15/09/2012
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பி நீங்கள் எடுத்து வைக்கும் எந்த உதாரணமும் எனது வாதத்தை தான் வலுப்படுத்துகிறது என்பது வியப்பாகவும் மிகழ்ச்சியாகவும் உள்ளது.
உயர்த்தினான் என்று பொதுவாக சொன்னால் எதை குறித்து சொல்லப்படுகிறதோ அதையே உயர்த்துவது தான்.
அந்த பொருளின் அந்தஸ்தை உயர்த்துதல் என்று பொருள் கொள்வதாக இருந்தால் அதற்கு துணை சொற்கள் வர வேண்டும். அந்தஸ்தை உயர்த்தினான், தகுதியை உயர்த்தினான், இடத்தை உயர்ர்தினான் என்று ஏதேனும் துணை ஆதாரங்கள் வந்தால் தான் அதனோடு பொருத்த முடியும். வெறுமனே உயர்த்தினான் என்று வந்தால் அதற்கு அந்தஸ்து உயர்வு என்று சொல்வது தான் தவறு.
இன்னும் சொல்லப்போனால், இதை வெறுமனே நாம் யூகிக்கவும் தேவையில்லை.
குர் ஆனிலும் ஹதீஸிலும் கூட, பல இடங்களில் உயர்த்துதல் பற்றிய கருத்து வருகிறது.
ஒரு பொருளையோ ஒரு நபரையோ பற்றி பேசி, அவரது அல்லது அதன் அந்தஸ்தை உயர்த்துவதாக அல்லாஹ் சொல்ல நினைத்தால் அந்தஸ்து, போன்ற பொருள் பட துணை சொற்களை இணைத்தே தான் சொல்கிறான்.
இதற்கு இத்ரீஸ் நபியை பற்றி அல்லாஹ் சொன்னது உதாரணம்.
அதே போன்று, எதை பற்றி அல்லாஹ் சொல்கிறானோ, அதை அப்படியே உயர்த்தி விடுவதை சொல்ல நினைத்தால் எந்த துணை சொற்களும் இன்றி வெறுமனே உயர்த்தினான் என்று மட்டும் சொல்வான்.
இதற்கு, தொழுகையில் கைகளை உயர்த்துவதை பற்றி வரக்கூடிய ஹதீஸ் ஒரு உதாரணம்.
மேலும், வானங்களை அல்லாஹ் தூண்களின்றி உயர்த்தினான் என்று வரக்கூடிய இறை வசனமும் வானத்தை மேலே உயர்த்தியதை தான் சொல்கிறதே தவிர, அல்லாஹ் வானத்தின் தகுதியை உயர்த்தினான் என்று நாம் சொல்வதில்லை.ஏன் சொல்வதில்லை என்றால் அங்கே வெறுமனே உயர்த்தினான் என்று மட்டும் தான் உள்ளது, தகுதி, அந்தஸ்து போன்ற அடை மொழி எதுவும் அங்கே இல்லை.!!
இதற்கு மறுப்பு சொல்ல நினைத்த நீங்கள், வேறொரு வசனத்தில் அவரை அந்தஸ்தை கொண்டு உயர்த்தினோம் என்று அல்லாஹ் சொல்கிறானே, இங்கு உயர்த்தினான் என்பதுடன் துணை சொற்கள் ஏதும் இல்லையே என்று கேள்வி கேட்கிறீர்கள்.
இது எனது வாதத்தை மேலும் வலுப்படுத்தும் உதாரணம் தானே தவிர உங்கள் கேள்விக்கு இது உதவி செய்யவேயில்லை.
காரணம், இந்த வசனத்தில் கூட, அந்தஸ்தை கொண்டு உயர்த்தினான் என்று அல்லாஹ் துணை சொற்களை பயன்படுத்தி தான் பேசுகிறான்.
அந்தஸ்தில் என்று சொல்வதும் அந்தச்தைக்கொண்டு என்று சொல்வதும் மொழி அடிப்படையில் ஒரே கருத்து தான்.
அவனை நல்ல வேலையில் உயர்த்தினோம் என்று சொல்வதும் அவனை நல்ல வேலையை கொண்டு உயர்த்தினோம் என்று சொல்வதும் எப்படி ஒரே கருத்தை தருமோ அதே போல.
இங்கு இரண்டிற்குமே அவரது தகுதியை, அவரது நிலையை உயர்த்தினோம் என்று தான் பொருள் கொள்ள முடியும். ஆக, உங்களுக்கு சாதகமாக நீங்கள் கருதி வைத்த ஆதாரங்களில் மேலே உள்ளது எனக்கு தான் சாதகமாக இருக்கிறது.
அடுத்து, அவரை அல்லாஹ் உயர்த்தினான் என்று சொல்லி விட்டு, அல்லாஹ் வல்லமைமிக்கவன் மற்றும் ஞானமுடையவன் என்று சொல்வதிலிருந்து, அல்லாஹ் ஈசா நபியின் தகுதியை உயர்த்தினான் என்று சொல்வது பொருந்தாத ஒன்று என்று விளக்கியிருந்தேன். ஏனெனில், தகுதியை உயர்த்துவதற்கு அல்லாஹ்வின் வல்லமை, ஞானம் தேவையில்லை. அது அல்லாஹ் செய்த கிருபை.
ஈசா நபிக்கு அல்லாஹ் கிருபை செய்துள்ளான்.
அடுத்த வீட்டு இப்ராஹிமை நான் நேசிக்கிறேன், ஆகவே நான் வல்லமைமிக்கவன், நான் அறிவாளி என்று சொல்வது பொருந்தாது. காரணம், ஒருவரை நேசிப்பதற்கு வல்லமையோ அறிவோ தேவையில்லை. அதே போன்று, ஈசா நபியின் அந்தஸ்தை அல்லாஹ் உயர்வாக கருதுவதற்கு அவனுக்கு வல்லமையோ ஞானமோ தேவையே இல்லை. ஆனால் இங்கு அதை அல்லாஹ் சொல்லியதிலிருந்து இங்கு ஈசா நபியின் அந்தஸ்தை பற்றி அல்லாஹ் சொல்லவில்லை, மாறாக அவரையே உயர்த்தி விட்டதை, அந்த கொலையில் இருந்து அதன் மூலம் அவரை காப்பாற்றியதை தான் சொல்கிறான் என்பது தெளிவாக புரிகிறது.
இதை மறுக்க முயற்சி செய்த நீங்கள், வேறு பல வசனங்களிலும் இதே போல அல்லாஹ் வல்லமை மிக்கவன் என்றும் ஞானமுடையவன் என்று உள்ளதே, என்று சில வசனங்களை உதாரணத்திற்கு காட்டி கேட்கிறீர்கள்.
ஆனால் இந்த உதாரணங்களும் எனது கருத்தை தான் உறுதி செய்கிறது என்பது மீண்டும் ஆச்சர்யத்தை தருகிறது.
நீங்கள் வைத்துள்ள வசனங்களில் அல்லாஹ் மனிதர்களுக்கு சட்டங்களை சொல்கிறான். மறுமணம் குறித்த சட்டம், மரண சாசனம் குறித்த சட்டம் என்று சட்டங்களை அருளும் வசனங்கள் அவை. ஒரு சட்டத்தை சொல்லி இப்படி தான் நீ செய்ய வேண்டும், நான் வல்லமைமிக்கவன் என்று சொல்வது மிகவும் கச்சிதமாக பொருந்தக்கூடிய ஒன்று, நீ இப்படி செய், மீறினால் உன்னை தண்டிப்பதற்கு நான் வல்லமைப்படைத்தவன் என்று பொருள்.
இந்த சட்டங்களில் உங்களுக்கு நன்மையை வைத்திருக்கிறேன், இது மனித குலத்திற்கு நன்மையை தரும், அந்த வகையில் இது போன்ற சட்டங்களை வகுக்கும் அல்லாஹ் ஞானமிக்கவன்.
இப்படி சொல்வது அந்த இடத்திற்கும், சொல்லப்படும் கருத்துக்கும் மிகவும் பொருந்தக்கூடிய ஒன்று.
கச்சிதமாக பொருந்தக்கூடிய ஒன்றை, பொருந்தாத ஒன்றுக்கு உதாரணம் காட்டுவது தவறு. அல்லாஹ்விடம், ஒரு தூதரை கேட்டு, அவர்கள் வழியாக இந்த வேதமும் ஞானமும் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று துஆ செய்வதாக வரக்கூடிய வசனத்திலும், அல்லாஹ் தான் வலிமையானவன், நம்மை தண்டிப்பதற்கு தகுதியுள்ளவன் என்று சொல்வது பொருத்தமான ஒன்று தான்.
இன்னொரு வசனத்தில் ஸாலிஹ் நபியை காபிர்களிடம் இருந்து அல்லாஹ் எப்படி காப்பாற்றினான் என்பதை சொல்கிறான். அவர்களுக்கு அல்லாஹ்வின் சான்றாக ஒட்டகம் ஒன்றை தருகிறார்கள், அதை அந்த எதிரிகள் கொன்று விட்டு அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், அவர்களை அல்லாஹ் அழித்து ஸாலிஹ் நபியை இழிவிலிருந்து காப்பாற்றினான் .பெரும் சப்தத்துடன் அவர்கள் அழிக்கப்பட்டார்கள் என்று அடுத்ததாக அல்லாஹ் சொல்கிறான்.
இங்கே ஸலிஹ் நபியை அல்லாஹ் காப்பாற்றுவதற்கு அந்த எதிரி கூட்டத்தை அழித்ததாக சொல்லி காட்டுகிறான். இதற்கு அல்லாஹ்வின் வல்லமை தேவை தான், அல்லாஹ்வின் ஞானம் தேவை தான்.
நீங்கள் வைக்கும் எந்த உதாரணமும், அல்லாஹ்வின் வல்லமையும் ஞானமும் கச்சிதமாக பொருந்தக்கூடிய வசனங்கள்.
இதே போன்று தான் ஈசா நபி பற்றி வரக்கூடிய வசனமும் இருக்கிறதா? அவர்கள் ஈசா நபியை கொலை செய்ததாக நம்புகிறார்கள். நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவில்லை. ஈசா நபி அல்லாஹ்வை பொறுத்தவரை சிறந்தவர், அல்லாஹ் வல்லமைமிக்கவன், ஞானமுடையவன்.
இப்படி தான் நீங்கள் பொருள் செய்கிறீர்கள். இங்கே இந்த வல்லமையும் ஞானமும் பொருந்துகிறதா? என்பது தான் எனது கேள்வி. இதற்கு பதிலாக, எங்கெல்லாம் இந்த கருத்து கச்சிதமாக பொருந்துகிறதோ அதை எடுத்து காட்டி எனது வாதத்திற்கு தான் வலு சேர்க்கிறீர்களே தவிர உங்கள் வாதங்களுக்கு அவை உதவியாக இல்லை.
ஆனால், இதே வசனத்திற்கு நான் எப்படி பொருள் செய்கிறேன்? அவர்கள் ஈசா நபியை கொலை செய்ததாக நம்புகிறார்கள். நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவில்லை.மாறாக அல்லாஹ் அவரை தன்னளவில் உடலுடன் உயர்த்தினான் (அதன் மூலம் அவர்களிடமிருந்து அவரை காப்பாற்றினான்) அல்லாஹ் வல்லமைமிக்கவன், ஞானமுடையவன்.
இது மிகவும் பொருத்தமாக உள்ளது.
ஆகவே அந்த வகையிலும், ஈசா நபியை அல்லாஹ் உயர்த்தியது உடலுடன் தான் என்பது எனது சான்றுகள் மூலமாகவும், நீங்கள் எடுத்து தந்து எனக்கு உதவி புரிந்த ஆதாரங்கள் மூலமாகவும் மீண்டும் உறுதியாகியுள்ளது !
அடுத்ததாக, உடலுடன் உயர்த்தினான் என்று பொருள் கொள்வதாக இருந்தால் வெறுமனே உயர்த்தினான் என்று சொன்னால் போதும், என்னளவில் என்று சேர்த்து சொல்ல வேண்டியதில்லை என்று சொல்கிறீர்கள்.
இதுவும் தவறான வாதம்.
உயர்த்தினான் என்று பொதுவாக சொன்னாலும் உடலுடன் உயர்த்தினான் என்று தான் பொருள், அதை மறுப்பதற்கில்லை. ஆனால் எது வரை உடலுடன் உயர்த்தினான்? இதற்கு அதில் பதில் இருக்குமா? பதில் எப்போது கிடைக்கும், அல்லாஹ் அவரை உடலுடன் உயர்த்தினான், எது வரை அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் வருவது வரை - இது அந்த கருத்தை முழுமையாக்குகிறது.
தன்னளவில் என்று அல்லாஹ் சொல்வது, தன்னிடம் என்கிற பொருளை தரும்.
அல்லாமல், நீங்கள் சொல்வது போல, தன்னை பொறுத்தவரை உயர்த்திக்கொண்டான் என்பது மொழி நடைக்கே எதிரான ஒரு வார்த்தை பிரயோகம்.
வேறொரு வசனத்தில், அவரை அல்லாஹ் கைப்பற்றுபவனாகவும் , தன்னளவில் அவரை உயர்த்துபவனாகவும் இருக்கிறான் என்று அல்லாஹ் சொல்லும் இடத்திலும், தன்னை பொறுத்தவரை என்று பொருள் செய்தால் வார்த்தை அமைப்பே பொருளற்றதாகிறது. ஒவ்வொரு இடத்திலும், தன்னை பொறுத்தவரை அவர் சிறந்தவர் என்ற சொல்லிக்கொண்டே வர மாட்டான். அவரை கைப்பற்றக்கூடியவனாகவும் தன்னை பொறுத்தவரை அந்தஸ்தில் உயர்துபவராகவும்... என்கிற சொல்லமைப்பிற்கு பொருளில்லை.
இதையும் நான் ஏற்கனவே விளக்கியிருந்தேன்.
இதை உறுதி செய்யும் விதமாக நான் வேறொரு வசனத்தை தருகிறேன் - 25 :46 வசனத்தில் சூரியனையும் அதன் ஓட்டங்களையும் தன்னளவில் அல்லாஹ் கைப்பற்றி விடுவதாக சொல்கிறான். ஈசா நபி பற்றி வரக்கூடிய வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்தும் அதே "இலைஹி " என்கிற வார்த்தையை தான் இங்கும் பயன்படுத்துகிறான் .
ஈசா நபி பற்றிய வசனத்தில் தன்னளவில் என்றால் தன்னை பொறுத்தவரை என்ற பொருள் செய்தது போல இங்கும் தன்னை பொறுத்தவரை என்று தான் பொருள் செய்வீர்களா? அல்லது தன் கட்டுப்பாட்டில் என்று பொருள் செய்வீர்களா?
மேலும், ஈசா நபிக்கு முன் வந்த எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்கிற கருத்து ஈசா நபி இன்னும் மரணிக்கவில்லை என்பதை தான் சொல்கிறது என்பதை கடந்த இரண்டு வாய்ப்பில் தெளிவாக விளக்கினேன். அவர் மரணித்திருந்தாலும் அதை இங்கு சொல்வது பொருத்தமற்றது, ஆகையால் தான் அதை அல்லாஹ் சொல்லவில்லை என்று பதில் சொன்னீர்கள்.
இதற்கு நான் கேட்டேன், அவர் மரணித்து விட்டது அந்த கூட்டத்தாரை பாதிக்காது என்றாலும் அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று தானே அந்த மக்கள் நம்புகிறார்கள்? அவ்வாறு நம்புகிற மக்கள் அதன் காரணமாக தான் அவரை கடவுளாகவும் நம்புகிறார்கள் எனும் போது இங்கு அவர் மீண்டும் எழவில்லை என்று சொல்வதே போதுமானது தானே?
மரணிப்பதை சொல்வது உங்கள் வாதப்படி பொருத்தமானது கிடையாது ஆகவே தான் சொல்லவில்லை என்று வைத்துகொண்டால் கூட, மீண்டும் உயிர்த்தெழவில்லை என்று சொல்வது பொருத்தமானது தானே? அதையும் தானே அல்லாஹ் சொல்லவில்லை? என்கிற எனது கேள்விக்கு பதில் சொல்லாமல், மரியமை பற்றியும் அல்லாஹ் சொல்கிறானே, அவர்கள் இருவரும் உணவருந்தியத்தை அல்லாஹ் சொல்கிறானே, கடவுளாக இருந்தவர் உணவருந்தியது கடவுளை மறுக்கும் தன்மை தானே என்று அடுத்து சொல்கிறீர்கள்.
இதில், நான் கேட்ட இன்னொரு கேள்வியையும் நீங்கள் கண்டுகொள்ளவில்லை. ஈசா நபி இறந்து விட்டார்கள் என்றே வைப்போம், அவர் இறந்து விட்டது அந்த மக்களை பொறுத்தவரை, அவரது கடவுள் தன்மைக்கு இழுக்கில்லை என்பதால் அவரது மரணத்தை பற்றி அல்லாஹ் சொல்லவில்லை என்கிற வாதம் சரியானதாக இருந்தால், அதே போல ஈசா நபி உணவு உண்டார் என்று சொல்வதும் கூட தான் அவரது கடவுள் தன்மைக்கு அவர்களை பொறுத்தவரை இழுக்கில்லை !!!
அவர் கடவுளின் அவதாரம், கடவுளின் குமாரன், இந்த உலகில் மனிதனாக தோன்றி மனிதருக்குரிய எல்லா கஷ்டங்களையும் அனுபவித்தார் என்ற நம்பிக்கொண்டு தான் அவரை கடவுள் என்றும் இந்த கூட்டம் சொல்லிக்கொண்டிருக்கிறது எனும் போது, ஈசா நபி மரணித்து விடுவது அவர்களை பாதிக்காது என்பது போல அவர் உணவருந்தினார் என்பதும் தான் அவர்களை பாதிக்காது. !!
அவர்களை பாதிக்காத விஷயமான மரணத்தை பற்றி அல்லாஹ் சொல்லவில்லை என்றால் அவர்களை பாதிக்காத உணவருந்தியதையும் அல்லாஹ் சொல்ல வேண்டியதில்லை,
ஆகவே ஈசா நபியின் மரணத்தை பற்றி நீங்கள் சொன்ன காரணம் தவறு என்று நிரூபணம் ஆகி விட்டது.
ஈசா நபி மரணிக்கவில்லை என்றாலும் கூட, முன் வந்த நபி மார்கள் எப்படி மரணிதார்களோ அதே போல இவரும் மரணிக்கத்தான் போகிறார். என்று சொல்வதற்காக தான் அந்த வசனம் இறக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் ஈசா நபியை கைப்பற்றினான் என்பது பற்றியும், உயர்த்தியதாக அல்லாஹ் சொல்வது பற்றியும், ஈசா நபிக்கு முன் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்பது பற்றியும் அதிகமாகவே அலசி விட்டதால், இது குறித்து தொடர்ந்து பேச வேண்டியதில்லை.
அடுத்ததாக, ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்பதற்கு சான்றாக நான் சில ஹதீஸ்களை தந்திருந்தேன்.
இதை மறுப்பதற்கு நீங்கள் சில காரணங்களை சொல்கிறீர்கள்,ஆனால் எதற்குமே சரியான ஆதாரத்தை சொல்லவில்லை.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் தவறு உள்ளது என்று சொல்கிறீர்கள். இதில் உள்ள "இந்த" என்றால் எந்த?
நான் நான்கு ஹதீஸ்களை தந்திருக்கிறேன். அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிற ஹதீஸ், ஜாபிர் பின் அப்துல்லாஹ் அவர்கள் அறிவிக்கிற ஹதீஸ், என நான்கு ஹதீஸ்கள், மேலும் இமாமாக வருவது பற்றிய ஹதீஸ் ஒரே தொடரில் மூன்று அறிவிப்பாளர் வரிசையை கொண்டு வருகிறது.
உகைல் இப்னு காலித் (ரலி) அவர்கள் அறிவிக்கிற தொடர் தனியாகவும், அப்துரஹ்மான் இப்னு அமர் அல் அவ்சாயி அவர்களின் அறிவிப்பு தனியாகவும் உள்ளது. இதை புஹாரி வாலியும் 4 , பாகம் 60 இல் காணலாம்.
மேலும் அனைத்து சனது தொடர்களில் எதிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள இப்னு சிஹாப் அல் ஜுஹ்ரி
என்பவர் இல்லை.
பன்றியை கொல்வார் என்று வரக்கூடிய அறிவிப்பிலும், தஜ்ஜாலை கொல்வதாக வரக்கூடிய அறிவிப்பிலும் சில சனது தொடர் என்னிடம் இல்லை, அதில் மேற்கண்ட நபர் இருக்கிறாரா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், எந்த ஹதீஸில் இந்த அறிவிப்பாளர் வருகிறார், என்பதை நீங்கள் விளக்கி அதை ஆதாரத்துடன் பலகீனம் என்று சொல்வது உங்கள் கடமை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நான் ஆதாரப்பூர்வமான நான்கு செய்திகளை (நான்கும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாக வரக்கூடிய ஹதீஸ்கள்) காட்டி ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று சொல்லியிருக்கும் போது நான்குமே பலகீனம் என்று நீங்கள் சொல்வதாக இருந்தால் அதற்குரிய காரணங்களை ஒவ்வொரு ஹதீஸாக எடுத்து வைத்து விளக்க வேண்டும்.
அதை நீங்கள் செய்தால் அதன் பிறகு, ஒவ்வுறு ஹதீசையும் அறிவிப்பாளரை கொண்டு மேலும் ஆழமாகவே அலசுவோம். அல்லது நீங்களே சொன்னது போல படிப்பவர்களின் சிந்தனைக்கே விட்டு விடவும் செய்யலாம்.
ஏற்கனவே நான் தந்துள்ள நான்கு ஹதீஸ்களுடன் சேர்த்து, முஸ்லிமில் பதிவாகியுள்ள ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிற மற்றுமொரு அறிவிப்பில் கியாமத் நாளின் அடையாளமாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் பத்து அடையாளங்கள் பற்றிய அறிவிப்பிலும் ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இது முஸ்லிம் 5558 ஆம் ஹதீஸாக பதிவாகியுள்ளது.
ஹுதைபா (ரலி) அவர்கள் வழியாக இரு நபர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது ஒருவர் வழியாக வரும் ஹதீஸில் இது நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இல்லை, ஆனால் இன்னொருவர் வழியாக வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகவே உள்ளது.
இதை காரணம் காட்டியும் இந்த ஹதீஸை நீங்கள் மறுக்க முடியாது என்பதற்காக இதையும் சொல்கிறேன்.
ஆக, மேற்கண்ட ஐந்து ஹதீஸ்களுமே பலம் வாய்ந்த ஹதீஸ்கள் தான். இது குறித்து மேலும் ஏதேனும் மறுப்புகள் தருவீர்கள் என்றால் அது பற்றியும் அலசுவோம்.
ஹதீஸ்களில் ஈஸா நபி அவர்கள் மீண்டும் வருவார்கள் எனவும், கியாமத் நாளுக்கு மிக மிக அருகில் அவர்களது வருகை இருக்கும் எனவும் நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருப்பது, அல்லாஹ் அவரை கைப்பற்றினான் என்கிற வசனத்திற்கும், அல்லாஹ் அவரை உயர்த்தினான் என்று சொல்லப்படுகிற வசனத்திற்கும் விளக்கமாக உள்ளது.
மேலும் 43 :61 வசனத்தில், ஈஸா நபியை பற்றி அல்லாஹ் சொல்லும் போது அவர்கள் கியாமத் நாளுக்குரிய அடையாளமாக இருப்பதாக அல்லாஹ் சொல்கிறான்.
ஒருவரை பற்றி, அவர் அந்த நாளின் அடையாளம் என்றால் அவரது வருகை, கியாமத் நாள் நெருங்குவதை குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். கியாமத் நாளுக்கு மிக சமீபமாக ஈஸா நபியின் வருகை இருக்கும் என்று ஹதீஸ்கள் வாயிலாக நபி (ஸல்) அவர்கள் சொல்வது, இந்த இறை வசனத்தையும் மெய்ப்பிப்பதாக உள்ளது.
ஆக, எந்த நிலையிலும், ஈஸா நபியின் மரணம் இன்று வரை நிகழவில்லை என்பது தான் குர் ஆன் ஹதீஸ் வழியாக நமக்கு கிடைக்கும் ஒரே பதில் !
வஸ்ஸலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக