வெள்ளி, 17 ஜூலை, 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 27)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 27




ஹதீஸ்களைப் புரிந்து கொள்வது எப்படி (தொடர்ச்சி)


குர் ஆனுக்கு முரண் - நபி (சல்) அவர்களின் அளவுகோல் :

ஹதீஸ்களை ஏற்பதைப் பொறுத்தவரை, அவை நபி (சல்) அவர்களால் உண்மையில் சொல்லப்பட்டவை தானா? என்பதை பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு அலசிப் பார்த்து தான் நம்ப வேண்டும் என்பதை அறிந்த நாம், அவற்றில் முக்கியமான நிபந்தனையான குர் ஆனுக்கு முரணில்லாமல் இருத்தல் என்கிற நிபந்தனைப் பற்றி விளக்கமாக அறிந்தோம்.

நபி (சல்) அவர்களும் இந்த கருத்தை மறைமுகமாக நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.

பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னைப் பற்றி யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.

இந்த ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தும் சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் நூலின் முதல் ஹதீஸ் இது.

ஒரு செய்தியை படிக்கும் போதே, இதை நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நமக்குத் தோன்றும்.
அவர்கள் இதை சொல்ல வரவில்லை, அவர்களின் கண்ணியத்திற்கு இது போன்ற செய்திகள் இழுக்கு சேர்ப்பவை, எனவே இப்படி அவர்கள் சொல்லியிருக்கவே முடியாது என்பதாக சில ஹதீஸ்களைப் படிக்கும் போதே நமக்குத் தோன்றும்.
அப்படிப்பட்ட செய்தியும் பொய், அதை அறிவித்தவரும் பொய்யர் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.

இன்னும் அவர்கள் சொல்லும் போது,

என் பெயரில் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் ஒத்துக்கொள்ளுமானால் இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் அதற்கு பணியுமானால் (அதாவது நமது உணர்வுகள்), அதோடு அந்த செய்தி உங்களுக்கு (நடைமுறை வாழ்க்கைக்கு) நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை கூறுவதில் நானே மிக தகுதியானவன். 
என் பெயரில் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால் இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் அதற்கு கட்டுப்படாமல் அதை விட்டு விரண்டோடுமானால் , அதோடு அந்த செய்தி உங்களுக்கு (நடைமுறை வாழ்க்கைக்கு) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் தூரமானவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் அபு உசைத்  
நூல் அஹமத் 15478

ஆக, நபி (சல்) அவர்கள் பெயரால் ஒரு செய்தி சொல்லப்பட்டால் அதை நம் உள்ளம் ஏற்க வேண்டும். நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றதாய் இருக்க வேண்டும். அப்படி நமக்குத் தோன்றுபவை தான் அவர்கள் சொன்னவை.
அதற்கு எதிராக என்ன செய்தி வந்தாலும், அது அறிவிப்பாளர் வரிசையில் பலமானவர் என்று அறியப்பட்டவர் வழியாக வந்தாலும், அதை நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்கவே மாட்டார்கள் என்கிற முடிவுக்குத் தான் நாம் வர வேண்டும் என்கிற சட்டத்தை மேற்கண்ட ஹதீஸில் நபி (சல்) அவர்களே வகுக்கிறார்கள்.



விதியை செயல்படுத்திய சஹாபாக்கள் :

குர் ஆனுக்கு ஒரு செய்தி முரணாக தெரிந்தால், அந்த செய்தி யார் மூலமாக வந்தது, அவர் எப்படிப்பட்டவர் என்கிற ஆய்வெல்லாம் அவசியமற்றதாகி விடுகிறது.
அதை அறிவித்தவர் எப்படிப்பட்ட நேர்மையாளர் என கருதப்பட்டாலும், அவர் சொன்ன செய்தி குர் ஆனுக்கு முரண் எனும் போது, அவரிடமும் குறைகள் இருக்கலாம் என்கிற முடிவுக்கு வந்து குர் ஆனை தான் காக்க முற்பட வேண்டுமெ தவிர, முரண்பட்டாலும் பரவாயில்லை, அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை தான் நான் கவனிப்பேன் என்று சிந்திக்கக் கூடாது.

இந்த அடிப்படையை ஏதோ நாம் தான் புதிதாக சொல்வதாக இவர்கள் அவதூறு சொல்கின்றனர்.

உண்மையில், இது தான் சஹாபாக்கள் கொண்டிருந்த அடிப்படை அளவுகோல்.
இது தான் எல்லா ஹதீஸ் கலை இமாம்களின் அளவுகோலாக இருந்தது.

நம்மைப் பொறுத்தவரை சஹாபாக்களின் எந்த கூற்றானாலும் அதை ஏற்போம், அவர்களின் நம்பகத்தன்மை பற்றி நாம் கேள்வியெழுப்ப மாட்டோம். அதே சமயம், சஹாபாக்கள் அவர்களுக்கிடையில் இதே அளவுகோலை கொண்டிருக்கவில்லை.
அவர்கள் அனைவரும் சமம் என்பதால், ஒரு சஹாபி சொல்வதை இன்னொரு சஹாபி மறுத்திருக்கிறார்,
ஒரு சஹாபி நபி சொன்னதாக சொல்வதை இன்னொரு சஹாபி கண்டித்திருக்கிறார். 
அவர் சொன்னது குர் ஆனுக்கு முரண் என்று மறுத்திருக்கிறார்.
இது போன்ற பல நிலைகளை நாம் ஹதிஸ்களில் காணலாம்.

நபியிடம் பாடம் பயின்ற சஹாபாக்கள், குர் ஆனுக்கு முரணாக ஒரு செய்தி இருந்தால் அதை ஏற்கக் கூடாது என்கிற அடிப்படை தான் மனதில் ஆழமாய் பதிந்திருந்தது.
சில சான்றுகளை இங்கே காணலாம்.


உமர் (ரலி) அவர்கள் கடைப்பிடித்த வழிமுறை 

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : (என் கணவர்) அபூஅம்ர் பின் ஹப்ஸ் அவர்கள் என்னை ஒரேயடியாக தலாக் சொல்லி விட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார். பின்னர் அவருடைய பிரதிநிதி தோல் நீக்கப்படாத கோதுமையை எனக்கு அனுப்பி வைத்தார். அதைக் கண்டு நான் எரிச்சலடைந்தேன். அதற்கு அந்தப் பிரதிநிதி அல்லாஹ்வின் மீதாணையாக நாங்கள் உனக்கு (ஜீவனாம்சம் தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை. (இது ஒரு உதவியாகத் தரப்பட்டது தான்) என்று கூறினார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவர் உனக்கு (ஜீவனாம்சம் தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : பாத்திமா பின்த் கைஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் (2953)

அபூ இஸ்ஹாக் அவர்கள் கூறியதாவது : நான் அஸ்வத் பின் யஸீத் அவர்களுடன் பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ அவர்களும் இருந்தார்கள். அப்போது ‘ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடமும் இல்லை. ஜீவனாம்சமும் இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்’ என்ற ஹதீஸை ஷஅபீ அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள். (அங்கிருந்த) அஸ்வத் (ரலி) அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர் மீது எரிந்து விட்டு பின்வருமாறு கூறினார்கள். உமக்குக் கேடு தான். இது போன்ற செய்திகளை அறிவிக்கின்றீர்களே? உமர் (ரலி) அவர்கள் ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும் நபியின் வழிமுறையையும் கைவிட மாட்டோம். ஃபாத்திமா பின் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா? அல்லது மறந்து விட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை. மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. பகிரங்கமான வெக்கக்கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள் (65 : 1) என்று வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறியுள்ளான் என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூஇஸ்ஹாக் (ரஹ்)

நூல் : முஸ்லிம் (2963)

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தம் கணவனால் தலாக் விடப்பட்ட போது அவர்களுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவது ஃபாத்திமா (ரலி) அவர்களின் கணவருக்குக் கடமையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கூறியதாக சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஃபாத்திமா (ரலி) அவர்களே குறிப்பிடுகிறார்கள். 

ஆனால் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை கணவன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குர்ஆனில் உள்ளது. எனவே குர்ஆனிற்கு மாற்றமாக நபி (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் உமர் (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள். 

ஃபாத்திமா (ரலி) அவர்களின் நம்பகத் தன்மையில் உமர் அவர்கள் எள்ளளவும் சந்தேகம் கொள்ளவில்லை. குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் கூற்றும் ஒரு போதும் மோதாது என்பது உறுதியான விஷயம். எனவே மறதியாக ஃபாத்திமா அவர்கள் தான் மாற்றிச் சொல்லியிருக்க வேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் முடிவு செய்துள்ளார்கள். 

இந்தச் சம்பவத்தில் உமர் (ரலி) அவர்கள் எந்த வாதத்தை முன் வைத்தாரோ அதைத் தான் நாமும் கூறிக் கொண்டிருக்கிறோம். இப்போது ஹதீஸின் போலிப் பாதுகாவலர்கள் நம்மை விமர்சனம் செய்ததைப் போல் “உமர் ஹதீஸை மறுத்து விட்டார். அவர் குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்பவர்களுக்குக் குறிப்பெடுத்துக் கொடுத்து விட்டார். இவர் வழிகெட்ட கூட்டத்தைச் சார்ந்தவர்” என்றெல்லாம் விமர்சனம் செய்வார்களா? 

இதில், ஃபாத்திமா அவர்களும் நபி சொன்னதாக தான் சொல்கிறார்.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் நம்பகமான அறிவிப்பாளர் ஆச்சே, அவரது கூற்றை எப்படி மறுப்பது? என்று உமர் (ரலி) அவர்கள் சிந்தித்தார்களா?
இல்லை. மாறாக, யார் கூறினாலும், அது குர் ஆனுக்கு ஒத்ததாக இருந்தால் தான் அது நபி சொன்னது.
குர் ஆனுக்கு முரணாக இருந்தால் அது நபி சொன்னதில்லை என்கிற அளவுகோலிலேயே இருந்தார்கள்.



ஆயிஷா (ரலி) அவர்களின் வழிமுறை :

உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்ட போது அவர்களிடம் சகோதரரே! நண்பரே! எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “ஸுஹைபே எனக்காகவா நீங்கள் அழுகிறீர்கள்? இறந்தவருக்காக அவரது குடும்பத்தார் அழும் சில அழுகையின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லவா? என்றார்கள். 

உமர் (ரலி) அவர்கள் இறந்த போது (அவர்கள் இறப்பதற்கு முன் கூறிய) அந்தச் செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவானாக. அல்லாஹ்வின் மீதாணையாக (எவரோ) ஒருவர் அழுவதின் காரணமாக இறை நம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளர்களுக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான் என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான். அழவும் வைக்கிறான் (53 : 43) ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது (35 : 18) (என்று குர்ஆன் கூறுகிறது) குர்ஆனே உங்களுக்குப் போதும் என்றார்கள். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் (1694)


இந்த ஹதீஸில், ஒரு செய்தியை சொன்னது உமர் (ரலி) அவர்கள் தான் என்ற போதும், அதை ஆயிஷா (ரலி) அவர்கள் மறுக்கிறார்கள். உமர் (ரலி) அவர்களின் கூற்று குர் ஆனுக்கு முரண் என்று சொல்லியே மறுக்கிறார்கள்.

அதே போன்று,

இன்னொரு செய்தியில், பத்ர் போரில் இறந்த காஃபிர்களை நோக்கி நபி (சல்) அவர்கள், உங்களுக்கு அல்லாஹ் வாக்களித்ததை பெற்றுக்கொண்டீர்களா? என்பதாக பேசுவார்கள்.
உமர் (ரலி) அவர்கள் நபி (சல்) அவர்களிடம், இறந்து போனவர்களிடமா பேசுகிறீர்கள்? என்று கேட்கும் போது, நபி (சல்) அவர்கள், நான் சொல்வதை இப்போது கேட்கிறார்கள். என்பதாக பதில் அளித்தார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த தகவல் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, இப்படி நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள், இறந்தவர்களை உங்களால் செவியேற்க செய்ய முடியாது என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கும் போது அதற்கு மாற்றமாக நபி (சல்) அவர்கள் எப்படி பேசுவார்கள்? என்று கேள்வியெழுப்புகிறார்கள்.
சொல்லி விட்டு அதற்கான சரியான விளக்கத்தையும் சொல்கிறார்கள்.
நபி (சல்) அவர்கள், "இப்போது விளங்கிக் கொன்டார்கள்" என்று தான் சொன்னார்கள், கேட்கிறார்கள் என்று சொல்லவில்லை என்பதாக சொல்கிறார்கள்.

இது புஹாரி 3681 இல் பதிவாகியிருக்கிறது.

இதே கோணத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் இன்னொரு ஹதீஸையும் அணுகியுள்ளார்கள்.

இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சகுணம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழூம் பார்த்துவிட்டு அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக அறியாமைக் கால மக்கள் சகுணம் என்பது பெண் கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது (57 : :22) என்ற வசனத்தை ஓதினார்கள். 

அறிவிப்பவர் : அபூஹஸ்ஸான் (ரஹ்)

நூல் : அஹ்மத் (24894)

ஆயிஷா (ரலி) அவர்கள் மறுத்த இந்தச் செய்தி புகாரியில் (2858) (5093) (5753) (5772) ஆகிய எண்களிலும் முஸ்லிமில் (4127) (4128) ஆகிய எண்களிலும் இடம் பெற்றுள்ளது. 

யாருக்கு எப்போது துன்பம் வரும் என்பதை அல்லாஹ் முடிவு செய்து விட்டான். அல்லாஹ் நாடினால் தான் துன்பம் ஏற்படும் என்று குர்ஆன் கூறுகிறது. வீடு பெண் கால்நடை இவற்றினாலும் துன்பம் வரும்; எனவே இம்மூன்றிலும் சகுணம் பார்க்கலாம் என்று அபூஹுரைரா அறிவித்த ஹதீஸ் கூறுகிறது. இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்பதால் இதை நபி (ஸல்) கூறவில்லை என்பதே ஆயிஷா (ரலி) அவர்களின் வாதம். 

இந்த மூன்று செய்திகளிலும் நபி (ஸல்) அவர்களின் பெயரால் சொல்லப்பட்ட செய்தி தவறு என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆனுடைய வசனங்களை மேற்கொள் காட்டி விளக்கியுள்ளார்கள். 

ஆயிஷா (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் மேற்சொன்ன செய்திகளை மறுத்துள்ளதால் நாமும் இந்தச் செய்திகளை மறுக்கிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அதை நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அந்த ஹதீஸை ஏற்கக் கூடாது என்று நாம் மட்டும் கூறவில்லை. நமக்கு முன்பு நபித்தோழர்களும் கூறியுள்ளார்கள் என்பதற்காகத் தான் இவற்றைக் கூறியுள்ளோம்.



ஒழுக்கங்கெட்ட காஃபிரான பெண் ஒருத்தி தாகத்துடன் நின்ற நாய்க்கு தண்ணீர் புகட்டியதால் அல்லாஹ் அவளுக்கு சொர்க்கத்தை கொடுப்பான் என்று நபி (சல்) அவர்கள் சொன்னதாக அபு ஹுரைரா அவர்கள் ஒரு செய்தியை அறிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக அல்கமா (ரலி) அவர்கள் கூறும் போது, நான் ஆய்ஷா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்த போது, அங்கே அபு ஹுரைரா (ரலி) வந்தார்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் அவரிடம், இது போன்ற செய்திகளை நீ தான் அறிவித்தாயா? என்று கேட்டு விட்டு, இது ஒரு போதும் நபி (சல்) அவர்கள் சொன்ன செய்தியில்லை.
காஃபிர்களுக்கு நரகம் என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்லும் போது, நாய்க்கு தண்ணீர் புகட்டி விட்டு சொர்க்கம் சென்று விட முடியுமா?
என்பதாக மறுக்கிறார்கள்.
இந்த செய்தி அஹமத் 10738 இல் பதிவாகியுள்ளது.

ஆக, குர் ஆனை அளவுகோலாக கொண்டு தான் சஹாபாக்களும் மார்க்கத்தை அணுகியிருக்கிறார்கள் என்பதை இவற்றிலிருந்து நாம் அறிகிறோம்.




விதியை செயல்படுத்திய அறிஞர்கள் :

இதே போன்று, ஏராளமான ஹதீஸ் கலை அறிஞர்களும் கூட இந்த விதியினை செயல்படுத்தியிருக்கிறார்கள்.

நபி (சல்) அவர்கள் ஒன்பது வயது சிறுவராக இருந்த போது அபு தாலிப் அவர்களைக் கடைத்தெருக்களுக்கு கூட்டிச் செல்வார், அப்போது கிறுத்தவப் பாதிரியார், நபி (சல்) அவர்களை, தான் வளர்ப்பதற்கு அபுதாலிபிடம் அனுமதி கேட்டதாகவும் அதற்கு அபு தாலிப் மறுத்து விட்டதாகவும், ஆனால், அபுபக்க சித்திக் (ரலி) அவர்கள் நபி (சல்) அவர்களிடம் அந்த பாதிரியாருடன் செல்லுமாறூ சொன்னதாகவும் திர்மிதி 570 இல் ஒரு செய்தியை பதிவு செய்திருக்கின்றார்கள்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரைப் பார்த்தால் அனைவருமே நம்பகமானவர்களாக தான் காட்சியளிக்கின்றனர்.

ஆனால், ஒட்டு மொத்த அறிஞர்களும், இந்த ஹதீஸை மறுக்கின்றனர். இப்படியொரு சம்பவம் நடைபெறுவதற்கு சாத்தியமே இல்லை என்கின்றனர்.
ஏனெனில், அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்கள், நபியை விடவும் இரண்டு வயதிற்கு இளையவர்கள்.
அப்படியிருக்கும் போது, ஏழு வயதே நிரம்பிய அபுபக்கர் சித்திக் அவர்கள் நபியிடம் இவ்வாறு அறிவுரை கூறுவார்களா? எனவே இது பொய்யான செய்தி என்று எல்லா அறிஞர்களும் மறுக்கின்றார்கள்.

பலமான அறிவிப்பாளர்கள் என்று அறியப்பட்டாலும், அதை காரணம் காட்டி ஒரு ஹதீஸை எவரும் ஏற்கவில்லை, மாறாக அந்த ஹதீஸ் சொல்லும் கருத்து சரி தானா, அவ்வாறு நடந்திருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்பன பற்றியெல்லாம் ஆராய்ந்தே முடிவெடுக்கிறார்கள்.



இமாம் இஸ்மாயீலீ அணுகிய முறை

சஹீஹுல் புகாரிக்கு முஸ்தக்ரஜ் என்று சொல்லப்படும் ஹதீஸ் தொகுப்பு நூலைத் தொகுத்தவர் இஸ்மாயீலீ என்ற அறிஞர் ஆவார். கல்வி மேதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விரிவுரை தரும் போது இந்த அறிஞரின் கூற்றைப் பல இடங்களில் பதிவு செய்கிறார். 

புகாரியில் விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்கு பதில் தரும் போது இந்த அறிஞரின் கூற்றை இப்னு ஹஜர் எடுத்துக் காட்டாமல் இருந்ததில்லை. இப்படிப்பட்ட அறிஞர் நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கும் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத புகாரியில் இடம்பெற்ற ஒரு ஹதீஸை எப்படி குறை காணுகிறார் என்று பாருங்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும், புழுதியும் படிந்திருக்கும். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நான் உங்களிடம் கூறவில்லையா? என்று அவர்களிடம் கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது? என்று கேட்பார்கள். 

அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம் நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் என்று பதிலளிப்பான். பிறகு இப்ராஹீமே உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (3350)

இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கொடுக்கையில் பின்வருமாறு இஸ்மாயீலீ அவர்களின் கூற்றைப் பதிவு செய்கிறார்.

இஸ்மாயீலீ அவர்கள் இந்த ஹதீஸின் கருத்தில் சிக்கல் இருப்பதாகக் கருதி இதனுடைய நம்பகத் தன்மையில் குறை கூறியுள்ளார். அவர் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு (பின்வருமாறு) கூறுகிறார். அல்லாஹ் வாக்கு மீறமாட்டான் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் திட்டமாக அறிந்திருந்தார்கள். இதை அவர்கள் விளங்கியிருக்கும் போது தனது தந்தைக்கு ஏற்பட்டதைத் தனக்கு ஏற்பட்ட இழிவாக அவர்கள் எப்படிக் கருதியிருப்பார்கள்? என்று இஸ்மாயீலீ கூறியுள்ளார். இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர். சகிப்புத் தன்மை உள்ளவர் என்ற இந்த இறைவனுடைய வெளிப்படையான கூற்றிற்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்று இஸ்மாயீலீ அல்லாமல் மற்றவர்கள் விமர்சித்துள்ளார்கள். 

நூல் : ஃபத்ஹுல்பாரீ பாகம் : 8 பக்கம் : 500

மேற்கண்ட ஹதீஸை அறிஞர்கள் விமர்சிக்கும் போது அதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி அவர்கள் பேச்சையே எடுக்கவில்லை. மாறாக அல்லாஹ் வாக்கு மீறுவான் என்று இப்ராஹீம் நபி எண்ணுவது இறைத் தூதரின் தன்மைக்கு மாற்றமானது என்பதனால் இது ஆட்சேபனைக்குரியது என்கின்றனர். 

மேலும் தனது தந்தை அல்லாஹ்வின் எதிரி என்று தெளிவானவுடன் இப்ராஹீம் தன் தந்தையிடமிருந்து விலகிக் கொண்டார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸ் அவர்கள் விலகவில்லை. மறுமையிலும் தன் தந்தைக்காக வாதாடுவார்கள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. 

எனவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்ற அடிப்படையில் நின்று இந்த அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். சொல்லுகின்ற கருத்து நியாயமானதா என்று சிந்திக்காமல் எந்த இமாமாவது நீங்கள் கூறுவதைப் போன்று கூறியுள்ளாரா? என்று குருட்டுத்தனமாகக் கேட்பவர்கள் இந்த அறிஞர்களின் கூற்றுக்களை உற்று நோக்க வேண்டும்.





இமாம் மாலிக் மற்றும் குர்துபீயின் வழிமுறை

கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின் போது வந்து அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வுடைய ஹஜ் என்னும் கடமை என் தந்தைக்கு விதியாகி விட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) 

நூல் : புகாரி (1854)

இந்த ஹதீஸை இமாம் மாலிக் அவர்கள் நிராகரித்ததை குர்துபீ அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.


குர்துபீ கூறுகிறார் : கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கு முரண்படுகிறது என்று மாலிக் அவர்கள் கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தைக் கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

நூல் : பத்ஹுல்பாரீ பாகம் : 4 பக்கம் : 70 

ஹஜ் செய்வதற்குச் சக்தி பெற்றவர்களுக்குத் தான் ஹஜ் கடமை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸில் வாகனத்தில் கூட உட்கார இயலாத வயதான தன் தந்தைக்கு ஹஜ் கடமையானதாக சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண்மணி கூறியுள்ளார். இதனால் இமாம் மாலிக் அவர்கள் இந்த ஹதீஸைப் பின்தள்ளிவிட்டு குர்ஆனுக்கு முன்னுரிமை தந்துள்ளார்கள்.

அப்படி முன்னுரிமை வழங்குவது முழுக்க முழுக்கச் சரிதான் என்று இமாம் குர்துபீ அவர்கள் ஒப்புதல் தருகிறார்கள். இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரின் மீது கூட குறை கூற முடியாது. அனைவரும் சிலாகித்துச் சொல்லப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறிப் பின்தள்ளுவதால் ஹதீஸின் மீது இந்த அறிஞர்களுக்கு அக்கரை இல்லை என்று பொருளா? 


அதே போன்று, தமது வீட்டிற்குள் ஒரு சஹாபி எட்டிப் பார்த்த போது, உனது கண்ணை குருடாக்கி விடுவதற்கு விரும்புகிறேன் என்று நபி (சல்) அவர்கள் சொன்ன செய்தியையும் இமாம் குர்துபி அவர்கள் மறுக்கிறார்கள்.

அல்லாஹ் குர் ஆனில் குற்றத்திற்கு சரி சமமான பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கும் போது, வீட்டை எட்டிப்பார்த்த குற்றத்திற்காக கண் பார்வையை பறிப்பது என்பது அதிகம். இப்படி நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று விளக்கமளிக்கிறார்கள்.



இமாம் இப்னு தய்மியாவின் வழிமுறை :

 நபித்தோழர்களைத் திட்டுகின்ற ராஃபிளா கூட்டத்தைச் சார்ந்தவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் அவர்களுடைய பாவமன்னிப்பை ஏற்க மாட்டான் என்பதற்கு பின்வரும் ஹதீஸை ஒரு கூட்டம் சான்றாகக் காட்டுகிறது. 

எனது தோழர்களைத் திட்டுவது மன்னிக்கப்படாத பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதே அந்த ஹதீஸ். இந்த ஹதீஸை இப்னு தய்மியா அவர்கள் இரு கோணங்களில் விமர்சனம் செய்கிறார். அதில் ஒன்று இது குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற விதியின் அடிப்படையில் உள்ளது. 

இந்த ஹதீஸ் இரு விதங்களில் பொய்யானதாகும். ஒன்று ஹதீஸ் கலை அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி இது பொய்யான செய்தியாகும். இது குர்ஆனிற்கும் சுன்னாவிற்கும் ஏகோபித்த கருத்திற்கும் முரண்படுகிறது. ஏனென்றால் அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் இரு வசனங்களில் இவ்வாறு கூறுகிறான். தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். (4 : 48) (4 : 116) . . . 

மேலும் தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (39 :53) என்றும் கூறுகிறான்.

நூல் : மஜ்மூஉ ஃபதாவா இப்னிதய்மியா பாகம் : 2 பக்கம் : 185


மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் நமக்குக் கூறுவது என்ன?
வெறுமனே அறிவிப்பாளர் பலமானவர் என்கிற காரணத்தை வைத்துக் கொண்டு ஹதீஸ் சொல்கின்ற கருத்தை கவனிக்காமல் அவற்றை சஹீஹ் அந்தஸ்த்துக்கு கொண்டு வந்து விடக் கூடாது.
மாறாக, அவற்றின் கருத்து சரியா, குர் ஆனுடன் மோதுகின்ற போக்கு தென்படுகின்றதா என்பதையெல்லாம் தீர்க்கமாக ஆராய்ந்தே முடிவு செய்ய வேண்டும் என்பதே அறிஞர் பெருமக்களின் நிலையாகவும் இருந்தன.



ஷாஃபி இமாமின் அணுகுமுறை :

ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணோ, கறுப்பு நாயோ அல்லது கழுதையோ குறிக்கே சென்றால் அவரது தொழுகை பயனற்றுப் போகும் என்று நபி (சல்) அவர்கள் சொன்னதாக நசாயி 750 இல் பதிவாகியுள்ளது.

இது அர்த்தமுள்ள ஹதீஸா? இதை நபி (சல்) அவர்கள் சொல்லியிருப்பார்களா? நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார்கள். யாரோ ஒருவர் கடந்து செல்வதால் இன்னொருவரது தொழுகை செல்லாமல் ஆகி விடும் என்றால் இது எப்படி இஸ்லாத்தின் அடிப்படையாக இருக்க முடியும்?

சம்மந்தப்பட்டவர் ஏதும் குறைகள், தவறுகள் செய்திருந்தால் அப்போது அவரது தொழுகை செல்லாது என்று கூறுவதில் தான் அர்த்தமிருக்கும்.
யாரோ ஒருவர் செய்த குற்றத்திற்கு இன்னொருவரின் தொழுகை பாழாகும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரண்.

இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை பார்த்தோமேயானால் அனைத்துமே ஆதாரப்பூர்வமானதாகவே இருக்கின்றன.
ஆனாலும் இதை நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்று நம் அறிவுக்கே படுகிறது.

இதை நாமே முதலில் சொல்லவும் இல்லை. இதே கருத்தினை இமாம் ஷாஃபி அவர்களும் முன்வைக்கிறார்கள்.

ஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்க மாட்டார் என்கிற குர் ஆன் வசனத்திற்கு இந்த ஹதீஸானது முரணாக நிற்பதால் இப்படி ரசூல் (சல்) அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று ஷாஃபி இமாம் கூறுகிறார்கள்.
இது இப்னு ரஜவ் என்கிற அறிஞர் தொகுத்த ஃபத்ஹுல் பாரி நூலில் பதிவாகியுள்ளது.

நம்மைப் பார்த்து ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று சொல்வோர் ஷாஃபி இமாமை அப்படி சொல்வார்களா?
ஷாஃபி இமாமுக்கு காஃபிர் ஃபத்வா அளிப்பார்களா?


அதே போன்று, ஜாஃபர் இப்னு அபி தாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஒன்றில், நபி (சல்) அவர்கள் ஒரு முறை தாம் நோன்பின் போது இரத்தம் குற்றியெடுப்பதை கண்டு, இரத்தம் எடுப்பவரும் கொடுப்பவரும் நோன்பை பாழாக்கி விட்டனர் என்று தம்மிடம் முதலில் சொன்னார்கள்.
பின்னர், நோன்பு நோற்ற நிலையில் இரத்தம் வெளியேற்றிக் கொள்ள அனுமதியளித்தார்கள் என்றார்.

இதைப் பற்றி இமாம் தாரகுத்னி அவர்கள் சொல்லும் போது, இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் அனைவருமே பலமானவர்கள் தான், இந்த ஹதீஸில் எந்த இல்லத்தும் (நுணுக்கமான குறை) இல்லை, எனினும் இந்த ஹதீஸை ஏற்க முடியாது என்கிறார்.
காரணம், இந்த ஹதீஸ் மக்காஹ் வெற்றியின் போது அறிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது, ஆனால், மக்கா வெற்றிக்கு முன்னரே இதன் அறிவிப்பாளரான ஜாஃபர் இப்னு அபி தாலிப் (ரலி) அவர்கள் மரணித்து விட்டார்கள், எனவே இது நபியின் பெயரால் இட்டுப்பட்டப்பட்ட ஹதீஸாகும், என்று விளக்குகிறார்கள்.

ஆக, அறிவிப்பாளர்கள் சரியானவர்களல்லவா? என்கிற ஒரேயொரு காரணத்தை முன் வைத்து எந்தவொரு ஹதீஸையும் ஏற்று விட முடியாது.
வெளிப்படையாக நம்பகமானவர்களாக அவர்கள் தென்பட்டாலும், நம் அறிவிக்குப் புலப்படாத குறைகளும் இருக்கலாம், இறுதியாக, அறிவிக்கப்படும் ஹதீஸ் சரியானதா, குர் ஆனோடு மோதாமல், அதற்கு ஒத்ததாய் இருக்கின்றதா போன்றவை தான் நாம் கொள்ள வேண்டிய அளவுகோல் என்பதற்கு பல ஹதீஸ் கலை அறிஞர்களின் மேற்கூறிய அளவுகோல்களே போதுமான சான்றாகும்.

இவ்வாறு இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் எவை எவை என்பதையே பட்டியலாக தயாரித்து அதை நூலாக உருவாக்கியிருக்கிறார் இமாம் இப்னு கய்யும் அவர்கள்.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை கண்டறிவதற்கான வழிமுறைகளை அந்த நூலில் விரிவான சட்ட விதிகளாக அந்த நூலில் குறிப்பிட்டும் இருக்கிறார்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக