வியாழன், 2 ஜூலை, 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 13)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 13



சஹாபாக்களிடமும் தவறுகள் ஏற்படும் (தொடர்ச்சி)


நபித் தோழர்களும் மனிதர்களே! அவர்களிடமும் தடுமாற்றங்களும், தவறான முடிவுகளும் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்து சென்றுள்ளனர்.



மறுமை நாளில் தண்டிக்கப்படும் சஹாபாக்கள் :

நியாயத் தீர்ப்பு நாளில் மக்களெல்லாம் பதை பதைப்புடன் நிற்கும் போது நடக்கும் ஒரு நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

என் தோழர்களில் சிலர் இடது புறமாகப் பிடிக்கப்படுவார்கள். (அதாவது நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவார்கள்) அப்போது நான் ``அவர்கள் என் தோழர்கள்! அவர்கள் என் தோழர்கள்! என்று கூறுவேன். அதற்கு இறைவன் ``நீ அவர்களைப் பிரிந்தது முதல் வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர் என்று கூறுவான். அப்போது நான் ``அவர்களுடன் நான் இருந்த வரை அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். எப்போது என்னை நீ கைப்பற்றிக் கொண்டாயோ (அப்போது முதல்) நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய் என்று என் சகோதரர் ஈஸா கூறியது போல் நானும் கூறிவிடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 3349, 3447

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் சில நபித்தோழர்கள் தவறான பாதைக்குச் சென்று விடுவார்கள் என்பது முன்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டு அவர்கள் அதனை நமக்கு அறிவித்துச் சென்று விட்டனர்.

இந்த நிலையில் நபித்தோழர்களின் கூற்றுகள் மார்க்க ஆதாரம் என்று சொல்ல முடியுமா?

இதை நாம் கூறும் போது நம்மை எதிர்க்கக் கூடியவர்கள், இந்த ஹதீஸில் சொல்லப்படுவது சஹாபாக்களை அல்ல, நபியின் உம்மத்திலுள்ள மற்ற மக்களை தான் சொல்கிறது என்று கூறுவர்.

ஆனால், இந்த ஹதீஸ்களிலேயே இவர்களுக்கு மறுப்பு இருக்கின்றது.

எனது தோழர்கள் என்று நபி (சல்) அவர்கள் சொல்லும் போது, அல்லாஹ் அவர்களிடம் கூறும் போது, " நீ அவர்களை பிரிந்த பிறகு அவர்கள் வழிகேட்டில் சென்றது பற்றி உனக்குத் தெரியாது" என்பதாக சொல்வான்.

சஹாபாக்களுடன் நபி (சல்) அவர்கள் வாழ்ந்ததை தான் இவ்விடம் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
அல்லாமல், நபியின் காலத்திற்கெல்லாம் பிறகு வந்த மக்கள் எனில், அவர்களோடு நீ இருந்த போது.. என்று அல்லாஹ் சொல்ல மாட்டான், காரணம், அவர்களோடு நபி (சல்) அவர்கள் இவ்வுலகில் வாழவில்லை.

இது போக, உனக்குப் பிறகு என்னவெல்லாம் உருவாக்கினார்கள் என்று உனக்கு தெரியாது என்றும் அல்லாஹ் சொல்கிறான்.

இதே கருத்து புகாரி 4740, 6526, 6576, 6582, 7049 ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவும், இடது புறமாக கொண்டு செல்லப்படுவோர் சஹாபாக்களில் சிறு கூட்டம் தான் என்று தெளிவாகிறது.

புஹாரி 6585 இல் வரக்கூடிய இன்னொரு செய்தியில்,
அவர்களை நான் அறிவேன், என்னை அவர்கள் அறிவார்கள் என்றும் நபி (சல்) அவர்கள் கூறுவதாக வருகிறது.
நபி (சல்) அவர்களுடன் வாழ்ந்து, அவர்களோடு பழகிய மக்களைப் பற்றி தான் நபி (சல்) அவர்களால் இவ்வாறு கூற இயலும்.
அந்த அடிப்படையிலும் நாளை மறுமையில் அல்லாஹ்வால் தண்டிக்கப்படுவோர் சஹாபாக்கள் தான் என்று புரிகிறது.



சஹாபாக்கள் ஈடுபட்ட போர் :

இன்றைய காலகட்டத்தில் நம்மில் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன, கொள்கை மோதல்கள் உள்ளன, ஆனாலும் நாம் ஒருவரையொருவர் வெட்டிக் கொள்கிறோமா? கொலை செய்கின்ற அளவிற்கு செல்கிறோமா? இல்லை.
ஆனால், சஹாபாக்கள் காலத்தில் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்களுக்கிடையே போர்கள் கூட நடந்திருக்கின்றன.

நபி (சல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் சஹாபாக்களை நோக்கி முக்கியமான பல்வேறு எச்சரிக்கைகளை செய்கின்றார்கள்.


நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது மக்களே! இது எந்த நாள்? எனக் கேட்டார்கள். மக்கள் புனிதமிக்க தினம்' என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் இது எந்த நகரம்? எனக் கேட்டதும் மக்கள் புனிதமிக்க நகரம்' என்றனர். பிறகு அவர்கள் இது எந்த மாதம்? எனக் கேட்டதும் மக்கள் புனிதமிக்க மாதம்! என்றனர். பிறகு நபி (ஸல்) அவாகள், நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்! எனப் பல தடவை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்துவிட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? என்றும் கூறினார்கள்.

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(வ்விறை)வன் மீது சத்தியமாக! இது நபியவர்கள் தமது சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்.

பின்னர் இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்! எனது இறப்புக்குப் பின் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 1739)

ஒருவருக்கொருவர் வெட்டிக் காஃபிராகி விடாதீர்கள் என்று நபி (சல்) அவர்கள் எச்சரிக்கை செய்திருக்க, நபி (சல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு சஹாபாக்களிடையே பெரும் போர்கள் நடைபெற்றிருக்கின்றன.

ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் அலி (ரலி) அவர்களுக்கும் இடையே நடைபெற்ற போர்
அலி (ரலி) அவர்களுக்கும் முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த போர்

இவற்றில் இருபக்கமும் கலந்து கொண்டவர்கள் யார்? சஹாபாக்கள் தானே?

அவர்கள் நல்ல எண்ணத்திற்காக போரில் கலந்து கொண்டார்கள் என்றே வைப்போமே, இரு தரப்பினர் போர் செய்வதாக இருந்தால் இருவரில் ஒரு தரப்பினரிடம் தானே நியாயம் இருக்கும்? அப்படியானால் இருவரில் ஒரு தரப்பு அநியாயத்திற்காக தானே போர் செய்தார்கள்?

பல சஹாபாக்கள் கொல்லப்படவும் செய்தார்களே..

நபி (சல்) அவர்கள் கலந்து கொண்ட அகழ் போரின் போது, நபியுடன் சேர்ந்து அகழ் தோண்டிக் கொண்டிருந்த அம்மார் இப்னு யாசர் (ரலி) அவர்களைப் பற்றி நபி (சல்) அவர்கள் அப்போது ஒரு முன்னறிவிப்பு செய்கிறார்கள்.
இவரை ஒரு அ நியாயக் கூட்டம் கொலை செய்யும் என்று.
இதை புஹாரி 2812, 447 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்.

இந்த முன்னறிவிப்பு சஹாபாக்களிடையே நடைபெற்ற ஒட்டகப் போரின் போது நிறைவேறியது. அம்மார் இப்னு யாசர் (ரலி) அவர்கள் அந்த போரில் கொலை செய்யப்படுகிறார்கள்.
இதை முஸ்லிம் 5192 ஹதீஸில் காணலாம்.

இதை நாம் சுட்டிக் காட்டும் நோக்கம், சஹாபாக்களை குறை காண வேண்டும் என்பதற்காக அல்ல.
சஹாபாக்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதை நாம் நினைவில் கொண்டு, வஹீ செய்தியை தவிர வேறு எதுவுமே மார்க்கமாக ஏற்க உகந்தது இல்லை என்கிற அடிப்படையை நம் மனதில் நிலை நிறுத்திக் கொள்வதற்கு தான் இவற்றை நாம் இங்கு விளக்குகிறோம்.

மார்க்கம் அனுமதிக்காத போரில் கூட சஹாபாக்கள் கலந்து கொண்டு ஒருவரை கொலை செய்ய நாடியிருக்கிறார்கள் என்கிற உண்மையை நாம் விளங்கும் போது, சஹாபாக்களின் கூற்றை மார்க்கமாக ஏற்பது என்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதை புரியலாம்.



ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு :

ஆயிஷா (ரலி) அவர்களையும் ஒரு சஹாபியையும் இணைத்து அவதூறு ஒன்று பரவியதை நாம் வரலாற்றில் அறிந்திருக்கிறோம்.
அது உண்மையல்ல, பொய் தான் என்பதை அல்லாஹ் வஹியின் மூலம் நபி (சல்) அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தான்.

அந்த அவதூறுச் செய்தியை உருவாக்கி விட்டது இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்கள் தான் என்றாலும், அதை ஊருக்குள் பரவ விட்டது யார்? சஹாபி தானே?
ஹசன் இப்னு சாபித் (ரலி) அவர்கள் இது தொடர்பாக சவுக்கடி தண்டனை கூட வாங்கியிருக்கிறார்கள் என்பதை நாம் ஹதீஸ்களில் அறிகிறோம்.

நபியின் மனைவி மீது அவதூறு செய்தியை பரவ செய்கின்ற அளவிற்கு கூட சஹாபாக்களில் சிலர் ஈடுபடுகின்றனர் என்றால் அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான் என்று இதிலிருந்து விளங்கவில்லையா?
நம்மிடம் எப்படி தவறுகள் ஏற்படுமோ அது போன்று அவர்களிடமும் ஏற்படும்.
எனினும், அவர்கள் செய்த தியாகங்கள் காரணமாக அவர்களது குற்றங்கள் அல்லாஹ்வால் மன்னிக்கபடும் என்றாலும் மார்க்கத்தில் சட்டமியற்றுவதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா?
நிச்சயம் இல்லை.



போரின் போது வரம்பு மீறல் :

நபி(ஸல்) அவர்கள், காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக் கொடுத்தார். அவர்களுக்கு ‘அஸ்லம்னா – நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்’ என்று திருத்தமாகச் சொல்ல வரவில்லை. எனவே, அவர்கள் (தங்களின் வழக்குப்படி) ‘ஸபஃனா, ஸபஃனா’ – நாங்கள் மதம் மாறி விட்டோம். மதம் மாறிவிட்டோம்” என்று சொல்லானார்கள். உடனே காலித்(ரலி), அவர்களில் சிலரைக் கொல்லவும் சிலரைச் சிறை பிடிக்கவும் தொடங்கினார். அவர் (தம்முடன் வந்திருந்த) எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார். ஒரு நாள் காலித், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை கொல்ல மாட்டேன். மேலும், என் சகாக்களில் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை கொல்ல மாட்டேன்; மேலும், என் சகாக்களில் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்லமாட்டார்” என்று சொன்னேன். இறுதியில், நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, ‘இறைவா! ‘காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இருமுறை கூறினார்கள். 

அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு உமர் (ரழி) 
ஆதாரம் : புஹாரி 4339 

இஸ்லாத்தை தழுவி விட்டேன் என்று சொன்ன பிறகும் காலித் பின் வலீத் அவர்கள் ஒருவரை கொலை செய்து விடுகிறார்கள், இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய குற்றமாக கருதுப்படுவதால் நபி (சல்) அவர்கள், இதை விட்டும் நான் விலகிக் கொள்கிறேன் என்பதாக கூறுகிறார்கள்.

அந்த அளவிற்கு பாரதூரமான தவறுகளை கூட சஹாபாக்கள் செய்திருக்கிறார்கள் எனும் போது அவர்களை எப்படி நாம் பின்பற்றுவது?
மார்க்கம் என்று ஒருவரை பின்பற்றுவதாக இருந்தால் அவருக்கு வஹீ அருளப்பட வேண்டும்.
வஹீ கிடைக்கப்பெறாத எவரையும் நாம் பின்பற்றக் கூடாது, அப்படி பின்பற்றுவது நேர்வழியை பெற்றுத் தருமா அல்லது நம்மை வழிகேட்டில் வீழ்த்துமா என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.


மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்

‘ஒரு யுத்தத்துக்கு நபியவர்கள் எங்களை அனுப்பினார்கள். ஜுஹைனா என்ற இடத்தில் ஹுரகாத் என்ற பகுதியில் நாம் காலையை அடைந்தோம். (அங்கு) நான் ஒரு நபரைச் சந்தித்தேன் அவர் (என்னைக் கண்டதும்) லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறினார். (நான் அதைக் கவனிக்காமல்) அவரைக் கொலை செய்து விட்டேன். (என்றாலும்) அது என் மனதை உறுத்தியது. எனவே அதை நபியவர்களிடம் கூறினேன். (அதைக் கேட்ட நபியவர்கள்) ‘லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவரையா நீர் கொலை செய்தீர்’ எனக்கேட்டார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே ஆயுதத்துக்குப் பயந்துதான் அவர் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னார்.’ என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் ‘அதை அவர் அதற்குத்தான் கூறினார் என நீ தெரிவதற்கு அவருடைய உள்ளத்தை பிளந்து பார்த்தீரா’ என்று கூறினார்கள்……………’ 
அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரழி)
 ஆதாரம் : முஸ்லிம் 287 


இங்கும், கலிமா சொல்லி மனம் திருந்தி விட்ட ஒருவரை நபித் தோழர் கொலை செய்து பெருங்குற்றம் இழைத்ததை நபி (சல்) அவர்கள் கண்டிக்கும் செய்தியை காணலாம்.


மற்றொரு பாரதூரமான சம்பவம் ஒன்றை பாருங்கள்



இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும் ‘நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ என்னுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் ‘ரவ்ளா’ எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), ‘கடிதத்தை வெளியே எடு” என்று கூறினோம். அவள், ‘என்னிடம் கடிதம் எதுவுமில்லை” என்று கூறினாள். நாங்கள், ‘ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்” என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையுள்ள பிரமுகர்கள் சிலருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘ஹாத்திபே! என்ன இது?’ என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்டபடி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இவர் உங்களிடம் உண்மை பேசினார்” என்று கூறினார்கள். உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்’ என்று கூறி விட்டிருக்கலாம்” என்றார்கள்.

புஹாரி : 3007 



ஆக, தமது சுய நலனுக்காக நாட்டின் ரகசியத்தைக் கூட எதிரிகளிடம் கசிய விடுகின்ற அளவிற்கு சஹாபாக்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் காண்கிறோம்.

சஹாபாக்கள் நம்மை விடவெல்லாம் சிறந்தவர்கள், அவர்களது தியாகத்தை அல்லாஹ் சிலாகிக்கிறான், பாராட்டுகிறான், நாளை மறுமையில் உயர்ந்த தரஜாவினை பெறுவார்கள் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அவர்களை பின்பற்றுவது என்று வரும் போது அதில் நம்மால் எந்த வித சமரசத்தையும் செய்ய முடியாது.
காரணம், அவர்களிடமும் மனிதர்கள் என்கிற முறையில் ஏராளமான தவறுகள், பிழைகள் ஏற்பட்டிருக்கின்றன.

எது தவறு, எது சரி என்று பிரித்துப் பார்க்க இயலாத போது, அவர்களது எந்த கூற்றானாலும் அது மார்க்க ஆதாரம் தான் என்கிற நிலைபாட்டினை கொள்வது என்பது நம்மை வழிகேட்டின் உச்சிக்கே கொண்டு சென்று விடும்.




நம்மை விட சஹாபாக்கள் நன்றாக புரிவார்களா?

சஹாபாக்களை பின்பற்றக் கூடாது என்று நாம் பிரச்சாரம் செய்யும் போது, நம்மை எதிர்க்கும் சிலர், சஹாபாக்களை விடவும் நீங்கள் நன்றாக புரிந்து விடுவீர்களோ?
நபி (சல்) அவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் சஹாபாக்கள் மார்க்கத்தை சரியாக புரிவார்களா அல்லது பல நூற்றாண்டுக்கு பிறகு வந்த நீங்கள் புரிவீர்களா?

என்று நம்மை நோக்கி கேள்வியெழுப்புகின்றனர்.

ஆனால், இவர்களுக்கு நாம் பதில் சொல்வதை விட நபி (சல்) அவர்களே பதில் சொல்லி விட்டார்கள்.

``எனது செய்திகளை வந்தவர்கள் வராதவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். எடுத்துச் சொல்பவரை விட யாரிடம் எடுத்துச் சொல்லப்படுகிறதோ அவர்கள் அதனை நன்கு பேணிப் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் என்று முன்னறிவிப்பு செய்தனர்.

புகாரி : 1741, 7074

உலகம் அழியும் வரை என்ன நடக்கும் என்பதையெல்லாம் அறிந்து வைத்துள்ள இறைவனால் தரப்பட்டதே இஸ்லாம். உலகம் அழியும் வரை தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக் கூடிய வகையில் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

அந்தந்த காலத்தை அடைபவர்களால் தான் அதன் சரியான பொருளை அறிந்து கொள்ள முடியும்.

எனவே இது போன்ற விஷயங்களில் நபித்தோழர்கள் புரிந்து கொள்ளாத பல விஷயங்களை இன்று நாம் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியும்.

சந்திர மண்டலத்தில் கிப்லாவை எவ்வாறு நோக்குவது? செயற்கை முறையில் கருத்தரிப்பது கூடுமா? குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? என்பன போன்ற கேள்விகளை அன்றைக்கு அவர்களிடம் கேட்டால் இதெல்லாம் நடக்குமா என்ன? என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கும்.

மார்க்கத்தைச் சரியான முறையில் அறிந்து கொள்வதற்கு மார்க்க ஆதாரங்கள் பரவலாக்கப்பட்டும் எளிதில் கிடைக்கும் வகையிலும் முழுமையாகத் திரட்டப்பட்டும் இருக்க வேண்டும்.

ஆதாரங்கள் சிதறிக் கிடந்தால், முழுமையாகத் திரட்டப் படாமல் இருந்தால், எளிதில் கிடைக்காமல் இருந்தால் ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப் படையில் தான் முடிவு செய்வார். ஆதாரம் கிடைக்காத போது சுயமாக முடிவு எடுப்பது தவிர அவருக்கு வேறு வழி இல்லை.

நபித் தோழர்களின் கடைசி காலத்தில் தான் குர்ஆன் முழுமைப்படுத்தப்பட்டது. ஆனாலும் அச்சிட்டு பரவலாக அனைவருக்கும் கிடைக்கும் நிலை இருக்கவில்லை.

மனனம் செய்தவர்களும், ஏடுகளில் எழுதி வைத்துக் கொண்டவர்களுமான மிகச் சில நபித் தோழர்கள் தவிர பெரும்பாலான நபித் தோழர்களுக்கு முழுக் குர்ஆனும் கிடைக்கவில்லை.

சந்தேகம் வந்தால் புரட்டிப் பார்க்கும் வகையில் ஏடுகளாகவும் அனைவரிடமும் இருக்கவில்லை.

அது போல் நபிமொழியை எடுத்துக் கொண்டால் இதற்கு அடுத்த நிலையில் தான் இருந்தது.

முழு ஹதீஸ்களையும் எழுதி வைத்த ஒரு நபித் தோழரும் இருக்கவில்லை.

முழு ஹதீஸையும் மனனம் செய்த ஒரு நபித் தோழரும் இருக்கவில்லை.

ஆனால், இன்றைய நமது நிலை அப்படியா?

புஹாரி ஹதீஸ் நுலின் எல்லா பாகங்களையும் நாம் நமது வீட்டில் வைத்திருக்கிறோஒம்.
குர் ஆன் மொழியாக்கம் இல்லாத வீடுகளே இல்லை.
இதுவெல்லாம் சஹாபாக்கள் காலத்தில் சாத்தியமாக இருந்ததா என்று பார்த்தால் இல்லை.

எனவே, நம்மை விட சஹாபாக்கள் தான் சரியாக புரிவார்கள் என்பது மிகவும் தவறான பொருளாக்கமாகும்.




மத்ஹப் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?

இன்று, முஸ்லிம் சமூகத்தில் மதுஹப் என்பது மிகவும் பரவலாக வியாபித்துள்ளது.
ஒருவர் முஸ்லிமாக இருக்க வேண்டுமென்றால் அவர் கட்டாயம் ஏதேனும் ஒரு மத்ஹபில் இருந்தாக வேண்டும் என்று நம்புகின்ற அளவிற்கு இது நம்மிடையே மிகவும் ஆழமாக ஊடுருவியிருக்கின்றது.

ஷாஃபி, ஹனஃபி, ஹம்பலி, மாலிக் ஆகிய நான்கு மத்ஹப்கள் சமுதாயத்தில் புழக்கத்தில் இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை ஹனஃபி மத்ஹப் தான் பெரும்பான்மை.
ஒரு சில கடலோரப் பகுதிகளில் தான் ஷாஃபி மத்ஹபை பின்பற்றும் சமூகம் இருக்கின்றன, மற்றபடி, நாட்டின் மற்ற பகுதிகளை எடுத்துக் கொண்டாலும், உலகின் ஏனைய பகுதிகளை எடுத்துக் கொன்டாலும், அதிகமான மக்கள் ஹனஃபி மத்ஹபை பின்பற்றக் கூடியவர்கள் தான் இருக்கின்றனர்.

மத்ஹப் தான் இஸ்லாம் என்று நம்புகின்ற அளவிற்கு இந்த வழிகேட்டு சித்தாந்தம் நம் சமூகத்தில் ஊடுருவியிருப்பதற்கு சில காரணங்களை வரலாற்றில் நமமால் பார்க்க முடிகிறது.

கிபி 1200 க்குப் பிறகு இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் முகலாயர்கள். 
இவர்கள் அனைவருமே மத்ஹபை பின்பற்றுபவர்களாக இருந்தனர்.
மத்ஹப் நூற்களின் படி சட்டங்கள் அமைப்பதையும் நிர்வாகம் செய்வதையுமே அவர்கள் மேற்கொண்டார்கள்.
ஆட்சியில் உள்ளவர்கள் ஒரு சித்தாந்ததை திணிக்கும் போது அது அந்த ஆட்சியின் கீழுள்ளவர்களை எளிதில் சென்றடையும்.
இதற்கு உதாரணமாக, ஆங்கிலேயர்களின் ஆட்சியை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆங்கிலேயர்களிடம் இந்தியா அடிமையாக இல்லாமலிருந்திருந்தால் ஆங்கில மொழி இந்திய நாட்டிற்குள் ஊடுருவியிருக்குமா? நிச்சயம் ஊடுருவியிருக்காது.
பல ஆண்டுகள் இந்தியாவை அவர்கள் ஆண்டதனுடைய விளைவு, அவர்களது ஆட்சி மொழியான ஆங்கிலத்தை இந்தியர்களிடம் எளிதில்  அவர்களால் சென்று சேர்க்க முடிந்தது.

அந்த வகையில், மத்ஹப் சட்டம் என்பது சமூகத்தில் எளிதில் பரவியதற்கு முகலாயர்கள் முக்கிய காரணம் என்பதை வரலாற்றின் ஒளியில் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் மத்ஹபின் ஊடுருவல் இது தான் என்பது ஒரு பக்கம் இருக்க, நான்கு மத்ஹப் இமாம்களின் காலம் என்னென்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அபு ஹனீஃபா இமாமின் பிறப்பு ஹிஜ்ரி 70
இறப்பு ஹிஜ்ரி 150

அதாவது, நபி (சல்) அவர்கள் இறந்து 60 வருடங்கள் கழித்து தான் அபு ஹனீஃபா இமாம் பிறக்கவே செய்கிறார்கள்.
அவர் பிறந்து இளைஞன் ஆன பிறகு தான் மார்க்கத்தை கற்று பிரச்சாரம் செய்யத் துவங்கியிருப்பார்.
அப்படிப் பார்த்தால் கூட, நபியின் காலத்திற்கும் கிட்டத்தட்ட 90 வருடங்கள் கழித்து மார்க்க அறிஞராக உருவானவர் தான் அபு ஹனீஃபா இமாம்.

ஷாஃபி இமாமின் பிறப்பு ஹிஜ்ரி 150
இறப்பு 204

அதாவது, அபு ஹனீஃபா இமாம் இறந்த அதே ஆண்டு ஷாஃபி இமாம் பிறக்கிறார்கள்.

இதை கூட, தங்களுக்கு சாதகம் என்று கருதி, எங்கல் அபு ஹபீஃபா இமாம் இருப்பது வரை ஷாஃபி இமாமால் வர இயலவில்லை என்று பெருமைப் பட்டுக் கொள்வர் இந்த ஹனஃபி மத்ஹப் வாதிகள்.

ஆக, ஷாஃபி இமாம், நபி (சல்) அவர்களது மரணத்திற்கும் 140 ஆண்டுகள் கழிந்து தோன்றியவர்.

மாலிக் இமாமின் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179

அஹ்மத் இப்னு ஹம்பல் இமாமின் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு 241

ஆக, நான்கு இமாம்களும் நபி (சல்) அவர்களது காலத்திற்கும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கழித்து தோன்றியவர்கள் தான் எனும் போது, அவர்களைப் பின்பற்றுவது எப்படி இஸ்லாமாக இருக்க முடியும்? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவர்களை பின்பற்றுவது தான் இஸ்லாம் என்று இருக்குமானால், இவர்கள் தோன்றுவதற்கும் இடைப்பட்ட இந்த 100 ஆண்டுகளில் தோன்றிய முஸ்லிம்கள் எந்த மத்ஹபை பின்பற்றினார்கள்?
அவர்களுக்கு எந்த மத்ஹபும் இல்லையே, அப்படியானால் அவர்கள் முஸ்லிம்கள் இல்லையா?

என்பதையெல்லாம் நாம் சிந்திக்கும் போது தான் இதிலுள்ள அபத்தத்தை நம்மால் புரிய முடிகிறது.

நபி (சல்) அவர்களோடு வாழ்ந்து மறைந்த சஹாபாக்களை பின்பற்றுவதே கூடாது எனவும், அவர்களிடமே மார்க்கத்தை புரிவதில் பல தவறுகள் ஏற்படும் எனவும் நாம் இதுவரை கண்டோமே, அவர்களின் நிலைமையே இதுவென்றால் மத்ஹப் இமாம்களை எப்படி பின்பற்றுவது?

சஹாபாக்களிடமே தவறுகள் வரும் போது மத்ஹப் இமாம்களிடம் தவறுகள் வராதா?
மார்க்கத்தை தவறாக புரிகின்ற நிலை ஏற்படாதா?

இன்னும் சொல்லப்போனால், தங்களைப் பின்பற்றும்படி இந்த நான்கு இமாம்கள் சொன்னார்களா? என்றால் இல்லை.
நான்கு இமாம்களின் பெயரால் மத்ஹபை உருவாக்கியது அவர்களுக்குப் பிறகு வந்த அவர்களது மாணவர்கள் தான்.
எனது ஆசிரியர் இப்படி சொன்னார், எனது ஆசிரியர் அப்படி நடக்க சொன்னார் என்பதாக இமாம்களின் மாணவர்கள் செய்து கொண்ட குறிப்புகளை மையப்படுத்தி உருவானது தான் இந்த மத்ஹப்.
அல்லாமல், நான்கு இமாம்களுக்கும் இன்று நம் சமுதாயம் பின்பற்றி ஒழுகும் மத்ஹப் சட்டத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

தொடரும், இன்ஷா அல்லாஹ் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக