புதன், 8 ஜூலை, 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 16)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 16




மத்ஹப் நூற்களை எழுதியவன் ஓர் மன நோயாளி  (தொடர்ச்சி) :



ஊமை விபச்சாரத்தில் ஊமையாகும் சட்டம் :

ஒருவன் ஓர் ஊமைப் பெண்ணிடம் விபச்சாரம் செய்து விட்டால் இருவரில் எவர் மீதும் தண்டனை இல்லை.

நூல்: அல்பஹ்ருர் ராயிக், பாகம் 5, பக்கம் 20

(ஊமையல்லாத) ஒருவன் ஓர் ஊமைப் பெண்ணிடம் விபச்சாரம் செய்து விட்டால் அல்லது ஓர் ஊமையானவன், (ஊமையல்லாத) ஒரு பெண்ணிடம் விபச்சாரம் செய்து விட்டால் தண்டனை இல்லை.

தான் விபச்சாரம் செய்ததாக சைகை அல்லது எழுத்து மூலம் ஒப்புக் கொண்டாலும் அல்லது விபச்சாரம் செய்ததாக சாட்சிகள் அவனுக்கு எதிராக சாட்சி சொன்னாலும் விபச்சாரத் தண்டனையினாலோ அல்லது மற்ற தண்டனைகளில் எதனைக் கொண்டும் அவன் தண்டிக்கப்பட மாட்டான்.

இதை எழுதுவதற்கு சிறிதேனும் அறிவை பயன்படுத்தியிருப்பானா?
கடுகளவு சிந்தனையுள்ளவன் கூட எழுதாத மடமைகளையெல்லாம் சட்டம் என்கிற பெயரில் இவர்கள் எழுதி வைத்துள்ளனர்.

இன்னும் சொல்லப்போனால், ஊமைக்கு தான் சமூக பாதுகாப்பு அதிகம் தேவை.
வாய் பேசக்கூடிய பெண்ணை கற்பழித்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கையை விடவும் கடுமையான நடவடிக்கையை ஊமைப் பெண் பாதிக்கப்பட்டும் போது எடுக்க வேண்டும் என்பது தான் விபரமுள்ளவன் சொல்ல வேண்டியது.

எந்த அளவிற்கு மூளை வரண்ட ஒருவனது எழுத்தாக இந்த நத்ஹப் சட்டங்கள் இருக்கின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.



முஸ்லிம் அல்லாதவர் கற்பழித்தால் தண்டனை இல்லை :

மற்றொரு வேடிக்கையை பாருங்கள்.

அபுஹனீஃபாவின் கூற்றாக மப்ஷீத் எனும் ஹனஃபி நூலில் 9 ஆம் பாகம், 55 ஆம் பக்கத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள், ஒரு மாற்று மதத்தவர் ஒரு முஸ்லிம் பெண்ணை கற்பழித்து விட்டான் என்றால் அவனுக்கு எந்த தண்டனையும் இல்லை.

கற்பழிப்பில் என்ன முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர் என்கிற வேறுபாடு? இதிலேயே இவர்களது மடமை வெளியாகிறது.
மார்க்கத்தில் எந்த பிடிப்பும் இல்லாத ஒருவன் கூட தான் சார்ந்திருக்கும் மதத்தினருக்கு பிரச்சனை என்று வரும் போது கொந்தளிப்பான், இது மனித இயல்பு.
அத்தகைய சாதாரண மனித இயல்பு கூட இந்த மத்ஹப் ஆசிரியர்களுக்கு இல்லை என்பது எந்த அளவிற்கு வெட்ககேடானது?
என்பதை நாம் கவனிக்க வேண்டும்.


ஈத்பெரு நாள் தொழுகையில் சட்ட மீறல் :

மாதவிடாய் பெண்கள் கூட கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பெரு நாள் தொழுகைகளை பள்ளிவாசலை தவிர்த்து திடல்களில் தான் தொழ வேண்டும் என்று நபி (சல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதைப் பற்றி அபு ஹனீஃபா இமாம் சொன்னதாக இவர்கள் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

அதாவது, இப்படி பள்ளிவாசலுக்கு பதில் திடலுக்கு தான் செல்ல வேண்டும் என்பது தான் சரி.. என்று சொல்லி விட்டு,
இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் இது தேவையில்லை, பள்ளிவாசலிலேயே தொழுது கொள்வது தான் பாதுகாப்பு, படு கிழவிகள் வேண்டுமானால் திடலில் செல்லட்டும்,

என்று ஃபத்வா கொடுத்தாராம்.

ஆக, நபி (சல்) அவர்கள் கட்டளையிட்ட ஒரு காரியத்தை அப்பட்டமாக மீறுவதற்கு பெயர் மார்க்கமா? இதை தான் நாம் பின்பற்ற வேண்டுமா?
இப்படி மீறியவர் தான் இமாமா? அபு ஹனீஃபா இமாம் இவ்வாறு சொல்லியிருக்க மாட்டார் என்றே நாம் சொல்கிறோம், இருப்பினும் அவரது பெயரை பயன்படுத்தி இந்த மூடர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால் அதை எப்படி மார்க்கமாக கருதுவது?

இன்று முதல் இந்த சட்டம் இல்லை என்று அபு ஹனீஃபா காலத்தில் இந்த சட்டம் மீறப்படுகிறது என்பதிலேயே தெரிகிறது, இது வஹீயின் அடிப்படையில் மீறப்பட்டதில்லை என்று.
வஹி மட்டும் தான் மார்க்கம் என்கிற அடிப்படை எவரது உள்ளத்திலும் நிலைபெறாத காரணத்தால் தான் இது போன்ற உளரல்களையெல்லாம் மார்க்க சட்டம் என்று எண்ணுகின்ற நிலை ஏற்படுகின்றது.


தொழுகையை கேலி செய்யும் போக்கு :


தொழுகையில் நபி (சல்) அவர்கள் எப்படி ஓதினார்களோ அதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் நாமும் ஓத வேண்டும். அரபு மொழியில் இருவேறு பொருள் தரக்கூடிய சொல்லில் எந்த சொல்லையாவது பயன்படுத்தி ஓதலாமா? என்றால் கூடாது என்று நாம் அனைவரும் விளங்கி வைத்திருக்கிறோம்.
காரணம், அரபி மொழி என்பதனால் அங்கே சிறப்பு ஏதும் இல்லை, மாறாக, அல்லாஹ் அருளிய வஹீ செய்தியில் என்ன வாசகமோ அதை சொல்ல வேண்டும், அது தான் சிறப்பு.

ஆனால் இது பற்றி மத்ஹப் சட்டம் என்ன சொல்கிறது?

தொழுகையில் ஒருவன் ஃபார்சி மொழியில் ஓதினால் அவனது தொழுகை கூடும் !

இத்தோடு நிறுத்தவில்லை, தொழுகையில் தவ்ராத், இஞ்சீலை கூட ஓதலாமாம்.
அதுவும், தவ்ராத், இஞ்சீலில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரலாற்று செய்திகள் என்றால் ஓதக் கூடாதாம்,
மற்ற மற்ற வசனங்கள் என்றால் ஓதலாமாம்.

இது துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 485 இல் இருக்கின்றது.

தொழுகையை எந்த அளவிற்கு கேவலமாக கருதுகிறார்கள் என்று பாருங்கள்.

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள் என்று நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்க, அந்த நபி மொழியை காலில் போட்டு மிதிக்கும் வகையிலும் அல்லாஹ்வுடன் ஒரு அடியான் நேரடியாக உரையாடக்கூடிய ஒரு வழியான தொழுகையை இதற்கு மேல் எவராவது இழிவுபடுத்த முடியுமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் ஜும்மாவின் போது மிம்பரில் இமாம் ஏறி விட்டார்களென்றால் அரபி தவிர எதுவும் ஓத மாட்டார்களாம். 
மிம்பரில் ஏறி நபி (சல்) அவர்கள் அரபியில் பயான் செய்வார்கள் என்றால் அவர்களது தாய் மொழி அரபி, அதனால் அரபியில் பயான் செய்தார்கள், மக்களுக்கு அறிவுரை கூறக்கூடிய சபை அது, அதில் அவர்களுக்கும் மக்களுக்கும் தெரிந்த மொழியில் அவர்கள் பயான் செய்தார்கள்,
இன்று நமக்கு தெரிந்த தமிழ், மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் நாம் பயான் செய்கிறோம்.
இது தான் மார்க்க அடிப்படையில் சரி என்று நாம் சொல்லும் போது நம்மை விமர்சனம் செய்வார்களாம்.
அதுவே, இவர்களோ தொழுகையில் ஃபார்சியில் ஓதுவார்களாம், இஞ்சீலில் எழுதப்பட்டதை ஓதுவார்களாம்..

மடமையின் உச்சமில்லையா இது?


கூலிக்கு விபச்சாரம் செய்தால் குற்றமில்லை :

ஒருவன் ஒரு பெண்ணுடன் விபச்சாரம் செய்து விட்டு அவளுக்கு கூலி கொடுக்கவில்லையென்றால் அது குற்றம்.
செய்த விபச்சாரத்திற்கு கூலி கொடுத்து விட்டால் அது குற்றமில்லையாம்.

இப்படியொரு அபத்தத்தை சர்கஸிஸ் மப்சூத் எனும் ஹனஃபி மத்ஹப் நூலில் 9 ஆம் பாகம், 58 ஆம் பக்கத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

விபச்சாரத்தை அடியோடு ஒழித்துக் கட்டும் இஸ்லாத்தில் இவர்கள் செய்யும் கூத்தினை பாருங்கள், இவர்கள் விபச்சாரத்தை தடுக்கிறார்களா அல்லது ஏவுகிறார்களா?

எந்த பெண்ணுடனும் விபச்சாரம் செய்து கொள், இறுதியில் அவளுக்கு காசு மட்டும் கொடுத்தால் போதும் என்றால் இதற்கு மிஞ்சிய சமூக இழிவு வேறு உண்டா?

காஃபிர்களும் மாற்று மத்த்தவர்களும் இவர்களை விட ஆயிரம் மடங்கு தேவலாம், அவர்கள் கூட இந்த அளவிற்கு சமூகத்தை இழிவுப்படுத்தும் சட்டங்களை வகுத்திருக்கவில்லை.

வேடிக்கையின் உச்சம் என்ன தெரியுமா?

கூலிக்கு விபச்சாரம் செய்வது குற்றமில்லை என்று எழுதி அத்துடன் இவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை.
ஏன், குற்றமில்லை என்பதற்கு விளக்கமும் சொல்கிறார்கள்.
அதாவது, விபச்சாரம் செய்து கூலியும் கொடுக்கும் போது அது நிக்காஹ்வுக்கான மஹர் போல ஆகி விடுகிறதாம். (இதுவும் அதே பாகம் அதே பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது)

விபச்சாரத்தை ஊக்குவித்ததோடு நிறுத்தாமல், அதை திருமணம் என்னும் புனிதமான உறவோடு தொடர்புபடுத்தி, அந்த உறவையும் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பது இங்கு கவனிக்க வேண்டிய கூடுதல் தகவல்.

இப்படியெல்லாம் ஏன் எழுதினார்கள்? என்று சிந்திக்கையில், இதிலெல்லாம் சில சுய ஆதாயங்கள் ஒளிந்திருந்தன.
மன்னர்கள் எல்லாம் எந்த பெண்ணுடனும் ஜல்சா செய்வதற்கு இஸ்லாம் தடையாக இருந்தது.
அதுவே இது போன்ற குப்பைகளை சட்டம் என்று ஆக்கிக் கொண்டால் எந்த பெண்ணுடனும் உல்லாசமாக இருக்கலாம், அவளுக்கான கூலியை மட்டும் கொடுத்து விட்டால் விஷயம் முடிந்தது.
இந்த நோக்கத்தில் எழுதப்பட்டது தான் இந்த மத்ஹப்.

இது தான் இவர்களுக்கு வேத வாக்காம், இது தான் இவர்களுக்கு மார்க்கமாம்.



காசுக்கு தொழுகை :

எந்த அமலை நாம் செய்வதாக இருந்தாலும் நிய்யத் அவசியம் என்பதை நாம் அறிவோம்.
எண்ணம் சரியில்லாமல் என்ன அமலை நாம் செய்தாலும் அல்லாஹ் அதை கருத்தில் கொள்ள மாட்டான் என்பது மட்டுமல்ல, அதற்கு தண்டனையும் உண்டு.
உயிர்தியாகம் செய்த ஒருவர், மார்க்க அறிஞர் ஒருவர், கொடை வள்ளல் ஒருவர் என மூவரை அல்லாஹ் அழைத்து விசாரித்து, நீங்கள் செய்த காரியங்களெல்லாம் உண்மை தான், ஆனால் அவற்றை எனக்காக நீங்கள் செய்யவில்லை, மாறாக ஊரார் உங்களை மெச்ச வேண்டும் என்பதற்காக தான் செய்தீர்கள் என்று கூறி அவர்களை நரகில் தள்ளுவான் என்று நபி (சல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இஸ்லாமிய மார்க்கம் இப்படி சொல்லும் போது, மத்ஹப் கூறுவதைப் பாருங்கள்.

ஒருவர் இன்னொருவரை அழைத்து, நீ தொழுதால் நான் உனக்கு இத்தனை தங்கக் காசுகள் தருகிறேஎன் என்று சொல்லி, அவனும் அந்த தங்க காசு கிடைக்கும் என்கிற நிய்யத்தை மனதில் கொண்டவாறே தொழுதால் அந்த தொழுகை அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படும்

என்று துர்ருல் முக்தாரில் எழுதி வைத்திருக்கிறார்கள்.


மது வியாபாரமும் ஹலால் தான் :

இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட மதுபானம் என்பதை நாம் அருந்துவதற்கு எபப்டி தடையோ அது போல் வியாபாரம் செய்வதற்கும் தடை தான் என்பதை நாம் அறிவோம்.
தடுக்கப்பட்ட எந்த பொருளையும் விற்கவும் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தடை விதித்திருந்தார்கள்.

ஆனால், சாராயக் கடை ஒன்றை ஒருவன் திறக்க விரும்பினால் அதில் முஸ்லிம்களை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வது தான் தடை, மாறாக மாற்று மதத்தை சேர்ந்த ஒருவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டு அவன் மூலமாக வியாபாரம் செய்வது தடையில்லை என்று ஹனஃபி மத்ஹபின் ஹிதாயா எனும் நூலில் 6 ஆம் பாகம், 439 ஆம் பக்கத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.


கட்டாயப்படுத்தி செய்யப்படும் காரியமும் செல்லும் :

எந்தவொரு காரியத்தையும் உளப்பூர்வமாக நாம் செய்தால் தான் அது செல்லும்.
பிறரது கட்டாயத்தின் பேரில் செய்தால் அதை அல்லாஹ் ஏற்க மாட்டான்.

நாம் தொழுகிறோம் என்றால், நாமாக விரும்பி, அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனது கட்டளைக்கு இணங்க தொழுதால் தான் அல்லாஹ் ஏற்பான். அதுவே, ஒருவரது கொலை மிரட்டலுக்கு பயந்தோ, வேறு ஏதும் நிர்பந்தத்திற்கு ஆளாகிய நிலையிலோ நாம் செய்யும் அமல்களை அல்லாஹ் ஏற்பானா? என்றால் நிச்சயம் மாட்டான்.

ஆனால், மத்ஹப் நூற்கள் என்ன சொல்கின்றன?

கட்டாயப்படுத்தி செய்யப்படும் நேர்ச்சை, கட்டாயப்படுத்தி செய்யப்படும் நிக்காஹ் என அனைத்துமே அல்லாஹ்விடம் செல்லும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.


ஓடும் நீர் என்றால் என்ன?

மலை அடிவாரங்களிலிர்ந்து பனிக்கட்டிகள் உருகி அவை நீராக மாறி ஆற்றில் கலந்து ஓடுவதை தான் ஓடுகின்ற நீர் என்போம்.
அத்தகைய ஓடும் நீர் இஸ்லாத்தின் பார்வையில் சுத்தமான நீர் தான்.
ஆனால், மத்ஹப் நூல் ஓடும் நீர் என்றால் என்ன என்பதற்கு கூறும் விளக்கத்தைப் பாருங்கள்.

ஒருவன் ஒரு பக்கமாக நின்று ஒரு குழாயில் தண்ணீரை பயன்படுத்துகிறான், பிறகு இன்னொரு இணைப்பை சொருகி அந்த நீரை அடுத்த பக்கத்திற்கு அனுப்புகிறான், அந்த பக்கத்தில் இன்னொருவர் அதே நீரை பயன்படுத்துகிறார்.

இதுதான் ஓடும் நீர் !

எந்த அளவிற்கு அரை வேக்காடுகளாக இருப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

இந்த கூறு கெட்ட சட்டத்தை துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 188 இல் எழுதியிருக்கிறார்கள்.



நாள், நட்சத்திரம் பார்ப்பது தான் இஸ்லாமா?

புதன்கிழமை நோயாளிகளை நோய் விசாரிக்க செல்ல வேண்டாம் என்று துர்ருல் முக்தார் பாகம் 6, பக்கம் 388 இல் எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட நாளில் என்ன இருக்கிறது? இது வெளிப்படையான மூட நம்பிக்கை அல்லவா?

ஹிந்துக்கள் எப்படி நாள், நட்சத்திரம், நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பார்களோ அதையே இந்த மத்ஹப் நூலும் பின்பற்றுவதை காணலாம்.



நாய் மாமிசம், மனித மாமிசம் :

சோப் தயாரிக்க பயன்படும் கிடங்கு ஒன்றில் ஒரு நாய் விழுந்து இறந்து விட்டால், அதுவும் அந்த கலவையுடன் கலந்து விட்டால் அதை பயன்படுத்துவது குற்றமில்லை.
மனிதனே விழுந்து கலவையாகி விட்டாலும் அதை பயன்படுத்துவதும் குற்றமில்லை.

என்று மத்ஹபில் நூற்களில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இது போன்று, ஒருவர் ஒரு ஆட்டை திருட எண்ணினார் என்றால் ஆட்டினை முழுமையாக திருடுவது தான் குற்றம்.
அதை அங்கேயே வெட்டி கறியாக்கி அதன் இறைச்சியை திருடி எடுத்துச் சென்றால் அது குற்றமில்லை என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள்.



நபியை இழிவுப்படுத்தும் மத்ஹப் :

நபி (சல்) அவர்கள் சொன்னதாக துர்ர்ல் முக்தார் சொல்வதைப் பாருங்கள்.

என்னால் ஆதமுக்கு பெருமை, எனக்கோ அபு ஹனீஹாவினால் தான் பெருமை !
அவரை நேசித்தால் நீங்கள் என்னை நேசித்தவர் ஆவீர்கள்,
அவை வெறுத்தால் என்னை வெறுத்தவர் ஆவீர்கள்.

இப்படி நபி (சல்) அவர்கள் சொன்னதாக துர்ருல் முக்தாரில் 13 ஆம் பக்கத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இப்படி நபி (சல்) அவர்கள் ஒரு போதும் சொன்னதில்லை, அவர்களது பெயரால் பொய் தான் சொல்லியிருக்கிறார்கள் என்பது ஒரு புறமிருக்க, அபு ஹனீஃபா எனும் மனிதரால் தான் நபி (சல்) அவர்களே பெருமையடைகிறார்கள் என்று சொல்லி அபு ஹனீஃபாவை விட அல்லாஹ்வின் தூதர் தகுதியில் குறைவானவர் என்று அப்பட்டமாக எழுதியிருப்பதை நாம் கவனிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

இவர்கள் தான் மார்க்கத்தை காக்ககூடியவர்களா? இவர்கள் எழுதிய இந்த குப்பைகளை கற்று தான் ஒருவன் முஸ்லிமாக இருக்க முடியுமா?

சிந்திக்க வேண்டும்.

அபு ஹனீஃபா இமாமின் மீது பக்தியை ஊட்ட வேண்டும் என்பதற்காக தான் மதரசாவில் கற்பதற்காக சேர்பவர்களிடம் இப்படியான மூளை சலவைகளை இவர்கள் மேற்கொள்கின்றனர்.
அபுஹனிஃபா இமாம் என்றால் அவர் நபியை விடவும் மேலானவர் என்கிற தோற்றத்தை மக்கள் உள்ளங்களில் விதைத்தால் தான் நம் மத்ஹபிற்கென்று நம்மால் ஆள் சேர்க்க முடியும் என்கிற நோக்கமே இது போன்ற அபத்தங்களுக்கு அடிப்படையாக இருந்தது.

அபு ஹனீஃபா மட்டும் மூஸா நபி காலத்திலோ ஈஸா நபி காலத்திலோ  வாழ்ந்திருந்தால் அந்த மக்கள் யூதர்களாகவோ கிறுத்தவர்களாகவோ சென்றிருக்க மாட்டார்கள் என்றும் அதே துர்ருல் முக்தாரில் 13 ஆம் பக்கத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
மேலும், ஃபத்வாக்களை வழங்குகின்ற முழு அதிகாரத்தையும் அல்லாஹ் அபு ஹனீஃபா இமாமுக்கு வழங்கியிருக்கிறான் என்றும், ஈஸா நபி நாளை கியாமத் நாளுக்கு சமீபமாக உலகிற்கு வரும் போது அவர்களும் இந்த ஹனஃபி மத்ஹப் சட்டத்தை தான் பின்பற்றுவார்கள் எனவும் அண்டப்புளுகுகளை எழுதி வைத்து அபு ஹனீஃபா இமாம் மீதும் இந்த மத்ஹப் மீதும் ஒரு பக்தி ஊட்ட முனைவதை காண்கிறோம்.

அபுஹனீஃபா இமாமை எவராவது பின்பற்ற மறுத்தால் அவருக்கு மணல் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வின் சாபம் இறங்கும் என்று வேறு எச்சரிக்கை செய்து, ஆள் சேர்த்தனர்.

மத்ஹபில் உள்ள அசிங்கங்களையும் ஆபாசங்களையும், வக்கிரச் சட்டங்களையும் சிந்திட்த்ஹு அதை விட்டும் ஒருவன் விலகி விட நாடினாலும், மணல் அளவு சாபம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்து விடக் கூடாதே என்கிற அச்சத்தால் அதிலிருந்து விடுபட முடியாமல் இருப்பதற்கு இது போன்ற பொய்கள் இந்த மத்ஹப் காப்பார்களுக்கு உதவி புரிந்தன.

தனி நபர்களை அளவுக்கு மீறி புகழ்வதும், அவரது கூற்றை அல்லாஹ்வின் கூற்றுக்கு இணையாக ஆக்குவது தான் இவர்களது வழிகேடான கொள்கையின் தாரக மந்திரம்.

புர்ஹானுதீன் எனும் அவ்லியா ஒரு முறை மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார், அப்போது திடீரென உட்கார்கிறார், திடீரென எழுந்து நிற்கிறார், இப்படியே செய்து கொண்டிருந்ததைக் கண்ட மாணவர்கள், ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்ட போது, அந்த அவ்லியா, "எனது ஆசிரியரின் மகன் வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறான், அவன் என் கண் பார்வைக்கு வரும் போது மரியாதை நிமித்தம் எழுந்து கொள்கிறேன், என் பார்வையை விட்டு மறைந்த பிறகு உட்கார்ந்து கொள்கிறேன், என்றாராம்."

இதை உதாரணத்திற்கு சொல்லி, இது போல் உங்கள் ஹசரத்துகளை நீங்கள் மதிக்க வேண்டும் என்பதாக, மதரசாக்களில் ஆரம்பத்திலேயே மூளை சலவை செய்வர்.

இன்னும், 
அலி (ரலி) சொன்னார்களாம், எனக்கு யாரேனும் ஒரு வார்த்தையை கற்றுக் கொடுத்தாலும் அவருக்கு நான் அடிமை, என்னை அவர் சந்தையில் விற்க கூட செய்யலாம்.

எப்படி மூளை சலவை செய்கிறார்கள் என்று பாருங்கள்.
எப்பேற்பட்ட அவ்லியாவாக இருந்தாலும் ஆசிரியர்களுக்கு அவர்கள் கொடுத்த மரியாதையை பார்த்தீர்களா, அதே போல் எங்களையும் நீங்கள் மதிக்க வேண்டும் என்று மாணவர்களை மூளை சலவை செய்து அதன் மூலம் அவர்களை தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று தப்புக் கணக்கு போட்டனர்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக