என்னை வணங்குவதற்காகவே தவிர வேறு எதற்காகவும் உங்களை நான் படைக்கவில்லை என்று அல்லாஹ் சொல்கிற போது நீங்கள் ஏன் சாப்பிடுகிறீர்கள், ஏன் தூங்குகிறீர்கள்?
என்பன போன்ற புல்லரிக்கும் கேள்விகளை சிலர் முகனூலில் பரப்பி தங்களது அதிமேதாவித்தனத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.
இஸ்லாம் குறித்த கேள்விகளாக எதை கேட்டும் பயனற்று போய், இஸ்லாம் என்கிற சத்தியக் கொள்கை அனைத்து சித்தாந்தங்களையும் விஞ்சி நின்று, இவர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்து வரும் நிலையில்,
எதையாவது கேட்க வேண்டுமே என்பதற்காக இத்தகைய கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
என்னை வணங்குவதற்காகவே உங்களை படைத்தேன் என்கிற கட்டளையானது நாம் தூங்குவதற்கோ சாப்பிடுவதற்கோ எதிரான கட்டளையல்ல.
இந்த நோக்கத்திற்காக தான் நீ இங்கே வந்திருக்கிறாய் என்றால் அந்த நோக்கத்திற்கு எதிரான காரியத்தையோ அல்லது நோக்கத்தை அடைவதற்கு தடையாய் அமையும் செயல்களையோ செய்யக்கூடாது என்பது தான் பொருளே தவிர அந்த நோக்கத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத காரியமொன்றை செய்வதை அது தடுக்காது.
இது மனிதனின் சாதாரண பேச்சு வழக்கிலும் உள்ளது தான்.
இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கத்தான் வந்திருக்கிறாய் என்று ஆசிரியர் மாணவனைப் பார்த்து சொன்னார் என்றால், நேற்று இடைவேளையின் போது வராந்தாவில் அவன் நடந்து கொண்டிருந்ததை இதற்கு எதிரான காரியமாய் காட்டக்கூடாது.
அல்லது மதிய வேளையில் உணவருந்துவது, பள்ளிக்கூடத்தில் படிக்கத்தான் வந்த்திருக்கிறான் என்கிற ஆசிரியரின் கூற்றுக்கு எதிரல்ல.
பள்ளிக்கூடத்தில் வந்த நோக்கம் படிப்பது என்றால் படிப்புக்கு எதிரான காரியம் எதையும் அவன் செய்யக்கூடாது என்பது அதன் பொருள். படிக்கின்ற வேளையில் படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தாலோ அல்லது பரீட்சையின் போது படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தாலோ அது தான் முரண்.
உண்ணுவதோ, மலஜலம் கழிக்க அவன் செல்வதோ படிப்புக்கு எதிரான காரியமல்ல.
தன்னை வணங்குவதற்காக தான் அல்லாஹ் நம்மை படைத்திருக்கிறான் என்றால், அவனை வணங்குவதை விட்டும் பாராமுகமாய் நாம் இருக்கக்கூடாது என்பது பொருள். அவனை வணங்குவதற்கு முரணான காரியம் எதையும் செய்து நம் வணக்கத்தை சீரழிக்கக் கூடாது.
அல்லாஹ் விதித்த கட்டளைகள் அனைத்தையும் மனிதன் பேணி நடப்பதே அவனை வணங்கும் முறை.
எப்படி தொழுவதும் நோன்பு வைப்பதும் வணக்கமோ அது போல் சாப்பிடுவதும், வியாபாரத்தில் ஈடுபடுவதும், தூங்குவதும் கூட வணக்கம் தான், இவையும் அல்லாஹ் விதித்த கட்டளைகள் தான் !
இதை புரிந்து கொண்டால் இது போன்ற அதிமேதாவிகளின் வாதம் எடுபடாது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக