இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!
(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)
நாள் : 24
ஹதீஸ்களைப் புரிந்து கொள்வது எப்படி? (தொடர்ச்சி)
எந்த அமைப்பாக இருந்தாலும் சில ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானது என்றும் வேறு சில ஹதீஸ்களை பலகீனமானது எனவும் சொல்லத்தான் செய்கின்றனர்.
இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை அறிவதற்கு ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாற்றினை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாறு :
அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்ட குர் ஆன் வசனங்களைப் பொறுத்தவரை அதை பாதுகாக்கும் பணிகளில் நபி (சல்) அவர்களே நேரடியாக ஈடுபட்டிருந்தனர்.
வஹீ செய்தி வரும் போதெல்லாம் அதை மனப்பாடம் செய்து கொள்ளும் பொறுப்பினை பல சஹாபாக்களிடம் ஒப்படைந்திருந்தார்கள்.
அதே போன்று, வருகின்ற வஹீ செய்திகளை எழுதி வைக்கும்படியும் சில சஹாபாக்களிடம் கூறியிருந்தார்கள்.
இது தான் நபி (சல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அனைவரிடமிருந்த பிரதிகளும் ஒன்றுபடுத்தப்பட்டு, ஒப்பீடு செய்யப்பட்டு இறுதியில் குர் ஆனாக தொகுக்கப்பட்டது.
ஆக, குர் ஆனானது உள்ளத்திலும் எழுத்திலும் பாதுகாக்கப்பட்டிருந்தது.
அதே சமயம், ஹதீஸ்களைப் பொறுத்தவரை இத்தகைய பாதுகாப்பு முறைகளை நபி (சல்) அவர்கள், அவர்கள் வாழும் காலத்தில் செய்து கொள்ளவில்லை.
அதை மனப்பாடம் செய்து கொள்ளச் சொல்லி எவரிடமும் சொல்லவில்லாஇ, எழுதி வைக்க சொல்லி கட்டளையேதும் பிறப்பிக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால், குர் ஆனோடு ஹதீஸ் கலந்து விடக் கூடாது என்கிற காரணத்தை சுட்டிக் காட்டி, ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்ளாதீர்கள் என்றே கட்டளையிட்டார்கள்.
(பார்க்க புஹாரி 7702).
செய்திகளை வாய் வழியாக அறிவித்துக் கொள்ள அனுமதித்த நபி (சல்) அவர்கள், அவற்றை எழுதிக் கொள்ள அனுமதிக்கவில்லை. காரணம், குர் ஆனை எழுதிக்கொண்டிருந்த சஹாபாக்கள் ஹதீஸ்களையும் எழுதினால் இறுதியில் எது குர் ஆன் எது ஹதீஸ் என்று குழப்பம் ஏற்பட்டு விடும் என்பதே அதற்கு காரணம்.
அதே சமயம், குர் ஆனை எழுதும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாத சஹாபி ஒருவருக்கு ஒரு ஹதீஸை எழுதிக் கொடுக்க அனுமதித்தும் இருக்கிறார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது அவர்கள் மக்கா மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, 'அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை)விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) இறைநம்பிக்கையாளர்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.
இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கிறதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெறலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம்" என்று கூறினார்கள். அப்பாஸ்(ரலி), 'இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம்" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இத்கிர் புல்லைத் தவிரத்தான்" என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ்(ரலி) என்பவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்" என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்" என்று உத்தரவிட்டார்கள். (புஹாரி 2434)
மற்றொரு ஹதீஸில்,
நபி (சல்) அவர்களிடம் எந்த செய்தியை நான் கேட்டாலும் அதை எழுதிக் கொள்வேன் என்பதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் சொன்ன செய்தி அபுதாவுத் 3646 இல் பதிவாகியுள்ளது.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள் எதையெல்லாம் கேட்டார்களோ அதை மட்டும் எழுதிக் கொண்டார்கள், அவர் கேட்காத எத்தனையோ ஹதீஸ்கள் இருக்கும், அவற்றையெல்லாம் அவர் எழுதிக் கொள்ளவில்லை.
அதே போன்று, அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
என்னை விட அதிகமாக வேறு எவருமே ஹதீஸ்களை அறிவித்ததில்லை என்கிறார்கள்.
இது புஹாரி 113 இல் பதிவாகியிருக்கிறது.
ஆக, குர் ஆன் என்பது நபி (சல்) அவர்களின் காலத்திலேயே நெறிப்படுத்தப்பட்டு நிறைவுபடுத்தப்பட்டு விட்டது.
அதில் எதுவும் சேர்க்கப்படவும் இல்லை, குறைக்கப்படவும் இல்லை.
அதே நேரம், ஹதீஸ்களைப் பொறுத்தவரை அப்துல்லாஹ் இப்னு அம்ர் போன்ற ஒரு சில சஹாபாக்கள் எழுதிக் கொண்ட ஒரு சில ஹதிஸ்களைத் தவிர்த்து மீதமுள்ள அனைத்துமே வாய் வழியாக வந்தவை தான்.
இதன் காரணமாகவே, பிற்காலத்தில் வந்த அறிஞர்கள், வாய் வழியாக கிடைக்கப்பெறும் ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற முடிவுக்கு வருகின்றனர்.
அதில் முதலாவதாக இந்த திட்டத்தை செயல்படுத்த துவங்கியவர் இப்னு ஜுரைஜ் எனும் அறிஞர்.
ஹிஜ்ரி 150 இல் மரணித்ததாக வரலாற்றில் பதிவாகியிருக்கும் இந்த அறிஞர் தான் ஹதீஸ்களை எழுத்தில் தொகுக்கும் பணியினை துவக்கினார்.
ஆனால், அந்தப் பணிக்காக இவர் எங்கும் பயணம் செய்து செய்திகளை சேகரிக்கவில்லை. மாறாக இவர் வாழ்ந்த மக்கா நகரத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் என்னன்ன செய்திகள் நபி (சல்) அவர்கள் சொன்னதாக வியாபித்திருந்ததோ அவற்றை மட்டுமே எழுதிக் கொண்டார்.
அதில் கூட நபி (சல்) அவர்கள் சொன்ன விஷயங்களை மட்டும் எழுதி வைத்தாரா என்றால் இல்லை.
நபி (சல்) அவர்கள் சொன்னது, சஹாபாக்கள் தங்கள் சுய கருத்துக்களாக சொன்னவை என அனைத்தையும் கலந்தே எழுதினார்.
ஆக, குறைந்த அளவிற்கே என்றாலும், முதன்முதலாய் ஹதீஸ்களை எழுத்தில் தொகுக்கும் பணியை செய்தது இந்த இப்னு ஜுரைஜ் என்பவர் தான்.
அதே போன்று, ஹிஜ்ரி 153 இல் மஃமர் பின் ராஷித் என்கிற அறிஞர், ஹிஜ்ரி 156 இல் சயித் அபி அவ்பா, ஹிஜ்ரி 160 இல் ஷுஃபா, ஹிஜ்ரி 163 இல் சுஃப்யான் அல் தவ்ரி, ஹிஜ்ரி 179 இல் மரணித்த மாலிக் இமாம், ஹிஜ்ரி 188 இல் ஜரீர், ஹுசைன் போன்ற அறிஞர்கள், இப்னு ஜுரைஜை ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்ளும் பணியை இப்னு ஜுரைஜ்ஜிற்கு பிறகு தொடர்ந்து செய்து வந்தவர்களாவர்.
ஆனால், அனைவருமே ஹதீஸ்களை சேகரிக்கும் பொருட்டு எந்த பயணத்தையும் மேற்கொள்ளவில்லை.
சஹாபாக்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் சென்று செய்திகளை சேகரிக்காமல், அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் நபி (சல்) அவர்கள் சொன்னவை என்று எவையெல்லாம் அவர்கள் காதுகளுக்கு எட்டுகின்றதோ அவற்றை மட்டுமே எழுதி வைப்பவர்களாக இருந்தனர்.
ஆனால், இவற்றில் பெரும்பான்மையான நூற்கள் இன்று இல்லை. காலப்போக்கில் அழிந்தே போயின.
அவை இன்று இருந்திருந்தால், அவை மிகவும் வலுவான ஹதீஸ்களாக நமக்குக் கிடைத்திருக்கும்.
காரணம், அதை தொகுத்த அனைவருமே நபி (சல்) அவர்களது காலத்திற்கு மிகவும் நெருக்கமாக வாழ்ந்தவர்கள் என்கிற வகையில் பல அறிவிப்பாளர்கள் கொண்ட சங்கிலித் தொடர் அவர்கள் தொகுத்த ஹதீஸ்களுக்கு இருக்காது.
ஆனால், அத்தகைய ஹதீஸ்கள் அனைத்தும் இன்று அழிந்து விட்டன.
இதைத் தொடர்ந்து, ஹிஜ்ரி 200 க்குப் பிறகு தொடர்ச்சியாக வந்த அறிஞர்கள் பலரும் தொகுத்த ஹதீஸ் நூற்கள் இன்றைக்கும் காணக் கிடைக்கின்றன.
ஹிஜ்ரி 200 இல் வந்தவர்கள் இமாம் ஷாஃபி. 204 இல் தயாலிஸ் இமாம், 211 இல் அறிஞர் அப்துர் ரசாக் , அலி, இப்னு அபி ஷைபா, அஹமத், தாரமி என ஏராளமான அறிஞர்கள் ஹிஜ்ரி 200க்குப் பிறகு தோன்றியவர்கள்.
இவர்களோ, ஹதீஸ்களை தொகுப்பதற்காகவே பலகட்ட பயணங்களை மேற்கொண்டு சஹாபக்கள் பல்கிப்பெருகியிருந்த உலகின் அதிகமான பாகங்களுக்கு சென்று ஹதீஸ்களை சேகரிக்கும் மிகப்பெரிய முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆக, ஹிஜ்ரி 200க்கு முன் தொகுக்கப்பட்ட ஹதீஸ்களானது குறைந்த அளவிற்கே இருந்தன.
அவரவர் வாழ்ந்த பகுதிகளில் மக்கள் பரவலாக பேசிக் கொண்ட செய்திகள் மட்டுமே பதியப்பட்டன.
அத்தகைய நூற்களில் அதிகமானவை இன்று அழிந்தும் போயின.
ஆனால், ஹிஜ்ரி 200க்குப் பிறகோ, ஹதீஸ்களை தொகுக்கின்ற பணியோ இன்னும் விரிவுப்படுத்தப்பட்டது.
பல நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்டன. அவை இன்றளவும் காணக்கிடைக்கவும் செய்கின்றன.
இந்த வரிசையில் ஹிஜ்ரி 256இல் வந்தவர் தான் இமாம் புஹாரி.
இமாம் அஹமத் இப்னு ஹம்பலின் மாணவரான இவர் தான், அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் ஆதாரப்பூர்வமானவை எவை, பலகீனமானவை எவை என்று தரம்பிரித்து, ஆதாரப்பூர்வமானவற்றை மட்டும் தான் பதிய வேண்டும் என்கிற முடிவினை எடுக்கிறார்.
அதே போன்று, ஹிஜ்ரி 261 முஸ்லிம் இமாம், ஹிஜ்ரி 75 இல் இப்னு மாஜா, 279 இல் திர்மிதி, 303 இல் பஸ்ஸார், 313 இல் இப்னு குசைமா, 354இல் இப்னு ஹிப்பான், 385 இல் தப்ரானி, 405இல் தாரகுத்னி, 430 இல் ஹாகிம், 488 இல் பைஹகி என நபி (சல்) அவர்களின் காலத்திற்கும் 100 வருடங்கள் கழித்து துவங்கப்பட்ட ஹதீஸ்களை தொகுத்தெழுதும் இந்த பணியானது கிட்டத்தட்ட ஹிஜ்ரி 550 ஆண்டு வரை நீடித்தது.
இந்த காலத்தில் தான் உண்மையான ஹதீஸ்களுடன் பல்வேறு பொய்களும் நபியின் பெயரால் அதிகமதிகமாக கட்டவிழ்த்து விடப்பட்டன.
நபி சொன்னதாக பொய்யாக அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களில் சில
இஸ்லாத்தின் எதிரிகள், எப்படியாவது நபி (சல்) அவர்கள் மீது களங்கம் சுமத்தி விட வேண்டும் என்கிற நோக்கத்தில், நபி (சல்) அவர்கள் சொல்லாததையெல்லாம் சொன்னதாக பொய்களை அவிழ்த்து விடத் துவங்கினர்.
ஹதீஸ்களை பதிவு செய்த மேற்கூறப்பட்ட பல அறிஞர்களின் நூற்களில் இவைகளும் பதியப்பட்டிருக்கின்ற அளவிற்கு, உண்மையோடு பொய்கள் சர்வசாதாராணமாக கலக்கப்பட்டன.
ஆனால், பிற்காலத்தில் வந்த அறிஞர்கள் அவற்றை பொய்யென உறுதி செய்து தூக்கி வீசினர்.
அவ்வாறு நபியின் பெயரால் பொய்யாக கூறப்பட்ட ஹதீஸ்கள் சிலவற்றை உதாரணத்திற்கு இங்கே காணலாம்.
நபி (சல்) அவர்கள் கூறினார்களாம் :
கத்திரிக்காய்யை உண்பது எல்லா நோய்க்கும் நிவாரணமளிக்கும்.
பருப்பை சாப்பிடுவது பரக்கத்தாகும்.எழுபது நபிமார்கள் இதை புனிதம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அரிசி மட்டும் மனிதனாக இருந்தால் அவர் தான் உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட மனிதராக இருப்பார்.
அனைவரும் தர்மம் செய்ய வேண்டும். தர்மம் செய்ய செல்வம் இல்லையென்றால் யகூதிகளையும் நசாராக்களையும் சபிக்க வேண்டும், அவ்வாறு சபித்தால் அவர் தர்மம் செய்த கூலியை பெற்றுக் கொள்வார்.
அழகான முகத்தைப் பார்ப்பது இபாதத்
நீல கண்களை கொண்டிருப்பது பரகத், அது ஒரு பாக்கியம்.
மீன் சாப்பிடாதீர்கள், அது உடலை பலகீனமாக்கி விடும்.
மலம் கழிக்கும் இடத்தில் (கக்கூஸ்) உணவு பொருள் ஏதும் விழுந்து விட்டால் அதை எடுத்து கழுகி விட்டு சாப்பிட வேண்டும், அப்படி செய்தால் நமது எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும்.
உணவில் உப்பி சேர்ப்பதை தவிர்க்காதீர்கள். 70 நோய்க்கு நிவாரணம் உப்பில் இருக்கிறது.
மாதுளம்பழம் சாப்பிடும் போது அடுத்தவருக்கு கொடுக்காதீர்கள், ஏனெனில், அதன் ஒரு விதையானது சொர்க்கத்தில் இருந்து வந்ததாகும்.
பெண்களிடம் எல்லா விஷயங்களுக்கும் ஆலோசனை செய்யுங்கள், ஆனால் முடிவெடுக்கும் போது அவர்களது கருத்துக்கு நேர் மாற்றமாக முடிவெடுங்கள்.
மூன்று காரியங்கள் பார்வையை கூர்மைப்படுத்தும். பசுமையாக பகுதிகளைப் பார்ப்பது, ஓடுகிற ஆற்றைப் பார்ப்பது, அழகான முகத்தைப் பார்ப்பது.
இது தவிர, நூஹ் இப்னு அபி மரியம் என்கிற ஒருவர் நபி (சல்) அவர்கள் சொன்னார்கள் என்பதாக குர் ஆனிலுள்ள அத்தியாயங்களின் சிறப்புக்கள் என்று கூறி கட்டுரை எழுதி வந்தார்.
சிறப்பு என்றால், அனைத்தும் வாயில் வந்ததை விட்டடிக்கும் பொய்களாக தான் இருந்தன.
இந்த அத்தியாயத்தை ஓதினால் அந்த நன்மை, இதை ஓதினால் இன்ன நன்மை என்பதாக இவரே சுயமாக இட்டுக்கட்டி எழுதத் துவங்கினார்.
சந்தேகம் கொண்ட மக்கள், அவரை அழைத்து விசாரித்த போது தான் உண்மை வெளிப்பட்டது.
அதாவது, மக்கள் அனைவரும் குர் ஆனை விட்டும் வெகுதூரம் சென்று விட்டார்கள், குர் ஆனை மறந்த வாழ்க்கை வாழ்வதால் அவர்களை குர் ஆனின் பக்கம் திருப்புவதற்காக நானே தான் இதை சுயமாக எழுதினேன் என்று ஒப்புதல் அளிக்கிறார் அவர்.
ஆக, இந்த நோக்கத்திற்காகவும் பொய்கள் கூறப்பட்டன.
மேலும்,
ஆஷுரா தினம் அன்று சுருமா இடுவதும் அலங்கரித்துக் கொள்வதும் சுன்னத்தாகும்.
நகம் வெட்டும் போது வலது கை ஆட்காட்டி விரலில் துவங்கி வலது பக்கம் சென்று, பின் இடது கை சுண்டு விரலில் துவங்கி அதே வரிசையில் கடைசியாய் வலது கை கட்டை விரலில் முடிக்க வேண்டும். இது சுன்னத்.
தலைப்பாகை கட்டிக் கொண்டு தொழுவது 25 மடங்கு சிறப்பு வாய்ந்தது.
ஒரு மாணவர் தமது ஆசிரியருக்கு முன்னால் அமரும் போது அல்லாஹ் சொர்க்கத்தின் 70 வாயில்களை திறந்து விடுகிறான்.
பின், அந்த மாணவர் (பாடம் முடித்து) அங்கிருந்து எழுந்திருக்கும் போது அவரது அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு அன்று பிறந்த பாலகனைப் போல் அவன் ஆகிறான்.
சொர்க்கத்திலும் உலமாக்களின் தேவை பொது மக்களுக்கு இருக்கின்றது.
அதென்ன தேவை?
அல்லாஹ் மக்களை அழைத்து, உங்களுக்கு என்ன வேண்டும், என்னிடம் கேளுங்கள் என்பானாம்.
பதில் சொல்லத் தெரியாத அம்மக்கள் உடனே உலமாவிடம் வந்து ஆலோசனை கேட்பார்களாம். உலமாவும் இதை9 கேளுங்கள், அதை கேளுங்கள் என்று ஆலோசனை கூறுவாராம்.
இதற்காக, உலமாவின் தேவை சொர்க்கத்திலும் இருக்கிறது.
ஒரு ஆலிமும் அவரது மாணவரும் ஒரு கிராமத்தை கடந்து சென்றால், அந்த கிராமத்தில் இருக்கும் கப்ருஸ்தானில் நடைபெறும் கப்ர் வேதனையை அல்லாஹ் 40 நாற்களுக்கு நிறுத்தி வைப்பான்.
உலமாக்களை சந்திப்பது நபியை சந்திப்பதற்கு சமம்.
உலமாவுக்கு முசாஃபஹா செய்வது நபிக்கே முசாஃபஹா செய்வதற்கு சமம்.
உலமாவின் பேனா மை, அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்த தியாகியின் இரத்தத்தை விட சிறப்புக்குரியது.
மேற்கூறப்பட்டவைகள் அனைத்தும் நபி (சல்) அவர்கள் சொன்னதாக அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள் என்று சொன்னால் நம்மால் நம்ப முடிகிறதா?
அத்தனையும் பொய்களும் கட்டுக்கதைகளும் அறிவுக்கு சற்றும் சம்மந்தமில்லாத ஒருவரது உளரலாகவும் இருப்பதிலேயே இதற்கும் நபி (சல்) அவர்களுக்கும் எந்த சம்மந்தமமுமிருக்காது என்பதை புரியலாம்.
இதை புரிந்து அன்றைய காலத்திலேயே இவைகளெல்லாம் தூக்கி வீசப்பட்டு விட்டன.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு சுய ஆதாயத்தை மனதில் வைத்தே இவற்ற்றை அறிவித்திருக்கிறார்.
கத்திரிக்காய் வியாபாரம் செய்பவனுக்கு அவனது வியாபாரம் அமோகமாக நடைபெற வேஎண்டுமென்றால், இது எல்லா நோய்க்கும் நிவாரணம் என்று ரசூலுல்லாஹ் சொன்னார்கள் என்று கதையளப்பான்.
நபியின் பெயரை பயன்படுத்தி விட்டால் அனைவரும் எதிர் கேள்வி கேட்காமல் வாங்கிச் செல்வார்கள் என்பது அவனது கணிப்பு.
அதே போல், மனைவியிடம் சண்டையிட்ட ஒருவனோ, மனைவியுடன் பொருந்திப் போகாத ஒருவனோ தான், மனைவியிடம் ஆலோசனை கேட்டு விட்டு அதற்கு மாற்றமான முடிவை எடுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.
அது போல், உலமாக்கள், தங்களை இந்த சமுதாயம் மதிக்க வேண்டும் என்பதற்காக, உலமாக்களை சிலாகித்து நபியே சொல்லி விட்டார்கள், எங்களை சந்தித்தால் நபியை சந்தித்ததற்கு சமம், எங்களிடம் பாடம் கற்றால் அல்லாஹ் அவரது பாவத்தை கூட மன்னிப்பான் என்றெல்லாம் கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டனர்.
இப்படியாக, நபி (சல்) அவர்கள் சொன்ன உண்மை செய்திகள் பதிவான அதே காலகட்டத்தில் இப்படியான கட்டுக்கதைகளும் நுழைந்தன, ஒன்றுடன் ஒன்று கலந்தன.
எனவே, உண்மையையும் பொய்யையும் சரிப்பார்த்து வடிகட்ட வேண்டிய மிகப்பெரிய பணி அவசியம் என்று அப்போதைய அறிஞர் பெருமக்கள் முடிவெடுக்கின்றனர்.
அறிவிக்கப்படும் அறிவிப்பாளர்களை அலசிப் பார்த்து அதனடிப்படையில் அவர் தருகின்ற செய்தி உண்மைதானா என்பதை அலசலாம் என்கிற முடிவினை எடுக்கிறார்கள்.
இவ்வாறு, ஹதீஸ்களின் உண்மைத்தன்மையையும் அதன் அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையையும் அலசிப் பார்த்த பிறகே ஒரு ஹதீஸை நபி (சல்) அவர்கள் உண்மையில் சொல்லியிருப்பார்களா என்று உறுதி செய்ய வேண்டும் என்கிற முடிவினை முதன் முதலாக அறிஞர் ஷுஃபா அவர்கள் தான் எடுக்கிறார்கள்.
இமாம் ஷுஃபா அவர்கள், ஹதீஸ்களை வெறுமனே பதிவு செய்ததோடு நிற்கவில்லை, மாறாக அதன் நம்பகத்தன்மையை அலசத் துவங்கினார்.
இவ்வாறு செய்வதற்கான ஆதாரத்தையும் கூட அவர் குர் ஆனிலிருந்தே எடுத்தார்.
தொடரும், இன்ஷா அல்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக