? என்று ஒருவர் கேட்டால் அவரது அறிவின் ஆழத்தை (?) குறித்து நாம் என்ன எடை போடுவோம்??
கிராமவாசிகள் பிறை பார்த்தது தொடர்பாக வரக்கூடிய ஹதீஸில் ”ருஃயத்” என்ற வார்த்தை இடம் பெறவில்லை. ஆனால் ”அஹல்ல” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.
المحكم والمحيط الأعظم - (ج 2 / ص 126) وأهَلَّ الرجل: نظر إلى الهِلال. وأهلَلنا هِلال شهر كذا، واستَهْلَلناه: رأيناه
”அஹல்ல” என்று சொன்னால் ”பிறையை நோக்கிப் பார்த்தான்” ”பிறையைக் கண்களால் பார்த்தான்” என்பதாகும்.
நூல் அல்முஹ்கம் வல் முஹீத்துல் அஃளமு. பாகம் 2 பக்கம் 126
மேற்கண்ட கிராமவாசிகள் பற்றிய ஹதீஸில் ”அஹல்லா அல்ஹிலால” என்று இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் ”அந்த இருவரும் பிறையை கண்களால் பார்த்தார்கள்” என்பதாகும்.
இந்த வகையிலும் இவர்களது வறட்டு சிந்தனை சந்தி சிரிப்பதை காணலாம்.



மடமை வாதம் ஐந்து
கும்ம என்பதன் பொருள் என்ன?

அடுத்ததாக, "உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் 30 ஆகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்பதாக வரும் ஹதீஸில் மேகமூட்டம் என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் "கும்ம" என்கிற சொல் உள்ளது, இதற்கு மேகமூட்டம் என்கிற பொருள் வராது, அறிவிற்கு எட்டாத, சிந்தனை விட்டும் மறைந்த.. என்பதாகத் தான் பொருள் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

நமது பதில் ஐந்து
கும்ம” என்ற சொல்லிற்கு மறைக்கப்படுதல் என்பது பொருளாகும். இது ”ஹிலால்” என்ற வார்த்தையோடு இணைத்து கூறப்படும் போது மேகமூட்டத்தால் மறைக்கப்படுதல் என்பது பொருளாகும்.
المحكم والمحيط الأعظم - (ج 2 / ص 390) وغُمّ الهلالُ غَماًّ: ستره الغيمُ فلم يُرَ.
”கும்ம அல்ஹிலாலு கம்மன்” என்பதின் பொருள் ”பிறையை மேகம் மறைத்தது. அது பார்க்கப்படவில்லை” என்பதாகும்.
நூல் அல்முஹ்கம் வல் முஹீத்துல் அஃளம் என்ற அரபி அகராதி நூல் . பாகம் 2 பக்கம் 390
ஒரு வாதத்திற்கு ”மேக மூட்டம்” என்ற வார்த்தையை நீக்கிவிட்டு ”பிறை மறைக்கப்பட்டது” என்று மட்டும் பொருள் செய்தால் கூட இது கண்பார்வைக்கு மறைந்திருப்பதைத்தான் குறிக்கும்.
”அறிதலை” விட்டும் மறைதல் என்று பொருள் வராது.
ஏனென்றால் பார்த்தல் என்பதற்கு ஒரு ஆப்ஜக்ட் வருமென்றால் அது கண்ணால் காண்பதை மட்டும்தான் குறிக்கும்.
பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையை பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் முப்பாதாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
என்ற ஹதீஸில் பார்த்தல் என்பதற்கு பிறை என்ற ஒரு ஆப்ஜெக்ட் மட்டும் வந்துள்ளதால் அது கண்பார்வைக்கு மறைக்கப்படுவதை மட்டும்தான் குறிக்கும்.
இதை ஏற்கனவே நாம் விளக்கியுள்ளோம்.
அந்த வகையில், கும்ம என்கிற சொல்லுக்கு இந்த இடத்தில் கண்களை விட்டும் மறைதல் என்கிற பொருள் மட்டும் தான் கொடுக்க முடியும். வானத்தில் உள்ள ஒன்றைப் பற்றி பேசுகிற பொழுது, அது கண்களை விட்டு மறையும் என்றால் மேகமூட்டம், புகை மூட்டம், பனிமூட்டம் போன்றவை மறைப்பதை தான் குறிக்க முடியும்.
இதற்கு வலுசேர்க்கும் விதமாக கீழ்க்காணும் இறைவசனங்களிலும் கும்ம என்கிற சொல்லின் வேர் சொல்லான கமாம் என்கிற வார்த்தை - மேகமூட்டம் என்கிற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.
உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். 2:57
ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வா (எனும் உண)வை இறக்கினோம். 7:160
மேகத்தால் வானம் பிளக்கப்பட்டு, வானவர்கள் உறுதியாக இறக்கி வைக்கப்படும் நாள் 25:25
மேற்கண்ட வசனங்களில் மேகம் என்கிற வார்த்தையைக் குறிக்க கமாம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது, அதிலிருந்து பிறந்த சொல்லே "கும்ம".
இந்த விளக்கமும் நாம் புதிதாக கொடுக்கும் விளக்கமல்ல.. இதை நமது முந்தைய மறுப்புகளின் போதே தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால், இதற்கு முறையான எந்தப் பதிலையும் சொல்லாத இந்தக் கூட்டம், மீண்டும் கும்ம என்றால் அறிவுக்கு எட்டாதது, என்கிற பழைய பல்லவியையே பாடி வருகிறது.
இவர்களது மதியீனத்தை வெளிக்காட்டும் முகமாக இன்னும் ஒரு படி மேலே சென்று கும்ம என்பதற்கும் கமாம் என்பதற்கும் எந்தத் தொடர்புமில்லை, என்றும் நாம் தான் சம்மந்தமேயில்லாமல் கமாம் என்கிற சொல் வருகிற வசனங்களை எடுத்து வைப்பதாகவும், தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு மொழியறிவு கிடையாது என்றும் நம்மை விமர்சித்துள்ளது இந்த வியாபாரிகள் கூட்டம்.
இவர்கள் எழுதவதை எல்லாம் படித்து விசில் அடிப்பதற்கென்றே சில மூளை மழுங்கிய கூட்டத்தை உடன் வைத்திருப்பதால் இது போன்ற வடிகட்டிய முட்டாள்தனத்தை கூட தங்களது கொள்கையாக நிலைநிறுத்தி வாதிட்டாலும் இவர்களது ரசிகர் கூட்டம் விசில் அடிப்பதில் குறைவு காட்ட மாட்டார்கள் என்கிற அபார நம்பிக்கை இவர்களுக்கு.
கமாம் என்பது கும்ம என்ற சொல்லிலிருந்து வந்தது தான். இது பல அரபி அகராதி நூற்களில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு நூற்களில் உள்ள ஆதாரங்கள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது..
உம்தத்துல் காரி என்பது புகாரியின் விரிவுரை நூல். இதே கருத்து அரபி அகராதி நூற்களிலும் உள்ளது.
عمدة القاري شرح صحيح البخاري - (ج 16 / ص 268)
قوله فإن غم عليكم أي فإن ستر الهلال عليكم ومنه الغم لأنه يستر القلب والرجل الأغم المستور الجبهة بالشعر وسمي السحاب غيما لأنه يستر السماء ويقال غم الهلال إذا استتر ولم ير لاستتاره بغيم ونحوه وغممت الشيء أي غطيته
”கும்ம அலைக்கும்” என்றால் ”சுதிரல் ஹிலாலு அலைக்கும்” (பிறை உங்களுக்கு மறைக்கப்பட்டால்) என்பது பொருள். கவலைக்கு ”அல்கம்மு” என்று கூறப்படும். ஏனென்றால் அது உள்ளத்தை மறைக்கிறது.
முடியினால் நெற்றி மறைக்கப்பட்ட மனிதனுக்கு ”அர்ரஜூலுல் அகம்மு” என்று கூறுவார்கள்.
மேகத்திற்கு ”கய்முன்” என்று கூறுவார்கள். ஏனென்றால் அது வானத்தை மறைக்கிறது.
”கும்ம அல்ஹிலாலு” என்றால் பிறை மறைக்கப்பட்டது என்பது பொருள். அதாவது மேகத்தினால் அது மறைக்கப்பட்டதினால் காணப்படவில்லை என்பதாகும்.
நூல் ; உம்தத்துல் காரீ
தம்ஹீத் என்பது ஃபிக்ஹூ நூல். இதில் கூறப்பட்டுள்ள விஷயம் அரபி அகராதி நூற்களிலும் உள்ளது.
التمهيد - (ج 2 / ص 38)
وأما قوله فإن غم عليكم فذلك من الغيم والغمام وهو السحاب يقال منه يوم غم وليلة غمة وذلك أن تكون السماء مغيمة
”கும்ம அலைக்கும்” (இதன் பொருள் ”உங்களுக்கு மறைக்கப்பட்டது” என்பதாகும்.)
இதில் மறைத்தல் என்பது ”கைம்” இன்னும் ”கமாம்” மூலம் ஏற்படுதலாகும்.
”கைம்” ”கமாம்” என்பது மேகம் ஆகும்.
வானம் மேகமூட்டமாக இருக்கும் போது ”யவ்முன் கம்முன்” (மேகமூட்டமான நாள்) லைலத்துன் கம்மத்துன் (மேகமூட்டமான இரவு) என்று கூறுவார்கள்.
நூல் அத்தம்ஹீத் பாகம் 2 பக்கம் 38
ஆக, மூளை மழுங்கி சிந்திப்பது யார் என்பது நிரூபணம் ஆகி விட்டது.
கமாம் என்கிற வார்த்தைக்கு மேகம் என்கிற பொருள் இருக்கிறதா? கும்ம என்பதன் வேர்ச்சொல் தான் கமாமா? என்கிற கேள்விகளுக்கு விடை அறிய அகராதி நூற்களையும் அரபுப் புலமையின் தேவையும் உள்ளது.
இந்த வியாபாரக் கூட்டதிற்கு அந்தத் திறன் இல்லை எனில், நம்மிடம் சந்தேகத்தைத் தீர்க்கின்ற தொனியில் கேட்டு தெரிந்திருக்கலாம். அதை விடுத்து, வாதம் என்கிற பெயரில் இவர்கள் எதை உளறிக் கொட்டினாலும் வாசித்து விட்டு மாலை போடும் கூட்டம் என்று இஸ்லாமிய சமூகத்தை எண்ணி விட வேண்டாம் என்று நாம் அறிவுரை கூறுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக