"உங்க மகளுக்கு எவ்வளவு செய்றீங்க?"
இந்த கேள்வியை கேட்டு சலிப்படைந்த பெண்ணை பெற்றவர்கள் பலர் உள்ளனர்.
எனது மகளுக்கு எவ்வளவு செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும், நீங்கள் எதற்கு அதைப்பற்றி கவலைப்பட வேண்டும் என்று அந்த நொடி பெண்ணின் தகப்பனார் மனதினுள் எழும் யதார்த்தமான கேள்வி கூட, தங்கள் மகளின் நலன் கருதி மனதிற்குள்ளேயே சமாதியாக்கப்படும்.
100 சவரன் என்று இவர்கள் சொல்ல, அவ்வளவு தானா? என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்க, மாப்பிள்ளைக்கு.... டொயோட்டா கார்... இன்ஷா அல்லாஹ்...... புக் பண்ணலாம் என்று பெண்ணின் தகப்பனார் மென்று விழுங்க, திருமண பேச்சுவார்த்தை இனிதே (?) நிறைவுறும்.
சில நாட்கள் கழித்து பெண்ணின் தாயாரிடம், என்ன? இப்பவே வரதட்சணை எல்லாம் பேசியாச்சு போல? என்ன நியாயம் இது? என்று உற்றார் கேட்கின்ற போது,
"இதை எப்படி வரதட்சணை என்பீர்கள்? எங்க மகளுக்கு நாங்க செய்றோம், இது தப்பா? தவ்ஹீத் தவ்ஹீத் னு சொல்லி எல்லாத்தையும் தப்பாவே பேசுறீங்களே?" என்று பொய் கோபத்தை காட்டுவதை தவிர வேறு வழி இல்லாது நிற்கும் அவர்களை எண்ணி பரிதாபப்படுவதா அல்லது கோபப்படுவதா என்று குழம்பி போவோம் நாம்.
பெண்ணை பெற்றவர்கள் அவர்களாக விரும்பி தருவதை யாரும் வரதட்சணை என்று சொல்ல மாட்டார்கள்.
அதே சமயம், பெண்ணை பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது தருவது தான் விரும்பி தருவது என்பது.
அவர்கள் எப்போது விரும்பி தர வேண்டும் என்பதை மூன்றாம் நபர் தான் தீர்மானிக்கிறார் என்றால் அது பெண்ணின் பெற்றோர் விரும்பி தருவதாக ஆகாது. பெண்ணின் பெற்றோர் விரும்பி தருவதற்கு இன்னொருவர் விரும்புகிறார் என்று தான் ஆகும் !
சுருக்கமாக கீழ்காணும் நான்கு காரணங்கள் இருந்தால் அது வரதட்சணை என்று முடிவு செய்யலாம்.
1. மாப்பிள்ளை அல்லது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் நேரடியாகவே கேட்பது.
2. இந்த குடும்பத்தில் திருமண உறவு வைத்துக்கொண்டால் நிறைய கிடைக்கும் என்று மாப்பிள்ளை அல்லது மாப்பிள்ளை வீட்டார் எண்ணி அந்த அடிப்படையில் திருமணம் செய்வது..
3. நாம் இதை செய்யவில்லை என்றால் நமது மகள் அங்கே மகிழ்ச்சியாக இருக்க மாட்டாளோ என்று பெண்ணை பெற்றவர்கள் அஞ்சுவது..
4. நாம் இதை செய்யவில்லை என்றால் இந்த சமுதாயத்தில் நமக்கான அங்கீகாரம்பறி போய் விடுமோ என்று பெண்ணை பெற்றவர்கள் அஞ்சுவது.
மேற்கண்ட நான்கோ, நான்கில் ஒன்றோ இருந்தால் அது வரதட்சணை !!
மேற்கண்ட காரணங்கள் ஒன்று கூட இல்லையெனில், பெண் வீட்டார் 100 கோடியே கொடுத்தாலும் அது வரதட்சணை ஆகாது !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக