மீலாது விழாவிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் நபிகளாரை கண்ணியப்படுத்தும் விதமாக நாமாகக் கொண்டாட வேண்டும் என்று சிலர் காரணம் கூறுவர்.
வெளிப்படையாகப் பார்த்தால் இக்கருத்து நபி(ஸல்) அவர்களை போற்றுவது போன்று தோன்றினாலும் உண்மையில் இது நபி(ஸல்) அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் வார்த்தையாகும்.
இதனடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சில நல்லறங்களை இச்சமுதாயத்திற்கு சொல்லவில்லை, மறைத்துவிட்டார்கள் என்று கூற வேண்டிவரும்.
நபித்தோழர்களும் இந்நல்லறங்களை செய்யவில்லை என்று அவர்கள் மீதும் குறை கூறவேண்டிவரும். இந்நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
இது நல்ல விஷயம் என்றால் அதை நபி அவர்கள் சொல்லியிருப்பார்கள், சஹாபாக்கள் அதை செய்து நபியிடம் அங்கீகாரம் பெற்றிருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, அவர்களுக்கு கிடைக்காத நல்லறம், நல்லறமல்ல என்பது தான் நாம் புரிய வேண்டிய அளவுகோல் !
மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது. அல்லாஹ் நபி(ஸல்)அவர்களோடு இம்மார்க்கத்ததை முழுமையாக்கிவிட்டதாக குர்ஆனில் அறிவித்துவிட்டான். (அல்குர்ஆன் 5:3)
மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படுபவை அனைத்தும் பித்அத் செயலாகும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் கற்றுதராதவற்றை மார்க்கத்தின் அங்கமாக நினைத்து செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக அது வழிகேடாகும். அது மறுமையில் நிராகரிக்கப்பட்டுவிடும். அதற்குரிய தண்டனையும் கிடைக்கும்.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைத்தும் வழிகேடாகும். (நூல்: புகாரி)
யார் நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும். (நூல்: முஸ்லிம்)
மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை தண்ணீர் அருந்த விடாமல் மலக்குகள் இழுத்துச் சென்று விடுவார்கள். (ஹதீஸின் சுருக்கம்: புகாரி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக