சனி, 17 ஆகஸ்ட், 2013

எது தீவிரவாதம்?




துப்பாக்கி ஏந்தி பிறரை கொலை செய்வது மட்டும் தீவிரவாதம் என்று எண்ணுகின்றனர். 
எதிலுமே நடுநிலை பேணாமல் தீவிர சிந்தனை, தீவிர கொள்கை தீவிர செயல்பாடுகள் என எண்ணங்களை தீவிரமாக கொள்ளுதலும் கூட தீவிரவாதமே !

அந்த வகையில், ஹிந்து மதம், கிருத்துவம் போன்றவற்றை விடவெல்லாம் அதிக நடுநிலை பேணக்கூடிய மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.. செயல்களில் அமைதி காட்டும் மார்க்கமான இஸ்லாம், எண்ணங்களின் வாயிலாகவும் நடுநிலையையே போதிக்கிறது. இஸ்லாம் போதிக்கும் சித்தாந்தமானது, ஒருவனை எண்ணத்திலும் செயலிலும் நடுநிலையையும், சமசீர் சிந்தனையையும் வழங்கும் என்பதே உண்மை.

இறைவனை வணங்குவது என்கிற காரியத்திலும் கூட, நின்று வணங்க முடியவில்லை என்றால் அமர்ந்து வணங்கலாம், அதுவும் இயலாதா? படுத்துக்கொண்டே கூட வணங்கலாம். ரமலானில் நோன்பு வைக்க இயலாதா? வேறொரு நாளில் நோற்றுக்கொள்ளலாம், ஹஜ் செல்லவசதி இல்லையா? செல்ல வேண்டாம் என மார்க்க சட்ட திட்டங்கள் எதை எடுத்துக்கொண்டாலும் நடுநிலை !

இதற்கு முரணாக, இறைவனை வணங்குகிறோம் என்கிற பெயரில் தீமிதித்தல், உடம்புகளில் அடித்துக்கொள்ளுதல், அலகுகளால் நாக்கில் குத்திக்கொள்ளுதல் போன்றவற்றை போதிக்கும் மதங்கள் சிந்தனையால் தீவிரவாததையே போதிக்கிறது !!

நான் செய்யும் நன்மை, தீமையான காரியங்களுக்கு நானே பொறுப்பாளி, பிறர் செய்யும் பாவங்களை நான் சுமக்க தேவையில்லை என்கிறது இஸ்லாம். இதுதான், அறிவுக்கும் உகந்தது, இது தான் நடுநிலையான சிந்தனையும் கூட..

இதற்கு முரணாக, பிறர் செய்யும் பாவங்களை நான் சுமக்க வேண்டும் என்றோ, நான் செய்யும் பாவங்களை இன்னொருவர் சுமப்பார் என்பதோ தீவிரவாத சிந்தனையாகும்.

ஒருவர் ஒரு தவறு செய்தால், அவர் செய்த அளவுக்கே அவரை தண்டிக்க வேண்டும். இது தான் நடுநிலை, இது தான் சரியான சிந்தனை, இதை தான் இஸ்லாமும் போதிக்கிறது.

இதற்கு முரணாக, யார் என்ன தவறு செய்தாலும் அவரை மன்னிக்க தான் வேண்டும், ஒரு கன்னத்தில் அடித்தால் கூட மறு கன்னத்தை காட்ட வேண்டும் என்று கூறுவதும் தீவிரவாத எண்ணமே !

தனி மனிதனுக்கு உணவில்லையெனில் உலகையே அழிப்போம் என்று முழங்கிய பாரதியார் ஒரு தீவிரவாதி தான்.

குடும்ப பிரச்சனைக்காக மதுரையையே எரித்ததாக சொல்லப்படுகிற கண்ணகி ஒரு தீவிரவாதியே, அதை புராணங்களில் எழுதி வைத்து சிறு பிள்ளைகளுக்கு போதித்து வரும் புராண பக்தர்கள் தீவிரவாத சிந்தனையுடையவர்களே !

எந்த மனிதர் மீதும் எந்த கொள்கையையும் திணிக்க கூடாது என்கிறது இஸ்லாம். இஸ்லாத்தை போதிப்பதில் கூட எவர் மீதும் நிர்பந்தமில்லை, விரும்பியவர் ஏற்கலாம் விரும்பாதவர் விட்டு விடலாம். இது தான் அறிவுக்கு பொருத்தமானதும், நடுநிலை சிந்தனையும் ஆகும்.

இதற்கு மாற்றமாக, பொய் சொல்லி மார்க்கத்தை போதிக்கலாம் என்று கூறியும், தந்திரங்களை அற்புதங்களாக காட்டி மக்களின் மூளையை மழுங்க செய்பவர்களும் தீவிரவாதிகளே !

மதசார்பற்ற கல்விகூடங்களிலும் மிஷனரிகளிலும் கூட மறைமுகமாக தங்கள் சித்தாந்தத்தை மக்களிடம், மாணவர்களிடம் திணிப்பவர்கள் கூட தீவிரவாதத்தை தான் மேற்கொள்கின்றனர்.

முத்தாய்ப்பாக, உலகை படைத்தது ஒரேயொரு கடவுள் தான் என்று நம்புவதே நடுநிலை, அது தான் அறிவுக்கும் உகந்தது, அது தான் இஸ்லாம் போதிப்பது.
அதற்கு மாற்றமாக, கடவுளே இல்லை என்று கூறி மூளையை மழுங்க செய்வதும், காண்பதெல்லாம் கடவுள் என கடவுளுக்குரிய இலக்கணங்களை மீறிய சிந்தனை என்பது தீவிரவாதமே !

இது குறித்து இன்ஷா அல்லாஹ் விரிவான ஆக்கம் ஒன்று வெளியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக