வெள்ளி, 17 ஜூலை, 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 26)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 26



ஹதீஸ்களைப் புரிந்து கொள்வது எப்படி (தொடர்ச்சி)


அறிவிப்பாளரை அலசுவது புறம் பேசுவதாகுமா? :

ஒருவரை இழிவுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் அவரைப் பற்றி விமர்சனம் செய்வது தான் புறமே தவிர,  ஒரு நன்மையை நாடி செய்யப்படுபவை புறமாகாது.
ஒருவரைப் பற்றிய விபரம் நம்மிடம் கேட்கப்படும் நமக்குத் தெரிந்ததை நாம் சொல்லாவிட்டால் அதனால் அவர் பாதிப்படைவார்.
தமது மகளை திருமணம் செய்து கொடுப்பதற்கு இன்னார் தகுதியானவரா என்று நம்மிடம் கேட்கப்பட்டால் அவரைக் குறித்த தகவல்கள் ஏதும் நம்மிடம் இருந்தால் அதை அவருக்கு சொல்லத் தான் வெண்டும்.

சொல்லாமல் மறைத்து, நாளை அதனால் அந்த திருமணத்தில் ஏதும் பாதிப்பு நேர்ந்தால் அந்த குற்றத்தில் கூட நமக்கும் பங்கு உண்டு.

இன்னார் என்னிடம் கடன் கேட்கிறார், கொடுக்கலாமா? என்று நம்மிடம் ஒருவர் அபிப்பிராயம் கேட்டால், அவர் வாங்கிய கடனை திருப்பித் தரும் வழக்கம் இல்லாதவராக இருந்தால் அதை இவருக்கு சொல்லிக் கொடுக்கத் தான் வேண்டும்.
இதுவெல்லாம் புறத்தில் அடங்காது, மாறாக, இதுவெல்லாம் நன்மையை நாடி செய்வது.

இதற்கு நபி (சல்) அவர்களின் வாழ்க்கையிலும் பல வழிகாட்டல்கள் உள்ளன.

ஃபாத்திமா பிந்த் கைஸ் (ரலி) அவர்கள், தம்மை திருமணம் செய்து கொள்ள அபு ஜஹ்ம் (ரலி) அவர்களும் முஆவியா (ரலி) அவர்களும் கேட்கிறார்கள், இருவரில் யாரை திருமணம் செய்ய? என்று நபி (சல்) அவர்களிடம் அபிப்பிராயம் கேட்கும் போது,
இருவரின் குறைகளையும் நபி (சல்) அவர்கள் அந்த பெண்மணிக்கு சுட்டிக்காட்டுகிறார்கள்.
அபுஜஹ்ம் அவர்கள் மிகுந்த கோபக்காரர், முஆவியா அவர்கள் மிகுந்த கஞ்சன், பணம் செலவழிக்கவே யோசிப்பவர். என்று அவர்கள் சொன்ன இந்த செய்தி முஸ்லிம் 3770 இல் பதிவாகியிருக்கிறது.

ஒரு நபர் நபி (சல்) அவர்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி கேட்டு நிற்கிறார்.
அவரைக் கண்ட நபி (சல்) அவர்கள், மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம், அந்த நபர் மிகவும் கெட்டவர் என்றும், மிகவும் அருவருக்கத்தக்க விதத்தில் பேசுபவர் எனவும் குறை கூறுகிறார்கள்.
எவரது தீங்குக்கு (தீமையான பேச்சுக்கு) மக்கள் பேசவே அஞ்சுகிறார்களோ அவர் தான் மக்களிலேயெ மிகவும் கெட்டவர் என்று கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸ் புஹாரி 6032 இல் பதிவாகியிருக்கிறது.

அந்த நபரைப் பற்றி தமது மனைவி அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் சொல்லப்பட்டது புறமாகாது.

அதே போன்று, ஒரு ச‌பையில், இரு சஹாபிகளின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் மார்க்கத்தில் அறியாமையில் இருக்கிறார்கள், மார்க்கம் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை என்று நபி (சல்) அவர்கள் அறிவிப்பு செய்திருக்கிறார்கள் எனவும் ஹதீஸ்களில் காண்கிறோம்.

ஆக, சமூக நலனை நாடி ஒருவரது குறையை சுட்டிக் காட்டுவது மார்க்கத்திற்கு உட்பட்டது தான், அது நபி வழி தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.



அறிவிப்பாளரை அலசுவதில் விதிவிலக்கு :

அறிவிப்பாளர்களின் நிலை பற்றி அலசுவதை எடுத்துக் கொண்டால், நபி (சல்) அவர்கள் சொன்னதாக அறிவிக்கின்ற சஹாபாக்கள் விஷயத்தில் எந்த விமர்சனத்தையும் யாரும் செய்யக் கூடாது என்பது ஹதீஸ் கலை விதியாகும்.
சஹாபாக்களிடமிருந்து தகவலைப் பெற்று அறிவிக்கக் கூடிய ஏனைய அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை தான் அலச வேண்டுமேயல்லாமல், சஹாபாக்களைப் பொறுத்தவரை அனைவருமே நம்பகமானவர்கள் தான்.
காரணம், உண்மை பேசுகின்ற விஷயத்தில் நபி (சல்) அவர்களின் சான்றிதழ் அவர்களுக்கு இருக்கின்றது.
அவர்கள் நேர்மையானவர்கள் என்று நபியின் பரிந்துரையே இருக்கும் போது அவர்களில் எவரது அறிவிப்பையும் நாம் ஏற்கலாம்.

இறுதிப் பேருரையில், இங்கு வந்தவர்கள் வராதவர்களிடம் சொல்லுங்கள் (புஹாரி 105) என்று நபி (சல்) அவர்கள் கட்டளையிட்டிருந்ததிலும், அனைத்து சஹாபாக்களுக்கும் செய்திகளை அறிவிக்கும் பொறுப்பை நபி (சல்) அவர்களே சுமத்தி விட்டார்கள் என்பது தெரிகின்றது.
அந்த வகையிலும், சஹாபாக்களை அலசுவது கூடாது.

சஹாபாக்களை மதிப்பது என்றால் இது தான்.
அவர்கள் சுயமாக எதையேனும் சொன்னால், அவர்களுக்கு வஹீ அருளப்படாது என்கிற காரணத்திற்காக அவர்கள் சொல்வதை ஏற்க மாட்டோம்.
அதுவே, இவ்வாறு நபி (சல்) அவர்கள் சொன்னார்கள் என்று அவர்கள் சொல்லி விட்டால், அவர்கள் நேர்மையாளர்கள் என்கிற அடிப்படையில் மறுபேச்சின்றி அவர்கள் சொல்வதை ஏற்போம்.

என்னிடம் ஒரு செய்தியை நீங்கள் கேட்டாலும் அதை அறிவித்து விடுங்கள் என்பதாக புஹாரி 3461 இல் வரக்கூடிய ஹதீஸும், சஹாபாக்களுக்கு செய்திகளை அறிவிக்கும் முழு அதிகாரத்தையும் நபி (சல்) அவர்கள் வழங்கி விட்டார்கள் என்பதைக் காட்டுகிறது.

அதே சமயம், சஹாபாக்களில் இரண்டு பேர் மட்டும் இதில் விதிவிலக்கு பெற்றவர்கள்.
அவர்களது சாட்சியத்தை மட்டும் ஏற்கக் கூடாது.

ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்பான அவதூறு செய்தியை பரப்பிய குற்றத்திற்காக 80 கசையடிகள் பெற்றவர்களில் ஒருவர் ஹஸ்ஸான் இப்னு சாபித் (ரலி) அவர்கள்.
இன்னொருவர் அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் பணியாளராக வேலை செய்து வந்த மிஷ்தக் (ரலி) அவர்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக அல்லாஹ் சொல்லும் போது,

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள் (24:4)

அவர்களது சாட்சியத்தை இனி ஒரு போதும் ஏற்காதீர்கள் என்று தெளிவாக அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்கிறான்.

சாட்சியத்தில் முக்கியமான சாட்சியம் நபி (சல்) அவர்கள் இவ்வாறு சொன்னார்கள் என்கிற சாட்சியம்.

இந்த அவதூறு செய்தியை பரப்பியவர்களிடமிருந்து அத்தகைய சாட்சியத்தை பெறக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடுகிறது.
எந்த இமாமும் இதை பற்றி சொல்லவில்லை தான்.
எந்த ஹதீஸ் கலை விதியிலும் இது குறிப்பிடப்படவில்லை தான்.
இது புது தகவல் தான்.
இப்போது நமது கடமை என்ன?
இமாம்கள் யாரும் சொல்லவில்லையே என்பதற்காக இவர்களது அறிவிப்பை ஏற்பதா?
அல்லது
குர் ஆனுக்கு கட்டுப்பட்டு இவர்கள் அறிவிப்பை தள்ளுவதா???




நுணுக்குமான குறை (இல்லத்) என்றால் என்ன?


ஹதீஸ் கலையின் ஐந்து விதிகளில் ஐந்தாவது விதியானது, நுணுக்கமான குறைகளை கண்டறிவதாகும்.

நுணுக்கமான குறைகளையும் கண்டறிந்து அதன் பிறகு தான் ஒரு ஹதீஸ் அறிவிப்பாளரை நம்பகமானவர் என்றும் ஒரு ஹதீஸை சஹீஹ் எனவும் பதிய வேண்டும் என்று அறிஞர்கள் முடிவு செய்கின்றனர்.
ஆனால், நுணுக்கமான குறைகளைப் பொறுத்தவரை, நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளை அறிஞர்பெருமக்கள் கொண்டிருக்கின்றனர்.
எனினும், சில சான்றுகளை இங்கே காண்போம்.

அப்துர் ரஹ்மான் பின் யசீத் என்கிற அறிவிப்பாளர் வழியாக பலர் அறிவித்தாலும், அவையெல்லாம் ஆதாரப்பூர்வமாக இருக்கின்றன, ஆனால் ஹம்மாத் பின் உசாமா என்பவர், அப்துர் ரஹ்மான் வழியாக கேட்டு அறிவிப்பது மட்டும் பலகீனம் என்கிற பட்டியலில் வருகிறது.

ஆழமாக ஆராயும் போது தான் காரணம் புரிகிறது.
சில நுணுக்கமான குறையை அறிஞர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

அதாவது, அப்துர் ரஹ்மான் பின் யசீத் என்கிற பெயரில் இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள்.

ஜாபிரின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத்
அது போல், தமீமின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத்.

இவ்விருவரில் ஜாபிரின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத் தான் பலமானவர்,
தமீமின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத் பலகீனமானவர்.

அப்படியிருக்க, மற்ற அனைவருமே ஜாபிரின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத் மூலமாகவே செய்திகளை அறிவிப்பு செய்திருக்க, ஹம்மாத் பின் உசாமாவோ, ஜாபிரின் பேரன் என்று தவறாக எண்ணி, தமீமின் பேரனிடம் செய்திகளை அறிந்திருக்கிறார்.

இதை அறிஞர்கள், பல கட்ட ஆய்வுகளின் மூலம் கண்டறிகிறார்கள். இந்த ஜாபிரின் பேரன் அந்த ஊருக்கு வரும் போது எவரெல்லாம் உடனிருந்தார்கள், அப்போது இந்த உசாமா என்பவர் உடன் இருந்தாரா? என்பதையெல்லாம் வைத்து, ஹம்மாத் பின் உசாமா அறிவிப்பது ஜாபிரின் பேரன் சொன்ன அறிவிப்பை அல்ல, மாறாக தமீமின் பேரன் சொன்னவற்றை தான் என்கிற முடிவுக்கு வருகிறார்கள்.

இது தான் நுணுக்கமான குறை என்பது.

மற்றொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

இப்ராஹிம் என்கிற ஒரு அறிவிப்பாளர் வழியாக (உதாரணத்திற்கு), இஸ்மாயில் என்பவர் ஒன்றை அறிவிக்கிறார் என்றால், ஹதீஸ் கலையின் மூன்றாவது விதிப்படி, இருவருக்கிடையில் சங்கிலித் தொடர் இருக்கிறதா என்பதை அறிஞர் ஆராய்வார்கள்.
இருவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்களா, இருவரும் ஒரே ஊரில் வாழ்ந்தவர்களா என்பதையெல்லாம் வைத்தே ஒரு அறிவிப்பை ஏற்பார்கள்.
ஆனால், அறிஞர்கள், இத்தகைய செய்திகளில் கூட இன்னும் ஆழமாக சென்று நுணுக்கமான ஏதும் குறைகள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.

இப்ராஹிமும் இஸ்மாயிலும் ஒரே ஊரில் வசித்தவர்களாக இருந்தாலும், இவர் அவர் வசிக்கும் பகுதிக்கோ, அவர் இவர் வசிக்கும் பகுதிக்கோ என்றைக்காவது சென்றிருக்கிறார்களா? என்பது வரை ஆராய்ந்து பார்க்கிறார்கள்.

ஒரே ஊரில் இருந்து கொண்டு கூட ஒருவருக்கொருவர் சந்திக்காமல் இருக்க சாத்தியக்கூறுகள் இருக்கும் போது அத்தகைய நிலை ஏதும் கண்டறியப்பட்டால் அவற்றை நுணுக்கமான குறை என்கிற பட்டியலுக்கு கொண்டு வருகிறார்கள்.

அதே போல்,

இதே இப்ராஹிமும் இஸ்மாயிலும் ஒருவருக்கொருவர் சந்தித்தவர்களாக இருந்தாலும் கூட, அதிலும் கூடுதல் ஆய்வை செய்கிறார்கள்.
இப்ராஹிம் என்பவர் தமது 65 ஆவது வயது வரை சுய அறிவுள்ளவராக இருந்தார் எனவும், 65 வயதுக்கு பிறகு மூளை குழம்பிப் போய் விட்டது எனவும் தகவல் இருந்தால், இஸ்மாயில் என்பவர் இந்த தகவலை இப்ராஹிமிடமிருந்து பெற்றது இப்ராஹிமின் 65 ஆவது வயதிற்கு முன்னரா அல்லது அதற்கு பின்னரா என்று ஆய்வு செய்கிறார்கள்.

65 வயதுக்கு பிறகு தான் அவரிடம் இந்த தகவல் கேட்கப்பட்டது என்று தெரிய வந்தால் அப்போதும் இதை நுணுக்கமான குறை என்கிற பட்டியலில் கொண்டு வந்துவிடுவார்கள்.

ஆக, மேலோட்டமாக காணும் போது சஹீஹான அறிவிப்பாளர்களைப் போன்றும் சஹீஹான ஹதீஸைப் போன்றும் தோன்றினாலும், ஆழமாக அலசிப் பார்க்கும் போது பல நுணுக்கமான குறைகள் (இல்லத்) வெளியாகும்.
இல்லத் என்கிற பட்டியல் கொண்ட நூலைக் கூட அறிஞர் பெருமக்கள் இதற்கென தயாரித்து வைத்திருக்கிறார்கள்.




வலிமையான ஆதாரத்திற்கு முரண் (ஷுதூத்) :

இது ஹதீஸ் கலை விதிகளில் நான்காவது விதியாக நாம் முன்னர் கண்டோம்.
இதை சற்று விரிவாக காண்போம்.

இஸ்மாயில் என்கிற ஆசிரியர் வழியாக 5 மாணவர்கள் ஒரு செய்தியை அறீவிக்கிறார்கள் என்று வைப்போம்.
உதாரணத்திற்கும், இரவுத் தொழுகை 8 ரக்காஅத் தான் தொழ வேண்டும் என்று நபி (சல்) அவர்கள் சொன்னார்கள் என்பதாக இஸ்மாயில் என்பவர் அறிவிக்கிறார்.
அவரிடம் கேட்ட 5 மாணவர்களில் 4 மாணவர்கள், நபியவர்கள் 8 ரக்காஅத் தொழ சொன்னார்கள் என்று அறிவிக்கிறார்கள்.
ஒரேயொரு மாணவர் மட்டும் நபியவர்கள் 8 ரக்காஅத் தொழ சொல்லவில்லை என்று அறிவிக்கிறார் என்று வைப்போம்.

அறிஞர்களின் ஆய்வில் இஸ்மாயில் என்பவரும் நம்பகமானவர் தான், அது போன்று அவரது 5 மாணவர்களும் நம்பகமானவர்கள், நேர்மையானவர்கள் தான் எனும் போது,
நபி (சல்) அவர்கள் 8 ரக்காஅத் தொழ சொன்னார்கள் என்கிற செய்தியை தான் சஹீஹ் அந்தஸ்துக்கு கொண்டு வருவார்கள்.
8 ரக்காஅத் தொழ சொல்லவில்லை என்று ஒரேயொருவர் அறிவிக்கின்ற செய்தி, அவரை விட அதிகமான அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படும் செய்திக்கு மாற்றமாக இருப்பதால் அதை புறந்தள்ளி விடுவார்கள்.

இது தான் ஷுதூத் (ஷாத் வகை ஹதீஸ்) எனப்படும்.

இப்படியாக ஏராளமான ஹதீஸ்களை நாமும் சரி, நம்மை எதிர்க்கக் கூடிய மாற்றுக் கொள்கையுடையவர்களும் சரி, ஒதுக்கி வைத்துத் தான் இருக்கிறார்கள்.

ஷாத் வகை என்று சொல்லி ஒரு ஹதீஸ் புறந்தள்ளப்பட்டால், அதனுடைய பொருள், அந்த அறிவிப்பாள்ர் பலகீனமானவர் என்பதல்ல.
அவர் பலமானவர் தான். ஆனால், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர் கவனக்குறைவாக இருந்திருக்கிறார், ஏனெனில், இவரை விட அதிக எண்ணிக்கையில் மற்ற அறிவிப்பாளர்கள் இவர் சொல்வதற்கு மாற்றமாக அறிவிக்கிறார்கள் என்பதால் அது தான் சரியாக இருக்கும்.
எனவே, இந்த அறிவிப்பாளரின் கருத்தை நாம் ஏற்க மறுக்கிறோம்.
இந்த ஒரு விஷயத்தில் தான் மறுக்கிறோமே தவிர, இதே அறிவிப்பாளர் அறிவிக்கும் வேறு வேறு ஹதீஸ்களை நாம் மறுப்பது கிடையாது.

ஆக, ஒருவர் அறிவிக்கும் செய்தி, 5 பேர் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமாக இருக்கின்ற காரணத்தால், அந்த ஒருவர், எவ்வளவு தான் நம்பகமானவராக இருந்தாலும் அதை புறந்தள்ளுகிறோமே, 
அப்படியானால், அந்த 5 பேர் அறிவிக்கும் செய்தியில் இருக்கும் நம்பகத்தன்மையை விட குர் ஆனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை அதிகமில்லையா?

ஒரு ஹதீஸுக்கு மாற்றமாக ஒட்டு மொத்த சமுதாயமும் அறிவித்திருக்கும் குர் ஆனில் ஒரு வசனம் இருந்தால் அதை காரணம் காட்டி இந்த ஒரு ஹதீஸை மறுப்பது மிகப்பெரிய் ஷாத் வகை இல்லையா?

நாம் குர் ஆனுக்கு ஒரு ஹதீஸ் மோதுகிறது என்று சொல்லும் போது மட்டும், அந்த ஹதீஸை அறிவிப்பவர் பொய்யரா? அவர் பலகீனமானவரா அவர் நரகத்திற்கு செல்வாரா? என்றெல்லாம் வாய் கிழிய கேட்பவர்கள்,
இதே கேள்வியை, இவர்களும் நாமும் அனைவருமே சேர்ந்து மறுக்கக்கூடிய ஷாத் வகை ஹதீஸ்களுக்கு கேட்டார்களா?


நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ்களை அறிவிப்பவர்கள் 5 பேரோ 10 பேரோ இருக்கட்டும்.
ஆனால் நபிக்கு சூனியம் செய்யப்படவேயில்லை, சூனியம் செய்யப்பட்டதாக சொல்பவர்கள் அ நியாயக் காரர்கள் என்பதாக அல்லாஹ் தமது திருமறையில் சொல்கிறானே, அந்த குர் ஆன் வசனத்தை அறிவிப்பவர்கள் ஒட்டு மொத்த சமுதயாமாச்சே, இப்போது எது அதிகம் வலுவானது?

சிந்தனையை இவர்கள் இப்படி செலுத்துவதை விட்டு விட்டு, அறிவிப்பாளர் நல்லவரில்லையா, அதை எப்படி ஏற்பது என்பதாக நுனிப்புல் மேய்கிறார்கள்.
குர் ஆனுக்குரிய மகத்துவமும், அதற்கான கண்ணியமும் இவர்களது உள்ளத்தில் சரியான முறையில் பதிந்திருந்தால் இது போன்ற வாதங்களை இவர்கள் வைத்திருக்க மாட்டார்கள்.

வெறுமனே, ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்கிறது என்கிற ஒரு காரணத்திற்காக மட்டும் சூனியம் போன்ற செய்திகளை ஏற்கத் தான் வேண்டும் என்று சொன்னால், அது போல தானே மேலே நாம் குறிப்பிட்ட ஷாத் வகை ஹதீஸ்களும் இருக்கின்றன?
அவைகளும் ஹதீஸ் நூற்களில் பதியப்பட்டு தானே இருக்கின்றன?
அவற்றையும் நம்பகமான அறிவிப்பாளர் தானே அறிவிக்கிறார்?

இந்த அடிப்படையை நாம் சிந்தினையில் செலுத்த வேண்டும்.

ஆக, ஹதீஸ்களை நாம் மறுக்கவில்லை, மறுக்கவும் கூடாது, ஹதீஸை மறுத்தால் நாம் காஃபிர்களாகி விடுவோம் என்கிற இஸ்லாத்தின் அடிப்படையில் நாம் மிகவும் கவனத்துடன் தான் இருக்கிறோம்.
பிரச்சனை எங்கே எழுகிறது என்று சொன்னால், சில ஹதீஸ்கள், அவற்றையெல்லாம் விட மிக மிக பலமான ஆதாரமான குர் ஆனோடு நேரடியாக மோதுகின்ற போது, குர் ஆனா ஹதீஸா? என்கிற கேள்விக்கு நாம் தேர்வு செய்ய வேண்டியது குர் ஆனைத் தான்.

குர் ஆனில் அல்லாஹ் சொல்லும் போது,

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராள மான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (4:82)

குர் ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பதற்கான ஆதாரமே இதில் எந்த முரண்பாடும் இருக்காது என்பது தான்.
குர் ஆனுக்கு முரணாக அல்லாஹ்வின் வஹீ செய்தி இருக்கவே இருக்காது.
இது தான் இஸ்லாத்தின் அடிப்படை.
முரண்படுவது போல் சில ஹதீஸ்கள் இருக்குமானால், அதை நிச்சயம் நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள், ஏனெனில், நபியின் பணி என்பது குர் ஆனை விளக்குவது தானே தவிர, குர் ஆனுக்கு முரண்பாடு கற்பிப்பதல்ல.
ஏதேனும் ஹதீஸ்கள் குர் ஆனுக்கு முரண்பட்டால், அதை அறிவிப்பவர் தான் எதாவது குறை விட்டிருப்பார், எங்காவது கவனக்குறைவுடன் செயல்பட்டிருப்பார்.

இது தான் நாம் புரிய வேண்டிய அளவுகோல். அல்லாமல், அந்த அறிவிப்பாளர் பொய்யரா? அந்த அறிவிப்பாளர் பாவியா? என்கிற கேள்விகளுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல மாட்டோம்.

நமது அடிப்படை குர் ஆன் தான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற காரணத்தால் தான் அதற்கு முரணான ஹதீஸ்களை மறுக்கிறோம்.
இவர்களோ, குர் ஆனுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விட, அந்த ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகின்றனர்.

இவர்களுக்கு தான் குர் ஆனின் போதனைகள் அவர்களது தொண்டைக் குழியை விட்டும் கடக்கவில்லை என்று நபி (சல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

வில்லை விட்டும் அம்பு எந்த அளவிற்கு வேகமாக வெளியேறுமோ அதே போன்று இஸ்லாத்தை விட்டும் இவர்கள் வேகமாக வெளியேறுகிறார்கள் என்று நபி (சல்) அவர்கள் கூறுகிறார்கள்.
குர் ஆன் இவர்களது தொண்டைக் குழியை கடந்து, அதன் கருத்துக்களையும் மகத்துவத்தையும் உள்ளத்தால் உணர்ந்தார்களெனில், அவர்கள் இந்த ஹதீஸை ஏற்கவே மாட்டார்கள்.

இதை கூட, இவர்கள் நம்மைப் பார்த்து சொல்கின்றனர், நாம் தான் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறோம் என்று.
ஆனால், இந்த ஹதீஸே குர் ஆனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பற்றிப் பேசுகிறது.
குர் ஆனுக்கு யார் முக்கியத்துவம் கொடுப்பது ? நாமா அவர்களா?

நபியின் பெயரால் புனையப்பட்ட ஒரு ஹதீஸ், ஆபாசமாக இருந்தாலும், அருவருக்கத்தக்க விதத்தில் இருந்தாலும், குர் ஆனையும் நபி (சல்) அவர்களின் கண்ணியத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் இருந்தாலும், அதை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம், அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று சொல்லப்பட்டு விட்டதல்லவா, ஹதீஸ் நூற்களில் பதிவாகி விட்டதல்லவா? எனவே அதை ஏற்கத் தான் செய்வோம் என்று சொல்பவர்கள் குர் ஆனை மதிப்பவர்களா?
அல்லது, குர் ஆனுக்கு முரணாக நம்பகமான அறிவிப்பாளர் என்று அறியப்பட்டவர் ஒன்றை சொன்னாலும், அதை ஏற்க மாட்டோம் என்று சொல்லக்கூடியவர்கள் குர் ஆனை மதிக்கின்றவர்களா?

என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம்மைப் பார்த்து ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். உண்மையில் அவர்கள் தான் குர் ஆன் மறுப்பாளர்கள் !

அதே போன்று, அல்லாஹ் இன்னொரு வசனத்தில் சொல்லும் போது,

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும்,அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.(16:44)

குர் ஆனை விளக்குவதற்கு தான் நபி (சல்) அவர்கள் வந்தார்கள் எனும் போது அவர்கள் ஒரு போதும் அதற்கு முரண்படும் வகையில் பேச மாட்டார்கள்.

நபிக்கு சூனியம் செய்ய முடியாது என்று குர் ஆன் சொல்கிறது.

அப்படியானால், எனக்கு சூனியம் செய்தார்கள் என்று நபி பேச மாட்டார்கள். அப்படிப் பேசுவது குர் ஆனை முரணாக்குவதாக ஆகுமே தவிர, குர் ஆனை விளக்கியதாக இருக்காது.

அதே போன்று,

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக் கோனிடமிருந்து அருளப்பட்டது. (41:42)

எந்த தவறும் இந்த குர் ஆனில் வராது என்று அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்லும் போது, குர் ஆனுக்கு முரணாக சில செய்திகளை எடுத்துக் காட்டி அவையும் மார்க்கம் தான், அவையும் அல்லாஹ் அருளியவை தான் என்று சொன்னால், குர் ஆனின் மகத்துவம் அங்கே குலைக்கப்படுகிறது என்றே பொருளாகிறது.

எனவே, குர் ஆனுக்கு முதல் மரியாதையை நாம் செலுத்த வேண்டும்.
அதன் பிறகே ஹதீஸ்.
ஹதீஸ் என்று சொல்லப்பட்ட அனைத்தையும் ஏற்காமல், எவை ஏற்கத்தகுந்தவை, எவை, இஸ்லாமிய போதனைக்கு, குர் ஆனின் போதனைக்கு முரணில்லாமல் இருப்பவை என்கிற அடிப்படைகளை முதலில் அலசிப் பார்த்து அதன் பிறகு தான் ஹதீஸ்களை ஏற்க வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், அறிவிப்பாளரைக் காரணம் காட்டியெல்லாம் நாமும் சரி, மற்றவர்களும் சரி, பல்வேறு ஹதீஸ்களை மறுக்கத்தான் செய்கிறோம்.
அறிவிப்பாளரைக் காரணம் காட்டி ஒரு ஹதீஸை மறுப்பது நியாயம் என்றால், குர் ஆனைக் காரணம் காட்டி மறுப்பது அதை விட பல மடங்கு அதிக நியாயமில்லையா?

இந்த அளவுகோலின் படி நாம் ஒரு ஹதீஸை மறுத்தால் நம்மை காஃபிர் என்கிறார்களே, இதே அளவுகோலை முன்னிறுத்தி எத்தனையோ அறிஞர்கள் பல ஹதீஸ்களை மறுத்துத் தான் இருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் இவர்கள் காஃபிர் ஃபத்வா கொடுக்கவில்லை !

தொடரும், இன்ஷா அல்லாஹ்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக