செவ்வாய், 25 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நாஷித் அஹமத் - 10




25/09/2012


இந்த விவாதத்தை தொடராக கவனித்து வரும் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்..

எந்த விவாதமானாலும், இரு தரப்பினரின் கருத்துக்களில் எது சரி என்பதை முடிவு செய்ய எளிதான பல அளவுகோல்கள் உள்ளன.

தமது கருத்துக்களுக்கான ஆதாரங்களை யார் தெளிவாக எடுத்து வைத்தது குறித்து அறிவது..
அந்த கருத்துக்களுக்கு எதிர் தரப்பில் மறுப்புகள் தரப்பட்டதா என்பதை பற்றி சிந்திப்பது..
கொடுக்கப்பட்ட மறுப்புக்கு முதலாமவர் விளக்கம் அளித்தாரா அல்லது அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டாரா என்பதை கவனிப்பது..
வாதத்திற்கு மறுப்பு சொல்கிறேன் என்கிற பெயரில் தமக்கு தாமே முரண்பட்டது யார் என்று சிந்திப்பது..

என்று, உண்மையை அறியும் அளவுகோல்கள் பல.. இந்த அளவுகோல்களை கொண்டு எங்கள் இருவரது வாதங்களை உரசிப்பார்க்கிற எவருக்கும், ஈசா நபி இன்னும் மரணிக்கவில்லை எனவும், மீண்டும் வருவார்கள் எனவும் முடிவு செய்வது தான் குர் ஆனுக்கும் ஹதீஸுக்கும் உகந்த முடிவு என்பதை அறிந்து கொள்ள முடியும்.


தொகுப்புரையை சுருக்கமாகவே தரலாம் என்று எண்ணியிருந்தேன், இருப்பினும், உங்களது தொகுப்புரையில் சில புதிய வாதங்களை வைத்ததுடன், அவைகளை மீண்டும் உங்களுக்கே எதிராகவே வைத்துள்ளீர்கள் என்பதால் அவற்றை சுட்டிக்காட்டுவது இந்த விவாதத்தை படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

ஈசா நபியை உயர்த்தினான்  என்று கூடுதலாக எந்த அடை மொழியும் இன்றி சொன்னால் அவரையே உயர்த்தினான் என்று தான் பொருள் என்பதை துவக்கம் முதலே விளக்கியிருந்தேன்.  இதே போன்று இத்ரீஸ் நபியை உயர்த்தியதாகவும் அல்லாஹ் சொல்கிறான், ஆனால் அங்கே உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினான் என்று சேர்த்தே அல்லாஹ் சொல்லி விட்டான். உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினான் என்று சொல்வதற்கும், வெறுமனே உயர்த்தினான் என்று சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது. வேறுபாடு இல்லை என்றால் இரண்டையும் ஒரே மாதிரியாகவே அல்லாஹ் சொல்லியிருப்பான். 
வானத்தை படைத்து உயர்த்தினேன் என்று அல்லாஹ் சொல்கிற இடத்தில், ஈசா நபி பற்றி சொல்கிற வார்த்தை அமைப்பை போன்றே சொல்வதால், இங்கும் மேலே உயர்த்தினான் என்று தான் பொருள் செய்கிறோம்.
தொழுகையில் கைகளை உயர்த்துவது பற்றி சொல்லும் போதும் இதே முடிவை தான் நாம் செய்கிறோம்.
அந்தஸ்தில் உயர்த்தினான் என்றோ உயர்ந்த இடத்தில் உயர்த்தினான் என்றோ சொல்வதற்கும், வெறுமனே உயர்த்தினான் என்று சொல்வதற்கும் குர் ஆன் ஹதீஸிலேயே வேறுபாடுகள் உள்ளன என்பதை தெளிவாகவே நான் காட்டியிருந்தேன்.
இதற்கும் பதில் எதுவும் இல்லாமல் போன பிறகு, நீங்கள் உங்கள் தரப்பில் வேறொரு ஆதாரத்தை காட்டினீர்கள், உங்களுக்கு சார்பாக இருக்கும் என்கிற நம்பிக்கையில்.
தூர் மலையை உயர்த்தினான் என்று ஒரு இடத்தில் அல்லாஹ் சொல்கிறானே அது அந்தஸ்து உயர்வு தானே என்று கேட்டீர்கள். இந்த வாதம் உங்களுக்கே எதிரான வாதம் என்பதும், ஈசா நபியை உயர்த்தினான் என்றால் அவரை மேலே உயர்த்தினான் என்று தான் புரிய வேண்டும் என்பதற்கும் கூடுதல் ஆதாரமாக இது உள்ளது !
எந்த வாதமும் மிச்சமில்லாமல் போன பிறகு, உங்களது ஒன்பதாவது வாய்ப்பில் நீங்கள் இது தொடர்பாக சொன்ன ஒரே பதில்,வானம், மலை என்பதெல்லாம் பொருட்கள், ஆனால் மனிதனை பற்றி சொன்னால் அந்தஸ்து என்று தான் புரிய வேண்டும்.
இறுதியாக உங்களிடம் மிச்சமிருப்பது இந்த ஒரு வாதம் மட்டும் தான்.
இதுவும் உங்கள் தரப்பை நியாயப்படுத்துவதற்கு நீங்கள் செய்யும் முயற்சிகளாகவே கருதப்படுமே தவிர இது பொருத்தமான வாதமே அல்ல..  பொருளை குறித்து சொல்கிறோமா அல்லது மனிதனை குறித்து சொல்கிறோமா என்பதல்ல பிரச்சனை. உயர்த்தினான் என்று மட்டும் உள்ளதா அல்லது அந்தஸ்து, தகுதி, நிலை என்கிற பொருள் பட கூடுதல் விளக்கங்கள் ஏதும் சொல்லப்பட்டுள்ளதா என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

அல்லாஹ் வல்லமை மிக்கவன் என்று சொல்வது கூட எனது வாதத்தை தான் உறுதி செய்கிறது என்று நான் சொன்னதற்கு, அதையும் மறுத்தீர்கள். மறுப்பதற்கு வேறு நான்கு ஆதாரங்களை எடுத்து வைத்தீர்கள். அந்த நான்குமே உங்கள் மறுப்புக்கு உதவி செய்யவில்லை என்பதும், வல்லமையை குறித்து பேசுவதற்கு தகுதியான இடங்கள் தான் அந்த நான்கு வசனங்கள் என்பதும், அதே சமயம், ஈசா நபி பற்றிய இந்த வசனத்தை உங்கள் கருத்துப்படி பார்த்தால் அல்லாஹ்வின் வல்லமையை குறித்து சொல்வதற்கு பொருத்தமற்ற வசனமாகி விடும் என்பதும் தெளிவாக விளக்கப்பட்டது.
நீங்களே வைத்த நான்கு உதாரணங்களில் மூன்றை குறித்து எந்த பதிலையும் சொல்லாமல் ஸாலிஹ் நபி பற்றிய ஒரு வசனத்திற்கு மட்டும் ஒரு மறுப்பை சொன்னீர்கள். அந்த மறுப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதை படிப்பவர்கள் அனைவருமே அறிந்து கொண்டுள்ளனர்  .

என்னளவில் உயர்த்தினான் என்று அல்லாஹ் சொல்வது கூட ஈசா நபியை உடலுடன் உயர்த்தினான் என்கிற கருத்தை மேலும் உறுதி செய்கிறது என்கிற எனது வாதத்தை மறுக்க, என்னளவில் / தன்னளவில் என்றால் என்னை பொறுத்தவரை , தன்னை பொறுத்தவரை என்று தான் பொருள் செய்ய வேண்டும் என்று அடுத்ததாக சொல்லி பார்த்தீர்கள். 
குர் ஆனின் வேறொரு வசனத்தில் தன்னளவில் சூரியனை அல்லாஹ் எடுத்துக்கொள்வான் என்று அல்லாஹ் சொல்கிறானே, உங்கள் கருத்துப்படி இதிலும் தன்னை பொறுத்தவரை சூரியனை அல்லாஹ் எடுத்துக்கொண்டான் என்று தான் சொல்ல வேண்டுமா என்று கேட்ட பிறகு இது குறித்து எதுவும் பேசாமல் ஒதுங்கிக்கொண்டீர்கள்.

ஈசா நபிக்கு முன்னர் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லியிருப்பது, ஈசா நபி மரணிக்காத காரணத்தால் தான், என்று நான் சொன்னதற்கு , இல்லை இல்லை, ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்று சொல்வது அவர்களிடம் எந்த தாக்கத்தையும் உருவாக்காது, அதனால் தான் அல்லாஹ் அதை சொல்லவில்லை என்று ஒரு காரணத்தை சொன்னீர்கள்.
அவர் உணவு உண்பவராக இருந்தார் என்று தொடர்ந்து அல்லாஹ் சொல்வதே நீங்கள் சொல்கிற காரணத்தை மறுக்கும் விதமாக இருக்கிறது என்பதை விளக்கியிருந்தேன். அல்லாஹ் உணவருந்துவதை தான் பெரிய காரணமாக சொல்கிறான், நீங்கள் கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும் என்கிற ஒரு பதிலை தான் இதற்கு சொல்லியுள்ளீர்கள். இது எந்த வகையிலும் அறிவுக்கு பொருத்தமில்லாத பதில் என்பது சிந்திக்கிறவர்கள் புரிகிறார்கள்.  மேலும், இவ்வாறு சொன்னதன் மூலம், அந்த கூட்டத்தாருக்கு எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்தாது என்கிற காரணத்தால் தான் ஈசா நபியின் மரணத்தை பற்றி அல்லாஹ் பேசவில்லை என்கிற உங்கள் வாதம் உடைகிறது !

ஈசா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று வருகிற வசனத்தை மறுப்பதற்கு, முதல் கட்டமாக அது நபி சொல்வதாக வரக்கூடிய வசனமல்ல, அது அல்லாஹ்வே சொல்கிற வசனம் என்று ஒரு காரணத்தை சொன்னீர்கள். இதை நீங்கள் சொன்னதற்கு காரணம், அவர் கியாமத் நாளின் அடையாளம், இதில் சந்தேகமில்லை, என்னை பின்பற்றுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்வதாக இருந்தால் இங்கே குர் ஆன் கியாமத் நாளின் அடையாளம் என்பது பொருந்தவே செய்யாது.
உங்கள் வாதத்திற்கு மறுப்பாக, பின்பற்றுவது என்றால் அது நபியை தான் பின்பற்ற முடியும். அல்லாஹ்வை வணங்கவும் நம்பவும் தான் முடியுமே தவிர அல்லாஹ்வை பின்பற்ற முடியாது என்று விளக்கமளித்திருந்தேன்.

நீங்கள் எடுத்து வைத்துள்ள பல ஆதாரங்கள் உங்களுக்கே எதிராகவும் எனது கருத்துக்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றன என்பதை ஏற்கனவே பட்டியலிட்டிருந்தேன். அந்த பட்டியலில் ஒன்றை சேர்க்கும் விதமாக இதற்கும் ஒரு ஆதாரத்தை எடுத்து காட்டுகிறீர்கள். 
2 :38 வசனத்தில் அல்லாஹ்வின் வழியை பின்பற்றுங்கள் என்று வருகிறதே, ஆகவே நான் சொல்வது தான் சரி என்று வாதம் வைத்தீர்கள்.

இதுவும் எனது கருத்தை தான் உறுதி செய்கிறது. அல்லாஹ்வின் வழி அல்லது அல்லாஹ் காட்டிய வழியை பின்பற்றுங்கள் என்று சொன்னால் அது தவறான பொருள் அல்ல. அல்லாஹ் காட்டிய வழியை பின்பற்றலாம். இங்கே பின்பற்றுவது வழியை தானே தவிர அல்லாஹ்வை அல்ல ! இதை உதாரணம் மூலம் நீங்களே சொல்லி விட்டீர்கள். ஆனால் நான் கேட்பது, அல்லாஹ்வை பின்பற்றுங்கள் என்று சொல்ல முடியுமா என்று தான். அல்லாஹ்வை பின்பற்றுங்கள் என்று சொல்வது தவறு என்று வாதம் வைத்தால், அதை மறுப்பதற்கு அல்லாஹ்வின் வழியை பின்பற்றுங்கள் என்று ஒரு வசனத்தை காட்டி உங்களுக்கு எதிராகவே வாதம் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
மேலும், குர் ஆனில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது என்று சொல்வதாக இருந்தால் தொடர்ந்து, இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ் சொல்வதும் பொருளற்றதாகி விடும்.
இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்பது, குர் ஆனில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று எடுத்துக்கொண்டால் அதுவும் பொருந்தாத அர்த்தம். அதே போல, குர் ஆனில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது என்பதால் இந்த குர் ஆனில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று சொன்னால் அதுவும் அர்த்தமில்லாதது.
இவை ஒரு பக்கம் இருக்க, இதற்கு முன்னுள்ள வசனங்களிலும், இதற்கு பின்னுள்ள வசனங்களிலும் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்துமே தொடர்ச்சியாக ஈசா நபியை பற்றிய விளக்கங்கள் தான், ஈசா நபியை மறுப்பவர்களுக்கு பகரம் மலக்குகளை நான் கொண்டு வருவேன் என்று சொல்லி விட்டு கியாமத் நாளின் அடையாளம் பற்றி சொல்வதாக இருந்தால் இங்கு குர் ஆன் பற்றி சொல்வது பொருந்தாது என்று நான் விளக்கியதற்கு எந்த பதிலும் தரவில்லை. 
இந்த வசனம் குறித்து எல்லா வகையிலும் எனது ஒன்பதாவது வாய்ப்பில் விளக்கப்பட்டுள்ளது.

4 :159 வசனத்திற்கு மொழியாக்கம் செய்கிற போது, வேதக்காரர்கள் அனைவரும் தங்களது மரணத்திற்கு முன் சிலுவை மரணத்தை நம்புவார்கள் என்று மொழியாக்கம் செய்திருந்தீர்கள். பல காரணங்களால் இது தவறு.

இதனை நம்புவார்கள் என்று தான் அந்த வசனத்தில் உள்ளது. இதனை என்றால் எதனை என்று இதற்கு முந்தைய வசனத்தை பார்த்து முடிவு செய்ய வேண்டும். முந்தைய வசனத்தில் ஈசா நபியை அல்லாஹ் உயர்த்தியதை தான் சொல்கிறான். சொல்லி விட்டு இதனை நம்புவார்கள் என்றால், இது நாள் வரை ஈஸாவை கொலை செய்து விட்டதாகவே நம்பி வந்த அந்த வேதக்காரர்கள், அவரது  மரணத்திற்கு முன் அவரை அல்லாஹ் உயர்த்தினான் என்பதை நம்பி விடுவார்கள் . இது தான் பொருந்துமே தவிர, சிலுவை மரணத்தை நம்புவார்கள் என்பது சம்மந்தமே இல்லாத வாதம். இதை உங்களது இறுதி வாய்ப்பிலும் நீங்கள் மறுக்கவில்லை.

மேலும், வேதக்காரர்கள் அனைவரும் இவ்வாறு நம்புவார்கள் என்று சொல்வது நடைமுறைக்கு எதிராகவும் உள்ளது. வேதக்காரர்கள் பலர் இதனை நம்பாமலும் இறந்து போகிறார்கள் என்பதால் அதுவே உங்கள் மொழியாக்கம் பொய் என்று நிரூபித்து விடுகிறது.

இதை மறுப்பதற்கு, இதை வேறொரு கோணத்தில் விளக்குகிறீர்கள். (இந்த கோணமும் முந்தைய விவாதத்தின் போது தவறு என்று நிரூபிக்கப்பட்டது தான் ! )
அதாவது, ஈசா நபியை சரியான முறையில் ஈமான் கொண்டு இறக்கும் வேதக்காரர்களும் அதற்கு முன் சில நாட்கள் சிலுவை மரணத்தை நம்பியவர்கள் தானே, அதை தான் அல்லாஹ் இங்கு சொல்கிறான் என்று சொல்கிறீர்கள்.

இதுவும் அடிமட்ட விளக்கம் ! 

வேதக்காரர்கள் என்று பொதுவாக சொன்னால் இன்ஜீல், தவ்ராத் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டதோ அவர்கள் அனைவரையுமே குறிக்கும்.

அவர்களில் ஈசா நபியை நபி என்று மட்டுமே காலமெல்லாம் நம்பி அப்படியே இறந்து விட்டவர்களும் அடங்குவார்கள்.
அவர் சிலுவையில் இறந்து போனார் என்று நம்பி, அந்த நம்பிக்கையிலேயே இறுதி வரை வாழ்ந்து மரணித்தவர்களும் அடங்குவார்கள்.


இப்படி இருக்கும் போது, வேதக்காரர்கள் தங்களது மரணத்திற்கு முன் ஈசா நபியின் சிலுவை மரணத்தை நம்புவார்கள் என்று பொதுவாக சொன்னால் அது மேலே உள்ள எந்த வேதக்காரரை குறிக்கும்? அனைவரையும் குறிக்காது என்பதற்கு நிதர்சனமே ஆதாரமாகி விடுகிறது.
மேலே உள்ள பட்டியலில் முதல் தரப்பு வேதக்காரரை இது குறிக்காது.

மிச்சமிருப்பது இரண்டாவது தரப்பு. அதாவது, வேதக்காரர்களில் யாரெல்லாம் ஈசா நபி சிலுவையில் மரணித்தார் என்று நம்புகிறார்களோ அந்த கூட்டத்தாரை மட்டும் இந்த வசனம் சொல்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படியானால் இதன் பொருள் என்ன?

வேதக்காரர்களில் சிலுவை மரணத்தை நம்புகிற கூட்டத்தார், தங்கள் மரணத்திற்கு முன் சிலுவை மரணத்தை நம்புவார்கள்.

இதற்கு அர்த்தம் இருக்கிறதா? என்று தான் எனது முந்தைய வாய்ப்பில் கேட்டேன்.

இதற்கு பதில் சொன்ன நீங்கள், 

முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இறைவன் ஒருவன் தான் என்று நம்பிக்கை கொள்வார்கள் என்று சொன்னால்,
அதற்க்கு நீங்கள்,
இறைவன் ஒருவன் என்று நம்பிக்கை கொள்பவர்கள் இறைவன் ஒருவன் தான் என்று நம்பிக்கை கொள்வார்கள் என்பது சரியா என்று கெட்கிறீகள்.
தயவு செய்து definition சொல்லபடும் பொது அதை இப்படி பொருள் செய்து பார்க்காதீர்கள். அனைத்துமே தவறாகவே தெரியும்.
தண்ணீர் என்பது ஈரமாயிருக்கும்.
ஈரமாய்யிருப்பது என்பது ஈரமாயிருக்கும்.
இப்படி போய் கொண்டே இருக்கும் இந்த சிந்தனை.

என்று விளக்கம் அளிக்கிறீர்கள். இதன் மூலம், இரண்டு விஷயங்களில் ஒன்று உண்மை.

ஒன்று நான் வைக்கும் வாதங்கள் உங்களுக்கு புரியவேயில்லை.
அல்லது, புரிந்து விட்ட அதிர்ச்சியால் அதற்கு மாற்று விளக்கம் அளிக்க முயற்சிக்கிறீர்கள்.

முஸ்லிம்கள் ஏக இறைவனை நம்புவார்கள் என்று சொன்னால் ஏக இறைவனை நம்புகிறவர்கள் ஏக இறைவனை நம்புவார்கள் என்று பொருள் செய்ய மாட்டோம் தான் !
தண்ணீர் ஈரமாயிருக்கும் என்று சொன்னால் ஈரமாயிருப்பது ஈரமாயிருக்கும் என்று நான் சொல்ல மாட்டேன் தான் !!

ஏன் சொல்ல மாட்டேன் என்றால், தண்ணீரின் ஒரே தன்மை ஈரமாயிருப்பது தான்.
முஸ்லிம் என்றாலே அவன் ஏக இறைவனை நம்புபவன் தான்.

ஆக, இந்த வாக்கியங்கள் எல்லாம், அதனதன் தன்மைகளை சொல்கிற வாக்கியங்கள்.

அதே சமயம், வேதக்காரர்கள் என்றால் அவர்களுடைய தன்மையே சிலுவை மரணத்தை நம்புவது அல்ல !!!

இது தான் வேறுபாடு. பொதுவாக முஸ்லிம்கள் அனைவரும் ஏக இறைவனை நம்புவார்கள் என்று சொன்னால் அது, முஸ்லிம்களின் தன்மையை குறிக்கிற வாசகம்  . ஆகவே இது தவறல்ல.
ஆனால் வேதக்காரர்கள் அனைவரும் சிலுவை மரணத்தை நம்புவார்கள் என்பது வேதக்காரர்களின் தன்மையை சொல்கிற வாசகமல்ல !
தண்ணீர் ஈரமாயிருக்கும் என்பது போலுள்ள வாசகமல்ல.

வேதக்காரர்கள் என்றால் பல வகைப்படுவர். எந்த வகை என்று சொல்லாமல் அனைத்து வேதக்காரர்களும் சிலுவை மரணத்தை தான் நம்புவார்கள் என்று சொன்னால் அது பொருத்தமற்ற ஒன்று தான்.

நீங்கள் முஸ்லிம்கள் குறித்து வைத்த உதாரணத்தை மாற்றி இப்படி உதாரணம் வையுங்கள், நீங்கள் சொல்வது தவறு என்பது உங்களுக்கே புரியும்.

குர் ஆன் கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் மரணத்திற்கு முன் ஏக இறைவனை நம்புவார்கள் என்று ஒருவர் சொன்னால் இது சரியான வாசகம் என்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?

குர் ஆன் கொடுக்கப்பட்டவர்கள் என்றால் அதில் இன்றுள்ள முஸ்லிமும் அடங்குவான், ஹிந்துவும் அடங்குவான், நாத்திகனும் அடங்குவான். இவர்களில் யார்?
ஒரு ஹிந்துவோ நாத்திகனோ ஏக இறைவனை நம்பவில்லை, ஆகவே குர் ஆன் கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏக இறைவனை நம்புவார்கள் என்கிற வாசகம் பொய்யாகி விடுகிறது.

மிச்சமிருப்பது ஏக இறைவனை நம்பக்கூடியவர்கள் மட்டும் தான்.
ஆகவே ஏக இறைவனை நம்புகிறவர்கள் தங்கள் மரணத்திற்கு முன் ஏக இறைவனை நம்பி விடுவார்கள் என்று சொல்வது அர்த்தமற்றது என்பதால் குர் ஆன் கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏக இறைவனை நம்புவார்கள் என்று சொல்லப்படுகிற வாசகமே தவறு என்று நீங்களும் சேர்ந்தே தான் சொல்வீர்கள்.
இந்த உதாரணம் தான் வேதக்காரர்கள் பற்றிய வசனத்திற்கும் பொருத்தமான உதாரணம்.

குர் ஆன் எப்படி ஒரு சமுதாயம் அனைத்திற்கும் வழங்கப்பட்டதோ அதே போல இன்ஜீல் என்பதும் ஒரு சமுதாயம் முழுமைக்கும் தரப்பட்டது.
குர் ஆன் வழங்கப்பட்ட சமுதாயத்தில் எப்படி ஏக இறைவனை நம்புகிறவர்களும், அதை மறுபவர்களும், அவனுக்கு இணை வைப்பவர்களும் அடங்குவார்களோ அதே போல இன்ஜீல் வழங்கப்பட்ட சமுதாயத்திலும் இப்படி பல தரப்பினர் உள்ளனர்.

ஆகவே குர் ஆன் வழங்கப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் மரணத்திற்கு முன் ஏக இறைவனை நம்புவார்கள் என்று சொல்வது தவறு என்றால், வேதக்காரர்கள் அனைவரும் தங்கள் மரணத்திற்கு முன் சிலுவை மரணத்தை நம்புவார்கள் என்று சொல்வதும் தவறு தான் !

தொடர்ந்து வரக்கூடிய ஷஹாதுன் அலைஹிம் என்கிற அரபிப்பததிற்கும் நேரடி பொருள், அவர்களுக்கு சாட்சி என்பது தான்.
நேரடி பொருளை முதலில் நேரடியாக தான் பொருத்திப்பார்க்க வேண்டும்.
ஈசா நபி சிலுவையில் இறந்து விட்டார் என்று வேதக்காரர்கள் நம்புவார்கள், ஆனால் அவரை அல்லாஹ் உயர்த்திக்கொண்டான்.
வேதக்காரர்கள் அனைவரும் ஈசா நபியின் மரணத்திற்கு முன்னால் இதை நம்பாமல் இருக்க மாட்டார்கள், மறுமையில் இதற்கு ஈசா நபி சாட்சியாக இருப்பார் !
மிக மிக எளிமையாக புரிய வேண்டிய, அதுவும் நேரடி அர்த்தங்களை வைத்து புரிய வேண்டிய ஒரு வசனத்திற்கு,

தங்களது மரணத்திற்கு முன் என்று புரிய வேண்டும் என்று மாற்றி, சிலுவை மரணத்தை நம்புவார்கள் என்று கூறி, இவர்களுக்கு எதிர் சாட்சியாக இருப்பார் என்று அதையும் வளைத்து தான் உங்கள் கொள்கையை நிறுத்த வேண்டியுள்ளது என்பதையாவது சிந்திக்கவும்.
கியாமத் நாளின் அடையாளம் வரும் போது நம்பிக்கை பலனளிக்காது என்று முன்னர் நான் ஹதீஸ்களை கவனிக்காமல் தான் சொல்லியிருந்தேன், நாம் பார்த்தவரை சூரியனின் உதயம் திசை மாறும் போது நம்பிக்கை பலனளிக்காது என்று தான் புரிகிறதே தவிர ஈசா நபியின் வருகைக்கு பின்னர் நம்பிக்கை பலனளிக்காது என்று எந்த ஹதீசும் இல்லை. ஆகவே ஈசா நபி வரும் போது , இன்று சிலுவை மரணத்தை நம்பிய வேதக்காரர்கள் அனைவருமே அவரை பார்த்த பிறகு உண்மை இஸ்லாத்தை ஏற்பார்கள் என்கிற கருத்து உறுதியானதே !

அனைத்தை விடவும் முத்தாய்ப்பாக, ஹதீஸ்களில் ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று தெளிவாகவே உள்ளதே, இதை மறுப்பதற்கு, நீங்கள் செய்த முயற்சிகள் அனைத்துமே தோற்று விட்டதே என்று கேட்டிருந்தேன். 
குர் ஆனில் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று பொதுவாக தான் சொல்லப்பட்டுள்ளது, ஹதீஸில் ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று வருகிறது, இரண்டையும் இணைத்து புரியும் போது, ஈசா நபியை தவிர எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று தான் புரிய வேண்டும்.
இதற்கு தான் கடல் வாழ் உயிரினங்களில் தாமாக செத்தவை பற்றி குர் ஆனும் ஹதீசும் வேறு வேறு செய்திகளை தருவதை காட்டினேன்.

இதற்கு எந்த பதிலும் சொல்ல இயலாமல் போன உடன், அது சட்டத்தை பற்றிய விஷயம், இது நம்பிக்கையை பற்றிய விஷயம் என்று ஒரு வரி மட்டும் எழுதுகிறீர்கள்.
அது சட்டத்தை பற்றி இருந்தால் என்ன, இது நம்பிக்கையை பற்றி இருந்தால் என்ன? இது ஒரு வாதமா??????????

குர் ஆனில் தாமாக செத்தவை எல்லாமே ஹராம் என்று சொல்லியிருந்தும் கூட, கடலில் தாமாக செத்தவை ஹலால் என்று ஹதீஸ் சொல்லி விட்டதால் நீங்கள் இன்று மீன்களை சாப்பிடுகிறீர்களே, இதை ஏன் முரண் என்று கருதவில்லை? என்று கேட்டால் அதை தான் நீங்கள் விளக்க வேண்டும். இது சட்டத்தை பற்றி பேசுவதால் அது பிரச்சனையில்லை என்று சம்மந்தமே இல்லாத பதில் தான் உங்களிடமிருந்து வருகிறது என்பது, இது தொடர்பாக உங்களிடம் எந்த நிலையான பதிலும் இல்லை என்பதை காட்டுகிறது.
தாமாக செத்தவை பற்றி குர் ஆன் பொதுவாகவும் ஹதீஸ் அதற்கு விளக்கமாகவும் சொல்லியிருப்பது போல நம்பிமார்களின் மரணம் பற்றி குர் ஆன் பொதுவாகவும் ஹதீஸ் அதற்கு விளக்கமாகவும் சொல்லியுள்ளது.
இப்படி புரிவது தான் அறிவுக்கு உகந்தது.
இதை புரிந்தும் புரியாமல் இருக்கிறீர்கள்.

அல்லாஹ் குர் ஆனை பாதுகாப்பான் என்று குர் ஆன் சொல்வதையும் நம்பி விட்டு சூனியம் பற்றி ஹதீஸ் சொல்வதையும் நம்பலாமா? என்று என்னிடம் கேட்கிறீர்கள். நம்பகூடாது. ஏனென்றால், சூனியத்தை பற்றி ஹதீஸ் சொல்வது குர் ஆனுக்கு நேரடியாகவே முரண் !
சூனியத்தை நம்புகிறவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்கள், பைத்தியக்காரர்கள் தான் சூனியத்தை நம்புவார்கள் என்றெல்லாம் பல வசனங்களில் அல்லாஹ் குர் ஆனில் சொல்லி விட்டான். அதற்கு மாற்றமாக சூனியம் நபிக்கே வைக்கப்பட்டது என்று சொன்னால் இந்த ஹதீஸ், அந்த குர் ஆன் வசனத்திற்கு முரண்.
அது போல தான் ஈசா நபி பற்றிய ஹதீசும் உள்ளதா? என்ன வாதம் வைக்கிறீர்கள்.?????

மேற்கண்ட உதாரணத்தை நீங்கள் எப்போது வைக்கலாம் என்றால், ஹதீஸில் ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று சொல்லப்படுவதற்கு முரணாக குர் ஆனில், ஈசா நபி மீண்டும் வர மாட்டார்கள் என்று ஒரு வசனம் இருப்பதாக நீங்கள் காட்ட வேண்டும். அப்படி ஒரு வசனம் இருந்தால் அப்போது, இந்த ஹதீஸ்கள் அனைத்தையும் புறம் தள்ளலாம். காரணம் அது தான் முரண் ! முரண் என்றால் இது தான் பொருள்.
அல்லாமல், எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று குர் ஆன் சொல்வதும், ஈசா நபி மீண்டும் இந்த உலகத்திற்கு வருவார்கள் என்று ஹதீஸ் சொல்வதும் முரண் என்று சொல்வது அர்த்தமே இல்லாத வாதமாகும். முரண் என்றால் என்ன பொருள் என்பதை கூட புரியாமல் நீங்கள் பேசுகிறீர்கள் !!!

இன்னும் சொல்லப்போனால், ஈசா நபியை அல்லாஹ் கைப்பற்றினான் என்கிற வசனம்,  ஒரு வாதத்திற்கு ஈசா நபி இறந்து விட்டார் என்று தான் சொல்கிறது என்று வைத்துக்கொண்டால் கூட, அப்போதும் இந்த ஹதீஸ் முரணில்லை. அது ஈசா நபி இறந்து விட்டார் என்பதை சொல்கிறது, ஹதீஸ், இறந்து விட்ட ஈசா நபி மீண்டும் வருவார் என்று சொல்கிறது, ஆகவே இரண்டையும் இணைத்து விளங்க வேண்டும், முரண் என்று சொல்லி ஹதீஸை மறுக்க முயலக்கூடாது !!

இவைகளுக்கு தெளிவான முறையில் பதில் சொல்லாமல், மாலிக் இமாம் ஏன் இதை பதியவில்லை என்கிற ஒரு கேள்வியை கேட்கிறீர்கள்.
நான் கேட்கிற இத்தனை அறிவுக்கு உகந்த வாதங்கள் எதற்குமே பதில் சொல்ல மாட்டீர்கள், ஆனால், மாலிக் இமாம் ஏன் இந்த ஹதீஸ்களை பதியவில்லை என்கிற கேள்வி, உங்கள் வாதத்திற்கு தூக்கி நிறுத்துகிற கேள்வி என்று நினைக்கிறீர்களா?

மாலிக் இமாம் இந்த ஹதீஸை பதியவில்லை என்றால் இதை கிடைத்திருக்காது அதனால் பதியவில்லை.
அல்லது, உங்களை போல தவறான நம்பிக்கையில் அவரும் இருந்திருப்பார், அதனால் பதியவில்லை... அவரும் உங்களை போல மனிதர் தான்.
இதுவா பிரச்சனை? மாலிக் இமாம் பதியவில்லை என்றால், முஸ்லிம் இமாம் பதிந்துள்ளார்களே, அந்த ஹதீஸ்களை எடுத்து வைத்து கேள்வி கேட்டால், மாலிக் இமாம் ஏன் இதை பதியவில்லை என்று கேட்டு, இதன் மூலம் இந்த ஹதீஸ் பொய் என்று நிரூபிக்க முயற்சித்தால், நேர்மையாக வாதம் செய்ய வேண்டும் என்கிற நோக்கம் உங்களுக்கு இருக்கிறதா என்கிற சந்தேகம் எனக்கு வருகிறது.
எத்தனையோ ஹதீஸ்கள் புஹாரியை தவிர வேறெந்த நூல்களிலும் இருக்காது. ஆகவே முஸ்லிம், அபு தாவூத் போன்ற இமாம்கள் இந்த ஹதீஸை பதியாத காரணத்தால் இது தவறு.. என்று ஒருவர் வாதம் வைத்தால் அது செல்லுமா?
அப்படி இருக்கிறது உங்கள் வாதமும்..

இறுதியாக, சூனியம் பற்றி நீங்கள் சொன்ன கருத்து, இந்த தலைப்போடு தொடர்புடையது இல்லை என்றாலும், அது தவறான வாதம் என்பதால் கூடுதல் விளக்கத்தை இங்கு தருகிறேன்..

எந்த நிலையிலும் குர் ஆனை அல்லாஹ் பாதுகாப்பான், ஆகவே நபி அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட கால கட்டத்தில் இறங்கப்பட்ட குர் ஆனையும் அல்லாஹ் பாதுகாப்பான், ஆகவே இந்த ஹதீஸை மறுகக் தேவையில்லை என்கிற ஒரு கருத்தை வைத்திருந்தீர்கள்.
இது போன்ற வாதத்திற்கு அல்லாஹ்வே மறுப்பு சொல்லி உள்ளான். 

அல்லாஹ் பாதுகாப்பான் என்பதனுடைய பொருள், பாதுகாப்பதற்குரிய எல்லா வழிகளையும் திறந்து வைப்பான் என்பதாகும். பாதுகாப்புக்கு தடங்கல் ஏற்பபடுதவல்ல எல்லா புறக்காரணங்களையும் அப்புறப்படுத்தி, அதன் மூலம் பாதுகாப்பான் என்பது தான் இதன் பொருள்.

இதை நாம் சுயமாகவும் சொல்லவில்லை - இதையும் அல்லாஹ்வே தனது திருமறையில் சொல்கிறான்.

29 ;48 வசனத்தில், "இந்த தூதருக்கு எழுதவோ படிக்கவோ நாம் கற்றுக்கொடுக்கவில்லை. அவ்வாறு கற்றுக்கொடுதிருந்தால், இதை காரணம் காட்டியே இறை மறுப்பாளர்கள் இந்த வேதத்தின் மீது சந்தேகம் கொண்டிருப்பார்கள், என்று அல்லாஹ் சொல்வது, சூனியம் குறித்த உங்களது கேள்விக்கே பதிலாக அமைந்துள்ளது .


இது இறை வேதம் தான் என்று பாதுகாக்க வேணடுமானால், நபி (ஸல்) அவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக்கொடுத்து , அதன் பிறகும் கூட வேதத்தை பாதுகாத்திருக்க முடியும். அல்லாஹ்வுக்கு அந்த ஆற்றல் கூட உள்ளது !! 
ஆனால், இது மனித கையாடலாக இருக்குமோ? என்கிற சந்தேகம் கூட வரக்கூடாது என்பதில் அல்லாஹ் கவனமாக இருக்கிறான் என்பதற்கு மேற்கண்ட வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.
வேதத்தை பாதுகாக்கவும் செய்ய வேண்டும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக தோன்றக்கூடிய எல்லா வாசல்களை அடைக்கவும் செய்ய வேண்டும்.

இது தான் அல்லாஹ்வின் அளவுகோல். இதை அல்லாஹ்வே சொல்லியும் விட்டான்.

இதே அளவுகோல் கொண்டு சூனியத்தையும் சிந்தித்தால் குழப்பமில்லை.

கூடுதல் விளக்கத்திற்காக இதையும் சொல்லி, எந்த நிலையிலும் ஈசா நபி இன்னும் மரணிக்கவில்லை என்கிற கொள்கை தான் மேலோங்கும் என்றும், அதற்கு எதிரான கருத்துக்கள் அனைத்துமே நிலையற்ற, தடுமாற்றம் நிறைந்த தவறான கொள்கைகள் என்றும் எள்ளளவு சந்தேகமுமின்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

வேதக்காரர்கள் அவரது மரணத்திற்கு முன் அவரை நம்புவார்கள் என்கிற ஒரு வசனத்தை பற்றி மட்டுமே ஒன்பது வாய்ப்புகள் கொண்ட விவாத தொடர் சில மாதங்கள் முன்பு நடந்தது. அதில், அந்த வசனம் வார்த்தைக்கு வார்த்தை விரிவாகவே அலசப்பட்டது, அந்த விவாத தொகுப்பு தேவைப்படுபவர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

தனது பாதையை விட்டும் வழி தவறியவன் யார்?' என்பதை உமது இறைவன் நன்றாக அறிபவன். நேர்வழி பெற்றோரையும் அவன் மிக அறிபவன்.
-  குர்ஆன்  6 :117  


அன்புடன்,
நாஷித் அஹமத் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக