இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!
(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)
நாள் : 21
சுப்கி அவ்லியாவின் லீலை (தொடர்ச்சி) :
சுப்கி அவ்லியா செய்த லீலைகளைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நாம், அது தொடர்பாக ஷஃரானியின் நூலில் எழுதப்பட்ட அரபு வாசகத்தை தமிழில் மொழியாக்கம் செய்ய இந்த போலி சுன்னத் ஜமாஅத்தினர் முன் வரட்டும் என்று சவாலும் விட்டிருந்தோம்.
இந்த சவாலை நாம் ஏதோ இந்த வருடத்தில் தான் முதன் முதலாக விடுப்பதாக யாரும் எண்ணி விடக் கூடாது. 1980 களிலேயே நாம் இது போன்ற நிர்வாண சாமியார்களின் லீலைகளைப் பற்றி மாத இதழ்களில் எழுதியிருக்கிறோம்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் கூட நமது ஆன்லைன்பிஜெ இணையதளத்தில் அவ்லியாக்களின் சிறப்பு என்கிற தலைப்பில் இது தொடர்பாக விரிவான கட்டுரை ஒன்றும் வெளியானது.
ஆனால், அப்போதிலிருந்து இன்று வரை எத்தனையோ சால்ஜாப்புகள் சொல்லி இந்த சவாலிலிருந்து பின்வாங்கி ஓடுவதை தான் அவர்கள் வழக்கமாக கொள்கின்றனர்.
அந்த நூலில் நாம் சொல்வது போன்ற வாசகமே இல்லை என்று சமாளித்துப் பார்த்தார்கள்.
பக்கம் என்பது பிரதிக்கு பிரதி மாறுபடும், நீங்கள் சுப்கி எனும் தலைப்பின் கீழ் தேடிப் பார்த்தால் கிடைக்கும், நீங்கள் வைத்திருக்கும் பிரதியை கொண்டு வந்தால் நாம் எடுத்துக் காட்டுகிறோம் என்று பதில் சொன்னோம்.
தற்போது, ஷஃரானியின் நூலை காபியெடுத்து பல பிரதிகளை வெளியிட்டும் இருக்கிறோம்.
இந்த வாதம் சொத்தையாகிப் போன பிறகு, தற்போது, நீங்கள் சொன்ன வாசகத்திற்கு முந்தைய வாசகங்களை நீங்கள் முதலில் மொழியாக்கம் செய்யுங்கள், பிறகு இந்த வாசகத்தை நாங்கள் மொழியாக்கம் செய்கிறோம் என்று பதில் சொல்கின்றனர்.
அதற்கு முந்தைய வாசகங்கள் என்ன சொல்கிறதாம்? அதில் அந்த சுப்கி அவ்லியாவின் மகிமை பற்றி விளக்கப்பட்டிருக்கிறதாம், அதை நாம் மறைத்து விட்டு அவரது அசிங்கமான செயலை மட்டும் காட்டுகிறோமாம்.
ஆக, அவர் அசிங்கமான காரியத்தில் ஈடுபட்டார் என்பதை இவர்களே இந்த வாதத்தின் மூலம் ஒப்புக்கொண்டு விட்டார்.
ஒருவன் திருடிய குற்றத்திற்காக மக்களிடம் அடி, உதை வாங்குகிறான் என்று வைப்போம். இன்னொருவர் ஓடி வந்து, திருடிய இந்த் நபர் யார் தெரியுமா? இவர் மிகப்பெரிய மார்க்க அறிஞராக்கும்.. என்று சொன்னால், இது அந்த திருடனுக்கு சாதகமா பாதகமா?
ஏண்டா, மார்க்கம் பேசிக் கொண்டு திருடுகிறாயா என்று, இன்னும் நான்கு அடி கூடுதலாகவே அவனுக்கு விழும்.
சுப்கியின் மகிமையைப் பற்றி முதல் வாசகத்தில் இருக்கிறது என்றால் இப்படிப்பட்ட அவ்லியாவா இந்த கேடுகெட்ட காரியத்தை செய்தது? என்று அவ்லியாவின் பெயரும் புகழும் இன்னும் நாறித்தான் போகுமே தவிர, அவரது மகிமையை முதலில் சொல்லி விட்டதால் அவருக்கு என்ன பெருமை?
இவர்கள் இதை கேட்டு விட்டதால் நாம் அந்த முந்தைய வாசகத்தையும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டோம், இப்படிப்பட்ட மகிமை பொருந்திய அவ்லியா தான் பெண் பார்க்க போன இடத்தில் இவ்வளவு வக்கிரமாக பேசினார்.
அது என்ன பேசினார்? என்று இந்த போலி சுன்னத் ஜமாஅத்தினர் இப்போது மொழியாக்கம் செய்யட்டும்.
அடுத்து, இன்னொரு வேடிக்கையையும் கேள்வியாக வடிக்கின்றனர்.
அதாவது, சரி, அந்த அவ்லியா வக்கிரமாகவே பேசியிருக்கட்டுமே, அதனால் அவர் காஃபிராகி விடுவாரா?
விபச்சாரம் செய்து விட்டால் கூட காஃபிராக மாட்டாரே, அப்படியானால் இவர்கள் எப்படி காஃபிர் என்று சொல்லலாம்?
என்று கேட்கிறார்கள்.
இவ்வாறு கேட்பதன் மூலமும் அந்த அவ்லியா எனப்படுபவர் படு வக்கிரமாக, படு ஆபாசமாக, சொல்லவே நா கூசுகின்ற பேச்சுக்களை தான் பேசியிருக்கிறார் என்பதை இவர்களே ஒப்புக் கொண்டு விட்டனர்.
ஆபாசமாக பேசினால் காஃபிராகி விடுவார்களா? என்றால் ஆக மாட்டார்கள் தான்.
ஆனால், ஆபாசமாக பேசியும் அல்லாஹ்வின் நேசராக இருக்கலாம் என்று சொன்னால் காஃபிர் தானே?
திருடினாலோ கொலை செய்தாலோ காஃபிர் இல்லை. சரி.
அதுவே, திருடனும் கொலைகாரனும் தான் அல்லாஹ்வின் நேசர்கள், அவர்களெல்லாம் அவ்லியா என்று ஒருவன் சொன்னால் அது குஃப்ரா இல்லையா?
அந்த அடிப்படையில், வக்கிரத்தையே தொழிலாக கொண்ட ஒருவரை அவ்லியா என்று சொல்கிறீர்களென்றால் அது வெளிப்படையான குஃப்ரை தவிர வேறில்லை என்கிற நமது கூற்றில் தவறில்லை.
ஆக, என்ன வாதம் புரட்டினாலும் அசத்தியத்தை நியாயப்படுத்தவே இயலாது.
கியாஸ் மார்க்கத்தில் தனி ஆதாரமா?
ஒன்றிலிருந்து இன்னொன்றை புரிவதற்கு கியாஸ் என்று பொருள்.
இது இயல்மாகவே மனிதனின் பகுத்தறிவும் சொல்லக்கூடியது தான்.
ஒரு கருத்து சொல்லப்படுகிறது என்றால் அது நேரடியாக சொல்வதை ஏற்பது என்பது ஒரு வகை.
அதிலிருந்து பெறப்படுகின்ற மறைமுக புரிதல்கள் இன்னொரு வகை.
உதாரணத்திற்கு, பெரும் புகையை நாம் காண்கிறோம்.
அது சொல்கின்ற கருத்து, புகை இருக்கிறது என்பது மட்டும் தான்.
அதிலிருந்து பெறப்படும் கருத்து, அருகில் நெருப்பு இருக்கிறது என்பது.
நாம் பார்த்தது புகையை மட்டும் தான் என்றாலும், அதிலிருந்து நெருப்பும் அருகில் இருக்கத் தான் செய்கிறது என்று புரிவது என்பது சாதாரண பகுத்தறிவு.
இதை தனி ஆதாரமாக நாம் பிரித்துப் பார்க்க தேவையில்லை.
புகை வருவதை கண்டதிலிருந்து பெறப்பட்ட கருத்து எனும் போது மூல ஆதாரம் புகை தான்.
அது போல், குர் ஆன் ஹதீஸ்களைப் பொறுத்தவரை, நேரடியாக புரிகின்ற வசனங்களும் இருக்கும்,
கருத்தை கவனித்து, அதிலிருந்து பெறப்படும் வேறு செய்திகள் என்பதான வசனங்களும் இருக்கும்.
ஒரு வசனத்திலிருந்து புரிகின்ற வேறு செய்தியாக இருந்தாலும் மூல ஆதாரம் அந்த வசனமாக தான் இருக்கும்.
உதாரணத்திற்கு பார்ப்போமேயானால், பெற்றோரை அடிக்கலாமா? என்று ஒருவர் மார்க்க சட்டம் கேட்கிறார்.
உங்கள் பெற்றோரை சீ என்று சொல்லாதீர்கள் என்று நபி (சல்) அவர்கள் கூறியதை நாம் அவருக்கு ஆதாரமாக காட்டி பெற்றோரை அடிக்கக் கூடாது என்று பதிலளிப்போம்.
நாம் காட்டியது சீ என்று சொல்லக் கூடாது என்கிற ஆதாரத்தை தான்.
ஆனால், அதிலிருந்து, பெற்றோரை அடிக்கக் கூடாது என்கிற கருத்து பெறப்படுகிறது தானே?
அந்த அடிப்படையில், பெற்றோரை அடிப்பது தொடர்பான மார்க்க ஆதாரம் எது என்று பார்த்தால் சீ என்று சொல்லாதீர்கள் என்கிற இந்த ஹதீஸ் தான்.
அதிலிருந்து பெறப்பட்ட சட்டம் என்பதால் அது தான் மூல ஆதாரமே தவிர, மூன்றாவதாக ஒரு மார்க்க ஆதாரம் இருக்கிறது என்பதாக பிரிப்பதில் அர்த்தமில்லை.
குர் ஆன், ஹதீஸிலிருந்து இன்னும் சில உதாரணங்களை பார்ப்போம்.
கால் ரேகையை கொண்டு தந்தையை அறிதல் :
நபி (சல்) அவர்களது வளர்ப்பு மகன் சைத் (ரலி) அவர்கள்.
அவர்களது மகன் உசாமா (ரலி).
தந்தை மகனான இவ்விருவரின் முக சாயல் எந்த பொருட்தமுமில்லாமல் வெவ்வேறாக இருந்த காரணத்தால் இதை காரணம் காட்டி சைத் (ரலி) அவர்களின் ஒழுக்கத்தை அன்றைய காஃபிர்கள் கேலி பேசினர்.
இதை அறிந்த போது நபி (சல்) அவர்களும் மிகுந்த் கவலையுற்றார்கள்.
அந்த சமயத்தில், இருவருக்கிடையேயுள்ள கை, கால் ரேகையை கொண்டு தந்தை மகனை உறவை சொல்லி விடும் கலையை கற்ற ஒருவர், ஒரு முறை உசாமாவும் சைத்தும் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களிருவரது கால் ரேகையை கவனித்து விடுகிறார்.
கவனித்தவர், ஒன்றிலிருந்து தான் இன்னொன்று வந்திருக்கிறது (இருவரும் தந்தை மகன் தான்) என்று சொல்கிறார்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து, ஆயிஷா! முஜஸ்ஸிஸ் அல்முத்-ஜீ என்னிடம் வந்தார். அப்போது உசாமாவும் (அவருடைய தந்தை) ஸைதும் ஒரு துணியைப் போர்த்தி(க் கொண்டு படுத்து) இருப்பதைக் கண்டார். அவர்களிருவரும் தமது தலையை மூடியிருந்தனர்; (ஆனால்,) அவர்களின் பாதங்கள் வெளியே தெரிந்தன. அப்போது முஜஸ்ஸிஸ் இந்தப் பாதங்கள் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானவை' என்று சொன்னார் என்றார்கள் (புஹாரி 6771)
கால் ரேகையை கொண்டு இருவரும் தந்தை மகன் தான் என்று ஊர்ஜிதமானதால் நபி (சல்) அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
இது நேரடி கருத்து.
இதிலிருந்து நாம் எதையெல்லாம் புரியலாம்?
இன்று ஒரு குழந்தைக்கு தந்தை யார்? என்கிற குழப்பம் வருகிறது.
இருவரது கால் ரேகையைக் கொண்டு உறவை தீர்மானிக்கலாம் என்று நாம் ஃபத்வா கொடுக்கலாம்.
மேற்கண்ட புஹாரி 6771 ஹதீஸையே அதற்கு ஆதாரமாகவும் காட்டலாம்.
அந்த ஹதீஸில் ஒருவர், இந்த கால் ரேகையை கண்டு விட்டு ஒரு தகவலை சொன்னார் என்று மட்டும் இருக்கிறது. அதை நபி (சல்) அவர்களும் அங்கீகரித்திருக்கிறார்கள் என்றும் இருக்கிறது.
இன்றைக்கு அப்படியொரு பிரச்சனை வந்தால் இதே வழிமுறையை செய்யுங்கள் என்று நேரடியாக அந்த ஹதீஸில் இருக்கிறதா? என்றால் இல்லை.
ஆனாலும், அப்படியொரு பிரச்சனை வரும் போது நாம் இந்த வழிமுறையை பின்பற்றலாம் என்பதற்கு மறைமுகமான அனுமதி இந்த ஹதீஸில் இருக்கிறது தானே?
இது தான் கியாஸ்.
இது தனி ஆதாரமல்ல. மாறாக, இன்றைக்கு இந்த பிரச்சனையை கையாள்வதற்கும், ஆதாரம் அந்த புஹாரி 6771 ஹதீஸ் தான் !
கோபமாக இருக்கும் போது தீர்ப்பளிக்கக் கூடாது :
கோபமாக இருக்கும் போது தீர்ப்பளிக்கக் கூடாது என்று நபி (சல்) அவர்கள் கட்டளையிட்டிருக்கிறார்கள்.
இதை ஏன் சொன்னார்கள்? கோபத்தில் ஒருவர் இருந்தால் அவர் சுய நினைவில் தடுமாற்றம் கொண்டவராக இருப்பார், அவரால் நீதமாக தீர்ப்பு வழங்க முடியாது.
என்கிற காரணத்தால் தான் கோபத்தில் இருக்கும் போது எந்த பிரச்சனைக்கும் தீர்ப்பு வழங்காதீர்கள் என்று நபி (சல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
இது இந்த ஹதீஸ் சொல்கின்ற நேரடி செய்தி.
ஆனால், இதே ஹதீஸை வைத்துக் கொண்டு என்னென்ன சட்டங்களையெல்லாம் எடுக்கலாம்?
ஒருவருக்கு அவசரமாக சிறு நீர் கழிக்கும் தேவை இருக்கிறது.
இப்போது, சிறு நீரை அடக்கிக் கொண்டு நீ தீர்ப்பளிக்காதே, என்று நம்மால் சட்டம் சொல்ல முடியும். அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், கோபத்தில் தீர்பளிக்காதே என்று நபி (சல்) அவர்கள் சொன்னதையே காட்டலாம்.
நபி (சல்) அவர்கள் சொன்னது கோபத்தைப் பற்றி தான் என்றாலும், அதிலிருந்து, சுய கட்டுப்பாட்டையும் நிதானத்தையும் இழக்கின்ற எந்த நிலையில் நாம் இருந்தாலும் நாம் தீர்பளிக்கக் கூடாது என்று புரிகிறோம்.
ஒன்றிலிருந்து இன்னொன்றை புரிவது என்பது இது தான்.
ஆக, அடிப்படை மூல ஆதாரம் ஹதீஸ் தானே தவிர, சிறு நீரை அடக்கிக் கொண்டு தீர்ப்பளிக்கக் கூடாது என்பதை குர் ஆன், ஹதீஸ் தவிர்த்து, மார்க்கத்தின் மூன்றாவது ஆதாரமாக ஆக்கக் கூடாது, அப்படி ஆக்குவதில் அர்த்தமும் இல்லை.
விந்தினை வெளியேற்றுதல் :
நபி (சல்) அவர்கள் காலத்தில் குழந்தை வேண்டாம் என எண்ணுகின்ற சஹாபாக்கள், உடலுறவின் போது உச்சகட்ட நிலையில் விந்தினை மனைவியின் உறுப்பில் செலுத்தாமல் வெளியே சிந்தி விடும் வழக்கத்தை செய்து வந்தனர்.
இதன் மூலம் கரு உருவாவதை தடுத்து வந்தனர்.
இது நபி (சல்) அவர்களது காலத்திலேயே நடந்து வந்ததாக புஹாரி 5209 ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது ஹதீஸின் நேரடி கருத்து.
இதை வைத்துக் கொண்டு, குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பாதவர்கள் விந்து துளியை வெளியேற்றிக் கொள்ள எந்த முறையை வேண்டுமானாலும் கையாளலாம் என்கிற சட்டத்தை பெறலாம் தானே?
இன்று காண்டம், காப்பர் டி போன்ற உபகரணங்கள் மூலம் ஆணின் விந்து பெண்ணின் கருவை அடையாதவாறு தடுக்கப்படும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின் றனர்.
இவற்றை நாம் பயன்படுத்தலாம் என்பதற்கு மேலே சஹாபாக்கள் செய்ததாக நபி (சல்) அவர்கள் அங்கீகரித்த அந்த ஹதீஸ் தான் ஆதாரம்.
விந்தை வெளியேற்றி விடுவார்கள் என்கிற செய்தியிலிருந்து, காண்டம் பயன்படுத்தலாம் என்கிற இன்னொரு சட்டத்தை எடுக்கிறோம்.
இது தான் கியாஸ் என்பது.
தங்கத்தில் மூக்கு :
அறியாமை காலத்தில் சஹாபி ஒருவருக்கு போரின் போது மூக்கு வெட்டப்பட்டு விடுகின்றது.
மூக்கு இல்லாமல் முகம் விகாரமாக தெரியும் என்பதனால்
அதை சரி செய்வதற்காக வெள்ளியால் மூக்கு போன்று செய்து அதை வைத்துக் கொள்கிறார்.
ஆனால், மூக்கில் சீள், அழுக்கு போன்றவை சேர்வதால் நாளடைவில் அதிலிருந்து துர்வாடை வீசத் துவங்குகிறது.
பிற்காலத்தில் அவர் இஸ்லாத்திற்கு வந்த பிறகு, நபி (சல்) அவர்களை சந்திக்கிறார்.
இந்த பிரச்சனைக்கு தீர்வாக நபி (சல்) அவர்கள் அவரிடம் தங்கத்தில் செயற்கையாக மூக்கு ஒன்றை தயாரித்து பயன்படுத்துமாறு அறிவுருத்துகிறார்கள்.
இது நசாயி 5161 இல் பதிவாகியிருக்கும் ஹதீஸ்.
இன்றைக்கு, இதே போன்றதொரு பிரச்சனையை நாம் சந்தித்தால் இந்த சட்டத்தை வைத்துக் கொண்டு பல் உடைந்தால் மாற்றுப் பல் வைப்பதை வெள்ளியில் செய்யலாம் என்று சட்டம் எடுக்கலாம் தானே?
மூக்கில் எப்படி துர்வாடை வருமோ அது போல் வாயில் வெள்ளி எனும் உலோகத்தை வைத்தாலும் துர்வாடை வரும் என்கிற அடிப்படையில் தங்கத்தில் பல் கட்டிக் கொள்வதற்கும் இந்த ஹதீஸையே சான்றாக கொள்ளலாம் தானே?
துர்வாடை வராத வகையில் பல்வேறு மாற்றுப் பொருட்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டு விட்ட நிலையில், தங்கத்தை இன்றைக்கு ஆண்கள் பல் கட்டுவதற்கும் கூட தவிர்த்து கொள்ள வேண்டும் என்கிற சட்டத்தையும் இதே நஸாயி 5161 ஹதீஸ் வாயிலாக நாம் புரியலாம்.
ஆக, அடிப்படை மூல ஆதாரம் தங்கத்தால் செயற்கை மூக்கு உருவாக்கலாம் என்பது தான் என்றாலும் அதிலிருந்து நாம் பல விளக்கங்களை எடுக்கிறோமே, இது தான் கியாஸ்.
இதை மூன்றாவது மார்க்க ஆதாரம் என்றோ நான்காவது மார்க்க ஆதாரம் என்றோ தனியாக சொல்லவே தேவையில்லை.
அடிப்படை குர் ஆனும் ஹதீஸும் மட்டும் தான்.
அவற்றிலிருந்து புரிந்து பெறப்பட்ட சட்டங்கள் தான் இவை.
குர் ஆனோ ஹதீஸோ இல்லையென்றால் இது போன்ற புரிதல்களும் தவறாகவே ஆகும்.
இந்த அடிப்படையை நாம் சரியாக புரிந்து கொண்டால் மார்க்கத்தின் மூன்றாவது ஆதாரம் என்று சொல்லியோ நான்காவது ஆதாரம் என்று சொல்லியோ நம்மை யாராலும் ஏமாற்ற முடியாது.
இரவில் விளக்கை அணைத்தல் :
தூங்கும் போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக்கூடியது (எலி) திரியை இழுத்துச் சென்று வீட்டில் இருப்பவர்களை எரித்து விடக்கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 3316
மேற்கண்ட ஹதீஸ் ஒரு பக்கமிருக்க, இன்று இரவில் தூங்க செல்லும் போது நாம் பயன்படுத்தும் மின்விளக்குகளை அணைத்து விட்டு தான் தூங்க வேண்டுமா? என்கிற கேள்வி எழுந்தால்,
தேவையில்லை என்று நாம் ஃபத்வா கொடுக்கலாம்.
அதற்கு என்ன ஆதாரம்?
மேலே நாம் சுட்டிக் காட்டிய புஹாரி 3316 ஹதீஸ் தான் ஆதாரம்.
அதாவது, விளக்குகளை அணைத்து விடுங்கள் என்று நபி (சல்) அவர்கள் சொன்னதை அணைக்கத் தேவையில்லை என்பதற்கு நாம் ஆதாரமாக கொள்கிறோம்.
ஏனென்றால், அந்த ஹதீஸ் சொல்கின்ற கருத்தை உள்வாங்கி, அதிலிருந்து இன்றைய காலகட்டத்தை நாம் புரிகிறோம்.
அதாவது, விளக்கை அணைக்க சொன்ன நபி (சல்) அவர்கள் வெறுமனே அவ்வாறு சொல்லி விட்டு நின்று விடவில்லை, மாறாக அதற்கான காரணத்தையும் சொல்லி விடுகிறார்கள்.
அன்றைய காலத்தில் எண்ணெயில் எரியும் திரியை தான் விளக்காக பயன்படுத்துவார்கள் எனும் போது அந்த எண்ணெயின் ருசிக்காக எலி அந்த திரியை கடித்து இழுத்துக் கொண்டு ஓடி விடும், இதனால் பெரும் ஆபத்து நிகழும் வாய்ப்பிருக்கிறது என்கிற காரணத்தால் தான் விளக்கை அணைக்குமாறு நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள்.
அந்த காரணம் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மின்விளக்குகளில் இல்லை என்கிற காரணத்தால் இன்றைக்கு விளக்குகளை அணைக்க தேவையில்லை என்று கூட இந்த ஹதீஸிலிருந்தே நம்மால் புரிய முடிகிறது.
இது தான் கியாஸ் எனப்படுவது.
அதே நேரம், நாம் விறகடுப்பு பயன்படுத்துகிறோம், அல்லது காஸ் சிலிண்டர் பயன்படுத்துகிறோம் என்றால், விறகிலுள்ள தீக்கங்கை நன்றாக அணைத்து விட்டு தூங்குவது மார்க்க கடமை என்று நம்மால் இன்று ஃபத்வா கொடுக்க முடியும்.
காஸ் சிலிண்டரை அணைத்து விட்டு தூங்குவது சுன்னத் என்று நம்மால் ஃபத்வா கொடுக்க முடியும்.
அதற்கு மேற்கண்ட ஹதீஸையே சான்றாக காட்டலாம்.
அந்த ஹதீஸில் சொல்லப்பட்டது எண்ணெய் விளக்கைப் பற்றித் தான் என்றாலும், அதிலிருந்து இன்று நாம் பயன்படுத்தும் உபகரணங்களையும் விளங்குகிறோம்.
இது குர் ஆன், ஹதீஸ் என்கிற இரண்டேயிரண்டு மார்க்க அடிப்படைகளுக்கு உட்பட்டது தானே தவிர மூன்றாவது ஆதாரமல்ல !
தொடர் உதிரப்போக்கு :
அபூ ஹுபைஷ் என்பவரின் மகள் பாத்திமா என்ற பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அதிகம் உதிரப்போக்குள்ள ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?’ எனக் கேட்டதற்கு, ‘இல்லை! அது ஒருவித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையைவிட்டு விடு; அது நின்றுவிட்டால் இரத்தம் பட்டு இடத்தைக் கழுவிவிட்டுத் தொழுகையை நிறைவேற்று’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ வுழூச் செய்து கொள்’ என்றும் நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் கூறினார்கள்” (புஹாரி:228)
தொடர் உதிரப்போக்கு என்பது ஒரு வகையான நோய்.
எனவே, தொடர் உதிரப்போக்கு இருந்தாலும், இயல்பாக மாதவிடாய் ஏற்படும் நாட்களை கணித்து விட்டு மீதமுள்ள நாட்களில் வழக்கம் போல் தொழுது கொள்ளலாம் என்று நபி (சல்) அவர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு முறை தொழும் போதும் ஒளு செய்து கொள்ளுமாறும் கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸ் மாதவிடாய் பற்றி தான் கூறுகிறது, தொடர் உதிரப்போக்கினைப் பற்றி மட்டும் தான் பேசுகிறது என்றாலும் இன்றைக்கு இதிலிருந்து வேறு சட்டங்களையும் எடுக்கலாம்.
அதாவது, ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ கட்டுப்பாட்டை மீறி சிறு நீர் வெளியாகிக் கொண்டேயிருக்கிறது என்று வைப்போம்.
அப்படியானால் அவருக்கும் இதே சட்டத்தை சொல்லலாம் தானே?
ஒவ்வொரு முறை தொழும் போதும் ஒளு செய்து கொண்டு நீ தொழலாம் என்று, மேற்கண்ட ஹதீஸை அடிப்படையாக வைத்தே நாம் ஃபத்வா வழங்கலாம்.
ஆக, ஒரு கருத்திலிருந்து இன்னொரு கருத்தினை விளங்கி சட்டமெடுப்பது என்பது எல்லாருடைய இயல்மான பேச்சுக்களிலும் உள்ளது தான்.
மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற பகுத்தறிவின் அடிப்படையே இது தான் எனும் போது, மார்க்கத்தில் இதை தனியே பிரித்துப் பார்க்கத் தேவையில்லை.
அடிப்படை என்றைக்கும் குர் ஆனும் ஹதீஸும் மட்டும் தான் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
தொடரும், இன்ஷா அல்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக