திங்கள், 10 பிப்ரவரி, 2014

யுவன் ஷங்கர் ராஜா


பிரபலங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டமையால் இஸ்லாம் கண்ணியம் பெற்று விடப்போவதுமில்லை, ஏற்காது போனால் அதனால் இஸ்லாத்திற்கு எந்த இழுக்கும் நேரப்போவதுமில்லை.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொண்டவர்களுக்கு நல்லது, எற்றுக்கொள்ளவில்லையெனில் அது அவர்களுக்கு இழப்பு.

அதேசமயம், பிரபலமானவர்கள் ஒரு சித்தாந்தத்தை ஏற்கிற போது, அந்த நபர் மீது மோகம் கொண்டவர்கள், தங்களது நிலையை சற்று சுய பரிசோதனை செய்து கொள்ள அந்த செய்தி உதவியாய் இருக்கும் பட்சத்தில் அது போன்ற விஷயங்களை பரப்பலாம்.

சமீபத்திய பரபரப்பு செய்தியாக, தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாத்தை தழுவியுள்ளதாக செய்திகள் வெளிவரத் துவங்கியுள்ளன.

நபிகள் பெருமானாரை கொலை செய்வதையே லட்சியமாய் கொண்ட எத்தனையோ மனிதர்களை இந்த மார்க்கம் ஈர்த்திருக்கிறது.

இஸ்லாத்தை அழித்து ஒழிப்பதையே குறிக்கோளாய் கொண்ட எத்தனையோ நபர்களின் உள்ளங்களை இந்த புனித மார்க்கம் புரட்டிப் போட்டிருக்கிறது.

நாம் கற்பனையே செய்திராத நபர்களெல்லாம் இஸ்லாத்தை தழுவியிருக்கிற வரலாறுகளை கொண்ட இந்த மார்க்கத்தில், ஒரு யுவன் ஷங்கர் ராஜா வருவது ஒன்றும் வியப்புக்குரிய செய்தியில்லை.

இது ஒரு பக்கமிருக்க, அவர் பேசியதாக எந்த ஒலி, ஒளி நாடாக்களும் இணையத்தில் காணக்கிடைக்கவில்லை, மாறாக, டிவிட்டரில் செய்தி வெளியிட்டிருக்கிறார் என்று தான் சொல்லப்படுகிறது. ஒருவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர், ஃபேஸ்புக் கணக்கு என்று அறியப்பட்ட பலரது கணக்குகள் போலியானவை என்று பின்னாளில் தெரிய வருவது, அல்லது சம்மந்தப்பட்டவரே இது எனது பெயரில் நடத்தப்படும் போலியான கணக்காகும் என்று காவல் துறையில் புகார் தெரிவிப்பது போன்றவை நடைபெறும் சூழலில்,

நேரடி சான்றாய் ஏதும் கிடைப்பது வரை இது போன்ற செய்தியை பரப்பவும் தேவையில்லை.

இவர் இஸ்லாத்தை தழுவிய செய்தி பரப்படுவதாலோ என்னவோ, முஸ்லிம் பெயர் தாங்கி ஒருவர் திருச்சி கோவிலில் சாமி தரிசனம் செய்தார் என்கிற செய்தியையும் இன்று முகனூலில் பரப்பி விட்டு, அதில் அற்ப சுகம் கண்டுள்ளனர் சில புல்லுருவிகள்.

ஒரு வாதத்திற்கு அத்தகைய சம்பவம் நடைபெற்றது உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட,சம்மந்தப்பட்ட அவன் ஒரு கூமுட்டை என்றும் இந்த செய்தியை பரப்புகிற விஷமிகளுக்கு எத்தகைய மாக்களின் அறிவு இருக்கிறதோ அதே அறிவை தான் அவனும் கொண்டிருக்கிறான் என்று தான் நிரூபணமாகுமே தவிர, இதனால் தூய இஸ்லாத்திற்கு எந்த இழுக்குமில்லை என்பதை இது போன்ற விஷமிகள் புரிந்தால் நல்லது.

இஸ்லாத்தை நோக்கி ஒருவன் வந்தானேயானால் கடவுள் அவனுக்கு வழங்கிய சிந்தனையை சரி வர பயன்படுத்தினான் என்று பொருளாகும், இஸ்லாத்தை விட்டும் தூரமாகிப் போனால், அதை அவன் பயன்படுத்தவில்லை என்று ஆகும்.

இலாபமோ நட்டமோ மனிதனுக்குத் தானே தவிர, இறை மார்க்கம் என்றும் ஓங்கி உயர்ந்தே நிற்கும் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக