திங்கள், 10 பிப்ரவரி, 2014

தமுமுகவினருக்கு பகிரங்க மன்னிப்பு !




கடந்த சில நாட்களுக்கு முன், திருச்சி திமுக மாநாட்டிற்காக அங்கே வைக்கப்பட்டிருந்த கூட்டணி கட்சிகளின் கட் அவுட்கள் அடங்கிய புகைப்படத்தை காண நேர்ந்தது. ஆறேழு கூட்டணி தலைவர்களின் கட்அவுட்கள் வைக்கப்பட்ட கூட்டத்தில் மமக தலைவர் கண்ணியமிகு பேராசிரியரின் கட் அவுட்டை காணவில்லை என்றதும் பதட்டமடைந்தோம், வியப்படைந்தோம்.

திமுகவுடனான கூட்டணியை தமுமுக மறு பரிசீலனை செய்ய போகிறதா?
இட ஒதுக்கீடு தான் எங்களுக்கு முக்கியம் என்றும், சமுதாய மானம் தான் பிரதானம் என்றும் முழங்கியவாறு சட்டசபை புறக்கணிப்பை நடத்தியவர்கள், இட ஒதுக்கீடு வழங்கும் கட்சிக்கு தான் எங்கள் ஆதரவு என்கிற நிலைபாட்டினை எடுத்து விட்டார்களோ ?

அதிமுக இட ஒதுக்கீட்டை வழங்கி விடும் பட்சத்தில் அதிமுகவிற்கு ஆதரவு, அல்லது, அதிமுகவும் இட ஒதுக்கீட்டை வழங்காமல், திமுகவும் இட ஒதுக்கீட்டை பற்றி எந்த வாக்குறுதியையும் வழங்காத நிலை ஏற்பட்டால் பின்னர் பொதுக்குழு கூட்டி ஆதரவு நிலை என்ன என்பதை பற்றி அறிவிக்கலாம் என்கிற சிறப்பான நிலைபாட்டினை எடுத்து விட்டார்களோ?

என்றெல்லாம் தமுமுக குறித்து எண்ணத் துவங்கினார்கள் சிலர்.

ஒரு வேளை, இந்த நிலைபாட்டை எடுத்து விட்ட காரணத்தால் தான் திருச்சி திமுக மாநாட்டில் தமுமுகவின் கட் அவுட் வைக்கப்படவில்லை என்று கருதப்பட்டது.

இல்லை இல்லை, திமுகவுடன் தான் கூட்டணி, அதில் மாற்றமேதுமில்லை,
கட் அவுட் வைப்பது இஸ்லாத்திற்கு மாற்றமான காரியம் என்பதை அவர்கள் விளங்கி, அதன் காரணமாக அதை தவிர்க்க சொல்லியிப்பார்கள் என்று தமுமுகவின் கண்ணியத்தை சற்றே உயர்த்தி சிந்தித்தனர் வேறு சிலர்.

இரண்டில் எதை அவர்கள் செய்திருந்தாலும், தமுமுக மீது இது நாள் வரை கொண்டிருந்த வெறுப்பில் ஒரு சில சதவிகிதங்களையாவது குறைத்துக் கொள்ளலாம் என்கிற ஆர்வத்தில் நாமும் காத்திருந்தோம்.

ஆனால், அந்தோ பரிதாபம் !

நமது எதிர்பார்ப்புகளையும் சந்தேகங்களையும் உடைத்தெறியும் வகையில் சீறி வந்தார் கண்ணியமிகு பேராசிரியர்.

என்னது?? நாங்கள் திமுகவின் அடிமையில்லையா??? எவனடா சொன்னது ??

என்று கேட்கும் விதமாகவும்..

கட் அவுட் விஷயத்தில் நாங்கள் இஸ்லாத்தை பேணினோமா?? எந்த பைத்தியக்காரன் அப்படி சொன்னது??
என்று மறுக்கும் விதமாகவும்..

இன்று வெளியான அதே மாநாட்டு புகைப்படமொன்றில், கட் அவுட்கள் வரிசையில் நமது தானே தலைவர், தன்மான சிங்கம், சமுதாய போர் வாளின் உயரிய கட் அவுட் கம்பீரமாய் காட்சி தந்தது ! (இணைப்பைப் பார்க்கவும்)

நமது அறியாமையை எண்ணி தலையில் அடித்துக் கொண்டோம்..

திருச்சி திமுக மாநாட்டிற்கு இன்னும் சில நாட்கள் மீதமுள்ள‌ நிலையில், மாநாட்டு ஏற்பாடுகள் இன்னும் நடந்த வண்னம் தான் உள்ளன.
மாநாடு துவங்குவதற்கு ஒரு நாள் முன்பு வரை, வரவேற்பு பேனர்கள், கொடி கம்பங்கள், வண்ண விளக்குகள், கட்சி தலைவர்களின் கட் அவுட்கள் போன்றவை வைக்கப்படுக் கொண்டு தான் இருக்கும்.

இந்த விஷயம் அறியாத நாம், கட் அவுட் எல்லாம் அன்றைக்கே வைத்து முடிக்கப்பட்டு விட்டதாய் எண்ணி தமுமுக போன்ற அப்பழுக்கற்ற(?), கொண்ட கொள்கையில்(&#%@) இறுதி வரை உறுதிப்பாடு (!!) காட்டும் கட்சியினை வீணாய் சந்தேகப்பட்டு விட்டோம்.

இது தொடர்பாய் தமுமுக நண்பர்களுக்கு பகிரங்கமாய் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம் !






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக