அல்லாஹ்வுக்கு ஒரே நேரத்தில் அர்ஷிலும் இருந்து கொண்டு கீழ் வானத்திற்கும் வர இயலும், அது அல்லாஹ்வுக்கு சாத்தியம் தான் என்று நம்பலாம் என்று சொல்பவர்கள், அவர்களின் கட்டடங்களின் அடிப்புறத்தில் அல்லாஹ் வந்தான் என்று வரக்கூடிய வசனத்திற்கு மட்டும் (16:26) அல்லாஹ்வின் ஆற்றல் வந்தது என்று ஏன் பொருள் செய்ய வேண்டும்??
அர்ஷில் இருந்து கொண்டே கட்டிடங்களின் அடியில் அல்லாஹ்வால் வர இயலாதா?? அது மட்டும் அல்லாஹ்வுக்கு சாத்தியமில்லாமல் போனது எப்படி?
நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். என்று வரக்கூடிய வசனத்திற்கு மட்டும் (57:4), அல்லாஹ்வின் கண்காணிப்பும் பாதுகாப்பும் நம்மை சுற்றியிருக்கும் என்று ஏன் பொருள் செய்ய வேண்டும்???
அர்ஷில் இருந்து கொண்டே நம்முடன், நாம் செல்லக்கூடிய கடை வீதி, அலுவலகம், பேருந்து நிலையம் என எங்கு வேண்டுமானாலும் அல்லாஹ்வால் வர இயலுமே.. இப்படி இவர்கள் ஏன் புரிவதில்லை?
அர்ஷில் இருந்து கொண்டே நாம் செல்லும் கடை வீதிகளுக்கும், நம் ஒவ்வொருவருடனும் அல்லாஹ்வால் வர இயலாதா என்ன?
ஆக, தெளிவான சந்தர்ப்பவாதமே இவர்கள் வாதங்களில் வெளிப்படுகிறது. உண்மையை அறியும் ஆர்வமும் இவர்களுக்கு இல்லை, அதற்கான தகுதியையும் இவர்கள் வளர்க்கவில்லை என்பதற்கு இவை சான்று.
எதையுமே அல்லாஹ்வுக்கு இயலும் தானே, அல்லாஹ்வுக்கு இது சாத்தியம் அல்லவா? என்கிற ரீதியில் சிந்திப்பது தான் இவர்கள் செய்கிற மிகப்பெரிய தவறு. இந்த கோணத்தில் சிந்திப்பதன் விளைவாக தான் கப்ர்முட்டிகள் கூட தங்கள் கொள்கையை நியாயப்படுத்தி வரும் அவலநிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.
காரணம், கப்ரில் அடங்கியிருப்பவர் சாதாரண மனிதர் என்றாலும், அல்லாஹ் நினைத்தால் அவருக்கு ஆற்றல்களையும் உபரியான சக்திகளையும் வழங்க முடியாதா? என்று பாமரத்தனமாய் எண்ணுகிறார்கள்.
அல்லாஹ்வுக்கு எதுவும் சாத்தியம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மனிதனோடு தொடர்புப் படுத்தி அல்லாஹ் சிலவற்றை பேசுகிற போது, அவனது இலக்கணத்தை, அவனது தகுதியை தாழ்த்திக் கொள்ளாத ரீதியில் தான் பேசுவான்.
சிலவற்றை நேரடி வார்த்தைகள் கொண்டு அல்லாஹ் சொல்வான், சிலவற்றை உவமையாக சொல்வான். உவமையாக சொல்பவற்றை நேரடியாய் புரிந்து விடவதால் ஏற்படும் விபரீதங்கள் பாரதூரமானவை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக