இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!
(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)
நாள் : 12
சஹாபாக்களிடமும் தவறுகள் ஏற்படும் (தொடர்ச்சி)
ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள்
வெள்ளிக் கிழமையன்று ஜும்ஆவுக்காக இரண்டு பாங்கு சொல்லும் வழக்கம் சில பகுதிகளில் இருந்து வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த வழக்கம் இருந்ததில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும், உமர் (ரலி) அவர்களின் காலத்திலும் இமாம் மிம்பரில் ஏறிய பிறகே பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) ஆட்சி காலத்தில் மக்கள் கூட்டம் பெருகியதால் ஸவ்ரா எனும் இடத்தில் மற்றொரு அறிவிப்பு அதிகமானது என்று ஸாயிப் பின் யஸித் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 912
வணக்கத்தில் ஒரு நடைமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து வந்த இரண்டு கலீபாக்களும் அதைச் செயல்படுத்தியுள்ளனர். ஆனால் மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக உஸ்மான் (ரலி) அவர்கள் சுயமாக இன்னொரு அறிவிப்பை அதிகமாக்கினார்கள்.
ஏதோ ஒரு காரணத்தால் நபிவழியைக் கூட சில நபித்தோழர்கள் மாற்றியுள்ளார்கள். அல்லது இல்லாததை அதிப்படுத்தியுள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.
எனவே நபித்தோழர்களின் எல்லா நடவடிக்கையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் தான் இருக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
இன்னும் சொல்லப்போனால், இது பற்றி ஷாஃபி இமாமிடம் கேட்கப்பட்ட போது அவர் சொன்ன விளக்கமும் இங்கு கவனிக்கத்தக்கது.
உஸ்மான் (ரலி) அறிவிப்பாக தான் சொல்லியிருப்பார், பாங்கு சொல்லியிருக்க மாட்டார், அப்படியே அது பாங்காக இருந்தாலும் நான் தேர்வு செய்வது நபி (சல்) அவர்களின் வழிகாட்டுதலை தான்"
என்று ஷாஃபி இமாம் தெளிவாக சொல்லியிருக்க, அவரது மதுஹபை பின்பற்றுகிறோம் என்று சொல்லக்கூடிய ஷாஃபி மதுஹபுவாதிகளோ தங்கள் பள்ளிவாசல்களில் இரண்டு பாங்கை தான் இன்று வரை சொல்லி வருகின்றனர்.
உஸ்மான் (ரலி) அவர்களாவது கடைத்தெருவில் தான் ஒரு அறிவிப்பை அதிகப்படுத்தினார் என்று ஹதீஸ் சொல்கிறது, இவர்களோ பள்ளிவாசலிலேயே கூடுதலாக ஒரு பாங்கை சொல்லி நபி வழியை அப்பட்டமாக மீறி பித் அத்தில் ஈடுபடுவதை காண்கிறோம்.
அனைத்திலும் மாற்றம் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் நபித்தோழர்களிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தினமும் ஐந்து தடவை தொழுது பழக்கப்பட்டிருந்த நபித்தோழர்கள் அதிலும் கூட நிறைய விஷயங்களை மாற்றி விட்டனர் என்ற விமர்சனம் நபித்தோழர்கள் காலத்திலேயே எழுந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒன்றையும் என்னால் காண முடியவில்லை என்று அன (ரலி) கூறினார்கள். ``ஏன் தொழுகை இருக்கிறதே என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ``தொழுகையிலும் பாழ்படுத்த வேண்டிய அளவுக்குப் பாழ்படுத்திவிட்டீர்களே என்று திருப்பிக் கேட்டார்கள்.
நூல் : புகாரி 529, 530
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த நடைமுறை அனைத்தும் அனைவரிடமும் அப்படியே நீடிக்கவில்லை எனும் போது நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரம் எனக் கூறுவது தவறல்லவா?
இரண்டு அத்தியாயங்களை மறுத்த இப்னு மஸ்வூத்
திருக்குர்ஆனில் 114 அத்தியாயங்கள் உள்ளதை உலக முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.
ஆனால் மிகச் சிறந்த நபித்தோழரான இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் 113, 114 ஆகிய இரண்டு அத்தியாயங்களை மறுத்து வந்தார்கள். தமது ஏட்டில் இவ்விரு அத்தியாயங்களையும் அவர்கள் பதிவு செய்யவில்லை. அவ்விரு அத்தியாயங்களும் இரண்டு பிரார்த்தனைகள் தான். குர்ஆனின் அத்தியாயங்கள் அல்ல என்று கடைசி வரை சாதித்து வந்தார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத் 20244, 20246
நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்கள் ஆகும் என்றால் திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் 112 தான் என்று நாமும் கூறலாமா? திருக்குர்ஆனின் விஷயத்திலேயே நபித்தோழருக்கு பிழை ஏற்பட்டது என்றால் நபித்தோழரின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரமாகும் என்று கூறுவது எப்படி நியாயமாகும்?
அவர்களின் தியாகத்திற்காகவும், அவர்கள் கொண்டிருந்த ஈமானுக்காகவும் அல்லாஹ் அவர்களை மன்னிப்பான்.
ஆனால், அவர்களை நாம் பின்பற்ற முடியாது, அவர்கள் செய்வது சரியா தவறா என்று எந்த உத்திரவாதமும் கிடையாது.
சகாத்தை மறுத்த சஹாபாக்கள் :
சில சஹாபாக்கள் சகாத் எனும் கடமையை கூட மறுத்ததாக ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்கிறது.
அபுஹுரைரா (ரலி) அறிவிக்கும் கீழ்காணும் ஹதீஸைப் பார்க்கவும்
நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகைவிட்டுப் பிரிந்து, அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அரபுகளில் சிலர் இறைமறுப்பாளர்களாய் மாறினர்.11 ளஅவர்கள் மீது போர் தொடுக்கப்போவதாக அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.ன அப்போது உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் அவர்களே! மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வணக்கத்திற்குரியவர் அல்லாஹு வைத் தவிர வேறெவறுமில்லை என்று மக்கள் கூறும்வரை அவர்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எவர் வணக்கத்திற்குரியவர் அல்லாஹுவைத் தவிர வேறெவருமில்லை எனக் கூறுகின்றாரோ அவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர தன் உயிருக்கும் செல்வத்திற்கும் பாதுகாப்புப் பெறுவார். அவருடைய (அந்தரங்க எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்குரிய) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது என்று கூறியுள்ளார்களே? என்று கேட்டார்கள்.
அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகைக் கும் ஸகாத்திற்கும் இடையே பாகுபாடு காட்டுபவர்களுடன் நான் நிச்சயம் போரிடுவேன். ஏனெனில், ஸகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ் வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் (ஸகாத்தாக) வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை மக்கள் என்னிடம் தர மறுத்தாலும் அதற்காக அவர்களுடன் நான் போர் புரிவேன் என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! (ஸகாத் கொடுக்க மறுத்தவர்கள் மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்)படி அபூபக்ர் (ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கிவிட்டான் என்பதைத் தவிர வேறெதையும் அப்போது நான் காணவில்லை. அது தான் சரி(யான முடிவு) என்பதை நான் அறிந்து கொண்டேன் என்று கூறினார்கள்
புஹாரி 6924
சகாத் எனும் கடமையை நிறைவேற்ற மாட்டோம் என்று சொல்லி மார்க்க சட்டத்தை சஹாபாக்களில் சிலர் மீறியும் இருக்கிறார்கள் என்று இந்த ஹதீஸ் சொல்கிறது.
கோபமுற்ற அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள், அந்த கூட்டத்தாரோடு போர் பிரகடனம் செய்கின்ற அளவிற்கு அம்மக்கள் வழிகேட்டில் வீழ்கிறார்கள் என்றால் சஹாபாக்கள் என்ன சொன்னாலும் மார்க்கம், சஹாபாக்கள் அனைத்தையும் சரியாக தான் புரிவார்கள் என்றெல்லாம் நம்பப்படுகிற சித்தாந்தமானது எந்த அளவிற்கு நம்மை தோல்வியடைய செய்யும் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால், இந்த ஹதீஸை மேற்கோள் காட்டி புஹாரி நூலின் விரிவுரையாளரான இப்னு ஹஜர் அவர்கள் சொல்லும் போது, மிகப்பெரும் அறிஞர்கள், சஹாபாக்கள் என்று போற்றப்படக் கூடியவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு மிகப்பெரிய சான்று என்பதாக சொல்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பார்கள் என்று திருக்குர்ஆனிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தனது மரணம் பற்றி முன் அறிவிப்பு செய்திருந்தார்கள்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது உமர் (ரலி) உள்ளிட்ட பல நபித் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்றும், மரணிக்க மாட்டார்கள்; உயித்தெழுவார்கள் என்றும் இஸ்லாத் தின் அடிப்படைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந் தார்கள்.
அபூ பக்ர் (ரலி) அவர்கள் தக்க ஆதாரங்களை எடுத்துக் காட்டி அவர்களின் தவறான நம்பிக்கையைப் புரிய வைக்கும் வரை நபித்தோழர்களால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நூல் : புகாரி 1242, 3670
அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு நேர்வழியைக் காண்பித்தார்கள் அவர்களது உரையின் காரணத்தால், முஹம்மது (ஸல்) அவர்கள் ஓர் இறைத்தூதரேயன்றி வேறில்லை. அவர்களுக்கு முன்னரும் கூட பல இறைத் தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக் கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின்றானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்து விட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதிபலனை மிக விரைவில் வழங்குவான் என்னும் (3:144 ம்) வசனத்தை ஓதியபடி மக்கள் வெளியே சென்றார்கள். புஹாரி 3670
இந்த வசனத்தில், முஹம்மது நபியானாலும் அவரும் இறக்கக்கூடியவர் தான் என்கிற கருத்தை அல்லாஹ் பதிய வைத்திருக்கிறான்.
ஆக, நபி (சல்) அவர்களும் மரணிக்கக் கூடியவர்களே என்று அல்லாஹ் சொல்வது அந்த கணத்தில் பல சஹாபாக்களின் உள்ளத்தில் ஊடுருவவில்லை.
பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது மரணம் நெருங்குவதை நபி (சல்) அவர்கள் கூட சூசகமாக தெரிவித்திருக்கிறார்கள், சஹாபாக்களும் அதை புரிந்திருக்கிறார்கள், நபியின் அத்தகையப் பேச்சுக்களைக் கேட்டு அழுதிருக்கிறார்கள் என்றெல்லாம் ஹதீஸ்களில் நாம் காண்கிறோம்.
அப்படியிருந்தும், நபியின் மரணத்தை அவர்கள் ஏற்கவில்லை.
கண் முன், நபி (சல்) அவர்கள் மரணித்து, உடலில் எந்த அசைவுமின்றி, மூச்சு நின்ற நிலையில், இதயத் துடிப்பு நின்று போன நிலையில் மய்யித்தாக கிடப்பதை கண்ட பிறகும் ஏற்க மறுக்கிறார்கள்.
பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழும் போது நாம் எப்படி நிலை குலைந்து போவோமோ அது போல் நபித்தோழர்களும் நிலை குலையக் கூடியவர்களாக இருந்துள்ளனர் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.
இவ்விடத்தில் கூட, அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் திருத்தியதால் மனம் திருந்திக் கொண்டார்கள், இவ்வாறு திருத்தப்படாத செய்திகள் கூட எத்தனையோ இருக்கலம் என்பதையும் நாம் சிந்திக்கும் போது, சஹாபாக்களி நாம் மதிக்கும் அதே நேரம், பின்பற்றுவதற்கு அல்லாஹ்வின் வஹீயை தவிர வேறு எதுவுமே தகுதியானவை இல்லை என்பதை தெளிவாக புரியலாம்.
எனவே தான் தவறுகளுக்கு அறவே இடமில்லாத வஹீயை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிமொழிகளும் தெள்ளத் தெளிவாக அறிவிக்கின்றன.
தமத்து ஹஜ் தொடர்பான அறியாமை :
தமத்து என்கிற ஹஜ் முறையே கிடையாது என்பதாக, நபி (சல்) அவர்கள் அனுமதித்த ஒன்றை உஸ்மான் அவர்கள் மறுக்கிறார்கள்.
இதையறிந்த அலி (ரலி) அவர்கள் கோபமடைகிறார்கள்.
தமத்துவு முறையில் ஹஜ் செய்வதையும், ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்துச் செய்வதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் தடை செய்தார்கள். இதைக் கண்ட அலி (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டினார்கள். ``எவரது சொல்லுக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை நான் விட்டுவிடுபவனாக இல்லை என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : மர்வான் பின் அல்ஹகம்,
நூல் : புகாரி, 1563
மற்றொரு அறிவிப்பில்,
``நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததைத் தடுப்பது தவிர உமது நோக்கம் வேறு இல்லை என்று உஸ்மான் (ரலி)யிடம் நேருக்கு நேராகச் சொல்லிவிட்டு இரண்டையும் சேர்த்துச் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பார்க்க புகாரி : 1569
தமத்துவு முறையில் ஹஜ் செய்வது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு சிரியாவாசி கேட்டார். அது அனுமதிக்கப்பட்டது தான் என்று அவர்கள் விடையளித்தார்கள். உங்கள் தந்தை (உமர்) அவர்கள் அதைத் தடுத்திருக்கிறாரே அது பற்றிக் கூறுங்கள் என்று அவர் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ``என் தந்தை ஒரு காரியத்தைத் தடுக்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் செய்துள்ளனர் என்றால் என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? என்பதற்கு நீ பதில் சொல் என்றார்கள். அதற்கு அந்த மனிதர் ``அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையே பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ``நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமத்துவு முறையில் ஹஜ் செய்துள்ளார்கள் என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸாலிம் பின் அப்துல்லாஹ்,
நூல் : திர்மிதி 753
தமத்துவு முறையில் ஹஜ் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தது பரவலாகத் தெரிந்த நிலையில் உஸ்மான் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது. அது சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏற்க மறுத்துள்ளார்கள்.
அனைவருக்கும் தெரிந்த நபிவழியை மிகச் சிறந்த நபித்தோழர்கள் தடை செய்திருப்பதைக் கண்ட பின்பும் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரமாகும் என்று கூறுவது எப்படிச் சரியான கருத்தாக இருக்க முடியும்?
பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுத்தல் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்களும் ஐந்து நேரத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்து சென்றனர்.
புகாரி : 362, 86, 184, 362, 372, 578, 707, 807, 809, 814, 837, 850, 865, 867, 868, 873 ஆகிய எண்களில் இது பற்றிய ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்றைக்கு பெண்களின் நடவடிக்கைளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டால் இரவேல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் (பள்ளிவாசலுக்கு வருவதை விட்டு) தடுக்கப்பட்டிருப்பார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். நூல் : புகாரி 869
இந்த மார்க்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சுயமாக உருவாக்கப்பட்டதல்ல. மாறாக ஏக இறைவனிடமிருந்து வந்த மார்க்கமாகும். நாளை என்ன நடக்கும் எதிர்காலத்தில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படும் என்பதையெல்லாம் நன்கறிந்த இறைவனால் இம்மார்க்கம் நமக்குத் தரப்பட்டுள்ளது.
ஆயிஷா (ரலி) கூறுவது போன்ற மாற்றங்கள் ஏற்படும் என்பதும் இறைவனுக்கு நன்கு தெரியும்.
பெண்களிடம் ஏற்படும் தவறான நடவடிக்கை காரணமாக பெண்களைப் பள்ளியில் அனுமதிக்கக் கூடாது என்று இறைவன் நினைத்திருந்தால் அதை அவன் தெளிவாகச் சொல்லியிருப்பான். அதை அறியாமல் இறைவன் சட்டமியற்றி விட்டான் என்பது போன்ற கருத்து ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றில் அடங்கியுள்ளது.
மேலும் மார்க்கம் முழுமையாகி விட்டது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. மார்க்கம் முழுமையாகி விட்டது என்றால் அதன் பின்னர் எந்த மாற்றமும் வராது என்பது தான் பொருள். இதற்கு எதிராகவும் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அமைந்துள்ளது.
ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தக் கருத்தை மனதில் கொண்டு இவ்வார்த்தைகளைக் கூறினார்கள் என்று புரிந்து கொள்ளக் கூடாது. பெண்களின் நடவடிக்கைகளைக் கண்டு மனம் வெதும்பி இந்தச் சொல்லைப் பயன்படுத்தி விட்டார்கள் என்று தான் நாம் நல்லெண்ணம் வைக்க வேண்டும். அதே நேரத்தில் உலகில் எந்த மாறுதல் ஏற்பட்டாலும் மார்க்கச் சட்டத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
மற்றொரு சம்பவத்தையும் நாம் இங்கு நினைவூட்டிப் பார்க்க வேண்டும்.
உமர் (ரலி) அவர்களின் மனைவி பள்ளிவாசலுக்கு வெளியே செல்பவர்களாக இருந்தார்கள். இதை உமர் (ரலி) அவர்கள் விரும்பவில்லை.
இப்னு உமர்(றழி) அவர்கள் கூறினார்கள்: உமர்(றழி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் ‘உங்கள் கணவர்) உமர்(றழி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்’ என்று கேட்கப் பட்டது. அதற்கு ‘அவர் என்னைத் தடுக்காதது ஏன்?. “பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்’ என்பதே,”என்று பதிலுரைத்தார். (புஹாரி: 900)
உங்கள் கணவருக்கு நீங்கள் வெளியே பள்ளிவாசலுக்கு செல்வது பிடிக்கவில்லையே என்று கேட்கப்பட்ட போது அவர்கள் சொன்ன பதில், நபி (சல்) அவர்கள் அனுமதித்து விட்ட்டார்கள், எனவே என் கணவரின் பேச்சை கேட்கத் தேவையில்லை என்கிற பொருளில் அவர்கள் பதிலளிக்கிறார்கள் என்றால் மார்க்கம் என்று வரும் போது நபி (சல்) அவர்களின் சொல்லை தாண்டி எந்த சஹாபிக்கும் கூட சுய கருத்து கொள்ளல் கிடையாது என்பதை புரியலாம்.
நின்று கொண்டு சிறு நீர் கழித்தல் :
உட்கார்ந்து தான் சிறு நீர் கழிக்க வேண்டும் என்று சொன்ன நபி (சல்) அவர்கள், சில தவிர்க்க இயலாத சூழல்களில் நின்று கொண்டும் சிறு நீர் கழித்திருக்கிறார்கள் என்பதற்கு பல்வேறு ஹதீஸ்கள் சான்றாக உள்ளன.
ஆனால், இதை ஆயிஷா (ரலி0 அவர்கள் மறுக்கிறார்கள்.
யாரேனும் நபி (சல்) அவர்கள் நின்று கொண்டு சிறு நீர் கழித்ததாக யார் சொன்னாலும் அவர் பொய் சொல்கிறார் என்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
ஆக, நபி (சல்) அவர்கள் செய்த ஒரு காரியம் அவர்களது மனைவிக்கே தெரியவில்லை.
விதிவிலக்காக சில சந்தர்ப்பங்களில் நின்று கொண்டும் சிறு நீர் கழிக்கலாம் என்கிற நபியின் வழிகாட்டுதலை ஆயிஷா (ரலி) அவர்கள் மூலமாக நம்மால் பெற்றிருக்க முடியுமா?
ஆயிஷா அவர்களின் கூற்றை மார்க்கமாக ஏற்பதாக இருந்தால் நபி (சல்) அவர்கள் அனுமதி தந்த ஒரு காரியம் அறவே தடுக்கப்பட்டதாக கருத வேண்டிய சூழலுக்கு தான் நாம் தள்ளப்படுவோம்.
பெருநாள் தொழுகைக்கு முன் குத்பா
ஜும்ஆ தொழுகைக்குரிய குத்பாவை தொழுகைக்கு முன் நிகழ்த்த வேண்டும். பெருநாள் தொழுகைக்குரிய குத்பாவை தொழுகைக்குப் பின் நிகழ்த்த வேண்டும் என்பதை நாம் அறிவோம்.
ஆனால் ஏராளமான நபித் தோழர்கள் வாழும் காலத்தில் ஆட்சியாளர்களின் சுயநலப் போக்கால் இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டது. ஒரே ஒரு நபித் தோழர் மட்டும் அதை எதிர்த்துப் பேராடினாலும் அவரது கருத்து எடுபடவில்லை. தான் விரும்பியவாறு ஆட்சியாளர் மார்க்கத்தை வளைத்துக் கொண்டார் என்பதை ஹதீஸ்களில் நாம் காண்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பொருநாளி லும், ஹஜ் பெருநாளிலும் முஸல்லா எனும் திடலுக்குச் செல்வார்கள். முதலில் தொழுகையை முடித்து விட்டு திரும்பி மக்களை நோக்கி நிற்பார்கள். மக்கள் வரிசைகளில் அமர்ந்திருப்பார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தி அறிவுரை கூறுவார்கள். மர்வான் ஆட்சியாளராக வரும் வரை இந்த நிலை தான் நீடித்தது. அவர் மதீனாவின் அமீராக இருந்தார். அவருடன் நான் புறப்பட்டு முஸல்லா எனும் திடலை அடைந்த போது அங்கே ஒரு மேடை தயார் செய்யப்பட்டிருந்தது. தொழுகை நடத்துவதற்கு முன் மர்வான் மேடையில் ஏற முயன்றார். நான் அவரது ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் மேலே ஏறி தொழுகைக்கு முன் உரை நிகழ்த்தினார். அப்போது ``அல்லாஹ்வின் மேல் ஆணையாக (மார்க்கத்தை) மாற்றி விட்டீர் என்று நான் கூறினேன். அதற்கு மர்வான் ``நீ அறிந்து வைத்திருக்கும் நடைமுறை முடிந்து போன விஷயம் என்று கூறினார். நான் அறிந்து வைத்துள்ள நடைமுறை நான் அறியாத (இந்த) நடைமுறையை விடச் சிறந்தது எனக் கூறினேன். தொழுகைக்குப் பின் மக்கள் அமர்வதில்லை என்பதால் உரையை தொழுகைக்கு முன் அமைத்துக் கொண்டேன் என்று மர்வான் கூறினார்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)
நூல் : புகாரி 956
சிறந்த காலம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகழ்ந்து கூறிய நபித் தோழர்களும் தாபியீன்களும் வாழும் காலத்தில் ஒட்டு மொத்த சமுதாயமும் குழுமியுள்ள பெருநாள் தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறை அப்பட்டமாக மீறப்படுகிறது. ஒரே ஒருவர் மட்டுமே அதை எதிர்க்கிறார் என்பதைக் காண்கிறோம்.
ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு பயந்து கூட மார்க்கத்திற்கு முரணான சில செயல்களை அன்றைய மக்கள் சகித்துக் கொண்டிருக்கக் கூடும். எனவே நபித்தோழர்களின் காலத்தில் உள்ள அனைத்தும் மார்க்க ஆதாரங்கள் எனக் கூற முடியாது என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
மனிதர்கள் என்ற முறையில் நபித்தோழர்கள் சிலர் செய்த பாவங்களை நாம் இங்கே சுட்டிக் காட்டவில்லை.
நபித்தோழர்களின் ஆய்விலும், சிந்தனையிலும், தீர்ப்புகளிலும் அவர்களிடம் காணப்பட்ட மற்றவர்களுக்குத் தொடர்புடைய தவறுகளையே இங்கே நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளையே வஹீ எனவும், வஹீ அல்லாதது எனவும் இரண்டாக நாம் வகைப்படுத்தி ஒன்றை மட்டும் மார்க்க ஆதாரமாக ஏற்றுக் கொள்கிறோம். இன்னொன்றை மார்க்க ஆதரமாக ஏற்றுக் கொள்வதில்லை எனும் போது நபித்தோழரின் நடவடிக்கையையோ, மற்ற அறிஞர்கள் நடவடிக்கைகளையோ எப்படி மார்க்க ஆதாரமாகக் கருத முடியும்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு
நபித் தோழர்களும் மனிதர்களே! அவர்களிடமும் தடுமாற்றங்களும், தவறான முடிவுகளும் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்து சென்றுள்ளனர்.
நியாயத் தீர்ப்பு நாளில் மக்களெல்லாம் பதை பதைப்புடன் நிற்கும் போது நடக்கும் ஒரு நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
என் தோழர்களில் சிலர் இடது புறமாகப் பிடிக்கப்படுவார்கள். (அதாவது நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவார்கள்) அப்போது நான் ``அவர்கள் என் தோழர்கள்! அவர்கள் என் தோழர்கள்! என்று கூறுவேன். அதற்கு இறைவன் ``நீ அவர்களைப் பிரிந்தது முதல் வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர் என்று கூறுவான். அப்போது நான் ``அவர்களுடன் நான் இருந்த வரை அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். எப்போது என்னை நீ கைப்பற்றிக் கொண்டாயோ (அப்போது முதல்) நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய் என்று என் சகோதரர் ஈஸா கூறியது போல் நானும் கூறிவிடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 3349, 3447
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் சில நபித்தோழர்கள் தவறான பாதைக்குச் சென்று விடுவார்கள் என்பது முன்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டு அவர்கள் அதனை நமக்கு அறிவித்துச் சென்று விட்டனர்.
இந்த நிலையில் நபித்தோழர்களின் கூற்றுகள் மார்க்க ஆதாரம் என்று சொல்ல முடியுமா?
இவற்றையெல்லாம் நாம் சிந்திக்கையில், வஹீ மட்டுமே மார்க்கம் என்கிற கொள்கையில் திடமாக நிற்பது ஒன்று தான் நமது ஈமானுக்கும் மறுமை வாழ்க்கைக்கும் பாதுகாப்பு என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தொடரும், இன்ஷா அல்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக