சனி, 1 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நாஷித் அஹமத் - 1




01/09/2012



அஸ்ஸலாமு அலைக்கும்.

பத்து வாய்ப்புகள் கொண்ட இந்த விவாத தொடரில் இது எனது முதல் வாய்ப்பு.


ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்பதற்கு நீங்கள் என்னென்ன ஆதாரங்களை எல்லாம் வைக்கிறீர்களோ, அவற்றை என்ன பாணியில் எல்லாம் வைக்கிறீர்களோ, அவை அனைத்திற்கும் முந்தைய விவாதத்திலேயே எள்ளளவு சந்தேகத்திற்கும் இடமில்லாத வகையில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நீங்கள் இப்போது வைத்திருக்கும்  "அல்லாஹ் கைப்பற்றினான்" என்று வருகிற வசனமானாலும், "அவரை அல்லாஹ் உயர்த்தினான்" என்று வருகிற வசனமானாலும், இன்னும் நீங்கள் வைக்க இருக்கிற வேறு வசனங்கள் ஆனாலும் அவற்றை விலாவாரியாக, அனைத்து கோணங்களிலும் சிந்தித்து முன்னரே தக்க பதில் தரப்பட்டு தான் உள்ளது. 
எனினும் மீண்டும் விவாதிக்க இங்கு வாய்ப்பு கிடைத்திருப்பதால் ஒவ்வொரு ஆதாரத்தையும் இங்கு மீண்டும் தெளிவாகவே அலசி விடலாம்.
நீண்ட விவாத தொடர் என்பதால் ஒவ்வொன்றாகவே எடுத்துக்கொள்வோம். என் தரப்பில் ஈசா நபி மரணிக்கவில்லை என்பதற்கு நான் ஆதாரம் தருவதோடு, ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்பதற்கு நீங்கள் தரும் ஆதாரங்களை ஒவ்வொன்றாக மறுத்தும் வருவேன், இன்ஷா அல்லாஹ். நான் என் தரப்பில் ஆதாரத்தை தரும் போது அதற்கு மறுப்பு தெரிவியுங்கள்,அது தான் படிப்பவர்களுக்கும் எளிதில் புரியும். நீங்களாக முந்திக்கொண்டு நான் தரும் ஆதாரங்களை இப்போதே எடுத்து வைத்து பதில் சொல்ல வேண்டாம். 
எந்த ஆதாரத்தை எப்போது தர வேண்டும் என்பதை நான் அறிவேன் !

முதலில், ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதற்கு ஹதீஸில் தெளிவாகவே ஆதாரம் உள்ளது. 

உங்கள் இமாம் உங்களுடன் இருக்கிற போது ஈஸா நபி வருவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் புஹாரி 3449

ஈஸா நபி இறங்கும் போது, அப்போதைய முஸ்லிம்களின் தலைவர், "வாருங்கள், எங்களுக்கு தொழுகை நடத்துங்கள்", என்று கேட்பார். அதற்கு ஈஸா நபி , "உங்களை சார்ந்தவர் தான் உங்களுக்கு இமாமாக இருக்க முடியும், அது தான் அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு செய்திருக்கும் கண்ணியம் என்று பதில் சொல்வார்கள்.
முஸ்லிம் 225

ஈஸா நபி வரும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல் விடப்படும், போயும் கள்ளம் கபடமும் ஒழியும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 221

மேலும், இறுதி நாட்களில் ஈஸா நபி ஹஜ் செய்வார்கள் என்பன போன்ற ஹதீஸ்களும் (முஸ்லிம் 2403) உள்ளன.


குர் ஆனுடன் ஹதீசும் மார்க்கம் தான் எனும் போது, ஹதீஸ்களில் சொல்லப்பட்டவைகளை இயன்றவரை நம்புவதற்கு தான் முயற்சி செய்ய வேண்டும். நேரடியான முறையில் குர் ஆனுடன் மோதினாலேயே தவிர ஹதீஸ்களை மறுக்க கூடாது.

ஈஸா நபி இன்னும் மரணிக்கவில்லை எனவும், மீண்டும் வருவார்கள் எனவும் ஹதீஸ்கள் சொல்வது குர் ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதுகிறதா என்றால் இல்லவே இல்லை !
இதை நீங்கள் திறந்த மனதுடன் முதலில் சிந்திக்குமாறு கேட்கிறேன்.

மோதுதல் எப்போது வரும்?
  • ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்று குர் ஆனில் ஏதேனும் வசனம் நேரடியாக இருந்தால் மோதல் எனலாம்.
  • ஈஸா நபி மீண்டும் வர மாட்டார்கள் என்று ஏதேனும் வசனம் நேரடியாக சொல்லப்பட்டால், மீண்டும் வருவதாக ஹதீஸ் சொல்வது மோதல் எனலாம்.
ஆனால் குர் ஆனில் இவ்வாறு நேரடியாக எதுவுமே சொல்லப்படவில்லை.

ஈஸா நபியை அல்லாஹ் கைப்பற்றினான் என்று வருகிற ஒரு வசனத்தை வைத்து ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்கிறீர்கள்.

மரணத்தை குறிக்க வபாத் என்கிற வார்த்தை இருப்பது போல மவுத் என்கிற வார்த்தையும் இருக்க தான் செய்கிறது.
மவுத் என்கிற வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்கிற ஒரு அர்த்தத்தை தான் எடுக்க முடியும். ஏனெனில், மவுத் என்பதன் அகராதி அர்த்தமே மரணம் தான் !

ஆனால் மவுத் என்கிற வார்த்தையை அல்லாஹ் பயான்படுதாமல் வபாத் என்கிற வார்த்தையை தான் அல்லாஹ் இங்கு பயன்படுத்துகிறான்.
வபாத் என்பதற்கு மரணம் என்கிற அர்த்தம் எந்த அகராதியிலும் கிடையாது. 
வபாத் என்பதற்கு முழுமையாக எடுத்தல் என்கிற ஒரு பொருள் தான் உண்டு. 

ஒரு மனிதனை முழுமையாக எடுத்தல் என்று சொல்வது, அதுவும் அல்லாஹ் எடுத்தான் என்று சொல்லும்  போது அது மரணத்தை தான் குறிக்கும் என்பதால் வபாத் என்று வருகிற பல இடங்களில் மரணம் என்று நாம் தப்சீர் செய்கிறோம். ஆனால் வார்த்தையின் பொருளே "மரணம்" அல்ல!

இது பல இடங்களுக்கு பொருந்தலாம் என்றாலும் ஈஸா நபி விஷயமாக பொருந்தாது. காரணம் ஹதீஸின் மூலமாக ஈஸா நபி மரணிக்கவில்லை என்று அல்லாஹ் சொல்லி விட்டான். 

ஹதீஸில் ஈஸா நபி மரணிக்கவில்லை என்று சொல்லி விட்ட பிறகு, ஈஸா நபியை முழுமையாக எடுத்துக்கொண்டான் என்று வரும் வசனத்தை எப்படி புரிய வேண்டும்? அல்லாஹ் முழுமையாக எடுத்துக்கொண்டான் என்று, அதன் நேரடி அர்த்தத்தோடு மட்டும் புரிய வேண்டும், மரணிக்க செய்து விட்டான் என்று கூடுதல் பொருளை கொடுக்க கூடாது. ஏனெனில், ஈஸா நபி மரணிக்கவில்லை என்று ஹதீஸ் உள்ளது.

இந்த இடத்தில், ஹதீசுக்கு ஏற்றவாறு குர்ஆனை வளைக்கலாமா என்கிற சந்தேகம் சிலருக்கு வரலாம். ஆனால் இந்த சந்தேகமும்  தேவையற்றது. இங்கே இறை வசனத்தின் அர்த்தத்தை நாம் மாற்றவேயில்லை, இருக்கிற அர்த்தத்துடன் அப்படியே நிறுத்திக்கொண்டு கூடுதல் விளக்கத்தை தரவில்லை. அவ்வளவு தான்.!! ஆக, குர்ஆனின் அர்த்தத்தை வளைப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை.

ஆக, வபாத் என்பதற்கு அதிகமான இடங்களில் மரணம் என்று பொருள் செய்தாலும் கூட , அதன் நேரடி அர்த்தம் மரணம் இல்லை என்பதாலும், நேரடி அர்த்தமான "முழுமையாக பெறுதல்" என்கிற அர்த்தத்தை தாண்டி வேறு அர்த்தத்தை வைத்தால் ஹதீஸ்களை மறுக்க வேண்டி வரும் என்பதாலும், அந்த வார்த்தைக்கு எது நேரடி அர்த்தமோ அதோடு நிறுத்துகிறோம்.
இப்போது அந்த வசனமும் புரிகிறது, ஹதீஸ்களும் அர்த்தமுள்ளதாகிறது !!

அல்லாஹ் ஈஸா நபியை முழுமையாக கைப்பற்றினான். நேரடியாக புரியலாம், ஏதேனும் முறையில் கைப்பற்றியிருப்பான். உயிரை எடுத்து விட்டானா இல்லையா என்பதை இந்த வசனம் சொல்லவில்லை. முழுமையாக எடுத்தான், அவ்வளவு தான்.

உயிர் பற்றி சிந்திக்கும் போது, ஹதீஸ்களின் வாயிலாக "ஈஸா நபி மீண்டும் வருவார்கள்" என்கிற செய்தி கிடைக்கிறது. 

அதை வைத்து, ஈஸா நபி இன்னும் மரணிக்கவில்லை, ஆனால் அல்லாஹ் தமது ஆற்றலால் அவர்களை கைபற்றி இருக்கிறான், மேலும், இறுதி நாளின் போது மீண்டும் வருவார்கள் எனவும் புரிய முடிகிறது.

ஒரு வாதத்திற்கு, வபாத் என்று வந்து விட்டாலேயே அது மரணம் என்கிற பொருளை தான் கொடுக்க வேண்டும் என்று வைத்துக்கொண்டால் கூட (இங்கு அப்படி சொல்லவே முடியாது என்பது வேறு விஷயம்) , ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று பொருள் செய்து விட்டு, ஹதீஸில் மீண்டும் வருவார்கள் என்று சொல்லப்பட்டதையும் சேர்த்தே நம்பலாம். அப்போதும், ஈஸா நபி மீண்டும் வருவார்கள் என்கிற கருத்து நிற்கும். மரணித்தவர் கூட அல்லாஹ் நாடினால் மீண்டும் வரலாம். ஈஸா நபியை அல்லாஹ் மரணிக்க செய்தான், எனினும் இறுதி நாளின் போது மீண்டும் வருவார்கள்!!! இப்படி கூட புரியலாம் !

இது ஒரு வாதத்திற்கு சொல்லப்பட்டது. ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பது மட்டும் தான் எனது கொள்கை, மீண்டும் வருவாரா? என்றால் வருவார் தான் என்று நீங்கள் சொல்வதாக இருந்தால் மேலே "ஒரு வாதத்திற்கு" என்று நான் சொன்ன்னவற்றை கருத்தில் கொள்ள வேண்டாம். எனினும், மீண்டும் வரவே மாட்டார்கள் என்கிற கொள்கையுடையவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இது சொல்லப்பட்டது.

எனினும் அந்த வசனம் மரணத்தை சொல்லவில்லை, அந்த வார்த்தைக்கு மரணம் என்கிற பொருள் அறவேயில்லை, மேலும், ஹதீசுக்கு பங்கமில்லாத வகையில் நேரடி அர்த்தத்தை மட்டுமே அந்த வசனத்திற்கு கொடுத்து, ஈஸா நபி உயிருடன் தான் இருக்கிறார்கள், உடலுடன் பூமியை விட்டு மாற்றப்பட்டார்கள்  , அவ்வளவு தான், இப்படி புரியவும் அந்த வசனம் இடம் தருகிறது என்பது மேலே தெளிவாக விளக்கப்பட்டது.

இன்னும் 
  • வபாத் என்பதற்கு நேரடி பொருள் கைப்பற்றுதல் தான் என்பதற்கு வேறு ஆதாரம் உள்ளனவா என்பதையும்  .
  • குர் ஆனில் பொதுப்படையாக சொல்லப்பட்டதிலிருந்து ஹதீஸில் விலக்கு அளிக்கப்படும் போது அதை எப்படி புரிய வேண்டும் என்பதை பற்றியும்,
  • தொடர்ந்து ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதற்கு குர் ஆன் தரும் வேறு வேறு ஆதாரங்களை பற்றியும் அடுத்தடுத்த வாய்ப்புகளில் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக