வெள்ளி, 10 ஜூலை, 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 18)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 18மத்ஹப் நூற்களை எழுதியவன் ஓர் மன நோயாளி (தொடர்ச்சி)


ஷாஃபி மத்ஹப் சட்டங்களில் இன்னும் பல மடமைகள் உள்ளன.


பெயருக்கு என்ன முக்கியத்துவம் ?

பெயருக்கு எந்த முக்கியத்துவமும் மார்க்கத்தில் சொல்லப்படவில்லை என்பதை நாம் அறிவோம்,

ஒவ்வொருவரும் அவரவரது நற்செயல்களின் மூலம் தான் அல்லாஹ்விடத்தில் சிறப்பினை பெற முடியுமே தவிர, அர்த்தமுள்ள பெயர்களை சூட்டிக் கொள்வதால் அதை அல்லாஹ் பாராட்டுவானா? நிச்சயமாக இல்லை.

ஆனால், ஷாஃபி மத்ஹப் சொல்கிறது, முஹம்மது என்று பெயர் வைப்பது சிறப்பு, அதன் மூலம் நாம் முஹம்மது நபியை கண்ணியப்படுத்துகிறோம்.

இதில் எந்த அர்த்தமாவது இருக்கிறதா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.மலக்குமார்களுக்கு நபி தேவையா?

மலக்குமார்களின் ஜனாசாவை கண்டதாக ஷாஃபி குதாபில் எழுதி வைத்திருக்கும் வேடிக்கைப் பற்றி நாம் ஏற்கனவே கண்டோம்.
இதே போன்று மற்றுமொரு வேடிக்கையை பாருங்கள்.

முஹம்மது நபி (சல்) அவர்கள் மனிதர்களுக்கு மட்டும் நபி இல்லையாம்,
ஜின் இனத்திற்கும் அவர் தான் நபியாம்,

அத்தோடு, மலக்குமார்களுக்கும் அவர்கள் தான் நபியாம் !
இவ்வாறு ஃபத்ஹுல் முஃஈனில் பாகம் 1, பக்கம் 91 இல் எழுதி வைத்திருக்கிறார்கள்.

மார்க்கத்தை எந்த அளவிற்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த சட்டமும் ஒரு சான்றாக இருக்கின்றது.

யாருக்கு நபி தேவை? யாருக்கு பகுத்தறிவு வழங்கப்பட்டு, தீயதையும் நல்லதையும் சரி சமமாக தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கபப்ட்டிருக்கிறதோ அவர்களை செம்மைப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு நபி தேவை.
அவர்களுக்கு தான் வேதம் தேவை.

மலக்குமார்கள் தவறு செய்பவர்களா? அப்படியா அல்லாஹ் படைத்திருக்கிறான்?
இல்லை. மலக்குமார்களின் வேலையே அல்லாஹ் ஏவியதை அப்படியே செய்வது ஒன்று தான் எனும் போது அவர்களை செம்மைப்படுத்துவதற்கும் வாழ்க்கையில் நேரான பாதையை காட்டுவதற்கும் என்ன தேவை இருக்கிறது?

இந்த அடிப்படை கூட புரியாமல் சட்டமியற்றியிருக்கிறார்கள் என்றால் இதுவா மார்க்கம்? இதை ஒருவர் பின்பற்றினால் வெற்று பெற முடியுமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


தலை முடியின் எண்ணிக்கை :

எவருடைய தலை முடி எண்ணிக்கை என்னவென்று யாருக்காவது சொல்ல இயலுமா?
அது சாத்தியமே கிடையாது.
ஆனால், ஷாஃபி நூலை எழுதியவர் சொல்வதைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (சல்) அவர்களது தலையில் ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் முடிகள் இருந்தன‌
இது யஃனத்துத் தாலிபீன் பாகம் 1, பக்கம் 39 இல் எழுதப்பட்டிருக்கிறது.

இதை எந்த ஒருவராவது எண்ணியிருக்க முடியுமா? இது சாத்தியமா முதலில்?
கற்பனையாக மூளைக்கு என்ன எட்டினாலும் அதை எழுதி வைத்துக் கொண்டு மார்க்க சட்டம் என்று கூறுவது ட் ஹான் இவர்களது நிலை.
இதை மார்க்க நூலாக நாம் ஏற்றால் நமது மறுமை வாழ்க்கையே பாழாகி விடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


வேதங்கள் மொத்தம் எத்தனை ?

நபிமார்களின் மொத்த எண்ணிக்கை நமக்குத் தெரியாவிட்டாலும், பல ஆயிரம் நபிமார்கள் இந்த உலகில் தோன்றி மறைந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோம், ஒவ்வொரு மொழி பேசக் கூடியவர்களுக்கும் நபி வந்திருக்கிறார்கள், எல்லா சமூகத்திற்கும் நபி வந்திருக்கிறார்கள்.

அதே போன்று, எந்த நபியாக இருந்தாலும் அவர் அல்லாஹ்விடமிருந்து வேதத்தையும் கொண்டு தான் வருவார்.
ஆக, வேதத்தின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் கூட, அதுவும் பல ஆயிரங்கள் இருக்கும்.

ஆனால், இது பற்றி ஷாஃபி மத்ஹப் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

மொத்த வேதங்களின் எண்ணிக்கை 104 ஆம்.

அதில் சீர் நபிக்கு (அப்படியொரு நபி இருக்கிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது தனி விஷயம்) 60 வேதங்களாம்.

இப்ராஹிம் நபிக்கு 30 வேதங்களாம்

மூஸா நபிக்கு 10.

பிறகு, தவ்ராத், இஞ்சீல், சபுர் மற்றும் குர் ஆன். ஆக மொத்தம் 104.

இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.

இதற்கு எந்த அடிப்படை ஆதாரமாவது இருக்கிறதா?

இவர்கள் கூறும் கணக்கின்படி பார்க்கப்போனால், 4,5 நபிமார்களுக்கு தான் வேதம் அருளபப்ட்டிருக்கிறது.
ஆனால், அல்லாஹ் எத்தனையோ நபிமார்களைப் பற்றியும் அவர்களது வரலாறுகளைப் பற்றியும் கூறுகிறான்.
எந்த நபியாக இருந்தாலும் அவருக்கு வேதம் கொடுக்கப்படாமல் விடப்படவில்லை என்று சொல்கிறான்.

மார்க்கத்தின் சாயல் கூட தங்கள் சிந்தனையில் பெறாதவர்கள் தான் இது போன்ற சட்டத்தை எழுதுவார்கள்.

இதை சொல்லி விட்டு இத்துடன் இவர்கள் நிறுத்தவில்லை.
இதையொட்டிய மிகப்பெரிய தத்துவம் (?) ஒன்றையும் சொல்கிறார்கள்.

அதாவது, இந்த 104 வேதங்கள் சொல்கின்ற கருத்துக்களும் ஒரு சேர குர் ஆனில் மட்டும் இருக்கிறதாம்.
இந்த குர் ஆனின் மொத்த செய்தியும் சூரத்துல் ஃபாத்திஹாவில் ஒளிந்திருக்கிறதாம்.
சூரத்துல் ஃபாத்திஹாவில் உள்ள மொத்த கருத்துக்களும் பிஸ்மில்லாஹ்வில் இருக்கிறதாம்.
பிஸ்மில்லாஹ்வின் மொத்த கருத்தும் அதன் முதல் எழுத்தான "பே" வில் இருக்கிறதாம்.
பே வில் உள்ள மொத்த கருத்தும் "பே" விற்கு கீழுள்ள புள்ளியில் இருக்கிறதாம்.

இப்படியெல்லாம் எழுதி அல்லாஹ்வையும் அவனது மார்க்கத்தையும் எந்த அளவிற்கு கேலிக்கூத்தாக்க முடியுமோ அந்த அளவிற்கு கேலி செய்திருக்கிறார்கள்.

தங்கள் அவ்லியாக்களை வரம்பு மீறி புகழ்வதன் மூலம் தான் தங்கள் கொள்கையை வளர்க்க முடியும் என்று எண்ணுகின்ற இவர்கள்,இதற்கென பல்வேறு கட்டுக்கதைகளையும் மார்க்கம் என்று கூறியும் அவ்லியாக்களின் வரலாறுகள் எனக் கூறியும் எழுதி வைத்து, பாமரர்களை ஏமாற்றித் திரிகின்றனர்.

எந்த அளவிற்கென்றால், ஒருவர் தனியே அமர்ந்து அல்லாஹ் அல்லாஹ் என்று முழு ஈடுபாட்டோடு திக்ர் செய்தால் இறுதியில் அவர் "குன்" (ஆகு) என்று சொன்னால் ஆகி விடும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

அதாவது, முழு ஈடுபாட்டுடன் திக்ர் செய்யும் போது அவரே அல்லாஹ்வாக மாறி விடுவார்கள் என்கிற பச்சை குஃப்ரை எழுதி வைத்திருக்கிறார்கள்.

அது போல, ரஹீம் ரஹீம் என்று ஒரு காகிதத்தில் 21 முறை எழுதி அந்த காகிதத்தை தலைவலி எனும் நோயுடைய ஒருவரது கழுத்தில் மாட்டி விட்டால் அவருக்கு தலை வலி பறந்து விடும்.

மன நோயாளி ஒருவனது காதில் ரஹீம் ரஹீம் என 7 முறை சொன்னால் அவனுக்கு குணம் கிடைத்து விடும்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறார்களென்றால், முழு ஈடுபாட்டுடன் நம்மால் திக்ர் செய்ய இயலாத காரணத்தால் தான் நாம் ஆகு என்று சொன்னாலும் ஆகாமல் இருக்கின்றது, முழு ஈடுபாட்டுடன் திக்ர் செய்பவர்கள் தான் அவ்லியாக்கள், எனவே அவர்களுக்கு அத்தகைய அற்புத சக்தி இருந்தது என்கிற பச்சை குஃப்ரை நிலைனாட்டும் பொருட்டே இத்தகைய கதைகளை அவிழ்த்து விடுகின்றனர்.சூஃபிசம் எனும் வழிகேடு :


வஹீ மட்டும் தான் மார்க்கம் என்கிற இந்த தொடரில் இதுவரை சஹாபாக்களை பின்பற்றுவது ஏன் தவறு என்பதைப் பற்றியும், மத்ஹபை பின்பற்றுவது ஏன் கூடாது என்பது பற்றியும் விளக்கமாக கண்டோம்.
இன்னுமொரு கொள்கை குழப்பம் சமூகத்தில் நிலவியிருக்கிறது.
அது சூஃபியாக்களின் கொள்கை. அதுவும் மார்க்கம் தான், அதுவும் வஹீ தான் என்பதாக ஒரு நம்பிக்கையும் சிலரிடத்தில் காணப்படுகிறது.
எனவே, அதைப் பற்றியும் சற்று விளக்கமாக அறிந்து கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

இவர்களது கொள்கையை இருவாறாக பிரிப்பார்கள்.

ஒன்று இல்முஸ் சிர்.அதாவது ரகசிய ஞானம்.
இன்னொன்று இல்முல் முகாசஃபா, அதாவது, நேரடி ஞானம்.ரகசிய ஞானம் இஸ்லாத்தில் இருக்கிறதா?


முதலில் ரகசிய ஞானம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
அதாவது, அல்லாஹ் அருளிய வஹி செய்தியில் இரண்டு வகை இருந்ததாம்.
ஒன்று, பாமரர்களுக்கான வஹீ.
இன்னொன்று அறிஞர்கள், தங்களுக்கிடையே மட்டும் பரிமாறிக் கொள்ளும் வஹீ.

பாமரர்களிடையே இருக்கும் வஹீ தான் இன்று நம் கைகளில் இருக்கும் குர் ஆனும் ஹதீஸும்.
இது அல்லாமல், அறிஞர்கள், ஞானிகள் , இவர்களிடம் அல்லாஹ் தனியாக சில செய்திகளை சொல்லியிருக்கிறான், அதை அவர்கள் தங்களுக்குள் மட்டும் வைத்துக் கொள்வார்கள், பாமரர்களிடம் சொல்ல மாட்டார்கள்.
இப்படியான வஹீயும் மார்க்கத்தில் இருக்கிறது என்பது இவர்களது கொள்கை.


இப்படி இஸ்லாம் சொல்கிறதா? அல்லாஹ்விடத்திலிருந்து அருளப்பட்டவைகள் அனைத்துமே நம்மிடம் வந்து விட்டதே தவிர, பிரத்தியேகமாக எவருக்கும் அல்லாஹ் எதையும் அனுப்பவில்லை.
இவர்கள் ஏன் இத்தகைய பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்றால் அதற்கும் காரணமில்லாமல் இல்லை.
மார்க்கம் என்கிற பெயரில் எதையாவது இவர்கள் செய்கின்ற போது, அதற்கு குர் ஆனிலோ ஹதீஸிலோ சான்றுகளை காட்ட வேண்டும்.
அப்படி சான்றுகள் காட்ட இயலாது போகும் போது, இது எங்கள் ஷேக் எங்களுக்கு சொன்னது, இது அந்த ஷேக் செய்தது, இது அந்த அவ்லியாவின் கராமத் மூலம் அறிந்தது என்றெல்லாம் நம்மை ஏமாற்றுவதற்கு இந்த வாதம் தான் இவர்களுக்கு உதவி புரியும்.

ஆனால், இவர்களது வாதம் முற்றிலும் தவறானது என்பதற்கு குர் ஆனிலும் ஹதீஸிலுமே பல்வேறு சான்றுகளை நம்மால் காட்ட முடியும்.

நபி (சல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது மக்களிடம் முதன்முதலாக கேட்பதே இதைப் பற்றி தான்.

அரஃபா பெருவெளியில் ஒன்று குழுமியிருந்த சஹாபாக்களை நோக்கி பெருமானார் (சல்) அவர்கள், அல்லாஹ்விடமிருந்து வந்த அனைத்தையும் நான் உங்களுக்கு சொல்லி விட்டேனா?, என்று மூன்று முறை கேட்கிறார்கள்.
ஆம் யா ரசூலுல்லாஹ், அனைத்தையும் நீங்கள் எங்களுக்கு சொல்லித் தந்து விட்டீர்கள் என்று குழுமியிருந்த சஹாபாக்கள் கூறுகிறார்கள்.
யா அல்லாஹ், இதற்கு நீ சாட்சியாக இருந்து கொள் என்று நபி (சல்) அவர்கள் சொல்கிறார்கள்.

இந்த சம்பவம் புஹாரி 105 ஆம் ஹதீஸாக பதிவாகியுள்ளது.

இதிலிருந்து நாம் தெரிவது என்ன?
மார்க்கம் என்கிற முறையில் எதையெல்லாம் அல்லாஹ் அருளினானோ அவை அனைத்தையும் அனைத்து மக்களுக்கும் நபி (சல்) அவர்கள் எத்தி வைத்து விட்டார்கள். எந்த ஒளிவு மறையும் இல்லை.

இன்னும் ஏராளமான இறை வசனங்கள், இந்த மார்க்கம் அனைவருக்கும் பொதுவானது என்கிற கருத்தையும், அனைத்து மக்களுக்கும் சமமாக நபி (சல்) அவர்கள் இஸ்லாத்தை போதித்திருக்கிறார்கள் என்கிற கருத்தையும் தெளிவாக சொல்வதை நாம் காணலாம்.
உதாரணத்திற்கு சில வசனங்களைப் பார்ப்போம்.


வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.
மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (2: 159, 160)

அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் 1  அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (2: 174)

வேதத்தில் எதையாவது யாராவது மறைத்தால் அது அல்லாஹ்வின் சாபத்திற்குரியது என்று இந்த வசனம் சொல்கிறது.

தூதரே! உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லை யானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! (5:67)

வேதத்தில் எதையாவது யாராவது மறைத்தால் அது அல்லாஹ்வின் சாபத்திற்குரியது என்று இந்த வசனம் சொல்கிறது.


அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான்.  (72:28)

அல்லாஹ்வின் வஹீயை நபிமார்கள் ஒழுங்காக மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்களா என்பதை கவனிப்பதற்காகவே மலக்குமார்களை அல்லாஹ் அனுப்புவதாக சொல்கிறான்.

இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக் கத்திற்குரியவன் ஒரே ஒருவனே இருக் கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள் வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற் காகவும் (இது அருளப்பட்டுள்ளது.(14:52)

இது மனித குலம் முழுமைக்கும் சென்றடைய வேண்டிய வஹீ செய்தியாகும் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.


அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வது தான் நமது தூதர் மீது உள்ளது. (64:12)


அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப் படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (5:92)

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக் கும் கட்டுப்படுங்கள்!' எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.  (24:54)


இந்த வசனங்கள் அனைத்திலும், தெளிவாக எடுத்துச் சொல்வது ஒன்று தான் நபி மார்களின் வேலை என்று அல்லாஹ் சொல்கிறான்.

முத்தாய்ப்பாக,

அவர்கள் புறக்கணித்தால் 'உங்கள் அனைவருக்கும் சமமாக அறிவித்து விட்டேன். உங்களுக்கு எச்சரிக்கப்படுவது அருகில் உள்ளதா? தூரத்தில் உள்ளதா? என்பதை அறிய மாட்டேன்' என்று கூறுவீராக! (21:109)

என்று அல்லாஹ் சொல்கிறான்.

இந்த மார்க்கத்தை உங்கள் அனைவருக்கும் சமமாக அறிவித்து விட்டேன் என்று அல்லாஹ் சொல்ல சொல்வதிலிருந்தே, ரகசிய ஞானம் என்று தனியே அறிஞர்களுக்கும் வலிமார்களுக்கும் மட்டும் அல்லாஹ் எதையும் அறிவித்துக் கொடுப்பது கிடையாது என்று தெளிவாக விளங்குகிறது.

மேற்கண்ட குர் ஆன், ஹதீஸ் சான்றுகளிலிருந்து, வஹீ செய்தி என்பது இவர்கள் கூறுவது போல் ரகசியமாய் அனுப்பப்பட்டது, வெளிப்படையாய் அனுப்பபப்ட்டது என்றெல்லாம் பிரிப்பதற்கு யாதொரு சான்றும் இல்லை என்பது தெளிவாகிறது.

புஹாரியில் வரக்கூடிய ஒரு ஹதீஸினை தங்கள் கொள்கைக்கு சான்றாக இவர்கள் காட்டுவார்கள்.
அதாவது, ஹுதைஃபா (ரலி) அவர்கள், ஏனைய சஹாபாக்கள் அறிந்திடாத பல செய்திகளை அறிந்திருந்தார்கள் எனவும், நபி (சல்) அவர்கள், அவருக்கு மட்டும் ரகசியமாக அல தகவல்களை தெரிவித்திருந்தார்கள் எனவும், இதிலிருந்து, ரகசிய ஞானம் என்கிற ஒன்றும் இருக்கிறது எனவும் வாதம் புரிவர்.

இந்த வாதம் சரியா? என்பதை அறிவதற்கு, தபுக் யுத்தம் தொடர்பான சம்பவம் ஒன்றினை சுருக்கமாக அறிந்து கொள்வது அவசியம்.

தபுக் யுத்தம் முடிந்து நபிகள் நாயகம் (சல்) அவர்களும் ஏனைய சஹாபாக்களும் திரும்பிக் கொண்டிருந்த போது, எந்த வழியாக திரும்புவது என்பது பற்றி பேச்சு வந்தது.
நபி (சல்) அவர்கள், ஒரு தூதர் வழியாக ஏனைய சஹாபாக்களிடம், அவர்கள் அனைவரையும் பதனுல் வாதி எனும் இடம் வழியாக செல்லுமாறு கட்டளையிட்டார்கள்.
தான் மட்டும் வேறோரு கணவாய் வழியாக செல்லப்போவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.
தபூக் யுத்தத்தைப் பொறுத்தவரை, சஹாபாக்களுடன் முனாஃபீக்குகள் சிலரும் இரண்டற கலந்திருந்தனர்.
நபி (சல்) அவர்கள் மட்டும் கணவாய் வழியாக செல்லவிருக்கிறார்கள், ஏனைய சஹாபாக்கள் பதனுல் வாதி வழியாக செல்கிறார்கள் என்பதை அறிந்த முனாஃபிக்குகள், சஹாபாக்களுடன் செல்லாமல் அப்படியே பின்வாங்கிக் கொண்டனர்.
நபி (சல்) அவர்களை கொலை செய்வதற்கு இது தான் சரியான சந்தர்ப்பம் என்று கருதிய அவர்கள், ரகசியமாய் நபி (சல்) அவர்களை பின்தொடர்ந்தார்கள்.

கணவாய் வழியாக நபி (சல்) அவர்களுடன் ஹுதைஃபா (ரலி) அவர்களும் அம்மார் பின் யாசர் (ரலி) அவர்களும் சென்றார்கள்.
கணவாயை அடைந்ததும், முனாஃபிக்குகள் சிலர் தாக்குவதற்கு நெருங்க, அம்மார் பின் யாசர் (ரலி) அவர்கள் கடுமையாக போரிட்டு அவர்களை துரத்தியடிக்கின்றார்கள்.

வந்தவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா? என்று நபி (சல்) அவர்கள் கேட்க, அம்மார் பின் யாசர் (ரலி) அவர்களும் ஹுதைஃபா அவர்களும், தெரியாது என பதிலளிக்கிறார்கள்.

இவர்கள் தான் முனாஃபிக்குகள், இது போல் இன்னும் பல முனாஃபிக்குகளை அல்லாஹ் அடையாளம் காட்டித் தந்திருக்கிறான் என்று கூறிய நபி (சல்) அவர்கள், அந்த முனாஃபிக்குகள் யார் யார்? என்கிற தகவலையும் அவர்களுக்கு அடையாளப்படுத்துகிறார்கள்.

இது தான் இந்த சூஃபிக்கள் சொல்லும் ரகசிய ஞானம்.

இது மார்க்க ரகசியமா? இதிலிருந்து, அல்லாஹ்விடம் வரகூடிய வஹீ செய்தியையே இரண்டாக பிரித்து, சிலவற்றை தான் நம்மிடம் சொன்னார்கள், சிலவற்றை மறைத்துக் கொண்டார்கள் என்று சொல்லப்படும் வாதம் நிலை நாட்டப்படுமா? நிச்சயம் இல்லை.
 
ஹுதைஃபா (ரலி) அவர்களுக்கு நபி (சல்) அவர்கள் சொல்லிக் கொடுத்தது நிர்வாக ரீதியிலான சில செய்திகள். ஒரு நாட்டை ஆளும் அரசாங்கம், எல்லை பாதுகாப்புக்காகவும், போரின் போது செய்ய வேண்டியவை காரியங்களை கருத்தில் கொண்டும், சில ரகசியங்களை சிலரிடம் சொல்லி வைப்பது வழக்கமான ஒன்று.
அதை தான் நபி (சல்) அவர்களும் செய்தார்கள்.
அது நிர்வாக ரீதியிலான செய்தியே தவிர, மார்க்க செய்தியல்ல.
இதை வைத்து, ஹுதைஃபா அவர்களுக்கு ரகசிய ஞானம் இருக்கிறது என்றெல்லாம் பேசுவது எந்த அர்த்தமுமில்லாதது என்பதை நாம் புரிய வேண்டும்.

இதை தான் இவர்கள் மிகப்பெரிய ஆதாரமாக காட்டுவர்.

மற்றொரு சம்பவத்தையும் இவர்கள் சான்றாக காட்டுவார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (கற்ற) இரண்டு (வகையான கல்விப்) பாத்திரங்களை நான் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் ஒன்றை நான் (மக்களிடம்) பரப்பி விட்டேன்; இன்னொன்றை நான் பரப்பியிருந்தால் என அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி 120)

இந்த ஹதீஸை வைத்துக் கொண்டு, பார்த்தீர்களா, வஹீ செய்தியாக தமக்கு கிடைத்த இரண்டு பாத்திரங்களில் ஒன்றை மட்டும் சொல்லி விட்டு இன்னொன்றை சொல்லாமல் மறைத்து விட்டார், இது தான் மறைவான ஞானம் என்பார்கள்.


ஆனால், இதுவும் இவர்கள் கூறும் கருத்தில் சொல்லப்பட்டதல்ல.
இதை புரிந்து கொள்ள, இதற்கு முந்தைய சில ஹதீஸ்களை பார்த்தாலே போதும்.

அபூ ஹுரைரா(ரலி) அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கிறாரோ என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் இரண்டு வசனங்கள் மாத்திரம் இல்லையென்றால் நான் ஒரு நபிமொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன்' என்று அபூ ஹுரைரா(ரலி) கூறிவிட்டு, 'நாம் நேர்வழியையும் தெளிவான சான்றுகளையும் அருளி மக்களுக்காக அவற்றை வேதத்தில் நாம் தெளிவாகக் கூறிய பின்னரும் யார் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் தன் அருளுக்கு அருகதையற்றவர்களாக்கி விடுகிறான். மேலும் (தீயோரை) சபிப்ப(வர்களான இறைநம்பிக்கையாளர்களும் வான)வர்களும் அவர்களைச் சபிக்கின்றனர். ஆயினும் அவர்களில் யார் (தம் குற்றங்களிலிருந்து) மீண்டு, மேலும் (தம்மைச்) சீர்திருத்தி இன்னும் (தாம் மறைத்தவற்றை மக்களுக்குத்) தெளிவுபடுத்தியும் விடுகின்றனரோ அவர்களைத் தவிர. (அவ்வாறு தம்மைத் திருத்திய) அவர்களை நான் மன்னித்து விடுவேன். நான் மிக்க மன்னிப்பவனும் அருளுவதில் அளவற்ற வனுமாவேன்" (திருக்குர்ஆன் 02:159-160) என்ற இரண்டு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். மேலும் தொடர்ந்து 'மக்காவிலிருந்து ஹிஜ்ரத்துச் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரம் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்ஸாரித் தோழர்களோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூ ஹுரைராவோ முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) பட்டினியாக நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்படாமகி செய்யாதவற்றையெல்லாம் மனப்படாம் செய்து கொண்டிருந்தேன்' என்று கூறினார்கள்" அஃரஜ் என்பவர் அறிவித்தார். (புஹாரி 118)


இதில், அபு ஹுரைரா தான் ஏனைய சஹாபாக்களை விட அதிகமாக பல செய்திகளை அறிவிப்பவராக இருக்கிறார், எல்லாவற்றையும் சரியாக தான் அறிவிக்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்கிற பொருள் பட மக்கள் சந்தேகம் கொள்ளும் போது, அவர்களுக்கு விளக்கம் சொன்ன அபு ஹுரைரா (ரலி) அவர்கள், தமக்கு எது அறிவிக்கப்பட்டதோ அவை அனைத்தையும் நான் தெரிவித்து விட்டேன் என்றும், 
அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட்டவைகளை யார் மறைகிறார்களோ அவர் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளானவர் என்பதாக வரக்கூடிய 2:159, 160 வசனங்களை சுட்டிக் காட்டி, எனவே நான் எதையும் மறைக்கக் கூடியவனில்லை என்பதாக சுய விளக்கம் தருகிறார்கள்.

இந்த அளவிற்கு அடிப்படையை சரியாக புரிந்திருந்த அபு ஹுரைரா (ரலி) அவர்கள் தான், தமக்கு இரண்டு பாத்திரங்கள் வந்ததாகவும் ஒன்றை தாம் மறைத்து விட்டதாகவும் சொல்கிறார்கள் என்றால், நிச்சயம் அந்த ஒன்று, வஹீ செய்தியாக இருக்காது என்று தெரிகிறது.
ஏனெனில், வஹீ செய்தியை மறைக்கக் கூடாது என்கிற அடிப்படையை சரியாக புரிந்து வைத்திருந்தார்கள்.

மார்க்க செய்திகள் போல, பல நிர்வாகக் காரியங்கள், பிற்காலத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்கள், சஹாபாக்களிடையே ஏற்படப் போகும் சச்சரவுகள் போன்றவற்றை தான் நபி (சல்) அவர்கள் அபு ஹுரைராவிற்கு சொல்லியிருக்கிறார்கள்.
60 வயதை கடந்து தாம் வாழ விரும்பவில்லை என்று கூட அபு ஹுரைரா (ரலி) அவர்கள் துஆ செய்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ரகசியமாய் சொல்லப்பட்டது, பிற்காலத்தில் ஏற்படக் குடிய குழப்பங்களைப் பற்றி தான்.

இதில் மார்க்கமாக பின்பற்றுவதற்கோ, அவற்றிலிருந்து கியாமத் நாள் வரையுள்ள சமூகம் சட்டமெடுத்துக் கொள்வதற்கோ எதுவும் இல்லை.
அதை தான் மறைத்து விட்டதாக அவர்கள் சொல்கிறார்கள் என்பதை நாம் புரிய வேண்டும்.

ஒரு வாதத்திற்கு, அது வஹீயோடு தொடர்புடைய ரகசிய ஞானம் தான் என்று வைத்துக் கொண்டால் கூட, இதை வைத்து எல்லா ரகசிய ஞானமும் இன்று வாழும் இந்த சூஃபியாக்களும் தெரிந்து கொண்டார்கள் என்று எப்படி ஆகும்?
இவர்கள் வாதப்படியே, ரகசிய ஞானத்தை அறிந்த அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அதை எவரிடமும் தெரிவிக்க மாட்டேன் என்றல்லவா சொல்லியிருக்கிறாஆற்கால்?

ஆக, இந்த ஹதீஸிலும் இந்த வழிகேடர்களுக்கு எந்த சான்றும் இல்லை.

மற்றொரு ஹதீஸையும் இவர்கள் முன்வைப்பார்கள்.

மக்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள் அல்லது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பொய்யர்கள் என்று மக்கள் எண்ணி விடுவார்கள் என்று அலி (ரலி) அவர்கள் கூறியதாக புஹாரி 127 இல் பதிவாகியுள்ளது.

இதிலிருந்து, பாமர மக்களுக்கு புரிகிற செய்தி, பாமர மக்களுக்கு புரியாத செய்தி என இரண்டு செய்திகள் உண்டு என்பது இவர்கள் முன்வைக்கும் வாதம்.

ஆனால், இந்த வாதம், அலி (ரலி) அவர்களுடைய காலத்திலேயே முறியடிக்கப்பட்டு விட்டது.

அபு ஜுஹைஃபா (ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களிடம் சென்று, உங்களிடம் ஏதும் ரகசிய ஞானங்கள் உள்ளனவா? என்று வினவுகிறார்கள்.
அதற்கு பதில் சொன்ன அலி (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக என்னிடம் குர் ஆனைத் தவிர வேறெந்த ரகசியங்களும் இல்லை என்று பதிலளிக்கிறார்கள்.
சொல்லி விட்டு சொல்கிறார்கள், எனது வாள் உறையில் சில செய்திகள் இருக்கின்றன, அதையும் நான் இப்போது வெளிப்படுத்துகிறேன் என்று சொல்லி விட்டு, கைதிகளை விடிவிப்பது தொடர்பான சில செய்திகளையும், நஷ்டயீடு தொடர்பான சில தகவல்களையும் அறிவிக்கிறார்கள்.

ஆக, ரகசிய செய்தியாக எந்தவொரு செய்தியையும் அலி (ரலி) அவர்கள் வைத்திருக்கவில்லை.

எதையுமே இடம் பொருள், ஏவல் பார்த்து சொல்ல வேண்டும் என்கிற பொது விதிக்கேற்ப தான் நபி (சல்) அவர்களும் அலி (ரலி) அவர்களிடம் மேற்கண்ட சில தகவல்களை சொல்லியிருக்கிறார்கள்.
அவற்றை, எப்போது தேவையோ, எவ்விடம் சொல்வது அவசியமோ அங்கே சொல்ல வேண்டும் என்கிற முறைக்கேற்ப தான் அலி (ரலி) அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

மற்றுமொரு ஹதீஸை இவர்கள் முன்வைப்பார்கள்.

ஒரு வகையான இல்ம் இருக்கிறது, உலமாக்கள் மட்டுமே அதை அறிவார்கள், என்பதாக வரக்கூடிய ஹதீஸ், மிகவும் பலகீனமான ஹதீஸாகும்.
அதை அறிவிக்கக்கூடிய தைலமியெ கூறுகிறார், இதன் அறிவிப்பாளர்கள் நம்பத்தகுந்தவர்கள் இல்லை என்று.

ஆக, இல்முஸ் சிர் என்கிற ரகசிய ஞானம் எந்த அளவிற்கு தவறான ஒரு சித்தாந்தம் என்பதை பல்வேறு குர் ஆன், ஹதீஸ் சான்றுகள் வழியாக நாம் கண்டோம்.கஷ்ஃபுடைய ஞானம் என்றால் என்ன?


அடுத்ததாக, இன்னொரு வகையான இல்ம் இருப்பதாக இவர்கள் கூறுவார்கள்.

அது தான், இல்முல் முகாஷஃபா (கஷ்ஃபுடைய ஞானம்)

இந்த அறிவு எப்படிப்பட்டது என்றால், அல்லாஹ்விடமிருந்து எந்த வஹீ செய்தியும் இவர்களுக்கு தேவையில்லை.
வஹீ செய்தி என்பதெல்லாம் சாதாரண மனிதர்களுக்கு தான்.
வலிமர்கள், அவ்லியாக்கள் போன்ற, பக்தி முத்திப் போனவர்களை எந்த வஹீ செய்தியும் கட்டுப்படுத்தாது, மாறாக, இவர்கள் நேரடியாக அலலஹ்விடம் உரையாடக் கூடியவர்கள், சட்ட திட்டங்களை அல்லாஹ்வின் லஃவுல் மஃபூலிலிருந்து நேரடியாக பெறக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள்.

அத்தகைய ஞானத்தை தான் கஷ்ஃபுடைய ஞானம் என்கின்றனர்.

இந்த ஞானத்தை ஒருவர் பெற்று விட்டால்
பாமரர்களுக்கு ஹராமாக்கப்பட்ட எதுவும் அவருக்கு ஹராமாக இருக்காது, பாமரர்களுக்கு இஸ்லாம் விதிக்கும் எந்த சட்டதிட்டமும் இவரை கட்டுப்படுத்தாது.
காரணம், சட்டங்களை இவர் வஹீ செய்தியிலிருந்து பெறுவது கிடையாது, மாறாக, நேரடியாக அல்லாஹ்விடம் தொடர்பு கொண்டு பெறுகிறார்.
அல்லாஹ்வுக்கு எதுவெல்லாம் தெரியுமோ அவை அனைத்தும் இவர்களுக்கும் தெரியும்.


இது தான் இல்முல் முகாஷஃபா !!


இந்த சித்தந்தம் சரியா? இப்படிப்பட்ட இல்ம் ஒருவருக்கு கிடைக்குமா? இதை இஸ்லாம் ஒத்துக் கொள்கிறதா?
தொடர்ந்து பார்க்கலாம்.
அத்துடன், இவ்வாறு பக்தி முத்திப் போனவர்கள் தங்களுக்கு தனி சட்டம் என்று கூறி செய்த‌ வண்டவாளங்கள் என்னென்ன? என்பதையும் அடுத்தடுத்து காணலாம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக