திங்கள், 13 ஜூலை, 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 22)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 22
சுப்கி அவ்லியாவின் காம லீலை - தொடரும் சமாளிப்புகள் :


சுப்கி அவ்லியா பெண் பார்க்க சென்ற இடத்தில் அந்த பெண்ணிடம் செய்ததையும் பேசியதையும் நாகரீகமுள்ள எந்த ஒரு மனிதராலும் விளக்க முடியாது, அப்படிப்பட்ட வக்கிரத்தை உங்கள் ஷஃரானி நூலிலிருந்து மொழியாக்கம் செய்து விளக்கிக் காட்டுங்கள் பார்ப்போம் என்று போலி சுன்னத் ஜமாஅத்தினருக்கு நாம் அறைகூவல் விடுத்த நிமிடத்திலிருந்து, தங்கள் வழிகேட்டு கொள்கை கூடாரம் சரியத் துவங்குவதை உணர்ந்த போலிகள், ஏதேனும் சமாளிப்புகள் செய்து இதிலிருந்து தப்பிக்க முடியாதா? என்று எண்ணத் துவங்கினர்.

அந்த வாசகம் ஷஃரானியின் நூலில் இல்லை என்று சொல்லிப் பார்த்தனர், அது புஸ்ஸாகிப்போனது.
முந்தைய வாசகத்தை முதலில் நீங்கள் மொழியாக்கம் செய்யுங்கள் பார்ப்போம் என்று கூறினர், மொழியாக்கம் செய்து அனுப்பினோம், பிறகு அதற்கு எந்த பதிலும் சொல்ல இயலாமல் வாய் மூடிக் கொண்டனர்.
தற்போது இன்னொரு சமாளிப்பை செய்யத்துவங்கியிருக்கின்றனர்.
அதாவது, பழங்கால நூலில் எதிரிகளால் இடைச்சொருகல் செய்யப்பட்டது தான் இந்த சம்பவம் என்று தற்போது பதில் சொல்வதை நாம் காண்கிறோம்.

இதாவது உண்மையா? நிச்சயம் இல்லை. ஷஃரானி நூலினை இவர்கள் அங்கீகரிக்கும் மதரசா பிரதிகளிலும் இணையதளங்களிலும் கூட காணலாம், அவற்றிலெல்லாம் மேற்படி வாசகம் இடம்பெறத்தான் செய்கிறது.
இதை விட, சூஃபியாக்கள் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளம் என்று வைத்திருக்கும் தளத்தில் இதே ஷஃரானியின் நூல் இருக்கின்றது.
எதிரிகளின் இடைச்சருகல் என்பது உண்மையாக இருந்தால் அந்த வாசகத்தை நீக்கி விட்டு தான் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டிருப்பார்கள்.
ஆனால், அதிலும் இந்த வாசகம் இருக்கத்தான் செய்கின்றது.
ஆக, இடைச்செருகல் என்பது வடிகட்டி பொய் என்பது தெளிவாகிறது.
சரி, முந்தைய பிரதிகளில் இல்லை, தற்போது இடைச்செருகல் செய்து விட்டனர் என்பது உண்மையாக இருக்குமென்றால் இவர்கள் என்ன செய்ய வேண்டும்?
 பழங்கால பிரதி ஒன்றையும், இடைச்செருகல் செய்யப்பட்ட பிறகுள்ள பிரதியொன்றினையும் எடுத்துக் காட்டி, பழங்காலப் பிரதியில் இந்த வாசகம் விடுபட்டிருப்பதையும் தற்போதுள்ள பிரதியில் இந்த வாசகம் இடம்பெற்றிருப்பதையும் ஒருசேர காட்டி விளக்க வேண்டும்.
அதை செய்தார்களா?

அல்லாமல், போகிற போக்கில் இடைச்செருகல், இடைச்செருகல் என்று சொன்னால் அது சரியாகி விடுமா?

என்பதையும் சிந்திக்கும் போது, இவர்கள் என்னதான் குட்டிக்கரணங்கள் அடித்தாலும் சத்தியத்தை தடுத்து நிறுத்த முடியாது என்பது உறுதியாகிறது.கியாஸ் மார்க்கத்தில் தனி ஆதாரமாகுமா? (தொடர்ச்சி) :


இரத்தம் வெளியேற்றும் மருத்துவ முறை

சூட்டை தணிப்பதற்காக சிறிதளவு இரத்தத்தை குற்றி வெளியேற்றும் வழக்கம் ரசூல் (சல்) அவர்கள் காலத்தில் இருந்த மருத்துவ முறை.
இதை நபி (சல்) அவர்களும் செய்திருக்கிறார்கள், சஹாபாக்களும் செய்திருக்கிறார்கள், மக்கத்து காஃபிர்களும் செய்திருக்கிறார்கள்.

இதைப் பற்றி திர்மிதி 147 இல் வரக்கூடிய அறிவிப்பு ஒன்றில், நபி (சல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையிலேயே இதை செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த ஹதீஸை வைத்துக் கொண்டு,  இன்றைக்கும் நாம் சில சட்டங்களை எடுக்கலாம் தானே?
அவசரமாக ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகிறது என்று சொன்னால் நோன்பு இருந்தவாறே இரத்தத்தை தானம் செய்ய இந்த ஹதீஸையே ஆதாரமாக கொள்ளலாம்.

இரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் அதை நோன்பில் இருந்தவாறே செய்யலாம்.
அதற்கும், இந்த ஹதீசையே சான்றாக கொள்ளலாம்

ஆக, இரத்தம் குற்றியெடுப்பது தொடர்பான செய்தியிலிருந்து வேறு பல சட்டங்களை புரிந்து கொள்வது தான் கியாஸ்.


தஜ்ஜால் காலத்தில் கணித்து தொழுதல் :

தஜ்ஜால் தொடர்பான ஒரு அறிவிப்பையும் இந்த அடிப்படையை புரிவதற்கு சான்றாக கொள்ளலாம்.

தஜ்ஜால் எத்தனை காலம் இந்த உலகில் வாழ்வான் என்பது தொடர்பாக சஹாபாக்கள் கேட்ட போது, மொத்தம் நாற்பது நாட்கள் என்றும், அதில் ஒரு நாள் என்பது ஒரு வருடம் போன்று இருக்கும் எனவும், ஒரு நாள் ஒரு மாதம் போல இருக்கும், ஒரு நாள் ஒரு வாரம் போலவும் மீதமுள்ள நாட்கள் சாதாரண நாட்களாகவும் இருக்கும் என்று நபி (சல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அப்படியானால், அந்த நேரத்தில் நாங்கள் ஒரு நாளுக்குரிய தொழுகையை தொழுதால் போதுமா? என்று சஹாபாக்கள் கேட்க, இல்லை, கணித்து தொழுது கொள்ளுங்கள் என்று நபி (சல்) அவர்கள் விடையளிக்கிறார்கள்.

இது முஸ்லிமில் பதிவாகியிருக்கும் ஹதீஸ்.

இந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டு இன்றைக்கு பனிப்பிரதேசங்களில் நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதற்கான சட்டத்தைப் பெறுகிறோம்.
பனிப் பிரதேசங்களைப் பொறுத்தவரை, ஆறு மாதங்கள் பகலாகவும் ஆறு மாதங்கள் இரவாகவும் இருக்கும்.
அதாவது, தஜ்ஜால் வரும் போது ஒரு நாள் ஒரு வருடம் போல இருக்கும் என்று நபி (சல்) அவர்கள் சொன்ன அதே அளவுகோல் இங்கும் பொருந்தும். காரணம், ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு என்று சொல்வது ஒரு வருடம் ஒரு நாளைப் போன்று இருக்கும் என்பதை காட்டுகிறது.

ஆக, இந்த சமயங்களில் நேரத்தை கணித்து தான் தொழ வேண்டும்.
இந்த சட்டத்தை நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து தான் பெறுகிறோம்.

குர் ஆன், ஹதீஸ் என்கிற இரு அடிப்படை மட்டுமே தான் மார்க்கம்.
இவர்கள் கியாஸ் என்கிற மூன்றாவது அடிப்படையை தனியே சொன்னாலும் அது தனியே பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல, மாறாக குர் ஆனுக்கும் ஹதீஸுக்கும் உட்பட்ட ஒன்று தான் என்பதை மேற்கூறிய சான்றுகள் வாயிலாக நாம் அறிந்தோம்.
உலமாக்களை பின்பற்ற வேண்டுமா?

இதுவரை இஸ்லாத்தின் ஆதாரம் எவை என்பதையும், எவையெல்லாம் இஸ்லாத்தின் ஆதாரமாக ஆகாது என்பதையும் தொடராக கண்டு வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக, உலமாக்களை பின்பற்றுவதும் மார்க்க கடமை என்பதாக நம் சமூகத்தில் செய்யப்படும் பிரச்சாரம் சரியா என்பதையும் பார்ப்போம்.

அடிப்படையில், குர் ஆன் ஹதீஸில் மார்க்க அறிஞர்களுக்கென்று பிரத்தியேகமான முக்கியத்துவமும் சிறப்பும் இருக்கின்றதா என்று நாம் பார்க்கப் போனால், அல்லாஹ் பல்வேறு இடங்களில் மார்க்கத்தை கற்றவர்களை சிலாகித்தும் பாராட்டியும் சொல்வதை காண முடிகிறது.

உதாரணத்திற்கு சில இறை வசனங்களைப் பார்ப்போம்.

நம்பிக்கை கொண்டோர் ஒட்டு மொத்தமாகப் புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத் திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும் போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா?  (9:122)

நம்பிக்கை கொண்டீரில் அனைவருமே மார்க்கம் கற்பதற்காக சென்று விடக்கூடாது எனவும், ஒரு சமுதாயத்திலிருந்து ஒரு சிறு கூட்டம் மார்க்கம் கற்று, ஏனைய மக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் இந்த வசனத்தில் அலலஹ் சொல்கிறான்.

பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதைப் பரப்புகின்றனர். அதை இத்தூதரிடமும், (முஹம்மதிடமும்) தங்களில் அதிகாரமுள் ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் ஆய்வு செய்வோர் அதை அறிந்து கொள்வார்கள். (4:83)

ஆய்வு செய்யக்கூடியவர்கள், பாமரர்கள் அறியாத விஷயங்களை நன்கு அறிந்து கொள்பவர்களாகவும் பிரச்சனைகளின் போது விளக்கங்கள் தரக்கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று இந்த வசனத்தில் மார்க்க அறிஞர்களை அல்லாஹ் சிலாகிக்கிறான்.

நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள் (21:7)

அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.(39:9)

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (58:11)

மேற்கண்ட வசனங்களில் மார்க்க அறிஞர்கள் ஏனைய மக்களை விடவும் சிறப்புக்குரியவர்கள் என்பதை அல்லாஹ் தெள்ளத் தெளிவாக கூறுகிறான்.

எனவே, மார்க்க அறிஞர்களுக்கும் உலமாக்களுக்கும் அல்லாஹ்விடத்தில் தனி சிறப்பு இருக்கத் தான் செய்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில், மார்க்க அறிஞர்கள் என்றால் யார்?
என்ன அளவுகோலை மார்க்க அறிஞர் என்று ஒருவரைக் குறிப்பிடுவதற்கு நாம் வைத்திருக்கிறோம்?

இதில் தான் பிரச்சனையே !

மார்க்க அறிஞர் என்றால் அவர் மார்க்கத்தை அறிந்திருக்க வேண்டும்.
மார்க்க அடிப்படையில் விளக்கங்கள் கொடுக்க தெரிய வேண்டும்.
ஆதாரங்களை குர் ஆனிலும் ஹதீஸிலும் இருந்து காட்டத் தெரிய வேண்டும்.
இது தான் மார்க்க அறிஞர் என்பதற்கான அளவுகோல்.

நீங்கள் ஒரு மார்க்க அறிஞரிடம் மார்க்க சந்தேகமொன்றை கேட்கிறீர்கள்.
அவர் ஒரு பதிலை சொல்கிறார்.
அதற்கு என்ன ஆதாரம் என்று திருப்பிக் கேட்கும் போது, என்னிடமே ஆதாரம் கேட்கிறாயா? நான் எதை சொல்கிறேனோ அதை கேட்டு விட்டுப் போ, என்று அவர் பதில் சொன்னால் இப்படிப்பட்டவர் மார்க்க அறிஞராக இருக்க முடியுமா?
இன்றைய சமூக அமைப்பில் நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்க்கப்போனால், பெரிய ஜுப்பாவையும் நீண்ட தலைப்பாகையையும் வைத்து விட்டு வந்தால் அவரை நாம் மார்க்க அறிஞர் என்கிறோம், உலமா என்கிறோம், மவ்லவி என்று மதிக்கிறோம்.
அவர், நாம் கேட்கும் கேள்விகளுக்கு மார்க்கத்திலிருந்து விடையளிக்கிறாரா அல்லது தமது சுய கருத்தை சொல்கிறாரா என்பதையெல்லாம் நாம் கவனிப்பது கிடையாது.
இது தானே நிலைமை?

பொது இடத்தில் ஜுபாவையும் தலைப்பாகையையும் அணிந்து கொண்டு ஒருவர் வந்து விட்டால், சுற்றியிருப்பவர்களெல்லாம் எழுந்து நின்று மதிப்பு கொடுக்கிறார்கள், பேருந்தில் எழுந்து அவர் அமர்வதற்கு இருக்கையை கொடுக்கிறார்கள்.
ஆக, நம் மனதிலெல்லாம் மார்க்க அறிஞர் என்பதற்கான அளவுகோலாக நாம் கொண்டிருப்பதெல்லாம் வெறும் வெளித் தோற்றத்தை தானே தவிர அவருக்கு மார்க்க ஞானம் இருக்கின்றதா? குர் ஆன் ஹதீஸை அடிப்படையாக கொண்டு ஃபத்வாக்கள் கொடுக்கிறாரா என்பதையெல்லாம் நாம் அலசிப் பார்ப்பது கிடையாது.

இன்னும் சொல்லப்போனால், வெளித்தோற்றத்தை காட்டி ஏமாற்றுகின்ற உலமாக்கள் என்று அறியப்படுகின்றவர்களையும் நாம் குறை சொல்வதற்கில்லை.
அவர்களுக்கு தெரிந்திருந்தால் தானே அவர்களும் மார்க்க விளக்கங்களை அளிப்பார்கள்? சட்டியிலிருந்தால் தானே அகப்பையில் வரும்?

இவர்களெல்லாம் ஏழு வருடம், 12 வருடம் என மதரசாக்களில் ஓதினார்களே, அந்த மதரசா கல்வியின் தரமே இதற்கு சான்று பகரும்.

மதரசாக்களில் பொதுவாக யாரையெல்லாம் சேர்க்கின்றார்கள்?
பள்ளிக்கூடத்தில் சரிவர படிக்காமல் மக்காக இருப்பவனை மதரசாக்களில் சேர்த்து விடுகின்றனர்.
அல்லது, பெற்றோர் பேச்சை கேட்காமல், ஊதாரித்தனமாக சுற்றித்திரியும் தறுதலைகளை மதரசாக்களில் சேர்க்கின்றனர்.
இவர்கள் மார்க்க கல்வி கற்று வெளியே வந்தால் உருப்படுமா?

அதோடு, மதரசாக்களிலுள்ள கல்வி முறையை எடுத்துக் கொண்டாலும், எவ்வித பயனுமற்ற வகையிலேயே பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்.
எந்த வகுப்பிலும் ஃபெயில் என்பதே கிடையாது.
நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுத்தவனாக இருந்தாலும், படிக்காமல் மக்காக இருந்தவனாக இருந்தாலும் சரி, அனைவருமே அடுத்த ஆண்டில் நுழைந்து விடலாம்.
குர் ஆனை சரளமாக ஓதத் தெரியாமல் மவ்லவி பட்டம் பெற்றவர்களெல்லாம் இந்த சமூகத்தில் உண்டு.

சரி, இவர்கள் வகுத்திருக்கும் பாட திட்டத்தை பார்க்கப்போனால் 500 ஆண்டுகள் அதரப் பழைய பாடப்புத்தகங்களை வைத்திருப்பார்கள்.

குர் ஆன், ஹதீஸை மாற்ற முடியாது, சரி. ஆனால், ஏனைய சட்டத் திட்டங்களை, சமூகப் பார்வை கொண்ட விஷயங்கள், கணக்குப் பாடம் தொடர்பானவை, இலக்கண நூற்கள் போன்ற நூற்களையெல்லாம் இன்றைய கால சூழலுக்கு ஏற்ப தயார் செய்ய வேண்டுமா இல்லையா?
வானியல் சாஸ்திரம் தொடர்பாக இன்றைய போலி சுன்னத் ஜமாஅத்தினரின் மதரசாக்களில் சென்று பார்த்தால், 500 ஆண்டுகள் முன்பாக, வானத்தில் சூரியனும் சந்திரனும் ஒட்ட வைக்கப்பட்டிருக்கின்றன என்று நம்பிக் கொண்டிருந்தார்களே, அதை இப்போதும் எழுதி வைத்திருப்பார்கள்.

அதை தான் மதரசாக்களில் கல்வி கற்க வருபவர்களுக்கு இன்றளவும் பாடமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்று இவர்கள் மதரசாவில் கற்கும் நூற்களை ஒரு அறிஞரிடம் காண்பித்து விளக்கம் கேட்டால் இவையெல்லாம் கற்கால் நூற்களா என்று கேட்பார் என்கிற அளவிற்கு பழமையானதையும், காலாவதியானதையும் தான் பாட நூற்களாக வைத்திருக்கின்றனர்.

இப்படியான கல்வி சூழலில் கல்வி கற்று மவ்லவி பட்டம் பெறுபவர்கள் உருப்படுவார்களா? சமுதாயத்திற்கு இவர்களால் எந்த நன்மையானது பயக்குமா?
என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சரி, பொது நூற்கள் தான் இப்படியென்று பார்த்தால், குர் ஆன் ஹதீஸை கூட இவர்கள் மிகவும் மேம்போக்காகவும், எந்த பயனுமற்ற வகையிலும் தான் கற்கின்றனர்.

த‌ஃப்சீருல் ஜைலானி என்று ஒரு நூலை வைத்து படிக்கிறார்கள். அது போல, பைலாவி எனும் நூல், இதிலெல்லாம் முழு குர் ஆனுக்கும் விளக்கங்கள் இருக்கின்றனவா? இல்லை.
குர் ஆனின் உயர்ந்த நடைகளைப் பற்றியும் குர் ஆன் மனித குலத்திற்கு போதிக்கின்ற எல்லா சட்ட திட்டங்கள் பற்றியும் பாடங்கள் இருக்கின்றனவா என்று தேடிப் பார்த்தால் இருக்கவே இருக்காது.
பெயரளவிற்கு 8, 10 இறை வசனங்களுக்கு விளக்கம் என்கிற பெயரில் பக்கம் பக்கமாக பாடம் நடத்துவார்கள், அப்படியே ஒரு ஆண்டு ஓடி விடும்.

புஹாரி, முஸ்லிம் ஹதீஸ் தொடர்பாக பாடம் நடத்துவார்கள், எண்ணி 50, 60 ஹதீஸ்களை எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு விளக்கம் கொடுப்பார்கள், இது ஒரு வருடத்திற்கான பாட திட்டமாக வந்து விடும்.
இப்படியே ஏழு வருடத்தையும் ஓட்டுவது தான் இவர்களது மதரசாக்களில் நடக்கும் அவலம்.
ஹதீஸ் கலை பற்றி இவர்கள் பாடத்தில் இருக்கிறதா?
இன்று அறிவிப்பாளரை அலசும் ஆய்வில் நாம் ஈடுபடுகிறோமே, இவையெல்லாம் இவர்கள் கல்வித் திட்டத்தில் இருக்கின்றதா?
பலமான ஹதீஸ், பலகீனமான ஹதீஸ் என்றெல்லாம் தரம்பிரிக்கும் கல்வியை இவர்கள் கற்கிறார்களா?
எதுவுமே இல்லை !

முழு குர் ஆனையும், முழுமையாக ஒரு புஹாரி நூலையும் கூட சிறந்த முறையில் கற்றுத் தேர்ந்தவர்களாக இவர்கள் மவ்லவி பட்டம் பெறுவதே கிடையாது.

இது தான் இன்றைய மதரசாக்கல்வியின் நிலையாக இருக்கும் போது இவர்கள் எப்படி மார்க்க அறிஞர்களாக ஆக முடியும்?
இவர்கள் எப்படி குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஃபத்வாக்கள் வழங்க முடியும்?

ஆலிம்கள் என்றால் யார்? ஆலிம்களின் தகுதிகள் என்னன்ன? என்பதை அல்லாஹ் தமது திருமறையில் கூறுகிறான்

இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன.   அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். (29:49).

கல்வி கற்றோரது உள்ளத்தில் இந்த குர் ஆனின் போதனைகள் இருப்பதாக அல்லாஹ் சொல்கிறான்.
எவரிடம் இந்த போதனை தன் உள்ளத்தில் இல்லையோ அவர் மார்க்க அறிஞராக மாட்டார் என்பது இந்த வசனம் கூறுகின்ற அளவுகோல்.
அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்கு தகுதியானவன் என்பதையும், அவனுக்கு யாரையும் எதையும் இணையாக்க கருதக்கூடாது என்கிற அடிப்படையையும் யார் மனதில் நிறுத்தவில்லையோ அவர் எத்தனை பெரிய அறிவாளி என்று பெயரெடுத்தவராக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் அவருக்கு எந்த மதிப்பும் இல்லை, அவர் அல்லாஹ்வின் பார்வையில் ஆலிமும் இல்லை என்று இந்த வசனம் சொல்லும் போது, 
நாமோ தர்காவில் அடக்கப்பட்ட இறந்து போன மனிதர்களிடம் கையேந்துபவர்களையெல்லாம் ஆலிம் என்றும் மவ்லவி என்றும் ஹசரத் என்றும் அழைக்கிறொமே, இது என்ன வகையில் நியாயம்? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதே போன்று, 

தனிமையில் இருக்கும் போது தமது இறைவனை அஞ்சி, தொழுகையை நிலை நாட்டியோரையே நீர் எச்சரிக்கை செய்வீர். பரிசுத்தமாக நடப்பவர் தமக்காகவே பரிசுத்தமாகிக் கொள்கிறார். அல்லாஹ்விடமே திரும்புதல் உள்ளது. (35:18)

எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறாரோ அவரே அறிந்தவர் என்பதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

ஆனால், இன்று உலமாக்கள் என்று சொல்வோர் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்களா?
மத்ஹபில் அல்லாஹ்வையும் குர் ஆனையும் இழிவுப்படுத்தும் வகையில் கொட்டிக் கிடக்கும் ஏராளமான சட்டதிட்டங்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்குவோராக தான் இவர்கள் இருக்கிறார்கள் எனும் போது இவர்கள் அலலஹ்வுக்கா அஞ்சுகிறார்கள்?
இல்லை, இவர்கள் அஞ்சுவது மனிதர்களுக்கே !

மன்னர்களின் ஆட்சிக்கு அடிபணிந்து இந்தியாவில் ஜும்மா இல்லை, சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் ஜும்மா இல்லை என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்களே, இவர்களெல்லாம் அந்தந்த மன்னர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டும் அவர்களுக்கு அஞ்சியும் தான் வாழ்ந்தார்களே தவிர அல்லாஹ்வுக்கு அஞ்சவில்லை.
இன்னும், கப்ருக்கு அஞ்சுகிறார்கள், மத்ஹப் நூற்கள் என்கிற பெயரில் மனிதர்கள் எழுதி வைத்த சட்டங்களுக்கு அஞ்சுகிறார்கள், தட்டு தாயத்து, பேய் பிசாசு என இவைகளுக்கு தான் அஞ்சுகிறார்களே அல்லாமல், படைத்த இறைவனுக்கு மட்டும் அஞ்சுகிற கூட்டமாக இவர்கள் இருக்கவே இல்லை.

அந்த அடிப்படையில், இவர்கள் மார்க்க அறிஞராக நிச்சயம் கருதப்பட மாட்டார்கள்.

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் சொல்லும் போது,

அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர். (2:75)

என்று சஹாபாக்களைப் பார்த்து அல்லாஹ் கேட்கச் சொல்கிறான்.
சத்தியம் இது தான் என்று அறிந்த பிறகும் அதை திரித்தும் மறைத்தும் அதற்கு எதிராய் செயல்படுகிறார்களே, அவர்கள் தான் அல்லாஹ்விடத்தில் மகா கெட்டவர்கள்.
இன்றைய உலமாக்களின் நிலை இதனோடு ஒத்துப் போகின்றதா இல்லையா?

இவர்கள் அல்லாஹ்வை புரிந்திருக்கிறார்களா? புரிய வேண்டிய விதத்தில் புரிந்திருக்கிறார்களா? அல்லாஹ்வின் சிஃபத் என்றால் என்ன, மனிதனின் தகுதி என்றால் என்ன, அல்லாஹ்வின் தகுதியை மனிதனின் தகுதியோடு ஒப்பிட முடியுமா? என்பன போன்ற அடிப்படைகளிலெல்லாம் எந்தவொரு ஞானமும் அற்றவர்களாய் இருக்கும் இவர்கள் எப்படி அறிஞர்கள் ஆவார்கள்?
பெயருக்குப் பின்னால் மதனி என்றும், பாகவி என்றும் உலவி என்றும் பட்டம் இட்டுக் கொள்வதாலோ, தலைப்பாகையையும் ஆளுயர ஜுப்பாக்களை அணிந்து நம்மிலிருந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருவதாலோ மார்க்க அறிஞர் ஆகி விட மாட்டார்.
அல்லாஹ்வைப் பற்றிய சரியான புரிதலும், அவனுக்கு மட்டுமே அஞ்சக்கூடிய ஈமானும் இருக்க வேண்டும்.

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் சொல்லும் போது, அன்றைய யூதர்கள், பாமரர்களை இழிவாய் கருதியதைப் பற்றி சொல்கிறான்

நம்பி, ஒரு குவியலையே ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில்  உள்ளனர். நீர் நம்பி ஒரு தங்கக் காசை ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். ''எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்தின் விஷயத்தில் எங்கள் மீது எந்தப் பாவமும் ஏற்படாது'' என்று அவர்கள் கூறுவதே இதற்குக் காரணம். அல்லாஹ்வின் பெயரால் அறிந்து கொண்டே அவர்கள் பொய்யை இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். (3:75)

மக்களை இழிவாய் கருதுவது யூதர்களின் குணம், அல்லாஹ்விடத்தில் கடுங்குற்றமாக கருதப்படும் குணம்.

இதை இன்றைய உலமாக்கள் என்று சொல்வோர் செய்கிறார்களா இல்லையா?
தங்களிடம் எவராவது எதிர் கேள்வியொன்றினை கேட்டு விட்டால் உடனே அவருக்கு கோபம் வந்து விடுகிறது.
நான் ஒரு ஆலிம், நீ சாதாரண மனிதன், என்னிடம் நீ கேள்வி கேட்கிறாயா? என்பதாக இவர்கள் நடந்து கொள்வது அல்லாஹ் ஐந்த வசனத்தில் யூதர்களின் குணமாக சொன்னதோடு அப்படியே பொருந்திப் போவதை காணலாம்.

இன்னும், பணம் படைத்தோர் என்றால் அவருக்கென்று தனி ஃபத்வா, ஏழைக்கு தனி ஃபத்வா என்பதாக மார்க்க ஃபத்வாக்களை வியாபாரம் ஆக்குவதோடு, அதிலும் ஏழை பணக்காரன் என்கிற பாகுபாட்டினை காட்டுவதை இன்றும் நம் சமூகம் காண்கிற அவலமாகும்.

மார்க்கத்தை கேலிக்கூத்தாக்கியும், இஸ்லாம் எதையெல்லாம் தடுத்திருக்கிறதோ அதிலெல்லம் தமது பங்களிப்பை செய்தும் மார்க்கத்தை கேலிக் கூத்தாக்குவோர் எப்படி மார்க்க அறிஞராக இருக்க முடியும்?
வட்டிக் கடை திறப்பு விழாவுக்கு சென்று அல் ஃபாத்திஹா ஓதுகிறான்.
பெண் வீட்டாரிடமிருந்து வரதட்சணையை வாங்கி மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்து விட்டு அந்த மேடையில் ஃபாத்திஹா ஓதுகிறான்.
இன்னும் ஏராளமான மார்க்க விரோத காரியங்களில் ஈடுபட்டால் இவரை ஆலிம் என்று இஸ்லாம் ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது !

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக