சனி, 18 ஜூலை, 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 28)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 28


ஹதீஸ்களைப் புரிந்து கொள்வது எப்படி (தொடர்ச்சி)பல அறிஞர்கள், ஹதீஸ்களை குர் ஆனுக்கு முரண் எனக் கூறி மறுத்ததை நாம் தொடராக கண்டோம்.
இதை வைத்துக் கொண்டு, அவர்கள் மறுத்த அந்த ஹதீஸ்களெல்லாம் உண்மையில் குர் ஆனுக்கு முரணான, மறுக்கப்பட வேண்டிய ஹதீஸ்கள் தான் என்று புரியக் கூடாது.
சில ஹதீஸ்கள் அப்படியிருந்தாலும், வேறு சில ஹதீஸ்களை குர் ஆனுக்கு முரணில்லாமல் நம்மால் விளங்க முடியும். அந்த அறிஞர்கள் தான் கவனமின்மையால் அவற்றை முரண் என தவறாக விளங்கியிருக்கிறார்கள்.
ஆனால், நாம் அவற்றை சுட்டிக் காட்டியதன் நோக்கம் இமாம்கள் கொண்டிருந்த அடிப்படை அளவுகோலை சுட்டிக்காடுவதற்கு தான்.


உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், அனுமதியின்றி நபி (சல்) அவர்களின் விட்டை எட்டிப் பார்த்த சஹாபியை நோக்கி, உமது கண்ணை குருடாக்கி விடுவதற்கு நான் ஆசை கொள்கிறேன் என்பதாக நபி (சல்) அவர்கள் கூறிய ஹதீஸை, மாலிக் இமாம் மறுத்ததாக முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.
சரிக்கு சமமாக தான் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கிற குர் ஆன் வசனத்திற்கு இது முரண் எனக் கூறி தான் மாலிக் இமாம் இதை மறுத்திருக்கிறார்.
ஆனால், மாலிக் இமாமின் புரிதல் தான் இதில் தவறு.
ஏனெனில், எல்லா குற்றங்களுக்கும் சரிக்கு சமமான தண்டனை கொடுக்க இயலாது.
திருடினால் கையை தான் வெட்டுகிறோம், நீயும் போய் திருடு என்று சொல்வதில்லை.
விபச்சாரம் செய்தால் மரண தண்டனை அல்லது கசையடி, இதை தான் கொடுக்கிறோம்.
ஆக, சரிக்கு சமமான தண்டனை தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை.
இவ்விஷயத்தில் மாலிக் இமாமின் புரிதல் தவறாக இருப்பதை இதில் காணலாம்.

ஆனால், நாம் இதை சுட்டிக் காட்டியதன் நோக்கம், குர் ஆனுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களுக்கு அது முரணாகத் தெரியும் போது மறுக்கவும், முரணில்லாமல் தெரியும் போது ஏற்கவும் செய்திருக்கிறார்கள் என்கிற அறிஞர்களின் பொதுவான அணுகுமுறையை சுட்டிக் காட்டுவதற்காக தான்.

ஆக, ஒரு ஹதீஸ் அவர்களின் கவனத்திற்கு வரும் போது, அறிவிப்பாளர் சரி தானே, பதிவு செய்யப்பட்ட நூல் சரி தானே என்பதற்காகவெல்லாம் அதை கண்மூடித்தனமாக நம்பி விட மாட்டார்கள். மாறாக, அவற்றை குர் ஆனோடு உரசிப்பார்த்து, குர் ஆனுடன் அதன் கருத்து மோதுவதாக தெரிந்தால், எப்படிப்பட்ட அறிவிப்பாளர் அறிவித்திருக்கிறார் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதை மறுத்து விடுவார்கள்.எல்லா காலமும் சத்தியம் சொல்கின்ற கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும் :

அதே போன்று, குர் ஆனுக்கு முரண்படும் போது அத்தகைய ஹதீஸ்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நாம் செய்கின்ற இந்த பிரச்சாரம் ஏதோ நாம் தான் முதன்முதலாக முன்வைப்பது போலவும், இதற்கு முன் எவருமே இதை சொன்னது கிடையாது என்பதாகவும் நம்மை எதிர்க்கின்றவர்கள் தவறான பிரச்சாரமொன்றை செய்து வருகின்றனர்.

அவர்களின் பிரச்சாரம் பொய் என்பதை காட்டுவதற்கு தான், நமக்கு முன்னரும் ஏராளமான அறிஞர்கள் இதே கருத்தினை சொல்லியிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறோமே அல்லாமல், அவர்கள் இவ்வாறு சொல்லியிருப்பது தான் இது விஷயமாக நாம் கொண்டிருக்கும் ஆதாரம் என்று நாம் சொல்லவில்லை.

எந்த அறிஞரும் இந்த கருத்தை சொல்லியிருக்காவிட்டாலும், இந்த கருத்து தான் சரி.

ஆனால், பல அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள், சஹாபாக்களே சொல்லியிருக்கிறார்கள், செயல்படுத்தியும் இருக்கிறார்கள், நபி (சல்) அவர்களும் கூட இவ்வாறு செய்வதற்கான விதியினை வகுத்து தந்திருக்கிறார்கள் !

இன்னொரு அறிவற்ற வாதமொன்றையும் நம்மை எதிர்க்கக் கூடியவர்கள் எழுப்பி வருவதை நாம் காண்கிறோம்.
அதாவது, சத்தியத்தை எடுத்துச் சொல்லக் கூடிய கூட்டம் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருப்பார்கள் என்று நபி (சல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த கொள்கை தான் சத்தியம் என்றால், இதை உங்களுக்கு முன் சொன்னது யார், ஒவ்வொரு காலகட்டத்திலும் இதை சொன்னவர்கள் யார்? என்பதை உங்களால் காட்ட இயலுமா? என்று கேட்கின்றனர்.

இது அறிவுக்கு பொருத்தமற்ற, மடமையான கேள்வி.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு கூட்டம் சத்தியத்தை சொல்லும் என்றால் அதை அப்படியே நம்பி விட்டு செல்ல வேண்டுமே தவிர, யார் யாரென்று தெரிந்தால் தான் நம்புவேன் என்று சொல்லக் கூடாது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்த முஸ்லிம் சமுதாய மக்கள் அனைவரது கூற்றுக்களும் வரலாறாக பதிவாகியிருக்கிறதா?
நபி (சல்) அவர்களின் கூற்றுக்களையே இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் நாம் கண்டறிகிறோம் எனும் போது, அதன் பிறகு இன்றைய தினம் வரை கோடானுகோடி மக்கள் தோன்றி மறைந்திருக்கின்றனர்.
அனைவருக்கும் வரலாறு இருக்கின்றதா?


சத்தியத்தை எவருமே சொல்லவில்லை என்று எப்போது முடிவுக்கு வர வேண்டும்?
இந்த கேள்வியெழுப்புகின்றனவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்த ஒவ்வொரு மனிதரின் வரலாற்றை முழுமையாக கொண்டு வந்து, பார்த்தீர்களா, இவரது கொள்கை இது, அவரது கொள்கை அது, இவர் இப்படி தான் சொல்லியிருக்கிறார், அவர் அப்படி தான் சொல்லியிருக்கிறார், நீங்கள் சொல்வது போல் எவருமே சொல்லவில்லை..
என்று ஆதாரத்துடன் காட்ட வேண்டியது அவர்களின் வேலை.

அதை செய்யாமல், வெறுமனே காட்ட இயலுமா? என்று நம்மிடம் கேட்பதில் அர்த்தமில்லை.
வரலாறுகள் அனைத்தும் பதிவாக்கப்படவில்லை.
இதே கருத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் சொல்லித் தான் இருப்பார்கள்.
அவர்கள் குறைவாக இருந்திருப்பார்கள்.

இன்றைக்கு, இத்தனை வளர்ச்சி, விஞ்ஞான முன்னேற்றத்திற்கு மத்தியிலேயே தவ்ஹீத் ஜமாஅத்திற்கு இத்தனை தடை, எதிர்ப்பு, நமது நூல்களுக்கு எதிர்ப்பு, ஒரு நாட்டிற்கு பயான் செய்ய சென்றால் எதிர்ப்பு என நம்மை கட்டுப்படுத்த பார்க்கும் எதிரிகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இதே காரியத்தை செய்திருக்க மாட்டார்களா?
சத்தியத்தை ஒரு சிறு கூட்டம் சொன்னால், அவர்களை அப்படியே முடக்கியிருப்பார்கள், அவர்களின் பிரச்சாரம் எவருக்கும் சென்றடையாதவாறு பார்த்திருப்பார்கள்.
அவர்களது நூற்களை இருட்டடிப்பு செய்திருப்பார்கள்.

ஆக, இதற்கு முன்னர் எவரும் சொல்லியிருக்கிறார்களா? என்பதற்கு நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லையென்றால் ஆதாரம் கிடைக்கவில்லை, எவராவது சொல்லியிருப்பார்கள் என்று நம்ப வேண்டுமே தவிர, ஆதாரம் இல்லையென்பதால் எவருமே சொல்லவில்லை என்கிற முடிவுக்கு வருவது அறியாமை.


இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் - இப்னு கய்யுமின் பார்வை :

இமாம் இப்னு கய்யும் அவர்களைப் பற்றி நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.
இவர் இமாம் இப்னு தய்மியா அவர்களின் மாணவராவார்.
ஹதீஸ்களில் இட்டுக்கட்டப்பட்ட வகைகளுக்கென்றே தனியாக நூலொன்றினை தயாரித்து, பொய்யான ஹதீஸ்களின் இலக்கணம் யாவை என்பதற்கான விதிகளையும் உருவாக்கினார்.
ஹதீஸ் கலை மேதைகளில் குறிப்பிடத்தக்க அறிஞரான இவரை இன்றைய சலஃபு கூட்டங்களும் பெரிதாய் மதிப்பார்கள்.

இவரது மனார் என்கிற நூலில், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை கண்டறிவது எப்படி என்பது தொடர்பாக பல செய்திகளை குறிப்பிடுகிறார்.


1. கண்கூடாக தெரிகின்ற உண்மைக்கு மாற்றமாக இருக்கும்.

இப்படி ஒரு ஹதீஸ் இருந்தால் அது பொய்யான ஹதீஸ் என்கிறார் இப்னு கய்யும்.
இதற்கு ஒரு சான்றையும் அவர் முன்வைக்கிறார்.
அதாவது, கத்திரிக்கை சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் நிவாரணம் என்பதாக நபியின் பெயரால் புனையப்பட்ட ஹதீஸை அவர் மேற்கோள் காட்டி, இது தவறானது என்று பளிச்சென்று தெரிகிறது, காய்ச்சல் போன்ற நோய்கள் வரும் போது கத்திரிக்காய் சாப்பிட்டால் அந்த நோய் சில நேரங்களில் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை, எனவே இப்படி கண்ணுக்கு நேராய் பொய்யென்று தெரிகின்ற ஒன்றை நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்கிறார்.

பேச்சுக்களிலேயே உண்மையான பேச்சு எதுவென்றால், எவர் பேசும் போது தும்மல் போடுகிறாரோ அந்த பேச்சு தான் என்று நபி சொன்னதாக எழுதி வைத்திருக்கிறார்கள்.

இதையும் மேற்கோள் காட்டி விளக்கிய இப்னு கய்யும், இதுவும் அறிவுக்கு பொருத்தமில்லாத செய்தி என்கிறார்.
தும்மல் இடுவதற்கும், ஒருவர் பேசுவது சத்தியம் என்கிற முடிவுக்கு வருவதற்கும் என்ன தொடர்பு?
அப்படியானால், ஒரு வழக்கை விசாரிக்க இதையே அளவுகோலாக கொள்ளலாமா, எதற்கு விசாரணை, எதற்கு நீதிமன்றம்?
யாராவது இதை ஒப்புக் கொள்வார்களா? 
எந்த அர்த்தமாவது இதில் இருக்கின்றதா? என்று கேட்கிறார் இப்னு கய்யும் அவர்கள்.
ஒரு வழக்கில் நமது தரப்பில் தான் நியாயம் இருக்கிறது என்று வைப்போம்.
 நமக்கெதிராக பொய்யாக வழக்கு தொடர்ந்தவன் திடீரென தும்மல் போட்டு விட்டான்.
உடனே, அவன் சொல்வது தான் நியாயம் என்று நாம் ஒப்புக் கொண்டு விடுவோமா?

ஆக, யாருமே ஒப்புக் கொள்ளாத, நடைமுறைக்கு சற்றும் சாத்தியமற்ற, அறிவுக்கு எந்த வகையிலும் இணக்கமில்லாத ஒரு செய்தியை எப்படி நபி (சல்) அவர்கள் கூறியிருப்பார்கள்??2. குர் ஆனுக்கு அந்த செய்தி நேர் முரணாக இருக்கும்.

இதை நாம் சொல்லும் போது நம்மை காஃபிர் என்கிறார்களே, அரபு நாட்டில் கிடைக்கும் அற்பக் காசுக்காக இப்னு கய்யுமை தூக்கிப் பிடிக்கும் சலஃபு கூட்டத்தை நோக்கி நாம் சவால் விடுகிறோம், அவருக்கு காஃபிர் பட்டம் கொடுக்க தயாரா?

இந்த விதிக்கு ஒரு உதாரணத்தையும் இமாம் இப்னு கய்யும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.
அதாவது, இந்த உலகத்தின் மொத்த ஆயுட்காலம் 7000 வருடம் என்பதாக நபி சொல்லியிருக்கிறார்களாம்.
இப்படியும் ஒரு ஹதீஸ் இருக்கிறது.
இது எப்படி நபி சொல்லியிருப்பார்கள்?

கியாமத் நாள் என்றைக்கு வரும் என்பது பற்றிய ஞானம் மறைவானது என்றும், அது பற்றி அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் எனவும் அல்லாஹ் குர் ஆனில் நேரடியாக சொல்லியிருக்கும் போது இது எப்படி நபி சொன்னதாக இருக்கும்?
என்று கேள்வியை முன்வைக்கிறார்.


3. இப்படியுமா நபி (சல்) அவர்கள் பேசியிருப்பார்கள்? என்று முகம் சுளிக்க வைக்கின்ற அளவிற்கு உளரல்கள்.

இவ்வாறு ஒரு ஹதீஸ் இருந்தால் அதை நிச்சயம் நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள்.

இதற்கு ஓர் உதாரணத்தையும் அவர் முன்வைக்கிறார்.

அதாவது, நபி (சல்) அவர்கள் சொன்னார்களாம்.

ஒருவர் ஒரு முறை கலிமா சொன்னால், அந்த வார்த்தைகளை கொண்டு அல்லாஹ் ஒரு பறவையை படைப்பானாம்.
அந்த பறவைக்கு 70 ஆயிரம் நாக்கு இருக்குமாம்.
ஒவ்வொரு நாக்கும் 70 ஆயிரம் மொழிகள் பேசுமாம்.
அவ்வளவு மொழிகளில் அந்த மனிதருக்கு அது பாவ மன்னிப்பு தேடுமாம்.

இப்படியொரு ஹதீஸ் நம்மை முகம் சுளிக்க வைக்கிறதா இல்லையா?

இப்படி நபி சொல்லியிருப்பார்களா? பறவைக்கு நாக்கு இருக்குமா?
70 ஆயிரம் நாக்கும் 70 ஆயிரம் மொழிகள் பேசும் என்றால் அந்த அளவிற்கு கணக்கிலடங்காத மொழிகள் உலகில் இருக்கின்றதா?
அர்த்தமற்ற உளரலாகவே இது கருதப்பட வேண்டுமே தவிர, இப்படியான உளரல் நிச்சயம் நபி (சல்) அவர்களிடமிருந்து எழாது என்று இப்னு கய்யும் அவர்கள் கூறுகிறார்கள்.

அதே போல், ஒருவர் ஒரு நற்காரியம் செய்தால் சொர்க்கத்தில் அவருக்காக அலாஹ் 70 ஆயிரம் ஊர்களை தயார் செய்வானாம்.
ஒவ்வொரு ஊரிலும் 70 ஆயிரம் மாளிகைகள் இருக்குமாம்,
ஒவ்வொரு மாளிகைகளிலும் ஹூர்லீன்கள் இருப்பார்களாம்.

இதுவும் அர்த்தமற்ற உளரல், இப்படி நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்க எந்த சாத்தியமும் இல்லை என்பதாக அவர் கூறுகிறார்.


இது தொடர்பாக இமாம் இப்னு கய்யும் சொல்கின்ற தெளிவான விளக்கத்தைப் பாருங்கள்.

நபி (சல்) அவர்கள் பெயரால் இவ்வாறு இட்டுக்கட்டி கூறக்கூடியவன் ஒன்று வடிகட்டிய முட்டாளாக இருப்பான், அல்லது, இஸ்லாத்திற்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் இழுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இடைசெருகல் செய்த சதிகாரனாக இருப்பான்.
என்று தமது நூலில் விளக்குகிறார்கள்.


4. நபி (சல்) அவர்கள் வழி வந்த ஹதீஸ்கள் என்றால் அவை ஒளி வீசும், பிரகாசமாக இருக்கும்.
ஆனால், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை நாம் பார்த்தால் அவை இருண்டு போய் இருக்கும்.
அதை பிரச்சாரம் செய்பவர்களால் கூட அந்த ஹதீசை எந்த சங்கோஜமும் இன்றி, எந்தவித கூச்சமுமின்றி பேச முடியாத அளவிற்கு கூனிக் குறுகி போவார்கள்.

என்று இப்னு கய்யும் கூறுகிறார்.

இதற்கு அவர் காட்டும் உதாரணம்,
எவர் ஒருவர் லுஹா தொழுகையை தொழுகிறாரோ அவருக்கு, 70 நபிமார்களுக்கு கிடைக்கும் மொத்த கூலியை விடவும் அதிக கூலி கிடைக்கும் என்று நபி (சல்) அவர்கள் சொன்னதாக வரக்கூடிய பொய்யான ஹதீஸை இதற்கு உதாரணமாக இமாம் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இப்படி ஒரு போதும் நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள்.
ஒரு லுஹா தொழுகைக்கு இந்த கூலி என்றால், அவர் தான் நாளை மறுமையில் நபிமார்களை விடவெல்லாம் சிறந்தவராக நிற்பார்.
நபிமார்கள் செய்த தியாகம் என்ன, அவர்கள் கொண்டிருந்த ஈமானிய உறுதி என்ன, அவர்களுக்கு அருகில் கூட வர முடியாத மனிதன் எப்படி இந்த சிறப்பைப் பெறுவான்?
இவர் நூஹ் நபியின் ஆயுட்காலம் அளவிற்கு (900 வருடங்களுக்கு மேல்) லுஹா தொழுகையை தொழுதாலும், ஒரேயொரு நபிக்கு கிடைக்கும் கூலியை கூட இவரால் அடைய முடியாது என்பதே உண்மை, என்று இமாம் இப்னு கய்யும் விளக்குகிறார்கள்.

அதே போன்று, இன்னொரு பொய்யான ஹதீஸையும் அவர் மேற்கோள் காட்டுகிறார்.

அதாவது, இந்த சூரிய குடும்பம் இருக்கின்ற பால்வெளி என்று நாம் சொல்கிறோமே, அது எப்படி படைக்கப்பட்டது என்று நபி (சல்) அவர்கள் சொன்னார்களாம், அர்ஷுக்கு கீழ் ஒரு பாம்பு இருக்கின்றது, அந்த பாம்பின் வியர்வைத் துளியிலிருந்து தான் இந்த பால் வெளி படைக்கப்பட்டதாம்.
இதுவும் அர்த்தமற்ற உளரலே தவிர  இதை ஒரு போதும் நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள்.
சதிகாரர்கள் எவனோ ஒருவன் வேண்டுமென்றே தான் இது போன்ற பொய்களை ஹதீஸ் என்கிற பெயரில் இடைச்செருகல் செய்திருக்கிறான்.

ஆக, இமாம்கள் என்ன அளவுகோலையெல்லாம் பார்த்திருக்கிறார்கள்?

குர் ஆனுக்கு முரணாக இருந்தாலும் அது பொய், அது போன்று, நமது அறிவுக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் சற்றும் பொருத்தமில்லாத செய்தியாக அவைதெரிந்தால் அவைகளும் பொய்.
இதுவே இமாம்களின் அளவுகோலாக இருக்கின்றது என்பதை மேற்கூறிய சான்றுகளிலிருந்து நாம் காண்கிறோம்.
விதியை செயல்படுத்திய அறிஞர்கள்  (தொடர்ச்சி) :இப்னுல் கய்யும் அவர்களின் கூற்று 
அறிவிப்பாளர் தொடர் சரியானதாக அமைய வேண்டும் என்பது ஹதீஸ் சரியாகுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று. அறிவிப்பாளர் தொடர் சரியாக இருப்பதினால் (மட்டும்) அந்த ஹதீஸும் சரியானது என்று முடிவெடுக்க முடியாது. ஏனென்றால் பல விஷயங்கள் இருந்தால் தான் ஹதீஸ் சரியாகும். தொடர் சரியாக இருப்பதும் கருத்தில் குறை வராமல் இருப்பதும் வலிமையான தகவலுக்கு முரண்படாமல் இருப்பதும் மோசமான கருத்தைத் தராமல் இருப்பதும் இவற்றுள் அடங்கும்.
நூல் : அல்ஃபரூசிய்யா பக்கம் : 246

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக உள்ளது என்று நீங்கள் கூறுவது அந்த ஹதீஸ் சரியானது என்ற கருத்தைக் கொடுக்காது. ஏனென்றால் தொடர் சரியாக இருக்க வேண்டுமென்பது சரியான செய்தியை அறிந்து கொள்வதற்கான ஒரு நிபந்தனை தான். முழுமையான அளவுகோல் அல்ல. எனவே முரண்பாடும் குறையும் ஹதீஸை விட்டும் நீங்காத வரை அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தால் மட்டும் ஹதீஸ் சரியாகி விடாது. 
நூல் : ஹாஷியதுல் இப்னில்கய்யிம் பாகம் : 1 பக்கம் : 77

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவதாகும். 
நூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80

இட்டுக்கட்டப்பட்ட செய்தி குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது பற்றிய பகுதி. ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கான அடையாளங்களில் ஒன்று. 
நூல் : நக்துல் மன்கூல் பாகம் : 2 பக்கம் : 218 

அபுபக்கர் தய்யுப் என்கிற அறிஞர் தமது நூலான தத்ரீபுர்ரவி நூலில் கீழ்கண்டவாறு கூறுகிறார்..

பொய்யான ஹதீஸுக்கான முதல் ஆதாரம் அது அறிவுக்கு மாற்றமாக இருக்கும், எந்த வியாகானமும் கொடுக்க இயலாத விதத்தில் இருக்கும்.

ஆக, அறிவுக்கு முரணா என்று பார்ப்பதும் ஒரு ஹதீஸை அலசுவதற்கான அளவுகோல் தான்.
அறிஞர்களும் இதே அளவுகோலை பின்பற்றியிருக்கிறார்கள்.

மற்றொரு பொய்யான செய்தியை பாருங்கள்.

ஹிஜ்ரி 100 வரை பிறந்தவர்கள் தான் சிறப்புக்குரியவர்கள், அதற்கு பிறகு வந்தவர்களை அல்லாஹ் மதிப்பதே இல்லை என்று நபி சொன்னதாக எழுதி வைத்திருக்கிறார்கள்.
இதைப் பற்றி இமாம் இப்னு ஜவ்சி தமது மவ்லூஆத் நூலில் கூறும் போது,
இந்த ஹதீஸில் அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்கள் தான் என்றும், ஆனாலும் இதை ஏற்கவே முடியாது எனவும் கூறுகிறார்.
அனைத்து அறிஞர்களும் இதை கண்டிக்கிறார்கள், எத்தனையோ இந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டால், எத்தனையோ அறிஞர்கள் ஹிஜ்ரி 100க்குப் பிறகு தோன்றியார்களே அவர்களெல்லாம் மூடர்கள், அல்லாஹ்வின் பார்வையில் எந்த பயனுமற்றவர்கள் என்கிற கருத்து வரும்.

ஆக, இப்படியெல்லாம் அர்த்தமற்றதாக நபி (சல்) அவர்களின் கூற்றில் செய்திகள் வராது.

அதெ போன்று, ஹனஃபி மத்ஹபில் அபுபக்கர் சர்ஹ‌சி இமாமின் சட்ட நூற்கள் மிகவும் பிரபலம்.
அவர் படைத்த சட்ட விதிகளின் படி தான் இன்றளவும் ஹனஃபி மத்ஹபில் ஃபிக்ஹ் சட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
அவரது உசூலே சர்ஹ‌சி எனும் நூலில், ஒரு ஹதீஸ் குர் ஆனுக்கு முரணாக இருந்தால் அதை ஏற்கவே கூடாது என்பதாக எழுதியிருக்கிறார்.

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படாது. செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது. 

நூல் : உசூலுஸ் ஸர்ஹசீ பாகம் : 1 பக்கம் : 364 
இமாம் இப்னு ஜவ்சி அவர்கள், இன்னொரு அறிஞர் சொன்னதை மேற்கோள் காட்டி தமது நூலில் பதிவு செய்திருப்பதை பாருங்கள்.

சிந்தனைக்கு மாற்றமாக அல்லது (ஆதாரப்பூர்வமாக) பதிவு செய்யப்பட்ட செய்திக்கு மாற்றமாக அல்லது அடிப்படைக்கே மாற்றமாக ஒரு ஹதீஸைக் கண்டால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று புரிந்து கொள் என்று சொன்னவர் எவ்வளவு அழகாகச் சொன்னார் என்று இப்னுல் ஜவ்ஸீ கூறினார்கள்.!

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 277 

எதைக் கண்டால் கற்கும் மாணவனின் தோல் சிலிர்த்து அவரது உள்ளம் பெரும்பாலும் அதை (ஏற்றுக்கொள்வதை) விட்டும் விரண்டோடுமோ அதுவே மறுக்கப்பட வேண்டிய செய்தி என்று இப்னுல் ஜவ்ஸீ கூறினார்கள்.!. 

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 275

இதற்கு ஒரு பொய்யான ஹதீஸை உதாரணமாகவும் அவர் எடுத்துக் காட்டுகிறார்.
அதாவது நபி  (சல்) அவர்கள் சொன்னார்களாம், நூஹ் நபி உருவாக்கிய கப்பல் கஃபாவை ஏழு முறை தவாஃப் செய்ததாம், பின்னர் மகாமே இப்ராஹிம் அருகில் 2 ரக்காஅத் தொழுததாம்.

இதில் அறிவுக்கு பொருத்தமான ஏதாவது இருக்கிறதா? கப்பல் எப்படி தொழுகை செய்யும், எப்படி தவாஃப் செய்யும்?
அறிவை அடகு வைத்த எவனோ ஒரு கிறுக்கன் எழுதியதாக தான் இது இருக்கிறதே தவிர, நபி (சல்) அவர்கள் சொன்னதாக இல்லை.
தவிர, நூஹ் நபியின் காலத்திற்கு பிறகு தான் இப்ராஹிம் நபி வருகிறார்கள்.
அப்படியிருக்கும் போது, மகாமே இப்ராஹிம் எப்படி நூஹ் நபியின் காலத்தில் இருக்கும்?
உளரலை கூட பொய்களை கலக்காமல் உளரத் தெரியவில்லை.

அதே போன்று, ஹனஃபி மத்ஹபுக்கு மறுப்பாக எழுதப்பட்ட நூலான தன்கீன் எனும் நூலில், ஹனஃபி மத்ஹபில் குர் ஆனுக்கு முரண் எனக் கூறி அறிவிப்பாளர் தொடர் பலமாக இருக்கும் ஹதீஸ்களையும் கூட மறுக்கிறார்கள் என்று எழுதப்பட்டிருக்கின்றது.
ஆக, ஹனஃபி மத்ஹபின் நிலையும் குர் ஆனுக்கு முரண் என்றால் மறுக்க வேண்டும் என்பது தான், என்பது இதிலிருந்தும் நிரூபணமாகின்றது.

இதே கருத்தை நாம் சொல்லும் போது நம்மை காஃபிர்கள் என்று சொல்வோர், எல்லா ஹனஃபி மத்ஹப் அறிஞர்களையும் காஃபிர்கள் என்று சொல்லட்டும்.முஹம்மது பின் அப்தில்லாஹ் என்பார் சொன்னதாக இப்னு ஹச்ம் கூறுகிறார் : 
ஹதீஸ் மூன்று வகையாகும். 

1. குர்ஆனிற்கு ஒத்து அமைகின்ற ஹதீஸ் (முதலாவது வகையாகும்). இதை ஏற்றுக் கொள்வது கட்டாயம். 

2. குர்ஆனில் இருப்பதை விட கூடுதலான தகவலைத் தருகின்ற ஹதீஸ் (இரண்டாவது வகையாகும்). இதையும் குர்ஆனுடன் இணைத்து ஏற்றுக் கொள்வது கட்டாயம்.

3. குர்ஆனுடைய கருத்திற்கு முரணாக வரும் ஹதீஸ் (மூன்றாவது வகையாகும்). இது ஒதுக்கப்பட வேண்டியது. 

நூல் : அல்இஹ்காம் பாகம் : 2 பக்கம் : 209


இது தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையும் கூட.
நமது கொள்கையை அச்சு அசலாக அன்றைக்கே இமாம்கள் கூறியிருப்பதை நாம் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சொர்க்கம் இருக்கிறதே (அதில் தகுதியானோர் நுழைவார்கள்). அல்லாஹ் தன் படைப்புகளில் யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. அவன் தான் நாடியவர்களை நரகத்திற்காகப் படைப்பான். அவர்கள் நரகத்தில் போடப்படும் போது இன்னும் இருக்கிறதா? என்று மும்முறை கேட்கும். இறுதியில் இறைவன் அதில் தனது பாதத்தை வைக்க அது நிரம்பி விடும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். போதும் போதும் போதும் என்று அது கூறும். 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (7449)

இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர் அனைவரும் பலரால் புகழ்ந்து சொல்லப்பட்டவர்கள். மறுமை நாளில் சிலரைப் படைத்து அவர்களை நரகத்திற்குள் அல்லாஹ் கொண்டு செல்வான் என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து சிலர் விளங்குகிறார்கள். 

குற்றம் புரியாதவர்களை அல்லாஹ் நரகத்திற்குள் செலுத்துவது உனது இறைவன் யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டான் (18 : 49) என்ற குர்ஆன் வசனத்திற்கும் ஷைத்தான் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு அல்லாஹ் நரகத்தை நிரப்புவான் (38 : 85) என்று கூறும் குர்ஆன் வசனத்திற்கும் மாற்றமாக இந்த ஹதீஸ் இருப்பதினால் சில அறிஞர்கள் இதை மறுத்துள்ளார்கள். இக்கருத்தை இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலில் பதிவு செய்துள்ளார். 

நரகத்திற்கு புதிய படைப்பை அல்லாஹ் படைப்பான் என்று வருகின்ற இந்த இடத்தில் (தவறுதலாக) மாற்றம் நிகழ்ந்து விட்டது என்று இமாம்களில் ஒரு கூட்டத்தினர் கூறியுள்ளார்கள். இப்லீஸ் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களால் நரகம் நிரம்பும் என்று அல்லாஹ் கூறியிருப்பதை ஆதாரமாக வைத்து இந்தச் செய்தி தவறு என்று இப்னுல்கய்யும் உறுதியாகக் கூறியுள்ளார். இவ்வாறே நமது ஆசிரியர் புல்கீனீ அவர்களும் உனது இறைவன் யாருக்கும் அநீதியிழைக்க மாட்டான் என்ற அல்லாஹ்வின் கூற்றை ஆதாரமாக வைத்து இந்த அறிவிப்பை மறுத்துள்ளார். 

நூல் : ஃபத்ஹுல்பாரீ பாகம் : 13 பக்கம் : 437 


ஆக, குர் ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி இவ்வாறு நபி (சல்0 அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என இப்னு ஹஜ்ர் அவர்கள் மறுப்பதை இதிலிருந்து காணலாம்.


குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால்தான் ஒரு ஹதீஸை ஸஹீஹானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இமாம் ஷாஃபி கூறியுள்ளார்கள்.

ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள், "கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும்'' என்று கூறியுள்ளார்கள்.

நூல்: அல்மஹ்சூல், பாகம்: 4, பக்கம்: 438

இவ்வாறு குர்ஆன் என்ற மிகப்பெரும் ஆதாரத்திற்கு முரணாக நபியவர்கள் கூறியதாக ஒரு செய்தி அறிவிக்கப்படுமென்றால் அது மறுக்கப்பட வேண்டும் என்பதே இமாம் ஷாஃபி அவர்களின் வழிமுறை என்பதை மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.


ஆக, குர் ஆனுக்கு முரணாக இருக்கும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்று நாம் சொல்லும் போது மத்ஹப் காரர்களும் சரி, சலஃபுகளும் சரி வரிந்து கட்டிக் கொண்டு நம்மை எதிர்க்கின்றனர்.

ஆனால், ஷாஃபி மதுஹபை பின்பற்றுபவர்களுக்கு அவர்கள் போற்றுகின்ற ஷாஃபி இமாமே மறுப்பு சொல்கிறார்.

ஹனஃபி மதுஹபை பின்பற்றுபவர்களுக்கு அவர்கள் போற்றுகின்ற அபு ஹனிஃபா இமாமும், ஹனஃபி மத்ஹப் சட்ட விதிகளை எழுதிய அபுபக்கர் சர்ஹசி இமாமே மறுப்பு சொல்கிறார்கள்.

அதே போல், சலஃபுகளுக்கு அவர்கள் பெரிதாய் மதிக்கும் இப்னு கய்யும் இமாமே மறுப்பு சொல்கிறார்.

மற்றொரு ஹதீஸை இமாம் காழி இயாள் என்கிற அறிஞர் மறுத்திருக்கிறார்.


உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ் வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழை வார்; .......அல்லது நரகம் புக மாட்டார்.... என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே! என்று பதிலளித்தார்கள்.
புஹாரி 3222


இந்த ஹதீஸ், அல்லாஹ் குர் ஆனில் கூறுகிற சட்டமான அனைத்து பாவங்களுக்கும் அல்லாஹ் தண்டனையளிப்பான் என்கிற சட்டத்திற்கு மாற்றமாக இருக்கின்றது என்கிறார் இந்த அறிஞர்.
சிறு குறிப்பாக இதை சுட்டிக்காட்டாமல், இதையே நீண்ட கட்டுரையாக எழுதி, இதை சொல்ல நபி (சல்) அவர்கள் வரவில்லையென்றும், இப்படி நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்றும், இது மக்களை தவறு செய்ய தூண்டுவதாக இருக்கின்றது எனவும் கூறுகிறார்.

ஆனால், உண்மையில் இந்த ஹதீஸ் குர் ஆனுக்கு முரணில்லை என்பது தான் சரி.
எந்த மனிதராக இருந்தாலும் இணை வைப்பு தவிர அவர் செய்யக் கூடிய ஏனைய பாவங்களுக்கு அல்லாஹ் தண்டனையளித்து விட்டு இறுதியில் அவர் சொர்க்கம் செல்லத் தான் போகிறார்.
நிரந்தர நரகம் என்பது தான் இணை வைத்தவர்களுக்கே தவிர, இணை வைக்காதவர்களுக்கு நிரந்தர நரகம் கிடையாது.
இதை இந்த ஹதீஸ் மறுக்கவில்லை எனும் போது, குர் ஆன் கூறும் அடிப்படைக்கு இது மாற்றமில்லை என்பது தான் சரியாக புரிதல் என்றாலும்,
காழி இயாள் என்கிற இமாம், தமக்கு இது குர் ஆனோடு மோதுவதாக தெரிகின்ற காரனத்தால் அதை மறுப்பதை நாம் காண்கிறோம்.

இதையெல்லாம் விட, தற்போது சமகாலத்தில் வாழக்கூடிய சவுதியை சேர்ந்த அறிஞரான ஷேக் முஹம்மது பின் சாலிஹ் அல் உசைமின் என்கிற அறிஞரும் இதே கருத்தை தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார்.
அறிவுக்கு மாற்றமான ஹதீஸ்களை ஏற்கக் கூடாது, நடைமுறைக்கு சாத்தியமற்ற ஹதிஸ்களை ஏற்கக் கூடாது, முரண்பாடாக இருக்கின்ற ஹதீஸ்களை ஏற்கக் கூடாது

என்பதாக முஸ்தஹுல் ஹதீஸ் என்கிற அவரது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

சவுதியில் கிடைக்கும் அற்பக்காசுக்காக அவர்களுக்கு ஜால்ரா அடித்து வரக்கூடிய இன்றைய சலஃபுகள், நம்மை காஃபிர்கள் என்று கூறுவது போல் இமாம் உசைமின் அவர்களையும் காஃபிர் என்று சொல்வார்களா?
குறைந்த பட்சம், அவரது பெயரைக் குறிப்பிட்டு, இவர் இப்படிக் கூறுகிறார், இது வழிகேடு, என்றாவது அறிவிப்பார்களா/
அறிவித்தால் இவர்கள் பிழைப்பு படுத்து விடுமே, எப்படி அறிவிப்பார்கள்??

ஆக, நம்மை இந்த சலஃபுகள் எதிர்ப்பதற்கு கொள்கை காரணமல்ல, தவ்ஹீத் ஜமாஅத் என்கிற அமைப்பு தான் காரணம் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.
கொள்கை தான் இவர்களுக்கு முக்கியம் என்றால் நம்மை எதிர்ப்பது போன்றே இதே கருத்தை சொன்ன அனைத்து அறிஞர்களையும் இமாம்களையும் இவர்கள் பட்டியலிட்டு எதிர்க்க வேண்டும்.
அனைவருக்கும் காஃபிர் ஃபத்வா கொடுக்க வேண்டும்.

அதை விடுத்து, தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டும் இவர்கள் தனியாக விமர்சிக்கின்றார்கள் என்றால் இவர்கள் தான் கொள்கையற்றவர்கள், நம்மை எதிர்க்க வேண்டும் என்பது தான் இவர்களது ஒரெ கொள்கை என்பது தெளிவாகின்றது.

தொடரும், இன்ஷா அல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக