முர்ஸல் : ஒரு செய்தியில் எல்லா அறிவிப்பாளர்களும் குறிப்பிடப்பட்டு, சஹாபி மட்டும் விடுபட்டிருந்தால் அது முர்ஸல் வகை எனப்படும்.
முன்கதிவு : சஹாபி அல்லாமல் இடையில் வேறு ஏதேனுமொரு அறிவிப்பாளர் விடுபட்டிருந்தால் அத்தகைய ஹதீஸ் முன்கதிவு.
முஃலல் : இடையில் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டிருந்தால் அத்தகைய ஹதீஸ் முஃளல்.
முஅல்லக் : எந்த அறிவிப்பாளர் பெயரையும் குறிப்பிடாமல் வெறுமனே நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று எந்த செய்தியாவது பதியப்படுமானால் அவை முஅல்லக்.
மஜ்ஹூல் : வரலாற்று தெளிவுகள் ஏதுமில்லாத (யாரென்றே அறியப்படாத) அறிவிப்பாளர்கள் வழியாக வரும் ஹதீஸ்கள் மஜ்ஹூல் வகை எனப்படும்.
ஷாத் : ஒரே ஆசிரியரிடமிருந்து அறிவிக்கும் பெரும்பான்மையான மாணவர்கள் ஒரு செய்தியை ஒரு விதமாகவும், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் அதே செய்தியை அதற்கு மாற்றமாகவும் அறிவித்தால், குறைந்த எண்ணிக்கையிலுள்ள மாணவர்கள் அறிவித்த செய்தி ஷாத் எனப்படும்.
(இதில் மாணவர்கள் அனைவருமே தரத்தில் சமமானவர்களே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்)
முன்கர் : ஷாத் வகை ஹதீஸில் குறைந்த எண்ணிக்கையிலுள்ளவர்கள், அதிக எண்ணிக்கையிலுள்ளவர்களுக்கு நிகரான தரத்தில் இருந்தாலும், அவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள் என்பதால் அந்த செய்தி பலகீனம் ஆனது.
அதுவே, அந்த குறைந்த எண்ணிக்கையிலுள்ளவர்கள் பெரும்பான்மையினரை விட நம்பகத்தன்மையிலும் குறைந்தவர்களாகி விட்டால் அத்தகைய ஹதீஸ் முன்கர் ஆகும்.
முள்தரப் : இதுவும் ஷாத் வகையை போன்றது தான். ஷாத் வகையில், பெரும்பான்மையான அறிவிப்பாளர்களும் குறைந்த எண்ணிக்கையிலுள்ள அறிவிப்பாளர்களும் ஒரே ஆசிரியரிடமிருந்து தான் அறிவிப்பார்கள்.
ஆனால், ஒரு வேளை குறைந்த எண்ணிக்கையிலுள்ள அறிவிப்பாளர்கள் வேறு வேறு ஆசிரியர் வழியாக அறிவித்திருந்தால் அத்தகைய ஹதீஸ்கள் முள்தரப் எனப்படும்.
முதல்லஸ் : சில ஹதீஸ்களின் சனதை கவனிக்கையில், ஒரு அறிவிப்பாளரிடமிருந்து கேட்டு அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பாளர், முதலாம் அறிவிப்பாளரை நேரடியாக சந்தித்து அதை கேட்டாரா அல்லது வேறு நபர்கள் மூலமாக கேட்டாரா என்கிற சந்தேகம் ஏற்படும். சம்மந்தப்பட்ட அந்த இரண்டாம் அறிவிப்பாளர் அத்தகைய குணமுடையவரா (நேரடியாக கேட்காமலேயே கேட்டதாக சொல்வது) என்பதை ஆய்வு செய்து, அத்தகைய குணமுடையவர் தான் என்று உறுதி செய்யப்பட்டால், அந்த ஹதீஸ்கள் முதல்லஸ் எனப்படும்.
(அத்தகைய குணம் அவருக்கு இல்லை என்று அறியப்பட்டால் அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸாகி விடும் !)
முஅன்அன் : "அன்" (வழியாக) என்கிற துணை சொல்லுடன் அறிவிப்பவர்கள் தமது ஆசிரியர்களை பயன்படுத்துவது இந்த வகையை சேரும். அதாவது அன் அப்துர்ரஹ்மான், அன் அப்துல்லாஹ் என, அப்துல்லாஹ் வழியாக, அப்துர்ரஹ்மான் வழியாக.. என்றெல்லாம் அறிவிக்கப்படும் செய்திகள் இந்த வகையை சேரும்.
இதுவும் முதல்லஸ் வகையை போன்றது தான். "அவர் வழியாக" என்று சொல்லப்படும் போது, அதை சொன்னவர், அவரிடம் நேரடியாய் கேட்டு சொல்கிறாரா அல்லது இடையில் யாரேனும் விடுபட்டிருக்கின்றார்களா என்பதை பொறுத்து அந்த ஹதீஸ் நிராகரிக்கப்படத்தக்கவையா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.
முத்ரஜ் : நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியாக ஒன்றை அறிவிக்கும் அறிவிப்பாளர், இடையில் தமது சுய கருத்தையும் சேர்த்தே சொல்லி விடுவார்.
அத்தகைய ஹதீஸ் முத்ரஜ் எனப்படும்
அவ்வாறு சொல்லப்படுமேயானால், எது நபி சொன்னது, எது நபி சொன்னதில்லை என்று ஆய்வு செய்து பிரித்து, நபி சொன்னதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை விட்டு விடலாம்.
மக்லூப் : இரு நபர்களை பற்றி அறிவிக்கையில் இருவரது செயலையும் அப்படியே மாற்றி அறிவிப்பு செய்து விட்டால் அத்தகைய செய்தி மக்லூப் எனப்படும்.
உதாரணத்திற்கு நபிக்கு பிறகு அபுபக்கர், அவருக்கு பிறகு உமர் ஆட்சியில் அமர்ந்தார்கள் என்று சொல்ல வேண்டிய இடத்தில் நபிக்கு பிறகு உமர், அதன் பிறகு அபுபக்கர் என்று மாற்றி சொல்வது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக